நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் மலையகத்தின் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் அனர்த்த அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டுனாலி, அப்பர் கலஹா, கலஹா குரூப், பட்டியகம, கிதுல் முல்ல, தெல்தோட்டை குரூப் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகள் இதனால் பெரிதும் பாதிப்பப்பட்டுள்ளன. பொதுவாக இத்தோட்டங்களைச் சேர்ந்த 10 இற்கு மேற்பட்ட லயக்குடியிருப்புக்களின் 162 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இம்மக்கள் வாழும் லயக்குடியிருப்புக்களுக்கு அருகாமையில் நிலப்பிளவுகளும் நிலம் தாழ்ந்தும் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காணப்படுவதால் இம்மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களின் குடியிருப்புக்கள் ஆபத்தானவை என பிரதேச செயலகத்தினால் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர், கண்டியை மையமாகக்கொண்டு கேகாலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த்
தெல்தோட்டைப்பிரதேசத்திற்குச் சென்று அவர் அங்கு மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார். அதன்போது சிலர் வழங்கிய கருத்துக்களே இவை.
எஸ்.ஜெயந்தி கருத்து தெரிவிக்கையில் :
நான் ஒரு கால்நடை விவசாயி. தனது குடும்ப வாழ்வாதாரத்தை கால் நடைகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தைக் கொண்டு சீவியம் நடாத்தி வருவதாக தெரிவித்தார். கால்நடை வளர்ப்புக்கு உகந்த பிரதேசமாக டுனாலி பிரதேசம் காணப்படுகின்றது. தற்போது டுனாலிப் பிரதேசம் அனர்த்தப் பிரதேசமாக காணப்படுகின்றது. இவ்வனர்த்தத்தினால் என்னைப் போன்ற பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி எமது குடியிருப்புக்களை உருவாக்க வேண்டும் என அரசிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். எமக்குத் தேவை பாதுகாப்பான காணித்துண்டொன்று. அடுத்து ஜீவாதாரத்திற்கான தொழில். என்றார்.
எல். காஞ்சனா (பாடசாலை மாணவி):
நாம் மலையக மாணவர்கள் என்ற பகுதிக்குள் வருகின்றோம். அதனால் பல இன்னல்களை அவ்வப்போது சந்தித்துவருகின்றோம். பல வசதியீனங்களுக்கு மத்தியில் நாம் கற்றுவருகின்றோம். மின்னொழுக்கு ஒழுங்கீனத்தினால் மலையகத்தின் பல லயக்குடியிருப்புக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளமையை நாம் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். அதற்கு நாமும்விதிவிலக்கல்ல.
அதேபோல், மழை காலங்களில் எமது குடியிருப்புக்கள் அவ்வப்போது அழிந்து சேதமடைகின்றன. இந்நிலை தொடருமாயின் எமது கல்வி பாதிக்கப்படுவதோடு மலையக மக்களின் அபிவிருத்தியில் பின்னடைவும் ஏற்படும்.
இவற்றை கருத்திற்கொண்டு எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் நிர்வாகத்துறையினரும் எமக்கு பாதுகாப்பான நிலத்தை வழங்கி கல்வியுரிமையை உறுதிப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் கல்வியைத்தடையின்றிப்பெற கல்வியமைச்சர் எமது இராஜாங்க கல்வியமைச்சர் உள்ளிட்டோர் உதவவேண்டும்.என்றார்.
ஆர். வேலு (ஓய்வுபெற்ற தோட்டத்தொழிலாளி):
தோட்டத்தொழிலாளிகள் ஏமாறவே பிறந்தவர்கள் என்பது போல தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் ஏன் இயற்கையும் நடந்துகொள்கின்றன.
காலங்காலமாக தோட்ட முகாமைத்துவமும் தொழிற்சங்கங்களும் அரசியல் வாதிகளும் எம்மை ஏமாற்றி வருகின்றனர்.இதனை யாவரும் அறிவர். தேர்தல் காலத்தில் மாத்திரம் எமது பகுதிக்கெல்லாம் வருவார்கள். தொண்டை கிழியக்கத்துவார்கள். அது செய்வோம் இது செய்வோம் என்பார்கள். ஆனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றமே.எங்களை ஏமாற்றி பிழைப்போர் எமது இன்றைய நிலையை நன்கு அவதானித்து எமக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது பிராயச்சித்தமாகும்.
நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடைகளை எங்களால் தேடிக்கொள்ள முடியும். நாம் பீதியின்றி நிம்மதியாக வாழ எமக்கு ஒரு காணித்துண்டை தாருங்கள்.
இதுவே எமது விருப்பம்.எனத்தெரிவித்தார்.
நன்றி- தினகரன்