Thursday, June 30, 2016

இலங்கை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தின் யோசனையை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய யோசனையை ஏற்கப்போவதில்லை என தொழிற்சங்கங்கள்  தெரிவித்துள்ளன.
தற்போது தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 620 ரூபாய் ஒரு நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாக, தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்களுக்கும் இடையிலான கூட்டு ஓப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்களாகி விட்ட போதிலும், அதனை புதுப்பிக்க முடியாமல் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.
சம்மேளனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள யோசனையில், 12 நாட்களுக்கு மட்டும் 720 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்படும் . ஏனைய நாட்களில், பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் நிறைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துனைத் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம், இந்த யோசனை சாத்தியமற்றது என்று கூறியுள்ளார்.
12 நாட்களை தவிர்த்து, ஏனைய நாட்களில் சம்பளம் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்துள்ள அவர் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடையும் காலங்களில் தொழிலாளர்களுக்கு இது பாதிப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
மற்றுமோர் தொழிற்சங்கமான லங்கா பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரான எஸ். இராமநாதன், தொழிலாளர்களுக்கு 12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் திட்டத்திற்கான முயற்சி இது என்று தெரிவித்தார்.
மலையக தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 620 ரூபாய் நாள் என்பது 2013-ஆம் ஆண்டு உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்களுக்குமிடையிலான கூட்டு ஓப்பந்தத்தின் போது நிர்ணயம் செய்யப்பட்டது.
இரு வருடங்களுக்கு ஒரு தடவை செய்யப்படும் கூட்டு ஒப்பந்தம், கடந்த வருடம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை காரணமாக 15 மாதங்கள் கடந்தும், அந்த ஓப்பந்தம் தொடர்பாக இழுபறி நிலையே காணப்படுகிறது.
-நன்றி- பி.பி.சி -

Wednesday, June 29, 2016

தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண போராட்டத்திற்கு அழைப்பு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான 2500ரூபா இடைக்கால கொடுப்பனவை தோட்ட கம்பனிகள் வழங்காமல், மாற்று திட்டத்தை முன்வைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டிய முன்னணி சோசலிஷ சட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அமைப்பாளரும் செயலாளருமாகிய துமிந்த நாகமுவ தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ளவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர் என்றார்.

29-06-2016 அன்று ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கை 2015.03.31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உடன்படிக்கை பேச்சுவார்தை இழுபறி நிலையில் இருந்தது. 

இந் நிலையில் பொருளாதார நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களுக்கு இடைக்கால தொகையாக 2500ரூபாவை வழங்க அரசாங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றபட்டது. எனினும் தோட்ட கம்பனிகள் தட்டி கழிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளதுடன், மாற்று திட்டத்தை முன்வைக்க முனைகின்றனர். நாம் அதனை எதிர்கின்றோம். 

தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ள திகாம்பரம், தொண்டமான் போன்றோர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர். 

தேயிலை மலையில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் கால்களில் அட்டை கடித்து இரத்தம் உறிஞ்சுவது போலவே மலையக அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினையில் குளிர் காய்கின்றனர்.

200 வருட காலமாக இலங்கையில் வாழும் தோட்ட தொழிலாளர்களும் ஏனைய சமூகத்தை போல, சகல உரிமைகளும் உடையவர்களாக வாழவேண்டும். நாட் சாம்பளமாக 1000 ரூபாவும் காணி மற்றும் வீட்டுரிமையும் வழங்கபட வேண்டுமென தெரிவித்தார். 

எமது போரட்டமானது தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தே ஆரம்பிக்க உள்ளோம். ஆகவே இப் போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் சமுக அமைப்புகளும் தோட்ட தொழிலாளர்களும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். 

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களுக்கான சம்பளப்பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களோடு இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடாத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்தி தர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கான திகதி இதுவரை எமக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். 

தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேரடியாக தோட்டக் கம்பனிகளுடனும் தொழில் அமைச்சு ஊடாகவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டபோதும் தோட்டக் கம்பனிகள் என்றுமில்லாதவாறு பிடிவாதமாக இருந்து வருகின்றனது என்பது தாங்கள் அறிந்ததே.

தொழிலாளகளுக்கான சம்பள உயர்வு வழங்கப்படாமையினால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்த நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதிகள் தொழில் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன, முதலாளிமார் சம்மேளனம் செயலாளர் நாயகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Tuesday, June 28, 2016

தொழிலாளர்கள் அடக்கப்படுவதும் உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் முதலாளித்துவத்தின் சக்தி

முதலாளித்துவம் சக்திபெற்றிருப்பதன் காரணத்தினாலேயே உழைக்கும் வர்க்கத்தினர் அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. நீதி நியாயம், சுகந்திரம் அவர்களுக்கு இல்லாது போகிறது என்று லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் 52 நாடுகளைச் சேர்ந்த 121 பிரதிநிதிகள் கூடி தொழிலாளர்கள் இன்று சர்வதேச ரீதியில் அனுபவித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள இராமநாதன் மாநாடு பற்றி தெரிவக்கையில் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று சகல நாடுகளிலும் தொழிலாளர்கள் நீதி நியாயமின்றி அடக்குமுறை ஆட்சி அமைப்பின் கீழ் உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகின்றனர். இன்று இலங்கையின் சகல துறைகளிலும் குறிப்பாக தோட்டத் தொழில்துறையில் தொழிலாளர்கள் சமயா சமய ஊழியர்களாகவும் கொந்தராத்து முறை தொழிலாளர்களாகவும் வெளியார் உற்பத்தி முறைத் தொழிலாளர்களாகவும் தொழிற்சங்க உரிமைகளை இழந்து போதிய தொழில் வாய்ப்பில்லாமல் உரிய வேதனமின்றி நடத்தப்படுகின்றனர். இன்று உலகளாவிய ரீதியில் இவ்வாறான நிலைமையே மேலோங்கி வருகின்றது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு உலகளாவிய ரீதியில் முதலாளித்துவம் மிகவும் சக்திபெற்று தொழிலாளர் வர்க்கம் வீழ்ச்சிப் பாதையை நோக்கி இழுத்துச் செல்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

ஒரு காலத்தில் தொழிலாளர் வர்க்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்ந்த மேற்கத்திய நாடுகளிலும் கூட தற்போது தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியில் பலமிழந்து தமது உரிமைகளையும் பறிகொடுத்து வருகின்றனர். தொழிலாளர்களுக்குச் சாதகமாக உள்ள சட்டங்கள் மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாற்றியமைத்து தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகளை அபகரிக்கும் நடவடிக்கைகளையே முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. ஆசிய நாடுகளிலும் இந்நிலைமையே பரவியுள்ளது.

எனவே உலகளாவிய ரீதியில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு முதலாளித்துவ ஆட்சி முறைமைக்கு எதிராக போராட தாயார்படுத்தப்பட வேண்டுமெனயும் இதன் மூலமே தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் அதே சமயம் தாம் போராடி வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதெனவும் கூறிய அவர் நமது நாட்டுப் பெருந்தோட்டத் தொழிலாளர் விடயத்தில் இது பொருத்தமானதெனவும் குறிப்பிட்டார்.

அரசியல், தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்களாக மலையக தலைமைகள்

அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவமில்லாதவர்களாக மலையக தலைமைகள் இருந்து வருவதால் மலையக மக்களின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ் சதாசிவம் மலையக அரசியலின் சமகால போக்குகக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில் தனிமனிதன் சமூகம் என்ற வகையில் உரிமைகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.  ஓவ்வொருவரும் தத்தமது உரிமைகளை எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக அனுபவிக்கும் நிலைமை காணப்படுதல் வேண்டும். மலையக சமூகத்தை பொறுத்தவரையில் இவர்கள் பல்வேறு உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகிறது. அடிப்படை உரிமைகள் தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையில் இச் சமூகம் பெரும் சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இருக்கின்ற உரிமைகளை உரியவாறு அனுபவிக்கும் சந்தர்ப்பம் இவர்களுக்கு கிட்டவில்லை. 

மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் தமது சமூகம் சார்பாக எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் மக்களை எவ்வாறு வழிநடாத்துகிறார்கள் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. அரசியல் மற்றும் தொழிற்சங்கத் தகைமை இல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். இதனால் இம் மக்களின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் சம்பள விடயம் கூட கம்பனிகளின் இழுத்தடிப்பு நிலை இன்னும் தொடர்கின்றது. யானையையும், குதிரையையும் பெற்றுக்கொடுப்போம் என்று வாய் வீரம் பேசியவர்கள் இன்று மௌனித்துப் போயுள்ளார்கள்.

மலையக மக்களை தொடர்ந்தும் கடனாளியாக்கும் நடவடிக்கையிலேயே மலையக அரசியல்வாதிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறார்கள். பெருந்தோட்டங்களினதும், அங்கு வாழும் மக்களினதும் அபிவிருத்தி கருதி பொதுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுதல் வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுத்தல் அவசியம் அரசியல்வாதிகளிடையே கருத்து ஒருமிப்பு கிடையாது. ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறிவருகின்றனர். 

தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக 07 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் 10 பேர்ச்சஸ் வழங்கப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கங்களுக்கு வாய்ப்பாக போய்விடுகின்றன. தனிவீட்டுத்திட்டம் இழுபறி நிலையில் உள்ளமைக்கு மலையக அரசியல்வாதிகளின் பிழையான அணுகுமுறைகளை காரணமாகும். மலையகத்தை மாற்றிக் காண்பிப்பதாக சிலர் மேடைகளில் பேசி வருகின்றனர். முதலில் இவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு எமது சமூக நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும்

பெருந்தோட்டங்களை கம்பனிக்ள பொறுப்பேற்றபோது தோட்டங்கள் வளமுடன் காணப்பட்டன. ஆனால் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் தோட்டங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதனையே இலக்காக கொண்ட கம்பனிகள் மக்களின் பொருளதாரத்தினை சீர்குலைத்துள்ளனர். 

இப்போது தோட்டங்களை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிழையான செயலுக்கு யாரும் துணைபோகக்கூடாது. அரசுடன் இணைந்துள்ள அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். தனது பொறுப்பில் இருந்தும் விலகிச் செல்ல முற்படக்கூடாது அத்தோடு காலாகாலமும் இன்னொருவரை குறை கூறிக்கொண்டு தமது பணியை உருப்படியாக செய்யாதிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகையோரை மக்கள் தூக்கியெறிவது நிச்சயமாகும் என்றார்.

Monday, June 13, 2016

அரநாயக்க மண்சரிவால் பலர் தொழிலின்றி நிர்க்கதி

அரநாயக்க மண்சரிவு காரணமாக 1,000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தமது தொழிலை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாக சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார். 

அரநாயக்க சமாரச மலை சரிந்து எதிர்வரும் 17ஆம் திகதியுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், இம்மண்சரிவினால் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட  மக்களது மறுவாழ்வுக்காகவும் இறைஆசி வேண்டி விசேட சர்வ மத பிரார்;த்தனைகள் நடைபெறவுள்ளன. அரநாயக்க, புஸ்ஸப்பிட்டிய தியான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைதங்கள் முகாமில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கண்டி- இந்திய உதவித்தூதுவர் ராதா வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

சர்வமத சமாதான நிதியம் மற்றும் சௌமிய இளைஞர்  நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'அரநாயக்க மண்சரிவினால் பிரதான பாதைகளில் மண்மேடுகள் குவிந்து கிடப்பதனால்,   டோட்டுலோய, மொரட்டிய, அம்பதெனிய, எலங்கபிட்டிய போன்ற தோட்டங்களில் வசிக்கும் ஆயிரகணக்கான தோட்டத் தொழிலாளரகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொழிலுக்குச் செல்வதும் தடைப்பட்டுள்ளது. தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமானமின்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்' என்றார். 

நன்றி- தமிழ் மிரர்

100.ரூ இடைக்கால நிவாரணக் கொடுப்பனவும் கானல் நீராகிவிட்டது

தனியார்துறை ஊழியர்களுக்கான 2,500ரூபாய்  சம்பள அதிகரிப்பு, தோட்டத் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டுவிட்டது. அதேபோல ஏப்ரல், மே மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட நாளொன்றுக்கு 100 ரூபாய் இடைக்கால நிவாரணக் கொடுப்பனவும் கானல் நீராகிவிட்டது' இவையிரண்டும் மண்ணெண்ணெய் நாடகமாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், '2,500 ரூபாயை பெற்றுக்கொடுப்போம் எனவும், முதன்முதலில்  அரசாங்கம் முன்மொழிந்த சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கப்போகிறது எனவும்  தம்பட்டம் அடித்தவர்கள், அது கைக்கூடாது என்ற நிலை வந்தவுடன்; தற்போது இடைக்கால நிவாரணம் என்ற கூத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இடைக்கால கொடுப்பனவு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாம். புதிய கூட்டுஒப்பந்தம் கையெழுத்திட்டவுடன் இவ்வாறு வழங்கப்படுகின்ற தொகையை தொழிலாளர் சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்வார்களாம். 

அரசாங்கத்திடமிருந்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடன் வழங்கப்பட்டால் மட்டுமே இந்த இடைக்கால நிவாரண கொடுப்பனவை தோட்டக் கம்பனிகள் வழங்குமாம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தோட்டத் தொழிலாளர்கள் நிவாரண கடனுக்காக கையேந்தும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது' என்றார். 'கடந்த ஒன்றரை வருடத்தில் மலையக மக்கள் பல பொய்களையும் பித்தலாட்டங்களையும் மண்ணெண்ணை நாடகங்களையும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், பொருத்தமான நேரத்தில் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து காய்நகர்ததல்களை ஆரம்பித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அனுபவமில்லாமல் தலையிட்டு, இன்று மூக்குடைப்பட்டு நிற்பவர்கள் அன்று அமைதியாக இருந்திருந்தால் கடந்த ஒரு வருடகாலத்துக்கு முன்பே சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்திருக்கும்' என அவர் மேலும் கூறினார். '

கடந்த பொதுத் தேர்தலில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்காக   பெருந்தோட்ட கம்பனிகளுடன் மறைமுகமாக கூட்டுச்சேர்ந்து ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்தை அரசியலாக்கி கெடுத்த வரலாற்று சம்பவமாக இது அமைந்துவிட்டது. எனினும்,   தொடர்ச்சியாக பெருந்தோட்ட கம்பனிகளுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்வது குறித்த பேச்சுவார்தைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சில சாதகமான நகர்வுகள் தென்பட்டன. ஆனால், கடந்த ஒன்றரை வருட கால நிலுவை தொடர்பில் காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. எனினும் தொண்டமான், நாடு திரும்பியவுடன் தோட்டக் கம்பனிகளுடனான பேச்சுவார்த்தை தொடரவுள்ளதுடன், வெகு விரைவில் புதிய கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் ' என்றார்.