உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்
நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று ஏற்கனவே
அறிவித்திருந்தார். தற்போதைய நிலைவரத்தின்படி உள்ளூராட்சி சபைகளுக்கான
தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதமே நடத்தப்படுமென அரசாங்க வட்டாரங்களிலிருந்து
தெரிந்து கொள்ள முடிகிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெற்றாலும் தேர்தல்
முறைக்கு கொண்டு வரப்படவுள்ள விகிதாசார, தொகுதி வாரி என்பன கலந்த
திருத்தத்திற்கு அதாவது உத்தேச அரசியலமைப்பிற்கான 20வது திருத்தச்
சட்டத்தின் படியே நடத்தப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரான அமைச்சர்
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி சபை தேர்தல்
விசேடமாக வட்டார (வார்ட்) முறையின் அடிப்படையிலேயே நடைபெறும்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பற்றி பேசப்படும் சூழ்நிலையில்
இரண்டு பிரதான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஒன்று ஒரு
உள்ளூராட்சி சபை பிரதேச எல்லைக்குள் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக
இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை ஒப்பீட்டு ரீதியில் உறுதி செய்து
வருவது விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஆகும்.
விகிதாசார முறையும் தொகுதிவாரி முறையும் கலந்த தேர்தல் முறை அறிமுகம்
செய்யப்படும்போது எண்ணிக்கையில் சிறுபான்மையான சமூகத்தினரின்
பிரதிநிதித்துவம் குறைவடைய அல்லது இல்லாமல் போகக்கூடும். அதிலும்
உள்ளூராட்சி சபை தேர்தலில் வட்டாரங்களிலிருந்து உறுப்பினர்கள் நேரடியாக
தெரிவு செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்படின் சிறுபான்மை சமூகத்தினர்
அந்த வட்டாரத்தில் செறிவாக வாழாத விடத்து அவர்களின் பிரதிநித்துவம்
இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும்.
இரண்டாவது பிரச்சினையாவது உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்திற்குரிய
புவியியல் பிரதேச எல்லைக்குள் பெருந்தோட்டக் குடியிருப்புகள்
அடக்கப்படாதபடியால் அவை அமைந்துள்ள பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகள்
முன்னெடுக்கப்படுவதற்கு தடைகள் இருக்கின்றன.
பிரதேச சபைகள் என்ற உள்ளூராட்சி அமைப்பிற்குள்ளேயே பெருந்தோட்டப்
பகுதிகள் உள்ளடங்குகின்றன. அதற்கான தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள்
உள்ளடங்கலான மலையக மக்கள் வாக்களிப்பதை மட்டுமே உரிமையாக கொண்டுள்ளனர்.
பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 33 பிரதானமாக தோட்டக் குடியிருப்புகளை
பிரதேச சபைகளின் அபிவிருத்தி வேலைகளை உட்கிடையாக தடுக்கிறது. இச்சட்டம்
பாராளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது (1987 இல்) அப்போது பாராளுமன்றத்தில்
உறுப்பினர்களாக இருந்த மலையகத்தவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அவர்கள் அப்பிரிவினூடாக தோட்டப் பிரதேச அபிவிருத்திகளுக்கு
போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது
அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமன்றி அடுத்தவர்களின்
அபிப்பிராயங்களுக்கு செவிசாய்க்காமை பண்பாட்டின் வெளிப்பாடுமாகும்.
அடுத்தவர்கள் சரியான கருத்துக்களை முன்வைத்தாலும் அதனை பொது மக்கள்
நன்மை கருதி கூட ஏற்காத தான்தோன்றித்தனமே அவர்களிடம் காணப்பட்டது. அந்த
மலையக எம்.பிக்களிடம் 1986, 1989 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட
பிரசாவுரிமை சட்டத்திருத்தங்கள் பற்றிக்கூட தெரிவிக்கவில்லை.
மலையகப் பகுதிகளில் மூன்று அல்லது நான்கு பிரதேச சபைகள் மலையகத்தில்
உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது. தலைவர்கள், பிரதித் தலைவர்களாக
மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் தோட்டப் பகுதிகளில்
அபிவிருத்திகளை மேற்கொள்ள அவர்களுக்கு பிரதேச சபைகளின் கீழ் அதிகாரமோ
ஆணையோ கிடையாது.
தோட்டப் பகுதிகளின் சில இடங்களில் பாதைகளும், பாலங்களதும் பிரதேச
சபைகளுக்கூடாக அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்காக செலவழிக்கப்பட்ட நிதி
அவற்றுக்கென ஒதுக்கப்பட்டதல்ல. மாறாக வேறு திட்டங்களுக்கு
ஒதுக்கப்பட்டதிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும்.
இந்த நிலைமை மாற வேண்டுமெனின் பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு
திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதாவது தோட்டப் பகுதிகளை பிரதேச சபை
அபிவிருத்தி திட்டங்களிலிருந்து உட்கிடையான ஒதுக்க வைத்திருக்கும் பிரிவு
33 ஐயும் அதனோடு தொடர்புடைய பிரிவுகளையும் திருத்த வேண்டும். தோட்டப்
பகுதிகளிலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்றும் தோட்டக்
குடியிருப்புகளை சட்டபூர்வமான மக்கள் குடியிருப்புகளில் ஒன்றான
அங்கீகரிப்பதாகவும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
தோட்டக் குடியிருப்புகளை இலங்கையின் குடியிருப்புகளில் ஒன்றாக
அங்கீகரித்தால் அபிவிருத்திகளை ஈர்த்துக் கொள்ளும் தகுதி மலையகத் தமிழ்
மக்களுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் மலையகத் தமிழ், மக்கள் ஏனைய
பிரஜைகளுக்கு அல்லது சமூகங்களுக்கு சமமாக நடத்தப்படுபவர்களாக
இருக்கமாட்டார்கள்.
வாக்களித்து தாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் ஆளும் பிரதேச
சபைகளின் பயனாளிகளாக தாங்கள் அங்கீகரிக்கப்படாவிட்டால் தங்களது
வாக்குரிமையால் என்ன என்பதுடன் வாக்குரிமை இருந்தும் இல்லாத நிலையில்
இருப்பதாக மலையகத் தமிழ் மக்கள் விசனமடைந்துள்ளனர்.
இலங்கையின் அரசியல் பிரதிநிதித்துவ முறையில் உள்ளூராட்சி சபைகளை
மக்களுடன் நேரடி தொடர்புடைய மக்கள் நாளாந்த தேவைகளுக்கான நாளாந்த
அலுவல்களுக்கான சபையாக இருக்கின்றன.
தோட்டக் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகளாக
அங்கீகரிக்கப்படவில்லை. (அவை நகரக் குடியிருப்புகளாக இருக்க முடியாது)
அவ்வாறு கிராமக் குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும் வேறு
விசேடமான இன்னொரு குடியிடிருப்பாகவாவது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மலையகத் தமிழ் மக்களுக்கென தோட்ட உட்கட்டமைப்பு என்ற அமைச்சொன்று
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அது ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இல்லாமலாக்கப்பட்டது. தற்போது புதிய கிராமங்கள்
உருவாக்குதல் அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதன் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திணைக்களங்கள் எதுவும்
இல்லை. அவ்வமைச்சு காணி, வீடமைப்பு போன்ற அமைச்சுகளில் தங்கி இருக்க
வேண்டிய நிலையில் இருக்கிறது. மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டின் ஏனைய
மக்களை ஏறக்குறைய நூறாண்டு காலத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதனால்
இச்சமூகத்திற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாகிறது.
அந்த அடிப்படையில் புதிய கிராமங்கள் உருவாக்கும் அமைச்சு சுதந்திரமாக
செயற்படுவதற்கு அதிகாரங்களும், திணைக்களங்களும், நிதியும் ஒதுக்கப்பட
வேண்டும்.
அதனூடாக மலையகத் தமிழ் மக்களுக்கு சொந்த வீடுகள், காணிகள் கிடைப்பதற்கான
வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டு உட்கட்டமைப்புகளுடன் பிரத்தியேக
குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பெருந்தோட்டங்களின் பெரும்பாலானவை தனியார் கம்பெனிகளால் முகாமை
செயற்படுகின்றன. இதனால் தோட்ட எல்லைக்குள் குடியேற்றங்கள்
ஏற்படுத்தப்படுவதை கம்பெனிகள் நிர்வாகங்கள் அதிகமாக விரும்பவில்லை. அவை
தோட்ட குடியிருப்புகள், தோட்ட உட்கட்டமைப்பு போன்றன அவற்றின் பிரத்தியேக
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென விரும்புகின்றன.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் தோட்டக்காணிகளின் பூரணமான
சொந்தம் அல்லது உரித்து தோட்டக் கம்பெனிகளிடமே இருக்கின்றன. நீண்டகால
குத்தகைக்கு அல்லது முகாமை செய்வதற்கு தோட்டங்களை அரசாங்கத்திடமிருந்து
பெற்றுக் கொண்டுள்ள கம்பெனிகள் இந்நாட்டின் இன்னொரு மக்கள் பிரிவினரான
மலையகத்தில் மக்களுக்கு பிரதேச சபைகளினூடான அபிவிருத்திகள் சென்றடைவதற்கு
தடையாக இருக்கக்கூடாது.
பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில்
முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று மலையகத் தமிழ் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட பிரதேச சபைகளின் அபிவிருத்திகள் தோட்டங்களுக்கு கொண்டு
செல்லப்படுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.
ஆகவே பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உரிய திருத்தங்களை செய்து
மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ, பொருளாதார சமூக உரிமைகளை
உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.