Monday, February 21, 2011

வேலைநிறுத்தப் போராட்டத்தில் 400 தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கொட்டியாக்கலை மத்திய பிரிவைச்சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் இன்று (21-02-20011) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆண் தொழிலாளர்களுக்கு உரிய தொழிலை வழங்காமல் தொடர்ந்து கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடுமாறு தோட்ட நிருவாகம் வலியுறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்ப் போராட்டத்தை மேற்கொள்வதாக தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொட்டியாக்கலைத்தோட்ட நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தொழிலாளர்களின் கோரிக்கைக்கேற்ப ஆண் தொழிலாளர்களுக்கு கொழுந்து பறிப்பதைத் தவிர்த்து ஏனைய தொழிலினை வழங்குவதற்கு தோட்ட நிருவாகம் சம்மதித்தபோதும் குறிப்பிட்ட தொழிலாளர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து இன்று தொழிலுக்குச் சமுகம் தரவில்லை என்று கொட்டியாக்கலைத் தோட்ட நிருவாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் மலையக மக்கள்

இலங்கையில் அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக மலையகப் பகுதியில் தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் தெரிவித்துள்ளது.

மழையினால் மலையகப் பகுதியில் தேயிலை, ரப்பர் மட்டுமல்லாமல், காய்கறி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் பெருளாதார ரீதியாக மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அமைப்பின் தலைவர் ஓ ஏ ராமையா பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்

தேயிலை தோட்டங்களில் மழை மற்றும் கடுமையான காற்றின் காரணமாக, தேயிலை அரும்புகள் உதிர்ந்து கீழே விழுந்து விடுவதால், உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இப்படியான நிலைமை காரணமாக உற்பத்தி குறையும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த நாட்களே வேலை கிடைப்பதாகவும், அதனால் வருமானம் இல்லாத நிலையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்

அண்மைய மழையின் காரணமாக காய்கறி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பல குடும்பங்கள் வருமானம் இல்லாத நிலையில், வெளியில் கடன் வாங்கி தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் மழையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணங்கள் அரசால் உரிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் அது இந்த விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்