Monday, April 15, 2019

கந்தப்பளையில் தேயிலைத் தோட்டம் அலோசியஸுக்கு குத்தகைக்கு?

நுவரெலியா - கந்​தப்பளை பிரதேசத்திலுள்ள 450 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று, 2015ஆம் ஆண்டில் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அவரின் மகனான அர்ஜுன் அலோசியஸிடம், மாதாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டமானது, மாதாந்தம் 8,000 ரூபாய் 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தப்பளை, மாஹகுடுகள தோட்டமே இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், ஒரு மாத இடைவெளியிலும் மத்திய வங்கி பிணை முறிமோசடி இடம்பெற்று 7 மாத காலப்பகுதிக்குள்ளும் இந்த தோட்டம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி தோட்டத்தை 2045 ஆம் ஆண்டு வரையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில், ஜெப்ரி அலோசியஸ், அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் 2015.09.15 அன்று கையெழுத்திட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சுக்குச் சொந்தமான மேற்படி தோட்டம், முன்பு “மத்துரட்ட” கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து ஜெப்ரி அலோசியஸ் குறித்த காணியைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தோட்டத்தில், இரண்டு பங்களாக்களும் வைத்திய மத்தியஸ்தானம் ஒன்றும், ஊழியர்களுக்கான இருப்பிடம் ஒன்றும் தாய்மார்களுக்கான இல்லமொன்றும் காணப்படுவதாகவும், பெறுமதிமிக்க 19,000 மரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி- தமிழ் மிரர்

Thursday, April 11, 2019

அரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன?

எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது.
ஆனால் “நாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அப்படி எந்த நிபந்தனையையும் விதிக்கவும் முடியாது” என்று பெருமையோடு கூறுகிறது கூட்டமைப்பு.
இதைக் கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும். சற்று ஆழமாக யோசித்தால் தலைசுற்றும்.
இதேபோலத்தான் ஜெனிவாவிலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தோம் என்று மகிழ்ச்சியடைகிறார் சுமந்திரன்.
இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். அது தவிர்க்க முடியாத சர்வதேச (மேற்குலக) விதி என்பது எல்லோருக்குமே தெரியும்.
இதையிட்டுக் கூட்டமைப்போ சுமந்திரனோ அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களோ பெருமைப்படுவதற்கு எதுவுமே இல்லை.
இதைப்போலத்தான் தற்போதைய வரவு செலவுத்திட்டத்துக்கான கூட்டமைப்பின் ஆதரவும். அதைப்போலக் கண்மூடித்தனமாக  ஆதரவளித்ததை நியாயப்படுத்துவதுமாகும்.
இதையெல்லாம் தமிழ் மக்கள் விரும்புகிறார்களா என்றால் அதுவுமில்லை.
அப்படியென்றால் மக்களுக்கு விருப்பமில்லாத விசயங்களை எதற்காகக் கூட்டமைப்புச் செய்ய வேண்டும்?
அல்லது மக்களுடைய விருப்பத்தின்படிதான் இந்த முடிவுகளைக் கூட்டமைப்பு எடுத்ததா?
அல்லது மக்களுடன் எங்கேயாவது இந்த விடயங்களைக் குறித்துக் கூட்டமைப்பு ஆலோசித்திருக்கிறதா?
அல்லது இப்படித்தான் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும். தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று மக்கள் எங்கேயாவது கூறியிருக்கிறார்களா?
மக்கள் மட்டுமல்ல எவரும் எங்களை எதுவும் கேட்க முடியாது. ஒரு மசிரையும் புடுங்க முடியாது என்ற இறுமாப்புடன் அது அரசுக்குச் சார்பான தீர்மானங்களை எடுக்கிறது. அரசுக்கு ஆதரவை வழங்குகிறது. அரசோடு ஒத்தோடுகிறது. (அப்படியென்றால், முன்னர் அரசோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியை எப்படிக் கூட்டமைப்பினர் ஒத்தோடிகள் என்று சொல்ல முடியும்?)
ஆகவே சந்தர்ப்பவாதமாக மக்களுக்கு எதிர்நிலையில் நின்று செயற்படுகிறது கூட்டமைப்பு எனலாம்.
எதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்படிச் செயற்படுகிறது? அதற்கான அவசியம் என்ன? என்று சிலர் கேட்கலாம்.
பச்சையாகவே தெரிகிறது, கூட்டமைப்பு தன்னுடைய நலன்சார்ந்து மட்டுமே செயற்படுகிறது என.
அதாவது கூட்டமைப்பின் பாரா”ளுமன்ற உறுப்பினர்களுடைய நலன்களே இதில் மையம்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே கட்சியின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் வைத்திருப்பவர்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் பெருக்கிக் கொள்ளவும் இதையெல்லாம் செய்கிறார்கள்.
கூட்டமைப்பின் அடுத்த மட்டத்திலிருப்போரில் பலருக்குத் தங்கள் தலைமை இப்படிச் செயற்படுவதையிட்டு உள்மனக்கொதிப்புண்டு.
ஆனால், அவர்களால் தலைமையை எதிர்த்து நிற்க முடியாது.
அப்படி எதிர்த்தால் அவர்கள் கட்சியினால் – தலைமையினால்  ஓரங்கட்டப்படுவர். மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தில் கூடச் செல்வாக்கைப் பெற முடியாமல் போய் விடும்.
ஆகவே கட்சியின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமாக இருந்தால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சியின் நன்மதிப்பைப் பெற வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த வேணும். அதனுடைய ஏகபோகத்துககுக் கட்டுப்பட்டாக வேண்டும்.
இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், போரினாலும் நீண்டகால ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்ட சமூகமொன்று அந்தப் பாதிப்புகளிலிருந்தும் நீதியின்மையிலிருந்தும் இன்னும் மீட்கப்படாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் அரசியல் தோல்விகளால் மூழ்கடிக்கப்படுகிறது. அதிலும் அந்த மக்கள் நம்பிய தலைமையினாலேயே தோற்கடிக்கப்படுகிறது. இது உண்மையில் பலியிடலாகும்.
காணாமலாக்கப்பட்டோர், காணிகளை இழந்தோர், உறவுகளை இழந்தோர், அரசியல் கைதிகள் என்ற பேரில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலையாளர்கள், போரிலே பெற்றோரை இழந்தோர், ஆண்துணையை இழந்த பெண்கள், உடல் உறுப்புகளை இழந்தோர் என கூடுதற் பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இதுவரையில் முறையான எந்தத் தீர்வும் கிட்டவில்லை. எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவேயில்லை.
இந்த நிலையில் எப்படிக் கண்ணை மூடிக் கொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது கூட்டமைப்பு? அதற்கான அவசியம் என்ன? கூட்டமைப்பு இப்படிச் செயற்படுவதற்கான ஆணையை வழங்கியது யார்?
இந்த விடயங்களில் குறைந்த பட்சமான மீட்பையாவது அரசாங்கத்தைக் கொண்டு கூட்டமைப்பு செய்வித்திருந்தால் இவ்வாறான ஆதரவளிப்புகளுக்கு ஒரு நியாயம் இருக்கும்.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
இவை எதையும் செய்யாமலே கூட்டமைப்பின் ஆதரவை (தமிழ் மக்களின் ஆதரவை) அரசாங்கம் பெற்றுள்ளது. இது அரசுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியே.
அதாவது போர்ப்பாதிப்பை நிவர்த்தி செய்ய வேண்டிய தன்னுடைய பொறுப்பைச் செய்யாமலே பாதிக்கப்பட்ட மக்களின் தலைமையுடைய ஆதரவை அரசாங்கம்  பெற்றுள்ளதென்பது சாதாரணமான விசயமல்ல.
இது பாதிக்கப்பட்ட மக்களைச் சரணாகதி அடைய வைத்த செயற்பாடாகும். ஏறக்குறைய இது இன்னொரு வகையான தோற்கடிப்பே.
இதற்கு முழுமையான “கைவேலை”யைச் செய்து கொடுத்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
ஆகவேதான் தமிழ் மக்களின் வரலாற்றில் மாபெரும் தவறுகளைக் கூட்டமைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது என்கிறோம்.
இன்றுள்ள நிலைமையின்படி குறைந்தபட்சப் பேரம்பேசக்கூடிய வாய்ப்புகளையும் கூட்டமைப்பு குறுகிய சுயநலன்களுக்காகக் கைவிடுகிறது என்பது வரலாற்றுத் தவறாகும்.
எந்த வகையிலும் அரசாங்கங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு எந்த நியாயங்களும் கூட்டமைப்பிடம் இல்லை என்பது வெளிப்படையான விசயம்.
அரசியல் என்பது தாம் பிரதிநிதித்துப்படுத்தும் மக்களுடைய நலன்களுக்கான பணியே தவிர, மக்களை வைத்துத் தமது நலன்களைப் பேணிக்கொள்ளும் விசயமல்ல.
அப்படி ஒரு அரசியல் இருந்தால் நிச்சயமாக அது மக்கள் விரோத அரசியலேயாகும்.
2009 போர் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்கும் அரசியலுரிமைக்குமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழியப்போகின்றன. இதில் நான்கு ஆண்டுகள் சுத்தமாகவே நடப்பிலுள்ள அரசாங்கத்துக்குப் பகிரங்க ஆதரவைச் சம்மந்தன் அணி வழங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படி நெருக்கமாக நின்று ஆதரவளித்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு இந்தச் சூழலைப் பயன்படுத்தி இதுவரையில் எவ்வளவோ வேலைகளைச் செய்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை ஈடேற்றியிருக்க முடியும்.
இதற்கென அரசாங்கத்திற்குச் சில வேலைத்திட்டங்களை முன்வைத்திக்கலாம். நிலைமையைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருக்கலாம். புதிய அரசியல் முறைமையை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
சிறப்பான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கலாம்.
பல கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.
கூடவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக இல்லாமல் செய்திருக்கலாம்.
கூட்டமைப்பு அந்தப் பணியைச் செய்யாதபடியால்தானே மக்கள் போராட வேண்டியிருக்கிறது.
எனவே இதொன்றையும் செய்யாமலே அரசுக்கு ஆதரவாகக் கையையும் காலையும் தூக்குவதென்பது மிக அநீதியானது. கேவலமானது. கூட்டமைப்பின் வார்த்தைகளிலேயே சொன்னால் துரோகமானது.
இதையே நாம் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது.
முன்னர் இதே போல அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.
இப்பொழுது அதே வேலையை அவர்களே செய்கின்றனர்.
அப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்? இதற்கு என்ன பெயர்?
மக்களுடைய நியாயங்களுக்கும் நிலைமைகளுக்கும் மாறாகச் செயற்படும் எந்த அரசியல் தரப்பும் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியாது,
அது எவ்வளவு தந்திரங்களைச் செய்தாலும் வெற்றியைப் பெற முடியாது.
இதொன்றும் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுப்பத்திரமல்ல. மக்களின் நிலை நின்று நோக்கப்படுவதானால் ஏற்பட்ட வெளிப்பாடு.
சனங்களுக்கான நியாயக் குரல்.
இதை மறுத்துரைப்போரிடம் நாங்கள் சில கேள்விகளை எழுப்பலாம்.
விடுதலைப்புலிகளின் காலத்திலும் அதற்குப் பிறகு 2009 ற்குப்பின்னான இறுதிப் பத்து ஆண்டு காலத்திலும் அரசியல் அரங்கில் கூட்டமைப்பே தலைமைச்சக்தியான நிற்கிறது.
இந்தப் பத்து ஆண்டுகளிலும் அது தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் பெற்ற மாபெரும் நன்மைகள் எவை?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் கூட்டமைப்பின் அரசியல் சாதனை என்ன? அரசியற் பங்களிப்பு என்ன?
எந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல், எத்தகைய மதிப்பீடுகளும் இல்லாமல் இப்படியே இந்தப் பயணம் தொடர்வது சரியானதா?
இதையிட்டு இப்போதேனும் பேசவில்லை என்றால் இதையும் விட மோசமான நிலையே நாளை ஏற்படும்.
நாளை என்பது இன்றைய உருவாக்கமே. இன்றைய பாதுகாப்பு. இன்றைய செயற்பாட்டின் விளைவுதானே!
ஆகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மதிப்பீடு செய்து, ஆய்வுக்குட்படுத்தியே நாம் அடுத்த கட்டத்தைப்பற்றிச் சிந்திக்க முடியும்.
அதற்கான ஒரு தூண்டலே இந்தக்குறிப்புகள்.
தவறுகளை உரிய வேளையில் சுட்டிக்காட்டவில்லை என்றால், பொறுப்பானவர்களை உரிய சந்தர்ப்பத்தில் நெறிப்படுத்தவில்லை என்றால் அது இன்னொரு முள்ளிவாய்க்கால் போலவே மாறும்.
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால்களிலிருந்து வெளியேற வேண்டுமே தவிர தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்க முடியாது.
– கருணாகரன்-