Tuesday, March 1, 2011

பெருந்தோட்ட பெண் தொழிலாளர்களுக்க 6 மணிநேர வேலை- சம்பளம் 500 வழங்க வேண்டும்- மனோகணேசன்


மலையக தோட்டங்களில் கொழுந்து பறிக்கும்; பெண் தொழிலாளர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலான ஆறு மணிநேர வேலையே வழங்கப்பட வேண்டும். இந்த வேலைக்கு நிபந்தனையற்ற அடிப்படை நாட்சம்பளமாக ரூபா 500 வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அக்கரப்பத்தனை உருளவள்ளி தோட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சிச்சபை தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போது கோரிக்கை விடுத்தார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் மலையக பெண் தொழிலாளர்களின் உழைப்பு தோட்டங்களில் கொழுந்து பறித்து சுமந்து வருவதுடன் மாத்திரம் முடிந்து விடவில்லை. வீட்டிலேயும் அவர்கள்தான் வேலை செய்யகின்றார்கள்.
வீட்டில் சமையல் செய்வதிலிருந்து, குழந்தை வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு என இல்லத்தரசிகளாகவும் அவர்களே பணியாற்றுகின்றார்கள். மலைநாட்டில் ஆண்களைவிட, பெண்களே அதிகமாக உழைக்கின்றார்கள் என்ற அடிப்படை உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

இதனால் பெருந்தோட்டத் பெண் தொழிலாளர்களுக்கு ஆறு மணிநேர வேலை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் ஒரு நாள் சம்பளமாக ரூபா 500 வழங்கப்பட வேண்டும் என்றார்

மலையக பெண் தொழிலாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்காமல் மலையக பாட்டாளி வர்க்கத்திற்கு நியாயம் கிடைக்காது. காலை முதல் மாலை வரை மலைகளிலே பலமுறை ஏறி, இறங்கி உழைப்பவர்கள் பெண் தொழிலாளர்களே. நீண்டகாலமாக நிலவும் இந்த பரிதாபகரமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மலையக மகளிர் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புக்களும் ஆததரவு வழங்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிபந்தனையற்ற அடிப்படை சம்பளம் ரூபா 500, ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் ரூபா 250, மொத்த நாட்சம்பளம் ரூபா 750 என்ற எங்களது முதன்மை கோரிக்கைக்கு இணையான கோரிக்கையே, பெண் தொழிலாளர்களுக்கு ஆறு மணிநேர வேலைக்கான கோரிக்கையாகும் என்றார்

உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அவசியம்


உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருக்க வேண்டும் 2006ம் ஆண்டிற்குப்பின் நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பெண்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மகளிருக்கான வாய்ப்பை நாம் இழக்கக் கூடாது. 30 சதவீத பெண்கள் அதிகாரத்தில் பங்குகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த 22ம் திகதி அட்டன் டினாய் ஹோட்டலில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடலில் தலைமை தாங்கி பேசிய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவன மகளிர் பிரிவு தலைவி செல்வி யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

கட்சி சார்பற்ற முறையில் மகளிர் போட்டியிடுவதை நாம் ஆதரிக்கின்றோம். ஏனென்றால் ஆளும் ஆட்சி அதிகாரத்தில் மலையக பெண்களின் பங்களிப்பு அவசியமானதும், அவசரமானதுமாகும் என்று செல்வி யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்டத்தில் 15 பெண் வேட்பாளர்கள் போட்டி


நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இ.தொ.கா. சார்பில் போட்டியிடும் ஒரு பெண்ணும், சுயேச்சை குழுவில் போட்டியிடும் இரு பெண்களும், மலையக மக்கள் முன்னணியில் போட்டியிடும் ஒரு பெண்ணும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு பெண்ணுமாக 15 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபை அங்கு ஹங்குரான்கெத்த பிரதேச சபை அட்டன்-டிக்கோயா நகராட்சிமன்றம், தலவாக்கலை-லிந்துல்ல நகராட்சி மன்றம் ஆகியவைகளிலேயே பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.