Thursday, November 5, 2015

மலையகத்தில் சீரற்ற காலநிலை

மலையகத்தில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன

அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ்  பகுதியில் கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்றிரவு நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தை சேர்ந்த 25 வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்ததனால் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அத்துடன்  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலரண்டன் தோட்டத்தில் 45 க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கி உள்ளன.

இது தவிர தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பாரிய கற்பாரைகள் சரிந்து விழுந்ததால் சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அக்கரப்பத்தனை ஹோல்புரூக் நகரத்தில் ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் பாரிய மண்மேடுகள் சரிந்த வண்ணம் இருப்பதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதனால் மேலும் அனர்த்தங்கள் நிகழக்கூடும் என மக்கள் கருதுகின்றனர். கடும் மழை காரணமாக பெருமளவு பயிர்ச்செய்கை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் அக்கரபத்தனை ஆகுரோவா தோட்டத்தில் மண்மேடு சரிந்துள்ளது. இதன்காரணமாக மூன்று வீடுகள் சேதமாகியுள்ளது. அத்தோடு அதே தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின் பகுதியில் பாரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அக்கரபத்தனை  நல்லதண்ணி தோட்டத்தில் மண்சரிவால் 3 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது.

அத்தோடு லக்ஸபான பிரதேசத்தில் நேற் முதல் பெய்து கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் விமல சுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக வெள்ளம் பெருகெடுத்துள்ளதாகவும், அத்துடன் காசல்ரீ நீர்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பெருக்கெடுத்துள்ளது. 

மவுஸாக்கலை நீர்தேக்கத்தில் நீர் நிரம்புவதற்கு இன்னும் ஐந்து அடி மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சிய மழை பெய்யும் பட்சத்தில் மலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறந்துவிட வேண்டிய நிலை காணப்படுவதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் ஆற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புக்களும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

 நன்றி- வீரகேசரி

கறுப்பு தீபாவளி திருநாளா தொழிலாளர்களுக்கு.... ?

பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க  வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா பணத்தினை நிறுத்தி விடுவோம்.

அத்தோடு எதிர்வரும் தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம் என டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் . 
சுமார்  150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 7 தடவை நடைபெற்ற பேச்சுவார்தையின் உண்மையான வெளிபாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர். எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மனோகனேசன் இன்னும் பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

 ஆனால் வாக்களியுங்கள் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம் ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிடவேண்டுமென வழியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம்.

தொழிலாளர்களை பகடகாய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்க போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள விழித்துகொண்டே இருக்கின்றோம்.எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு 10000 மற்றும் 15000 ரூபா பெற்றுத்தருகின்றோம் என கூறிய தொழிற்சங்கவாதிகள் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என 

கேள்விகளையும் தொழிலாளர்கள் எழுப்பினர். எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.