Thursday, July 28, 2016

160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில்

நவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து இலங்­கை­யர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கௌர­வப்­ப­டுத்த வேண்டும் என நேற்று சபையில் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி. எம்.பி. யுமான அனுரகுமார திசா­நா­யக்க தெரிவித்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு விசேட அதி­கார சபை­யொன்றை அமைத்து அதற்கு அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­யக மக்­களின் பொரு­ளா­தார உயர்வு மற்றும் வாழ்க்­கைத்­தர மேம்­பாடு தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி. அனுர குமார திஸா­நா­யக்க சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­றுகையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 67 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. ஆனால் இன்னும் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்கள் அடிமைத் தன­மான லயன் அறைகளில் கூனிக் குறு­கியே வாழ்­கின்­றனர்.
1,60,000 தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்னும் லயன் அறைக­ளி­லேயே அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழ்ந்து வரு­கின்­றனர்.
தோட்­டங்­க­ளி­லி­ருந்து இளை­ஞர்கள், யுவ­திகள் வெளி­யே­று­கின்­றனர். ஆனால் அவர்கள் கல்­வித்­துறை சார்ந்த தொழில்­களை செய்­ய­வில்லை. மாறாக வீட்டு வேலை­க­ளுக்கும் ஹோட்­டல்­களில் மூட்டை தூக்கும் வேலை­க­ளுக்­குமே வரு­கின்­றனர்.
இங்கு ஒரு புதிய சம்­பி­ர­தாயம் உள்­ளது. கொழும்­பி­லுள்­ள­வர்­களின் வீட்டு வேலைக்கு ஆள் தேவை­யென்றால் தோட்­டத்­தி­லி­ருந்து ஒரு பிள்­ளையை கொண்டு வாருங்­களேன் என்றே கேட்­கின்­றனர்.
இந்­நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். கல்வித் துறையில் பின் தங்­கி­யி­ருக்கும் மலை­ய­கத்தில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்.
தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளது அடிப்­படை வச­தி­களை செய்து கொடுக்­கப்­ப­டும்­போது பல விட­யங்­களை முன்­வைத்து அடிப்­படை வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.
நாங்கள் லயன் அறை­களை வழங்­கு­கின்றோம். அதற்கு பதி­லாக குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்­த­னை­க­ளு­ட­னேயே கம்­ப­னிகள் தொழில்­களை வழங்­கு­கின்­றன.
நவீன அடிமைத் தனத்தின் அடை­யாளச் சின்­னங்­க­ளாவே தோட்ட மக்கள் இன்றும் வாழ்­கின்­றனர்.
இந்­தி­யா­வி­லி­ருந்து மலை­ய­கத்­திற்கு தொழி­லா­ளர்கள் கொண்டு வரப்­பட்டு லயன் அறைகளில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த நிலை­மை­யி­லேயே இன்றும் 160,000 தொழி­லா­ளர்கள் வாழ்­கின்­றனர்.
போஷாக்குக் குறைந்த பிள்­ளை­களின் எண்­ணிக்கை 25 வீதம் அதி­க­ரித்­துள்­ளது. குறைந்த குறைந்த எடையுடன் பிள்­ளைகள் பிறக்­கின்­றனர்.
சௌமியமூர்த்தி தொண்­டமான் மன்றத்திற்கு அரசாங்கம் நிதியை வழங்­கி­யுள்­ளது. 1800 மில்­லியன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக கோப் குழு­வுக்கு முன்­வைத்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.
கடந்த கால மலை­யகத் தலை­வர்கள் தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கவில்லை. உயர் பிர­புத்­துவத் தலை­வர்களாக செயற்­பட்­ட­வர்­கள் மலை­யக மக்­களின் வாழ்க்­கையை உயர்த்­த­வில்லை.
தற்­போது புதிய தலை­வர்கள் உரு­வா­கி­யுள்­ளனர். இவர்கள் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு என்ன செய்­கின்­றனர் என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். அவர்­க­ளது நட­வ­டிக்கை எப்­ப­டி­யுள்­ளது என்­பதை பார்ப்போம்.
அவர்­க­ளுக்கு கிடைக்கும் சம்­பளம் போதாது. அத்­தோடு இவர்கள் இலங்­கையின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­காக தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அதற்­கா­கவே உயிரை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அவர்­க­ளது சந்­த­தி­யினர் இலங்­கையில் பிறந்­த­வர்கள்.
எனவே ஏன் நாம் அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.? அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து அவர்­களை இலங்­கை­யர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.
அத்­தோடு மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்த அமைச்­சுக்­களை ஏற்­ப­டுத்­து­வதால் முடி­யாது என்­பதை அடை­யாளம் கண்­டுள்ளோம்.
எனவே விசேட அதி­கார சபை­யொன்றை ஏற்­ப­டுத்தி திறை­சேரி ஊடாக அர­சாங்கம் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும்.
தோட்டங்களில் மக்களுக்கு பாமஸிஸ்ட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இது நியாயமா? அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் கௌரவம் உள்ளது. எனவே அவர்களது கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கம்பனிகளுக்கு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு தீர்­மா­னத்தை இ.தொ.கா.வர­வேற்­கி­றது

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­கால கொடுப்­ப­ன­வாக 2500 ரூபாவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருக்­கின்றார். இதனை இலங்­கை­தொ­ழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கி­றது. இதே­நேரம் இவ் இடைக்­கால கொடுப்­ப­னவை இரண்டு மாதங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்தி விடாது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் வரை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார்.
அக்­க­ரப்­பத்­தனை கிளாஸ்கோ நெதர்ஸ்டன், டய­கம வெஸ்ட் முதலாம் பிரிவு ஆகிய பகு­தி­களில் நேற்று புதன்­கி­ழமை பாதை திறப்பு நிகழ்­வு­களில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,தோட்­டத்­தொ­ழி­லா­ள­ருக்­கான நிவா­ர­ண­மாக 2500 ரூபாவை வழங்­கு­வ­தற்கு அர­சா­ங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கின்­றது. எனினும் இந்­தக்­கொ­டுப்­ப­ன­வா­னது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திடப்படும் வரை வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை இ.தொ.கா. விரும்­பு­கி­றது.
சம்­பள அதி­க­ரிப்­பு ­தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெறும் சந்­தர்­ப்பங்­களில் அது வெற்­றி­ய­ளிக்­காது இருப்­ப­தற்கு குழப்­ப­க­ர­மான செயற்­பா­டு­களில் சில தரப்­புக்கள் ஈடு­ப­டு­கின்­றன. இதுவே சம்­பள அதி­க­ரிப்­பு தாம­த­மா­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும்.
எவ்­வாறிருப்­பினும் தொழி­லா­ளர்­க­ளு­டைய சம்­பள பிரச்­சி­னையை இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும் என்­பதை யாரும் மறந்து விடக்­கூ­டாது. இ.தொ.கா.வே அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வை­பெற்­றுத்­தரும் என்­பதை மக்கள் நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கின்­றனர்.
இம்­முறை தேயிலை விலையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­மையால் நாம் முன்­வைத்த சம்­பள தொகையை பெற்­றுக்­கொள்­வதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. ஆனாலும் நாம் நிர்­ண­யித்த சம்­ப­ளத்தை அடைந்தே தீருவோம்.
இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தாலும் கூட அடுத்த மாதம் முதல் வாரம் அளவில் மீண்டும் ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வி­ரு­க்கின்­றது.
அந்த பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டியும் என எதிர்­பார்க்­கின்றோம். இருந்தும் தொழி­லா­ளர்கள் எதிர்­பார்க்கும் சம்­ப­ளத்தை நாம் பெற்றே தீருவோம் என்­பதில் ஐயம் கொள்­ளத்­தே­வை­யில்லை.
சிலர் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்கும் உரி­மை­களில் தலை­யிட்டு தங்­களை வளர்த்து கொள்­வ­தற்­காக மக்­களை திசை திருப்பி வரு­கின்­றனர். ஆனால் காங்­கி­ரஸின் சேவை தொடர்பில் இவர்­க­ளு­க்கு நன்கு தெரியும். எந்த நேரத்தில் எதை பெறு­வார்கள் தொழி­லா­ளர்­களின் உரி­மையை வென்­றெ­டுக்க எவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் எவ்­வாறு செயல்­ப­டு­வார்கள் என்­பதை அறிந்­த­வர்கள் தான் இன்று மக்கள் மத்­தியில் அவர்­களை திசை திருப்­பு­வ­தற்­காக கிளம்பி வந்­துள்­ளார்கள்.
தோட்ட நிர்­வா­கங்கள் தோட்ட காணி­களை காடு­க­ளாக்கிவிட்டு, தொழி­லா­ளர்­குறைப்­பையும் நிகழ்த்தி விட்டு தொழி­லுக்கு வரா­விட்டால் தேயிலை காணி­களை மூடு­வ­தாக அறி­விக்­கின்­றனர்.
அவ்வாறு நடந்தால் கவலைப்பட தேவையில்லை. மூடும் தேயிலை காணிகளை அந்தந்த தோட்டத்தில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அவர்கள் செல்லலாம். காரணம் இந்த தேயிலை காணிகளை உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள் தான். தம் உழைப்பின் சக்தியை முழுமையாக தேயிலை காணிக்கே செலவழித்து விட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக பூர்வீகத்தை இழக்க எமது மக்கள் முட் டாள்கள் அல்ல என்றார்.

Sunday, July 24, 2016

ஆயிரம் ரூபாவுக்கான போராட்டமே தேவை

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு குறித்த விமர்­ச­னங்கள் இப்­போது மேலெ­ழுந்து வரு­கின்­றன. இன்றோ நாளையோ தமக்கு உரிய சம்­பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்­பார்த்­தி­ருக்கும் தொழி­லா­ளர்­க­ளுக்கு இது­வரை எது­வுமே கிடைக்­க­வில்லை. சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுக்கப் போவ­தாக அர­சி­யல்­வா­திகள் அழுத்­த­மாக பல தட­வைகள் வாக்­கு­று­தி­ வழங்­கி­யுள்­ள­னரே தவிர இதில் சாத­கத்­தன்மை இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. அர­சி­யல்­வா­தி­களின் வாக்­கு­று­தி­களை கேட்டு கேட்டு புளித்­துப்­போன தொழி­லா­ளர்கள் இப்­போது அர­சி­யல்­வா­திகள் மீது நம்­ப­கத்­தன்மை இல்­லாத நிலையில் இருந்து வரு­வ­த­னையே அவர்­களின் செயல்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இதற்­கி­டையில் சம்­பள உயர்வு வழங்­கப்­ப­டா­த­வி­டத்து கம்­ப­னி­களின் மீது வழக்குத் தாக்கல் செய்­வ­தற்கு தொழில் அமைச்சர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­மையும் தெரிந்த விட­ய­மாகும்.
பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் சம­கால நிலை­மைகள் தொடர்பில் நான் இங்கு புதி­தாக எத­னையும் கூறு­வ­தற்­கில்லை. அம்­மக்­களின் வாழ்க்கை நிலை­மைகள் தொடர்­பாக பலர் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்­டி­ருக்­கின்­றனர். இம்­மக்­களின் நிலை­மை­களை பார்க்­கும்­போது இவர்­களும் இலங்கை மாதாவின் புதல்­வர்­களா? என்ற கேள்­வியே மேலெ­ழும்­பு­கின்­றது. எல்­லோரும் எல்­லாமும் பெற வேண்டும். இங்கு இல்­லாமை இல்­லா­த­நிலை வேண்டும் என்ற பாடல் வரி­களை நான் மிகவும் இர­சித்துக் கேட்­டி­ருக்­கின்றேன். எனினும் எல்­லாமும் பெறாது இல்­லா­மையால் எமது மலை­யக தொழி­லாளர் சமூகம் கண்ணீர் வடிக்­கின்­ற­போது நெஞ்­சுக்கு மிகவும் வேத­னை­யா­கத்தான் இருக்­கின்­றது. நாட்டில் ஏனைய இனங்கள் சக­ல­வி­த­மான உரி­மை­க­ளையும் பெற்று சமூ­க­மாக தலை­நி­மிர்ந்து வாழு­கின்­ற­போது இவர்­க­ளுக்கு மட்டும் ஏன் இந்த கதி என்று புரி­ய­வில்லை. ஒரு­வேளை சிலர் கூறு­வ­தைப்­போன்று தமி­ழர்­க­ளாக பிறந்­ததால்தான் இவர்­க­ளுக்கு இந்த கதி நேர்ந்­ததோ என்று கூட பல சந்­தர்ப்­பங்­களில் எண்­ணத்­தோன்­று­கின்­றது. இதில் உண்மை இருக்­கு­மானால் இன­வா­தத்தின் பரவல் எந்­த­ள­வுக்கு விசா­லித்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது.
பிழைப்பு நடத்­து­வ­தற்கும் வயிற்றை நிரப்பிக் கொள்­வ­தற்கும் எத்­த­னையோ வழி­வ­கைகள் காணப்­ப­டு­கின்­றன. ஏதேனும் ஒரு தொழிலை செய்து தானும் குடும்­பமும் சந்­தோ­ஷ­­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் வாழ முடியும். அந்தத் தொழில் நேர்­மை­யான தொழி­லாக இருக்க வேண்டும். பிழை­யான தொழிலில் பிழை­யாக பணம் ஈட்­டு­வது பற்றி நான் இங்கு கூற­வ­ர­வில்லை. இத்­த­கைய விட­யங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கத்­தக்­க­வை­யே­யாகும். நேர்­மையே நிம்­மதி தரும். இந்த நிலையில் பிழைப்­புக்­காக பல நல்ல தொழில்கள் இருக்­கின்­ற­போது அப்­பாவி தொழி­லா­ளர்­களை அட­கு­வைத்து அவர்­களை பலிக்­க­டா­வாக்கி குளிர்­காய முற்­படும் சிலரும் எம்­மி­டையே இருக்­கத்தான் செய்­கின்­றார்கள். இத்­த­கையோர் அர­சி­யலில் மட்­டு­மல்­லாது ஏனைய துறை­க­ளிலும் இருந்து வரு­கின்­றனர். இவர்கள் நிச்­சயம் தம்மை மாற்­றிக்­கொண்டு மக்­களின் நலன்­க­ரு­திய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. நான் என்ற சுய­ந­ல­நோக்கில் இவர்கள் சிந்­திப்­ப­த­னையும் செய­லாற்­று­வ­த­னையும் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். நாம் நமது சமூகம் என்ற பரந்த நோக்கு அவ­சி­ய­மாகும். வீடு பற்றி எரியும் போது பீடி பற்­ற­வைக்க நெருப்பு தேடும் தன்மை கொண்ட சிலரை பார்த்­தி­ருக்­கின்றேன். இவர்­களால் மலை­யக சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு ஏதும் நன்­மைகள் ஏற்­படப் போவ­தில்லை. மாறாக தீமை­களே வந்து சேரும். நன்மை செய்யப் பிறந்த நீ பிற­ருக்கு நன்மை செய்­யா­விட்­டாலும் தீமை­யா­வது செய்­யா­திரு என்­ப­தனை இவர்கள் நன்­றாக விளங்கிக் செயற்­ப­டுதல் வேண்டும்.
மலை­யக சமூ­கத்­திற்கு இது­போ­தாத கால­மாகும். சாண் ஏறினால் முழம் சறுக்­கு­கின்­றது. உர­லுக்கு ஒரு பக்கம் இடி மத்­த­ளத்­துக்கு இரு­பக்­கமும் இடி என்­பதைப் போல மலை­யக மக்­களின் நெருக்­கீ­டுகள் அமைந்­துள்­ளன. இன­வா­தி­களும் கம்­ப­னி­களும் தாரா­ள­மா­கவே நெருக்­கீ­டு­களை தொழி­லாளர் தோழர்­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றார்கள். மலை­யக மக்­களின் இருப்­பினை இல்­லாது செய்து சகல துறை­க­ளிலும் இவர்­களை ஓரம் கட்­டு­வது பலரின் எண்­ண­மாக உள்­ளது. இந்த எண்ண விதைப்­புகள் சுதந்­தி­ரத்­திற்கும் முன்­ன­தா­கவே ஆரம்­பித்­து­விட்­டன. இதன் தொடர்ச்­சியே சுதந்­தி­ரத்­திற்கு பின்­னரும் இருந்து வரு­கின்­றது. மலை­யக மக்­க­ளுக்­கென்று எந்த ஒரு உரி­மை­யையும் வழங்­கு­வ­தற்கு யாருமே தயா­ராக இல்லை. உரி­மை­களை வழங்­கு­வ­தாக காட்­டிக்­கொள்ள ஆட்­சி­யா­ளர்கள் முற்­ப­டு­கின்­ற­போதும் இது உண்­மை­யாக அமை­ய­வில்லை. கடந்­த­கால சம்­ப­வங்கள் இதற்கு சரி­யான சான்­று­களை பகர்­வ­தாக அமையும்.
மலை­யக மக்­களின் தேவைகள் இன்­னு­மின்னும் அதி­க­ரித்துச் செல்­கின்­றன. இவற்­றினை போராடிப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது மலை­யக அர­சி­யல்­வா­தி­களின் கட­மை­யாக இருக்க வேண்­டுமே தவிர அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளுக்­குள்ளே முரண்­பட்டுக் கொண்டு மக்­க­ளையும் பிரித்­தா­ளு­வ­தல்ல. மக்­க­ளுக்­கா­கவே அர­சி­யல்­வா­தி­களே தவிர அர­சி­யல்­வா­தி­க­ளுக்­காக மக்­க­ளில்லை.
மலை­யக மக்கள் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய பல விட­யங்­களில் உழைப்­புக்­கேற்ற ஊதி­யத்­தினை பெற்­றுக்­கொள்­வதும் முக்­கி­ய­மா­கி­யுள்­ளது. ஆனால் இது உரி­ய­வாறு இவர்­க­ளுக்கு கிடைப்­ப­தில்லை என்­பதும் யாவரும் அறிந்த விட­ய­மாகும். ஒவ்­வொரு தட­வையும் இவர்கள் போரா­டியே சம்­ப­ளத்­தினை பெற்­றுக்­கொள்ள வேண்டி இருக்­கின்­றது. சத்­தி­யாக்­கி­ரகம், மெது­வாக பணி­பு­ரிதல் என்­றெல்லாம் போராட்­டங்­களின் வடி­வங்கள். காலத்­துக்கு காலம் மாறு­ப­டு­கின்­றன. எனினும் இந்த போராட்­டங்கள் உரிய சம்­பள உயர்­வினை தொழி­லா­ளர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்­கின்­றதா? என்றால் கேள்­விக்­கு­றியே மிச்­ச­மாக இருக்கும். இதனை யாவரும் நன்­க­றிவர். வரவு – செலவு திட்­டத்­தி­னூ­டாக அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபா­வினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கும் வழங்­க­வேண்டும் என்று ஏற்­க­னவே வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. எனினும் இது சாத்­தி­ய­மாக வில்லை. அர­சாங்கம் கம்­ப­னி­களின் நலன்­க­ருதி பல்­வேறு கடன்­வ­ச­தி­களை செய்து கொடுத்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் கம்­ப­னிகள் 2500 ரூபா­வினை தொழி­லா­ளர்­க­ளுக்கு அவ்­வ­ளவு விரைவில் வழங்­கு­வ­தாக இல்லை. இன்னும் இது தொடர்பில் பல்­வேறு இழுத்­த­டிப்­புகள் இருந்­து­கொண்டே வரு­கின்­றன.
இதே­வேளை தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு உள்­ளிட்ட பல்­வேறு நலன்­க­ளையும் தீர்­மா­னிக்கும் கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட வேண்­டிய தேவை மேலெ­ழுந்­துள்­ளது. முன்­னைய கூட்டு ஒப்­பந்தம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறு­தி­யுடன் முடி­வ­டைந்த நிலையில், புதிய கூட்டு ஒப்­பந்­தத்தை ஏற்­க­னவே கைச்­சாத்­திட வேண்­டியும் இருந்­தது. எனினும் உலக சந்­தையில் தேயிலை விலை வீழ்ச்சி உள்­ளிட்ட கார­ணங்­களை மையப்­ப­டுத்தி முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இது தொடர்பில் இழுத்­த­டிப்­பினை மேற்­கொண்டு வரு­கின்­றது. இவை­யெல்லாம் பழைய கதை­க­ளாகும். சம்­பள உயர்­வி­னையும் அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபா­வையும் உட­ன­டி­யாக பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டு­மென்று மலை­யக அர­சி­யல்­வா­திகள் ஏற்­க­னவே வேண்­டு­தல்­களை விடுத்­துள்­ள­தோடு, போராட்­டங்­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்­தனர் என்­பதும் தெரிந்த விட­ய­மாகும். எனினும் இவை­யாவும் கம்­ப­னி­யி­னரை ஒன்றும் செய்­து­வி­ட­வில்லை. முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தையும் மசிய வைத்­து­வி­ட­வில்லை. போராட்­டங்கள் பிசு­பி­சுத்­து­விட்­ட­துதான் மிச்சம்.
மலை­யக அர­சி­யல்­வா­திகள் சம்­பள உயர்வு தொடர்பில் கம்­ப­னி­யி­ன­ருக்கு காலக்­கெ­டு­வினை விதித்­தி­ருந்­தனர். இப்­போது அந்த காலக்­கெ­டுக்­களும் முடி­வ­டைந்­து­விட்­டன. எனினும் கம்­ப­னி­யினர் தனது நிலைப்­பாட்டில் இருந்து இம்­மி­ய­ளவும் மாறி­ய­தாக இல்லை. வெளியார் உற்­பத்தி முறையை அறி­மு­கப்­ப­டுத்தி எமது மக்­களை மென்­மேலும் பொரு­ளா­தார ரீதியில் ஓட்­டாண்­டி­யாக்­கவே கம்­ப­னி­யினர் முற்­ப­டு­கின்­றனர். மலை­யக மக்­களின் மேம்­பாடு தொடர்பில் கிஞ்­சித்தும் கம்­ப­னி­யினர் சிந்­திப்­ப­தாக இல்லை. இலா­பத்தை மட்­டுமே மையப்­ப­டுத்­திய அவர்­களின் சுய­ந­ல­வாத செயற்­பா­டுகள் கார­ண­மாக தொழிற்­குலம் துன்­பத்தில் சிக்­கித்­த­விக்­கின்­றது.
இதற்­கி­டையில் கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்கை மற்றும் அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபா­வினை வழங்­குதல் என்­பன தொடர்பில் கம்­ப­னி­யினர் அச­மந்தப் போக்கில் செயற்­ப­டு­வார்­க­ளானால் தொழில் அமைச்சர் கம்­ப­னி­க­ளுக்­கெ­தி­ராக வழக்­குத்­தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலமே சாத­க­மான விளை­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென்று பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­தி­ருக்­கின்றார். தோட்டத் தொழி­லா­ளர்கள் தோட்டத் தொழிலைத் தவிர வேறு எந்த வரு­மான மார்க்­கங்­களும் இல்­லா­துள்­ளனர். இந்த நிலையில் இவர்­களின் வரு­மான மேம்­பாடு கருதி பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும். தோட்­டங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தரிசு நிலங்கள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை மலை­யக இளை­ஞர்­க­ளுக்கு பிரித்துக் கொடுத்து விவ­சாய நட­வ­டிக்­கை­களை ஊக்­கு­விக்க வேண்டும். சுய­தொழில் ஊக்­கு­விப்­புக்­கான கடன்­வ­ச­தி­களை அர­சாங்கம் ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வேண்டும். கம்­ப­னி­யினர் நாளொன்­றுக்கு தொழி­லா­ளர்கள் பறிக்கும் கொழுந்தின் அள­வினை இப்­போது அதி­க­ரித்­துள்­ளனர். இதனால் தொழி­லா­ளர்கள் சிர­மத்­துக்கு உள்­ளாகி இருக்­கின்­றனர். மேலும் கம்­ப­னி­யினர் நாளுக்கு நாள் விதி­மு­றை­களை மாற்றி வரு­கின்­றனர். இதனால் தொழி­லா­ளர்­களின் நலன்கள் பறி­போ­கின்­றன. கம்­ப­னி­யினர் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விட­யத்தில் தொடர்ந்தும் சாக்­கு­போக்­கு­களை சொல்லிக் கொண்­டி­ருக்க முடி­யாது என்று வடிவேல் சுரேஷ் தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றார்.
இதற்­கி­டையில் இன்­னு­மொரு பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஏ.அர­விந்­த­குமார் கம்­ப­னிகள் சட்­டத்­தினை மதிக்­காமல் செயற்­ப­டு­வது தொடர்பில் தனது விச­னத்தை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்றார். வர­வு–­செ­லவு திட்­டத்தின் ஊடாக அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபா­வினை தொழி­லா­ளர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்­காமை என்­பது ஒரு அநீ­தி­யான செய­லாகும் என்று கண்­டித்­துள்ள அவர் கம்­ப­னிகள் சர்­வா­தி­கார போக்கில் செயற்­ப­டு­மானால் விரைவில் பல்­வேறு சவால்­க­ளையும் சந்­திக்க வேண்­டி­வரும் என்று எச்­ச­ரித்­தி­ருக்­கின்றார். இத­னுடன் இன்­னு­மொரு முக்­கி­ய­வி­டயம் தொடர்­பிலும் அர­விந்­த­குமார் தனது நிலைப்­பாட்டை விளக்கிக் கூறி இருக்­கின்றார். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா­வினை பெற்­றுக்­கொ­டுக்க கம்­ப­னி­யினர் உடன்­ப­ட­வில்­லை­யாயின் தோட்ட அதி­கா­ரிகள் விரைவில் கூண்­டி­லேறும் நிலைமை உரு­வாகும் என்­பது அர­விந்­த­கு­மாரின் கருத்­தாக இருக்­கின்­றது. தோட்டத் தொழி­லா­ளர்­களை பொறுத்­த­வ­ரையில் கம்­ப­னி­யினர் அவர்­களின் எஜ­மா­னர்­க­ளாக உள்­ளனர்.
தொழில்­த­ரு­நர்கள் என்ற வரை­ய­றைக்குள் ஒவ்­வொரு தோட்­டத்தின் அதி­கா­ரியும் உள்­ள­டங்­கு­கின்­றனர். தோட்ட அதி­கா­ரிக்கு கீழ் தொழி­லா­ளர்கள் தொழில் நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­கின்­றனர். எனவே தொழில்­த­ரு­நர்கள் என்ற வகையில் தோட்ட அதி­கா­ரி­க­ளுக்கும் கணி­ச­மான பொறுப்பும் கட­மையும் இருக்­கின்­றது. தொழி­லா­ளர்­களின் நலன்­களை இவர்கள் பேணுதல் வேண்டும். இவர்கள் இதி­லி­ருந்தும் விலகிச் செல்ல முடி­யாது. வர­வு–­செ­லவு திட்­டத்தின் ஊடாக அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபாவை தொழில் தரு­நர்­க­ளா­கிய தோட்ட அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக தொழி­லா­ளர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று தோட்ட அதி­கா­ரி­களின் வகி­பா­கத்­தி­னையும் இதி­லி­ருந்தும் விலகிச் சென்றால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளையும் அர­விந்­த­குமார் எடுத்துக் கூறி இருக்­கின்றார்.
இந்த நிலையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மத்­திய குழுவின் உறுப்­பி­ன­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் மலை­யக அர­சி­யல்­வா­திகள் தொடர்பில் தனது அதி­ருப்­தி­யினை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்றார். இது­பற்றி அவர் கூறு­கையில், தோட்ட தொழி­லாளர் சம்­பள உயர்வு பிரச்­சினை என்­பது தற்­போது இழு­ப­றி­யான ஒரு நிலை­யினை அடைந்­தி­ருக்­கின்­றது. கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி ஒரு வரு­டத்­துக்கு மேலா­கியும் சம்­பள உயர்வு தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான முடி­வுகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்ற போதும் கூட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தினர் ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வ­தாக இல்லை. கடந்த தேர்தல் காலத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தோட்டத் தொழி­லா­ள­ருக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தாக மலை­ய­கத்தில் மேடை மேடை­யாக சென்று வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தனர். எனினும் இன்­று­வரை அந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் இத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விடயம் இன்னும் சாத்­தி­யப்­ப­டாத ஒன்­றா­கவே இருந்து வரு­கின்­றது. இப்­ப­டி­யான ஒரு நிலை­மை­யி­லேயே வரவு செலவு திட்­டத்தில் அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபா தொடர்­பாக எல்­லோரும் பேசு­கின்­றனர்.
2500 ரூபா வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது ஒரு சட்­ட­மாகும். தனியார் துறை­யி­ன­ருக்கு இந்த 2500 ரூபா அதி­க­ரிப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென்று தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இது எல்­லோ­ருக்கும் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது நிய­தி­யாகும். ஆனால் தோட்டத் தொழி­லா­ளர்­களின் பொரு­ளா­தார நெருக்­கடி என்­பது இப்­போது வலு­வ­டைந்­துள்ள நிலையில் இம்­மக்­களின் பிரச்­சி­னை­களை 2500 ரூபா­வினை வழங்­கு­வதன் ஊடாக தீர்த்­து­விட முடி­யாது. இவர்­களின் பொரு­ளா­தார நெருக்­கடி குறித்து ஆழ­மாக சிந்­தித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. 2500 ரூபா அதி­க­ரிப்­பினை பெற்­றுக்­கொ­டுப்­பதன் மூல­மாக தொழி­லாளி ஒரு­வரின் சம்­ப­ளத்தில் நாளாந்தம் நூறு ரூபா மட்­டுமே அதி­க­ரித்த சம்­ப­ள­மாக கிடைக்கும். இதில் எந்­த­வி­த­மான பயனும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. இதனை கருத்தில் கொண்டு தொழி­லா­ளர்­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு ஆயிரம் ரூபா­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்­கான ஒரு போராட்­டத்­தி­னையே முன்­னெ­டுத்துச் செல்ல வேண்­டிய தேவை இருக்­கின்­றது. எனினும் இந்த ஆயிரம் ரூபா நட­வ­டிக்­கை­யினை மழுங்­க­டிக்கச் செய்யும் நோக்கில் சில மலை­யக அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இது ஒரு மிகப்­பி­ழை­யான செய­லாக அமைந்­தி­ருக்­கின்­றது.
ஆயிரம் ரூபாய் என்ற அடிப்­ப­டையில் நாள் ஒன்­றுக்கு தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வை பெற்றுக் கொடுப்­ப­தற்கு மலை­யக அர­சி­யல்­வா­திகள் போராட்­டத்தில் ஈடு­பட வேண்­டு­மென்­பது முக்­கிய தேவை­யாக இருக்­கின்­றது. எனினும் இதை­வி­டுத்து 2500 ரூபா­வுக்­காக போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­தென்­பது சாத்­தி­ய­மா­ன­தாக தெரி­ய­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் இருந்து கொண்டு 2500 ரூபா­வுக்­காக போரா­டு­வ­தென்­பது விந்­தை­யாக உள்­ளது. இதற்­கி­டையில் அண்­மையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் நாள் ஒன்­றுக்கு 720 ரூபா அளவில் சம்­ப­ளத்தை வழங்க உத்­தே­சித்­தி­ருப்­ப­தா­கவும் மாதத்தில் 12 நாட்­களே வேலை வழங்­கப்­ப­டு­மென்றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஏனைய நாட்­களில் தொழி­லா­ளர்கள் பறிக்கும் கொழுந்தின் அள­விற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும் என்றும் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது. இது ஒரு பொருத்­த­மான நட­வ­டிக்கை என்று எனக்­குப்­ப­ட­வில்லை.
தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரச்­சினை என்­பது சரி­யாக விளங்கிக் கொண்டு செயற்­ப­ட­வேண்­டிய ஒரு விட­ய­மாகும். வரு­மானம் இல்­லாத கார­ணத்­தினால் ஒரு புறத்தில் தோட்­டங்கள் இழந்து மூடப்­பட்டு வரு­கின்­றன. தோட்டத் தொழிற்­று­றை­யா­னது செய­லி­ழந்து போகின்ற ஒரு பரி­தா­ப­க­ர­மான நிலை­மையும் மேலெ­ழுந்து வரு­கின்­றது. தேயிலை தொழிற்­றுறை பெரிதும் பின்­தள்­ளப்­பட்டு வரு­வ­த­னையும் எம்மால் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. எனவே இந்­நி­லையில் தோட்டத் தொழிற்­று­றையை பாது­காக்க விரும்­பு­கின்ற எவரும் முதலில் தொழி­லா­ளர்­களை பாது­காக்க வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கின்­றது. தோட்­டத்தில் வேலை செய்யும் ஒவ்­வொரு ஊழி­ய­ரையும் பாது­காக்க வேண்டும். இத­ன­டிப்­ப­டையில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய சம்­ப­ளத்தை பெற்றுக் கொடுக்க வேண்­டி­யதும் மிக முக்­கிய தேவை­யா­கி­யுள்­ளது. எனவே தோட்டத் தொழி­லா­ளர்கள் உரிய வரு­மா­னத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தென்­பது இன்று முதன்­மை­யான பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில் இப்­போ­தைய மலை­யக அர­சி­யல்­வா­தி­களும் முன்­ன­வர்­களைப் போன்றே செயற்­ப­டு­வ­தனை காண­மு­டி­கின்­றது. எனினும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் அபி­வி­ருத்­திக்கு உத­வக்­கூ­டிய ஒரு தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை.
இலங்­கையில் தொழி­லா­ளர்­களின் உரி­மை­க­ளுக்­காக பல்­வேறு போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. உண்­ணா­வி­ரதப் போராட்டம் உள்­ளிட்ட பலவும் இதில் உள்­ள­டங்கும். இதன்­மூலம் பல்­வேறு உரி­மை­க­ளையும் இவர்கள் பெற்றுக் கொள்­கின்­றார்கள். எனினும் தொழி­லா­ளர்­களின் போராட்டம் என்­பது ஒரு முடி­வில்­லாத நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்­நி­லைக்கு கடந்த கால ஆட்­சி­யா­ளர்­களும் அர­சி­யல்­வா­தி­களும் அதைப்­போன்று சம­கால ஆட்­சி­யா­ளர்­களும் அர­சி­யல்­வா­தி­களும் பொறுப்­பேற்க வேண்டும். மலை­யக மக்­களின் அவ­ல­க­ர­மான நிலைக்கு இவர்­களே பொறுப்­பா­ளி­க­ளாவர் என்­ப­தனை மறுத்­து­விட முடி­யாது. அறிக்கை விடும் அர­சி­யல்­வா­திகள் மலை­யக மக்­களின் நலன்­க­ருதி ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் பல­வற்­றையும் மேற்­கொள்ள முன்­வர வேண்டும் என்று இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் தெரி­வித்தார்.
இதே­வேளை மத்­திய மாகாண சபையின் உறுப்­பினர் கண­பதி கன­கராஜ் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­காக கடி­ன­மான தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்­டி­வரும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கின்­ற­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக உள்­ளது. தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­காக இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பெருந்­தோட்ட கம்­ப­னி­க­ளுடன் பல­சுற்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இருக்­கின்­றது. எனினும் கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளாக காத்­தி­ருந்தும் எவ்­வி­த­மான சாத­க­மான சமிக்­ஞை­க­ளையும் பெருந்­தோட்ட கம்­ப­னிகள் தெரி­விக்­க­வில்லை. இதனால் தோட்டத் தொழி­லா­ளர்கள் பொறுமை இழந்து நிற்­ப­தாக கன­கராஜ் விச­னப்­பட்டுக் கொள்­கின்றார்.
தொழி­லாளர் சம்­பள விடயம் இழு­ப­றி­யா­ன­தொரு நிலையில் இருக்­கின்­ற­போது தொழில் அமைச்சர் கம்­ப­னி­யினர் மீது வழக்கு தொடர வேண்­டு­மென்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் வலி­யு­றுத்­தி­யுள்­ளமை தொடர்பில் முன்­ன­தாக தெரி­வித்­தி­ருந்தேன். எனினும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்து சிவ­லிங்கம் தனது நிலைப்­பாட்டில் கூட்டு ஒப்­பந்தம் நடை­மு­றையில் இருப்­பதால், தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்பில் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர முடி­யாது என்ற நியா­யத்­தினை முன்­வைத்­தி­ருக்­கின்றார். இது கம்­ப­னிக்கு எதி­ராக வழக்­குத்­தாக்கல் செய்­வ­தற்கு எண்­ணி­யுள்­ளமை தொடர்பில் சிந்­திக்க வைத்­தி­ருக்­கின்­றது. சம்­பள உயர்வு விடயம் தொடர்பில் பல­சுற்று பேச்­சு­வார்த்­தை­களை கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் நடத்தி இருந்­தன. எனினும் இவை­ய­னைத்தும் இணக்கம் காணப்­ப­டாத நிலை­யி­லேயே முடி­வு­பெற்­றி­ருந்­தன. இதனால் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றத்­துக்கு உள்­ளாகி இருந்­தார்கள்.
இதற்­கி­டையில் அடுத்த வார­ம­ளவில் இ.தொ.கா. உள்­ளிட்ட கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள் மீண்டும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட உள்ளதாக தெரியவருகின்றது. இதில் தோல்வி ஏற்படுமிடத்து தொழில் அமைச்சரிடமும் தேவையேற்படின் ஜனாதிபதியிடமும் தாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இ.தொ. காங்கிரஸ் தரப்பு செய்திகள் வலியுறுத்தி இருக்கின்றன. கம்பனியின் விடாப்பிடியான தன்மையினால் இந்த பேச்சுவார்த்தைகளும் இழுப்பறியான ஒரு நிலையினை அடைந்து விடுதல் கூடாது. இரு சாராருக்கும் இடையிலான புரிந்துணர்வு சிறந்ததொரு இணக்கப்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க தினேஷ் குணவர்தன பாராளுமன்ற உறுப்பினரால் தோட்டத் தொழிலாளர்களின் 2500 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அண்மையில் பதிலளித்த தொழில் அமைச்சர் ஜே.எம்.செனவிரட்ண தற்போது பெருந்தோட்டத் துறையின் தற்காலிக வீழ்ச்சியினைத் தொடர்ந்து வங்கிகள் ஊடாக கம்பனிகளுக்கு கடன்களை வழங்கி 2500 ரூபா சம்பள உயர்வினை தொழிலாளர்களுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தமையும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த வாக்குறுதிக்கு மத்தியில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரம் இன்னும் இரண்டு வாரங்களில் 2500 ரூபாய் தொழிலாளர்களின் கைகளில் கிடைக்கும் என்று ஒரு வாக்குறுதியினை வழங்கி இருக்கின்றார். தொழிலாளர்களின் நிலையினை உணர்ந்து தொழில் அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து 2500 ரூபாவை இடைக்கால கொடுப்பனவாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் திகாம்பரம் இச்சலுகையைக் கூட அனுபவிக்கவிடாமல் சில தொழிற்சங்க அங்கத்தவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
எது எவ்வாறெனினும் வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கதே. எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் இராமலிங்கம், சந்திரசேகர் கூறியதைப்போன்று இந்த 2500 ரூபாய் மட்டுமே தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைத் தராது என்பது உண்மை. எனவே இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் நாள் சம்பளம் என்ற இலக்கினை அடையும் நோக்கில் மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஐக்கியமும் அதனூடான அழுத்தமுமே சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை மறந்து செயற்படுத்தலாகாது. அரசியல்வாதிகளுக்கிடையேயான பிரிவினைகளும் முரண்பாடுகளும் தொழிலாளர்களின் உரிமைகளை மழுங்கடிக்கச் செய்யும்.

துரை­சாமி நட­ராஜா- 

நன்றி- வீரகேசரி

ஓர­ணியில் திரள்­வதன் மூலம் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடியும்

மலை­யக பெருந்­தோட்­டங்­களின் வளர்ச்­சிக்கும் உயர்ச்­சிக்கும் மலர்ச்­சிக்கும் பெருந்­தோட்ட சேவை­யா­ளார்கள் பெரும் பங்­க­ளிப்புச் செய்­கின்­றனர். இவர்­க­ளது உரி­மைகள் வென்­றெ­டுக்­கப்பட வேண்டும் என்­ப­திலும் சலு­கைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­திலும் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம். அதற்கு பெருந்­தோட்ட சேவை­யாளர் ஓர­ணியில் திரள்­வது அவ­சியம் என பெருந்­தோட்ட சேவை­யாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் சட்­ட­த­ர­ணி­யு­மான கா.மாரி­முத்து மஸ்­கெ­லியா கிளண்டில் தோட்­டத்தில் நடை­பெற்ற தோட்ட சேவை­யா­ளர்­களின் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு பேசு­கை­யி­லேயே தெரிவித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில் பெருந்­தோட்­டங்­களின் வளர்ச்­சிக்கு, தோட்ட சேவை­யா­ளர்கள் மாத்­தி­ர­மின்றி தோட்டத் தொழி­லா­ளர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்ற போது தான் தோட்­டங்கள் செழிப்­பாக இருப்­ப­தற்கும் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கும் ஜீவா­தா­ரங்­க­ளிலும் வாழ்­வா­தா­ரங்­க­ளிலும் மலர்ச்­சியை காண்­ப­தற்கும் நல்ல அறி­கு­றி­அ­மையும் என்­பதை நாம் குறிப்­பிட்­டாக வேண்டும். பெருந்­தோட்ட சேவை­யா­ளர்கள் அரை­நூற்­றாண்டு வர­லாற்றை கடந்­து­விட்ட போதிலும் அவர்­க­ளது அடிப்­படை தேவைகள் அவ­சி­யப்­பா­டுகள் இன்னும் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விடயம். எனினும் அவர்­க­ளு­டைய சேம­ந­லன்­களை கவ­னிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தோட்­டங்­களில் உற்­பத்தி அதி­க­ரிக்க வேண்­டு­மானால் இரு­சா­ராரும் அதா­வது தொழி­லா­ளர்­களும் சேவை­யா­ளர்­களும் புரிந்­து­ணர்­வோடு ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும். அப்­போ­துதான் உற்­பத்தி பெருக்கம் உயர்­வ­டையும். தோட்­டத்தில் வாழும் சக­லரும் சந்­தோ­ஷ­மா­கவும் சமா­தா­ன­மா­கவும் சுபிட்­சத்­துடன் வாழ­மு­டியும். ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு பெருந்தோட்ட சேவையாளர்கள் ஓரணியின் கீழ் ஒன்றிணைந்து கைகோர்த்து செயற்படுவோர்களானால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு ரூ.2500 வழங்காவிடின் சட்ட நடவடிக்கை

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள உயர்வை வழங்­கா­விட்டால் கம்­ப­னி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென எச்­ச­ரித்த தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன நிலுவை கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு சட்டம் அமு­லுக்கு வந்த காலம் முதல் ஒரு­வ­ருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ள­தையும் பாரா­ளு­மன்­றத்தில்  சுட்டிக் காட்­டினார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி எம்.பி.யான வாசு­தேவ நாண­யக்­கார,எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யில் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும் என சட்­ட­ரீ­தி­யாக கூறப்­பட்­டுள்ள போதும் சில தோட்­டக்­கம்­ப­னிகள் தற்­போது விரைவில் சம்­பள உயர்வை வழங்கவில்லை. அதற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர், பொரு­ளா­தார ரீதி­யாக தமக்கு சில இய­லா­மைகள் இருப்­பதை தோட்­டக்­கம்­ப­னிகள் எம்­மி­டத்தில் முன்­வைத்­துள்­ளன. விசே­ட­மாக தேயிலை, இறப்பர் துறையில் காணப்­பட்ட வீழ்ச்­சியை அவை கார­ண­மாகக் கூறு­கின்­றன. அந்த விட­யத்­தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதற்­கி­ணங்க இலங்கை மற்றும் மக்கள் வங்­கி­யூ­டாக தோட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு ஆயிரம் மில்­லியன் ரூபா கடன் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. தேவை­யான பணத்தை வங்­கி­க­ளூ­டாக பெற்­றுக்­கொள்­வ­தற்கு தோட்டக் கம்­ப­னிகள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளன.
அத­னூ­டாக முத­லிரு மாதங்கள் நிலு­வையில் உள்ள கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. தேயிலைத் துறையைப் பொறுத்­த­வ­ரையில் பாரிய வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது. எனவே அந்­தத்­துறை குறித்து கூடிய அவ­தானம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. அதே­போன்று தான் இறப்பர் துறை­யிலும் வீழ்ச்சி காணப்­ப­டு­கின்­றது. எஹலி­ய­கொட பிர­தே­சத்தில் சில தோட்­டங்­களில் பால் வெட்­டப்­ப­டாத இறப்பர் தோட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதற்­காக 2500 ரூபா சம்­பள உயர்வை வழங்­கு­வ­தி­லி­ருந்து கம்­ப­னிகள் விலகி நிற்­க­மு­டி­யாது. தற்­போது கம்­ப­னி­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­மையால் அவர்கள் மீள்­வ­தற்கு உரிய வழி­வ­கைகள், சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. 2500 ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட நாளி­லி­ருந்து அனைத்து கம்­ப­னி­க­ளுக்கும் நிலுவைக் கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்­காக ஒரு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது 2016 மார்ச் 23 ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் 23 வரை­யி­லான ஒரு வரு­ட­காலப் பகு­தியே நிலுவைக் கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­ச­மாகும்.
நாம் தோட்ட கம்­ப­னி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்ளோம். அதன் ஊடாக கூட்டு ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­தி­டு­வ­தற்கு முயற்­சி­களை செய்து வரு­கின்றோம். ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்ட பின்னர் அதற்­கேற்ப சம்­பள அதி­க­ரிப்பை மேற்­கொள்­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் தற்­போ­தைய சம்­ப­ளத்தில் பிரச்­சி­னையை எழுப்ப முடி­யாது என்றார். இதன்­போது வாசு தேவ­நா­ண­யக்­கார எம்.பி. நிலுவைக் கொடுப்­ப­ன­வு­களை வழங்­காத நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? அல்­லது தொழில் வழங்­கு­னர்­களின் அழுத்­தங்­க­ளுக்கு அடி பணிந்து விடு­வீர்­களா? என கேள்­வி­யெ­ழுப்­பினர்.
இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர், 2500 ரூபா அதி­க­ரிப்பில் கடந்­த­மாத சம்­பள நிலுவை வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக இந்த மாதம் கூட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நிய­திகள் உள்­ளன. அதற்­க­மை­யவே நாம் செயற்­பட முடியும். நிறு­வ­னங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி பகு­தி­ய­டிப்­ப­டையில் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். நாம் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள சட்டரீதியாக முயற்சிகளை எடுக்க முனைந்தபோது எமக்கு பலநெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால் நாம் அதற்கு பின் நிற்கவில்லை. அதேபோல் தான் 2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கவும் நிறுவனக் கொடுப்பனவையும் வழங்குவதற்கு நாம் பின்னிற்கவில்லை. அதற்கு தவறுவார்களாயின் நிச்சயமாக கூட நடவடிக்கை முறையாக எடுக்க தயாராகவே உள்ளோம் என்றார்.

Saturday, July 16, 2016

உழைப்புக்கேற்ப ஊதியம் பெறாத மலையக பாடசாலை ஆசிரியர் உதவியாளர்கள்

இலங்கையில் மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் உழைப்புக்கேற்ப ஊதியம் இன்றி வாழ்வாதாரப் பி்ரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
கடந்த வருடம் முற்பகுதியில் மத்திய அரசினால் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்ற இவர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே தொடர்ந்தும் கொடுப்பணவாக வழங்கப்படுகிறது.
இலங்கையில் சேவையிலுள்ள ஆசிரியரின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூபாய் 27 ஆயிரம். இதனைத் தவிர ரூபாய் 7800 வாழ்க்கை செலவு படியும் கிடைக்கும்.
மலையகப் பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர் உதவியாளர்களை பொறுத்தவரை தற்போது வழங்கப்படுகின்ற தொகை போதுமானதாக இல்லாத நிலையில் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகின்றது.
இந்தக் கொடுப்பணவு தற்போதைய வாழ்க்கை செலவை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுள்ளது.
மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தோட்டப் பிரதேசங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் போட்டி பரீட்சை மூலம் கடந்த வருடம் மே மாதம் தற்போதைய அரசாங்கத்தினால் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றிருந்தனர்
பாடசாலையொன்றில் ஆசிரியருக்குரிய நேர அட்டவணை, பாட ஒதுக்கீடு உட்பட சகல பணிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் வேதனத்தில் மட்டும் பாரிய இடைவெளி காணப்படுவதாக ஆசிரியர் பயிற்றுநர்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கெனவே தமது பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட பாடசாலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் உதவியாளர்களில் ஒரு பகுதியினர் தற்போது ஆசிரியர் பயிற்சிக்கு தெரிவாகியுள்ள நிலையில் அவர்கள் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்
ஆசிரியர் உதவியாளர் தங்களது 5 வருட சேவைக் காலத்தில் அரசாங்க ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்னரே நிரந்தர சேவையில் உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சகத்தால் ஏற்கனவே நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது மட்டக்களப்பு, கொட்டக்கல, அட்டாளைச்சேனை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் இரு வருட பயிற்சிக்காக அனுமதி பெற்றுள்ள ஆசிரியர் உதவியாளார்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக பொருளாதார ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் அனைவருக்கும் விடுதி வசதிகள் கிடைக்காத நிலையில் அநேகமானோர் வெளியில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உணவு மற்றும் தங்குமிடத்திற்கு மட்டும் மாதந்தோறும் ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவாகும்போது வீடுகளிலிருந்து மாதந்தோறும் பணம் பெற வேண்டியிருப்பதாக ஆசிரியர் உதவியாளர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, July 5, 2016

பாதுகாப்பு இல்லையா? உடன் பதியவும்

கொழும்பு மற்றும் புறநகர்களில்; பாதுகாப்பில்லாத இடங்களில் வேலைக்கமர்த்தப்படும் மலையக இளைஞர், யுவதிகளின் சுயவிவரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக, காங்கிரஸின் உப-தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எம்.வேங்குருசாமி தெரிவித்தார். சௌமிய பவனில் நடைபெற்ற மலையக இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தோட்டங்களில் படித்துவிட்டு வேலையின்றி அவதிப்படும் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களது தகுதிக்கேற்ப தோட்டங்களிலேயே, தொழில் வழங்கப்பட வேண்டும். ஆனால், தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்க மறுக்கின்றன. இதனால், விரக்தியடைந்த இளைஞர், யுவதிகள் தொழிலைத் தேடி கொழும்பு மற்றும் புற நகருக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்' என்றார். 'தோட்டங்களில் ஆள் பிடிக்கும் தரகர்கள், இப்போது தோட்டங்களில் அதிகமாக உலாவி வருகின்றனர். இவர்கள், தொழில்தருநர்களிடமிருந்து  ரூபாய் 5,000 முதல் ரூபாய் 10,000 வரை பணம் பெற்றுக்கொள்வதுடன் பெற்றோரை  ஏமாற்றி, பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் செல்லும் நிலை தோன்றியுள்ளது. தொழிற்சங்க சட்டதிட்டங்களின்படி, ஒருவர் தொழில்புரிய வேண்டுமெனில் 18 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், மலையகத்தில் 14, 15 வயதுகளிலேயே இளைஞர், யுவதிகள்; வேலைக்காக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்' என்றார். 

இது இவ்வாறிருக்க, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்புவதாக ஆசைவார்த்தைகள் கூறி, இந்த தரகர்கள் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி கஷ்டத்துக்குள் தள்ளிவிடுகின்றார்கள். இதேவேளை, கொழும்பில் பல வருடங்களாக தொழில்புரியும் இளைஞர், யுவதிகளுக்கு உருப்படியான சம்பளம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இவற்றை எம்மால் அனுமதிக்க முடியாது.   

எனவே, இ.தொ.கா இவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன்பொருட்டு மலையக பெருந்தோட்டங்களிலிருந்து கொழும்புக்குச் செல்லும் இளைஞர், யுவதிகள் தமது முழு விபரங்களையும் இ.தொ.கா தலைமைக் காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துகொள்பவர்கள் தமது முழுப்பெயர், பெற்றோரின் விபரம், வதியும் தோட்டம், மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை குறிப்பிடுவது அவசியமாகும்' என்றார். 'இ.தொ.கா தலைமைக் காரியாலயம், 72, ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 07 அல்லது 011 2301359 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும்' எனவும் அவர் கூறினார்

முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசனைகள் - தொழிலாளர்களின் அடிமை நிலை

தொழிலாளர்களை கூறுபோடும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள பல்வேறு ஆலோசனைகள் செயல்வடிவம் பெறுமானால் தொழிலாளர்களின் அடிமை நிலை மேலும் வலுப்பெறுவதோடு கம்பனிகள் ராஜபோகத்தை தொடர்ந்து அனுபவிக்கும் நிலைமை உருவாகும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார். 

ர் மேலும் தெரிவிக்கையில் கம்பனிகள் தோட்டங்களை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு பிரிந்து கொடுப்பதனை அடிப்படையாக கொண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. ஊழைப்பின் மகத்துவத்தை இந்நாட்டிற்கு புரியவைத்த பெருமை படைத்தவர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விளங்குகின்றார்கள். இவர்களால்தான் இந் நாடு வளம்பெற்று விளங்குகின்றது. இவர்கள் தன்னிலும் மேலாக நாட்டை நேசிக்கின்றார்கள். எனினும் நாடு இவர்களை நேசிக்கின்றதா, என்பது கேள்விக்குறியோகவே இருக்கின்றது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்களாக இருப்பதாலோ என்னவோ இவர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன. இனவாத நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் காரணமாக இம் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி இருக்கின்றது. ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆட்சிபீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். தங்களுக்கு என்னவோ அரசாங்கங்களின் ஊடாக கிடைக்கப் போகின்றது என்று வெறும் கனவு காண்கிறார்கள். 

ஆனால் எதுவுமே சாத்தியப்படாத நிலையில் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு அது குறித்த கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்ட நிலையில் மலையக மக்கள் எதிர்கொண்டுள்ளனர். 

இரண்டு முகம் காட்டுகின்ற அராசாங்கங்களை போன்றே இப்போது கம்பனியினரும் மலையக மக்களை ஓரம் கட்டுவதற்கும் அம் மக்களின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை மழுங்கடிப்பதற்கும் முனைப்புடன் செயற்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது. கம்பனியினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் மென்மேம் தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதாகவே உள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகின்ற ஒரு திட்டத்தை கம்பனியினர் ஆலோசனைகளில் வலியுறுத்தி இருக்கின்றனர்.

தேயிலை விற்பனையின் மூலம் ஏனைய நாட்களில் தொழிலாளர் தமது வருமானத்தினை ஈட்டிக்கொள்ளும் திட்டம் தொடர்பிலும் முன்வைப்புகள் இடம் பெற்று வருகின்றன. எவ்வாறெனினும் இது ஒரு சாதகமான முன்னெடுப்பாகத் தெரியவில்லை. இதனால் பாதக விளைவுகளே அதிகமாக இருப்பதாகத் தெரிகின்றது.

தொழிலாளர்களின் உரிமைகள் பலவும் பறிபோகும் நிலையே இதனால் ஏற்படும். அத்தோடு தொழிலாளர்களின் வருமானம் அப்போதைய வருமானத்திலும் கணிசமாக குறைவடையும் அபாகரமான நிலைமையே மேலெழும் 

ஊழியர் சேமலாபநிதி, உழியர் நம்பிக்கை நிதி என்பவற்றிலும் பாதிப்பு நிலைமை அதிகமாக ஏற்படும். கம்பனியினர் வளமிக்க காணிகனை தம்மிடத்தில் வைத்துக்கொண்டு விளைச்சல் குறைந்த காணிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ள சூழ்சிகரமான நடவடிக்கைகள் தொடர்பிலும் இப்போது தெரியவந்துள்ளது. 

இத்தகைய வினைத்திறன் குறைந்த காணிகளை தொழிலாளகளுக்கு குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக எவ்வாறு தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என சிந்திக்க வேண்டியுள்ளது. 

கம்பனியினரின் சூழ்ச்சி நிலைபற்றி தெரிந்தும் மலையக அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது ஏன் வாய்மூடி மௌனியாக இருந்து வருகின்றார்கள் ஏன் என்று புரியவில்லை. கம்பனியினரின் தான்தோன்றித்தனமாக முடிவுகளுக்கு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் துணை போகின்றார்களா? ஆப்படியானால் இவர்களை நம்பி வாக்களித்து அரசியல் பீடமேற்றிய தொழிலாளர்களின் நிலைமை என்னாவது?

மலையக அரசியல்வாதிகள் மௌனித்திருப்பது தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்கின்ற ஒரு செயலாகும். கம்பனியினரின் நடவடிக்கைகளுக்கு துணைபோகாது இவர்கள் தொழிலாளர்களை அடிமை நிலையில் இருந்து மீட்டெடுக்க முனைதல் வேண்டும்.

கலந்துரையாடல்களின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்தல் வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்கு தோள் கொடுக்க அரசியல்வாதிகள் முற்பட வேண்டுமே தவிர வேலியே பயிரை மேயும் கீழ்த்தரமான செயற்பாடுகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Saturday, July 2, 2016

கொட்டகங்கை தோட்ட காணி தனியாருக்கு விற்பனை - எதிராக ஆர்ப்பாட்டம்

ரங்கல, கொட்டகங்கை தோட்டத்தின் மேற்பிரிவிலுள்ள பல ஏக்கர் காணியை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தோட்ட மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டகங்கை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள சுமார் 60 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான தமது தோட்டப் பகுதியில் 50 ஏக்கர் காணி விற்பனை செய்யப்பட உள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டகங்கை தோட்டத்திலுள்ள மக்களுக்கே அந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்துவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அறிந்துகொள்வதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வினவினோம்.
அமைச்சர் தற்சமயம் வெளிநாடு சென்றிருப்பதாகவும், அமைச்சர் நாடு திரும்பிய பின்னர் அதுகுறித்து அவரது கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் அந்த அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நன்றி- நியூஸ் பெஸ்ட்

Friday, July 1, 2016

ஜனாதிபதி ஆலோசனைக்கு அமைய 3,000 வீடுகளை அமைக்கும் பணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  ஆலோசனைக்கு அமைய, கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 வீடுகளை அமைக்கும் பணியை விரையில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அதன் இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, கேகாலை மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோர் தலைமையில்  கேகாலை மாவட்ட செயகத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 வீடுகளை அமைத்து கொடுக்கவென 800 ஏக்கர் காணிகள் தேவைப்படுகின்றது.  இதில் 75 வீதமான காணிகள் புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.  

இதனடிப்படையில் கேகாலை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 190 ஏக்கர் காணிகளும், பொகந்தலாவை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 49 ஏக்கர் காணிகளும், கெலனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 72 ஏக்கர் காணிகளும், மல்வத்த பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 17 ஏக்கர் காணிகளும் மற்றும் ஜனவசம மூலம் 3 ஏக்கர் காணிகளும் பெற்று கொள்ளப்பட்டுள்ளன.

இதைத்தவிர, மேற்படி மாவட்டத்தில் 6 பாடசாலைகளும் 3 மத வழிபாட்டு ஸ்தலங்களும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை புதிதாக அமைத்துக் கொடுக்வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட தெஹியோவிட்ட தமிழ் வித்தியாலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்காக கெலனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 2 ஏக்கர் காணியும் பெற்று கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இக்காணிகளை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி மாவட்டத்தில் வீடுகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படையினரன் உதவிகளை பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ் வீடுகள் அமைப்பதற்காக மூன்று திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தினால் 20 பேர்ச் காணியில் வீடுகள் அமைக்கப்படும். அதற்காக 12 இலட்சம் பெறுமதியான கட்;டப் பொருட்கள் அரசாங்கத்தினால் பெற்று கொடுக்கப்படும். உடலுழைப்பு மறு;றும் கட்டடப் பொருட்களை பெற்று கொடுப்பதன் மூலம் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடு ஒன்று பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு சொந்தமாகும்.

இதற்காக சகல செலவுகளையும் மேற்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக, அமைச்சரவையில் அவசர அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்று கொள்ளப்படவுள்ளது.

3,000 வீடுகளுக்கு மேலதிகமாக வீதி அபிவிருத்தி மற்றும் நீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் மூலம் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் மின்சாரம், நீர் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் மூலம் அமைத்து கொடுக்கப்படும்.

அத்தோடு, விவசாய நிலங்களை இழந்த மக்களுக்கு புதிதாக ஒரு ஏக்கர் காணிகள் வீதம் பெற்று கொடுப்பதற்கும் மற்றும் தமது சொத்துக்களை இழந்த சிறிய, பெறிய வியாபாரிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக வந்திகளை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயம் மற்றும் வியாபாரத்தை இழந்த மக்கள் மீண்டும் அவற்றை சீர்படுத்திகொள்ளும் வரை அந்த குடும்பங்களுக்காக மாதாந்தம் சிறு கொடுப்பனவை வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தள்ளதாக மேற்படி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.