Tuesday, September 15, 2009

மலையகம் தந்த பாடம்
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
-சாகரன்-
கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள்.
அக்கால கட்டத்தில் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரைக்கும் வீதிகள் ஏதுமற்ற நிலை இருந்தது. தலைமன்னாரில் இருந்து மலையகம் செல்வதற்கான வீதிகளை தாமே நிர்மாணித்து, தாம் நிர்மாணித்த பாதை வழியே நடந்தே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை அம்மக்கள் கொண்டிருந்தனர். இப்பாதை நிர்மாணிப்பில் பல ஆயிரக்கணக்க மக்கள் தமது உயிரை மாய்த்தக் கொண்டு ஏதுமற்றவர்களாக எரியூட்டப்பட்டனர் என்பதே சோக வரலாறு. மன்னார் மண்ணுக்கு உரமாக்கப்பட்டனர். இராமாணயத்தில் அனுமான் தனது பரிவாரங்களுடன் இணைந்து இலங்கைக்கு கடல் வழியே பாதை அமைத்ததாக கதைகள் கூறுகின்றன. அது உண்மையோ, பொய்யோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வாழும் நூற்றாண்டில் தலைமன்னாரில் இருந்து மலையகம் வரை பாதையமைத்து தமது உயிரை தியாகம் செய்த வரலாறு எமது மலையக மக்களுக்கே சேரும். இவர்களே உண்மையில் வரலாற்று நாயகர்கள். ஆமாம் இலங்கையில் நாம் கண்ட வரலாற்று நாயகர்கள்.

பொகவந்தலாவையில் பதற்ற நிலை தொடர்கிறது

சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த கொட்டியாக்கலை, பொகவான, குயினா, கில்லானி, செல்வக்கந்தை உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த சகல தொழிலாளர்களும் எவ்வித தொழிற்சங்க, அரசியல் கட்சி பேதமின்றி நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் (15-09-2009) ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்றனர். பேரணி பொகவந்தலாவை கல்லூரி வீதிக்குச்சென்ற போது, ஊர்வலத்தினர் மீது இனந் தெரியாதவர்கள் கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அவர்களும் திருப்பித் தாக்குதல் மேற்கொண்டனர். பொகவந்தலாவை நகர மத்தியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொகவந்தலாவை நகருக்கூடான சகல போக்குவரத்துக்களும் பல மணிநேரம் தடைபட்டன. இதனைத் தொடர்ந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை எல்லை மீறிச்செல்லவே பொலிஸார் 10 க்கும் மேற்பட்ட கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


இதனால் மறியலிலில் ஈடுபட்டவர்கள் எதிர்த்து நின்ற போதும் புகை மண்டலம் பரவியதால் தொழிலாளர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். சிதறி ஓடினர். உடனடியாகப் பொகவந்தலாவை நகரின் சகல கடைகளும் இழுத்து மூடப்பட்டன. பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையிட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சம்பள நிர்ணயசபை மூலம் நிர்ணயிக்க வேண்டும்

வாழ்க்கை செலவுகளுக்கேற்ப அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்படுவது பொதுவாக உலக நாடுகள் அனைத்திலும் இடம்பெற்று வரும் பொதுவான நிலைப்பாடாகும்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது முதலாளிமார் சம்மேளனத்துக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதற்காக பெரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் சம்பள உயர்வை சம்பள நிர்ணயசபை மூலம் அல்லது ஜனாதிபதியின் மூலம் பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தோட்டத் தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொழிற்சங்கங்களால் ஒற்றுமையாக முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டம் 405 ரூபா சம்பள உயர்வுடன் பல்வேறு இழுபறிகளையும், மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளன. பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இவ்வாறானதொரு சூழ்நிலை தேவையற்றதாகும். தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வை கோருவதும், முதலாளிமார் சம்மேளனம் அதனை வழங்க மறுப்பதும், பின்னர் தொழிற்சங்கங்கள் இணங்கப்பட்ட சம்பள உயர்விலும் பார்க்க குறைந்த தொகைக்கு இணங்குவதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பழக்கப்பட்ட விடயமாகும். இது மாற்றம் பெற வேண்டும். நாட்டின் ஏனைய தொழிற்துறை ஊழியர்களுக்கு கிடைப்பதை போன்ற சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஆவண செய்ய வேண்டும். தமது அடிப்படை தேவைகள் கூட இன்று வரையில் நிறைவு செய்யது கொள்ள முடியாது திண்டாடும் மலையகத் தோட்ட மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். இப் போராட்டம் வாரக்கணக்கில் இடம்பெற்ற போதும் நியாயபூர்வமான சம்பள உயர்வு கிடைக்காது போவதால் காலாகாலமாக ஏமாற்றப்படுவது தொழிலாளர்களே. எனவே தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி சம்பள நிர்ணயசபை மூலமாக அல்லது ஜனாதிபதியின் மூலமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சம்பள பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்துக்கு – வடிவேல் சுரேஷ்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு 500ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்துக்கு தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படாது உள்ள போதிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் ஆதரவு வழங்கினோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றவர்கள் வௌவேறு விதத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். 500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுப்போம் என்று உறுதியாக கூறியவர்கள் விடுமுறை நாளில் இரவோடு இரவாக பேசி எவருக்கும் தெரியாமல் 405 ருபா சம்பளத்திற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைச்சர் வீ. புத்திரசிகாமணி, அமைச்சர் பெ. சந்திரசேகரன், மத்திய மாகாண உறுப்பினர்கள் திகாம்பரம்,சதாசிவம் ஆகியோருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம் என்றார். மலையக தொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக எவரும் தனித்து முடிவெடிக்கக் கூடாது என்றார்.
பொகவந்தலாவையில் பதற்ற நிலை - பொலிஸார் கண்ணீர்ப்புகை

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் பேரணி ஒன்றையும் மறியல் போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர். இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.