கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் கோப்புகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் அதனை செய்யாமல் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கூட்டம் நடைபெறுவதில் எவ்வித பயனும் இல்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் (15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா நானுஒயா காந்தி மண்டபத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நியைத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
(15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வரவேற்பு உரையை நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல வழங்கியதோடு இதன்போது அவர் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவே உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்திற்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரட்ணயாக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் 6 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாநகர சபை, நகர சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இந்த தீர்மானத்தை சபைக்கு முன்வைத்தார்.
குறித்த காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது பெருந்தோட்ட மக்கள் தமது கலைகலாச்சார நடவடிக்கைகளை இந்த மண்டபத்தின் வாயிலாகவே முன்னெடுக்கின்றனர். எனவே இதற்கு அருகாமையில் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது பொறுத்தமற்ற ஒரு செயலாக அமைந்துவிடும். எனவே அதனை வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இந்த சபையின் ஊடாக ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என அவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.இதனை தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு இந்த காந்தி மண்டபத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது பொறுத்தமாக இருக்கும் என தனது கருத்தை முன்வைத்ததை தொடர்ந்து இதனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரத் தூண்கள் அமைக்கப்பட்டவை என்பதால் தற்பொழுது அவை பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
நானுஒயா டெஸ்போட் சுற்றுவட்ட பாதை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது இந்த சுற்று வட்ட பாதை வழியாக பேருந்துகள் பயணிப்பதில்லை எனவும் பேருந்துகள் அனைத்தும் குறுக்கு வழியாக செல்வதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலளார் எலன் மீகஸ்முல்ல தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்கு தேசிய போக்குவரத்து அதிகாரசபையும் ஹட்டன் போக்கு வரத்து சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனவே இந்த பிரச்சினை தற்பொழுது தீhக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.எனவே இது தொடர்பாக நானுஒயா பொலிஸ் நிலையத்திற்கு ஆராய்ந்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.