Sunday, August 16, 2009

தொழில் அந்தஸ்து இல்லாத நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவனிக்குமா தொழிற்சங்கங்கள்?

தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு 200 வருடங்களைத் தாண்டி விட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் துறையானது, ஆங்கிலேயர் ஆரம்பித்த கோப்பி தேயிலைத் தொழிலோடு ஆரம்பிக்கின்றது. இந்தத் துறையே இன்று வரையும் இலங்கையின் பொருளாதாரத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது.
இத்தேயிலைத் தொழிலானது உயர் நிலத் தேயிலை, மத்திய நிலத் தேயிலை, தாழ்நிலத் தேயிலை எனப் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி 2008 ஆம் ஆண்டு மொத்த நிலப்பரப்பு 2,22,000 ஹெக்டேயராகக் காணப்பட்டாலும் 193,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்யப்பட்டது. இதில் 320 மில்லியன் கிலோ கிராம் ஏற்றுமதி செய்யப்பட்டதுடன் 137,600 மில்லியன் ரூபா ஏற்றுமதி பெறுமானமாக கணிக்கப்பட்டது.
குறிப்பாக உயர் நிலத் தேயிலை பயிர் செய்யும் பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்றனர். 2008 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி உயர்நிலத் தேயிலை 61,773,000 கி.கி. உம் மத்திய நிலத் தேயிலை 42,718,000 கி.கி. தாழ்நிலத் தேயிலை 161,981 கி.கி. உம் கொழுந்து ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இத்தேயிலைக்கு கிடைத்த மொத்த விலையாக பின்வருமாறு காணப்பட்டது. உயர் நிலத் தேயிலை 269.01 மத்திய நிலத் தேயிலை 260.68 தாழ்நிலத் தேயிலை 325.64 என (ரூபா) விலை கிடைத்தது. எல்லா வகைத் தேயிலைக்கும் 301.63 ரூபா விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட் இத்தொழிலாளர்கள் இன்று வரையும், இவர்கள் செய்யும் தேயிலை உற்பத்தி தொழில் நிலை அந்தஸ்து அற்றவர்களாக (கிடைக்காதவர்களாக) தொழில் செய்து வருகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
உலகத்திலேயே இந்த தேயிலைத் தொழில் அல்லது பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மட்டுமே தொழில் அந்தஸ்து அற்றவர்களாக உழைக்கின்றார்கள். இவர்களுக்கான உடை இல்லை. பாதுகாப்பு இல்லை. (குறிப்பாக மருந்து தெளித்தல், உரம் போடுதல், தொழிற்சாலை வேலைகள்).
இம்மக்கள் ஆரோக்கியமாகவும், தொழில் நிலையில் அந்தஸ்து பெற்றவர்களாகவும் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட தொழில் துறையின் உற்பத்தி கூடும். தொழில் துறை வளர்ச்சியடையும், உற்பத்தி அதிகரித்து வருமானம் கூடும் என்பது கவனிக்கப்படல் வேண்டும்.
இதுவரை காலமும் இத்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படவில்லை. அத்துடன் இவர்கள் சார்ந்திருக்கும் தொழிற் சங்கங்களும் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கவலையான விடயம். வெறுமனே உழைப்பை மட்டுமே பெற்றுக் கொள்ள எத்தனிக்கும் கம்பனி நிருவாகங்கள், இவர்களின் சம்பள உயர்வு, காப்புறுதி, தொழில் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேல் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். (இறப்பர், தென்னை, தேயிலை) இவர்களுக்கென பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணம் மட்டும் மாதம், மாதம் சம்பளத்தில் கழிக்கப்படுகின்றது. சில தோட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் 50 வருடத்திற்கு மேலும் அங்கத்தவர்களை கொண்டு செயற்படுகின்றது.
அன்று தொடக்கம் இன்று வரையும் பல கட்சிகளுக்கு சந்தாப் பணம் செலுத்துகின்றார்கள். ஆனால் கோயில் மணி, விளையாட்டு உபகரணங்கள் தவிர சில தோட்டங்களுக்கு இன்னும் உருப்படியாக எதையேனும் செய்யவில்லை என்பதே மக்களின் ஆதங்கம்.
தேர்தல் காலங்களில் கூட ஏனைய கட்சி அங்கத்தவர்களை தூற்றுவதும் அவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதும் குண்டர்களை ஏவி விட்டு சக தொழிலாளர்களையே தாக்குவதும், கட்சிக்குள்ளேயே பல்வேறு வெட்டுக் கொத்துக்களும் குளறுபடிகளும் இருப்பதை இன்று மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்.
இந்த அரசியல் வாதிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இம்மக்களின் வாழ்வியல் விடிவுக்கு ஏதாவது பொருத்தமானதாக செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
தொழிற்சங்கத்தை நடத்துபவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களிலாவது எதையாவது சிறப்பாக மக்கள் நலன் கருதி செய்ய வேண்டும். இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் போல் இங்கும் வரவேண்டும்.
கொட்டகலை
இரா. சிவமணம்
யுவதிகளின் சடலங்கள் தோண்டி எடுப்பு: செப்டெம்பர் 11 இல் விசாரணை

கொழும்பில் பௌத்தாலோக மாவத்த கருவாத்தோட்டம் கழிவு வாய்க்கால் ஒன்றில் மரணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மஸ்கெலியா சென். அன்றூ தோட்ட யுவதிகள் இருவரின் சடலங்கள் நேற்று (27) தோண்டியெடுக்கப்பட்டன.


கொழும்பு நீதவான் மன்றின் நீதவானின் உத்தரவுக்கமைய ஹட்டன் நீதவான் மன்றின் நீதவான் சந்துன் விதான முன்னிலையில் சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிகப் பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சடலத்தைத் தோண்டியெடுத்தபோது கொழும்பு கறுவாத்தோட்டப் பொலிஸாருடன் மஸ்கெலியா, நல்லதண்ணி, நோர்வூட், ஹட்டன் பொலிஸ் நிலை உத்தியோகத்தர்களும் வந்திருந்தனர்.யுவதிகள் மரணம் தொடர்பான வழக்கில் இலவசமாக ஆஜராகும் சட்டத்தரணிகள் கு. தம்பையா, கைலாசமூர்த்தி உள்ளிட்டோரும், நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 பேரும் வந்திருந்தனர்.


சடலங்கள் இன்று (28) மேலதிகப் பரிசோதனை நிறைவடைந்ததும் மீண்டும் மஸ்கெலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளின் மரணத்துக்கு எதிராக நியாயம் கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு அதி உயர் பாதுகாப்புவலயமான பௌத்தாலோக மாவத்தை கழிவு வாய்க்கால் பகுதியில் மரணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மஸ்கெலியா, லக்ஷ்பான பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் சுமதி, ஜீவராணி ஆகியோர் மரணத்துக்கு எதிராக மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவர் தொழிலாளர்கள் ஊக்குவிப்புக்கு எதிராகவும், மரணமடைந்த சிறுமிகளுக்கு நியாயம் கோரியும் இடம் பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், மனிதவள அபிவிருத்தி தாபனம், பிரிடோ நிறுவனம்,மொள்லார் நிறுவனம், ஹாய்ஸ் நிறுவனம், சிப்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், செங்கொடி சங்க உறுப்பினர்களும், அப் பிரதேசங்களை சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், பெருந்தோட்ட மாணவர்களை தலைநகர கூலிகளாக்கும் நடவடிக்கைகளும்,அதன் முகவர்களுக்கு எதிராகவும் ஏற்படுத்தப்பட்ட பதாகைகளும் கோஷங்களும் எதிர்ப்பின் வெளிப்பாடுகளாக காணப்பட்டன.ஏற்பாட்டு நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டாலும் குரல் கொடுக்க தலைவர்களுக்கும் மக்கள் நன்றி சொல்லி இவ்வாறான நடவடிக்கைகள் “சிறுவர் தொழிலாளர்” அதிலும் குறிப்பாக மலையக சிறுவர்களை கிள்ளுகீரைகளாக நினைத்து தொழில் கொள்ளும் முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தலைநகரில் தொழில் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மலையக இளைஞர் யுவதிகள் மலையகத்திலே தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் தலைவர்களை மக்கள் கேட்டுக் கொண்டனர்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

மேல் கொத்மலை திட்டத்தால் பாடசாலை கட்டிடத்ததை இழந்துள்ள தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான மாற்றுக் கட்டிடம் பல்வேறு குறைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், பழைய மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றிலேயே இயங்கி வந்தது. இப்பாடசாலை கட்டிடம் மேல் கொத்மலைத் திட்டத்தின் விளைவாக அப்புறப்படுத்தப்படவுள்ளதால் புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் புதிய பாடசாலை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், மேலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிருவாகத்தினர் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதிகாரிகளால் வழங்கப்பட்ட அளவில் புதிய பாடசாலை அமைக்கப்படவில்லை. வகுப்பறைகள் சுமார் 20 மாணவர்கள் மாத்திரம் கற்கக்கூடிய வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலை கட்டிடத்தைச் சூழ பற்றைக்காடுகள் காணப்படுகின்றன. கட்டிடத்தின் உட்புறத்தில் நீர் வழந்தோடும் முறை ஏற்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு மதில்களும், ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான மலசல கூடங்கள், மாணவர் தொகைக்கேற்ப மலசலகூடங்கள் முறையாக அமைக்கப்படவில்லை. பாடசாலை வளாகத்தினுள் பொது பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிய ஆலமரத்துக்கு அருகில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கான புதிய விளையாட்டு மைதானம் உறுதிப்படுத்தப்படவில்லை. இவை போன்று பல்வேறு குறைபாடுகளுடனேளே பொறுப்பேற்றுள்ளது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 28ம் திfகி பாடசாலைக்கு விஜயம் செய்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மேல் கொத்மலை திட்ட அதிகாரிகள் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து புதிய பாடசாலை அமைப்புத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்த பிறகே தலைவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தினை அப்புறப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்கத்தினர் பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீதரன்
தினக்குரல்
வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான கலந்துரையாடல்

இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கம், செங்கொடி பெண்கள் இயக்கத்தின் தலைமையில் வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கச் செய்வதற்கான கலந்துரையாடலொன்றை அண்மையில் கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடத்தியது. இக் கலந்துரையாடலுக்கு பிரதி தொழில் ஆணையாளர் உபாலி விஜயவீரவும், பெண்கள் மற்றும் குழந்தை தொழிலாளர் பிரிவின் செயலாளர் பர்ல்வீரசிங்ஹ உட்பட பல்வேறு தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ.ஏ இராமையாவின் வரவேற்புடன் கூட்டம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பெண்கள் குழந்தை தொழிலாளர் பிரிவு செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில் இன்று இலங்கையில் வீட்டு வேலை தொழிலாளர்களில் குழந்தைகளின் அளவு குறைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடையும் அதேநேரம் எமது தொழிலாள பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. எனவே எமது இக் கலந்துரையாடல் அதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செங்கொடி சங்கத்தின் தலைவரும், செங்கொடி பெண்கள் இயக்கத்தின் தலைவருமான மேனகா கந்தசாமி இலங்கையில் வீட்டு வேலை தொழிலாளர்கள் இன்று முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்க, அவர்களது உரிமைகளை வென்றெடுக்க எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏனைய தொழிற்சங்க தலைவர்களிடம் அபிப்பிராயங்கள் அறியப்பட்டன.
இதனையடுத்து தொழில் ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில் வீட்டு வேலை தொழிலாளர்களின் இப் பிரச்சினைகள் தொடர்பாக தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், இவர்களை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு வீட்டு வேலை தொழிலாளர்களை பதிவு செய்தல் தொடர்பாகவும், வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயிப்பது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த செயற்பாடுகளை செயற்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக் குழுவில் சட்ட ஆலோசகராக பீ. நவரத்ன, மேனகா கந்தசாமி, D.W சுபசிங்ஹ, M.R. ரசூடின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.