நுவரெலியா, வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட
மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் அல்மா கிரேமன்ட்
தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளமைக்கும் அங்கு
பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்களை அகற்றுவதற்கும் எதிர்ப்புத்
தெரிவித்து தொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்ட
பேரணி ஹைபொரஸ்ட், சில்வர்கண்டி புறுக்சைட் சந்தி, சென்ஜோன்ஸ், கந்தப்பளை
ஊடக நுவரெலியா தொழிற்திணைக்களம் வரை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சாலையை மீளத்திறந்து, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும்
தொழிலாளர்களின் வேலையை உறுதிப்படுத்துமாறும் பேரணியில் ஈடுபட்டவர்கள்
தொழிற் திணைக்களத்திடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் குறித்த தொழிற்சாலையை மீள
இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் வாக்குறுதி
அளித்திருந்ததாக தெரியவருகிறது. எனினும் நேற்று (13) தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும்
இயந்திரங்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தொழிலாளர்களின் எதிர்ப்பை
அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையை நம்பியே தினமும் சுமார் இரண்டாயிரம் முதல்
மூவாயிரம் கிலோ தேயிலை பறிக்கப்படுவதாகவும், எனினும் தொழிற்சாலை
மூடப்பட்டுள்ளதால் பறித்த தேயிலையை வேறு தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டிய
தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழப்பதோடு, அவர்களது மாத வருமானம்
50 வீதமானக குறைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள்
தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையை நம்பியிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் முற்றாக தொழிலை இழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழிற்சாலையை மீளத் திறக்கும் பட்சத்தில் ஏற்கனவே மூடப்பட்டுள்ள
பிரம்லி, குருந்துஓயா மற்றும் கோணப்பிட்டிய ஆகிய தொழிற்சாலைகளை நம்பி
பறிக்கப்படும் தேயிலையையும் இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வந்து உற்பத்தி
நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
தெரிவிக்கின்றனர்.