Friday, August 27, 2010

சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு


தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்க அங்கத்தவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால் இதற்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள மீளாய்வுத் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்று அதன் பின்பு கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தக் கூட்டொப்பந்தமானது தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்குச் சாதகமாக மேற்கொள்ளப்படுவதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த கூட்டொப்பந்தமானது ஏனைய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கி விடுவதால் கூட்டொப்பந்தத்தில் உடன்படாத தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் விருப்பமின்றி கூட்டொப்பந்த சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிப்படை மனித உரிமை மீறலாக கருதுகின்றோம்.

இதனடிப்படையில் இந்தக் கூட்டொப்;பந்த்திற்கெதிராக உயர் நீதி மன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்து வருவதாக சதாசிவம் குறிப்பிட்டார்

மேல் கொத்மலை நீர் மின் பணி


நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நகருக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகின்றன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்தத்திட்டத்தின் தலவாக்கலை நீர் அணையிலிருந்து சுரங்கப்பாதை ஊடாக பூண்டுலோயா நியாங்கந்துர மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

13 கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப் பாதையின் நிர்மாணப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் 150 மெகாவோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மேல் கொத்மலைத் திட்டத்தினை முன்னிட்டு தலவாக்கலை பிரதேசத்தில் புதிய குடியிருப்புக்கள், கட்டிடங்கள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகள் அடுத்த வருடம் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையகத்தில் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும்

மலையகத்தில் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் இ.தொ.கா தெரிவிக்கின்றது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தும் பொழுது பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் பெற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது தமக்கு உறுதியளிக்கப்பட்டதாக அவர் கூறினார்


உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறை மாற்றத்தின்படி விகிதாசார முறைமை மாற்றப்பட்டுத் தொகுதி வாரி முறையுடன் விகிதாசார முறையூம் கலந்த ஒரு முறைமையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க வேண்டுமென்று இ.தொ.கா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலையக மக்கள் பரந்துபட்டு வாழ்கிறார்கள் எனவே விகிதாசார முறையில் அவர்களடைந்த நன்மைகள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பன பாதித்துவிடக் கூடாது.

மலையக மக்கள் பரந்து வாழும் சூழலுக்கு ஏற்ப புதிய தொகுதி உருவாக்கப்பட வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். புதிய தொகுதிகள் உருவாக்கப்படவேண்டிய பிரதேசங்களை அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையால் மலையகப் பெருந்தோட்டப் புறங்களுக்குப் பாதகமான நிலை கிடையாது என்றார்.

ஒவ்வொரு தோட்டத்திலும் மக்கள் செறிந்து வாழ்வதால் அதற்கு ஏற்றவாறு தொகுதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.