Thursday, March 19, 2009

மலையக மாணவர்களின் புலமைபரிசில் கொடுப்பனவு பெறுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரிட்டோ நிறுவனம்

புலமைப் பரிசில் பெற தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் வருமான எல்லையை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிவந்துள்ள செய்திகள் அடிப்படையில் பெருந்தோட்ட மாணவர் நிலை குறித்து ஆராந்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது பற்றி பிரிடோ நிறுவனம் விடுத்த வேண்டுகோளில் எமது நாட்டில் கல்வித் துறையில் அதிகமாக பின்தங்கிய மக்கள் பெருந்தோட்டத்துறையை சார்ந்த மலையக மக்கள் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.

இவ்வாறு பின்தங்கிய நிலை காரணமாக மலையக பகுதிகளில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பல்கலைகழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஏனைய பிரதேச மாணவர்களோடு ஒப்பிடும் போது மலையக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு

இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் மலையகத்தில் கல்வித்துறையில் மலையகம் முன்னேற்றமடைய அதிக காலம் எடுப்பதால் மலையக மாணவர்களுக்கு அதிக ஊக்குவிப்பு வழங்க வேண்யது அவசியமாகும். (மலையக பெற்றோரின் வருமானம் வருடத்துக்கு 24,000 இலிருந்து 54,000 ரூபா வரையில்- மாத வருமானம் 2,000 ரூபாவிலிருந்து 4,500 ரூபா) இன்றைய நிலையில் அதிக வருமானம் பெருபவர்களின் பிள்ளைகள் கூட புலமை பரிசில் கொடுப்பனவை பெறுகின்றனர். ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக தமது படிப்பினை முன்னெடுக்க முடியாத நிலை. இப் பிள்ளைகள் புலமை பரிசில் கொடுப்பனவை பெற வேண்டுமானால் விசேட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதை உறுதி செய்வதற்கு மாற்று வழிகளை மேற்கொள்வதற்கு மலையக அரசியல்வாதிகள், மத்திய அரசு, மாகாண அரசு ஆகியவற்றில் கல்வி அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
மாணவி கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை

பசறை மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவி காஞ்சனா(20) கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கற்பழிக்கப்பட்டு கோரமாக கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பசறை ஹொப்டன் பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் இசுரு சம்பத் ஜயசுந்தர என்பவர் லுணுகலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சந்தேக நபருக்கு பதுளை நீதவான் சிரான் குணரட்ன ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

இக் கொலை தொடர்பாக பசறை பிரதேச பாடசாலைகள் மட்டத்திலும், கிராம நகர மட்டத்திலும் கண்டன பேரணிகள், எதிர்ப்பு ஊர்வலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு பிரதான சந்தேக நபருக்கு சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராககூடாதென்று அழுத்தங்களும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் - மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர் பீடம் அமைச்சர் பெ. சந்திரசேகரன் தலைமையில் கூடியபோது பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அக்கறையோடும் உறுதியோடும் நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தும் மக்கள் அங்கீகாரத்தைக் கொண்ட சகல தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்களுக்குரிய வாய்ப்புகள் தொடர்பாகவும் புதிய சாசனம் உருவாக்கப்படல் வேண்டும்.
மேற்படி முடிவுகளுக்கு அனுசரணையாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசுக்கும் அழுத்தம் ஏற்படுத்துவதற்குரிய திட்டங்களை வகுத்தல்.

இதற்கான ஆதரவினை பெற அரசியல் கட்சிகளையும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பொது ஸ்தாபனங்களையும் சந்தித்து தெளிவுபடுத்துவதோடு தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற வரலாறுகள் திருத்தப்படல்.

இறுதி முடிவு எடுக்கப்படும் போது அதில் அரசாங்கம் பங்குதாரதாக இருக்கக்கூடியதான திட்டங்களை வகுத்தல்

குறைந்தபட்ச சம்பளம் 400 ரூபாவாக இருப்பதற்கு சகல மட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுதல்