Saturday, August 15, 2009

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணியில் டிரஸ்ட் நிறுவனம்

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி பொறுப்பு 1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு, வீடமைப்பு, அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு, சிறுவர் பராமரிப்பு, சுகாதார நலன்கள், முதியோர் பராமரிப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
கொழும்பை பிரதான அலுவலகமாகவும் கண்டி, பதுளை, இரத்தினபுரி, காலி, ஹட்டன், நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பிராந்திய அலுவலகங்களையும் கொண்டும் இயங்கி வருகிறது.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அமைச்சு, பிரதான தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனிகள் ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தோட்டத் துறையை அபிவிருத்தி செய்யும் அதேவேளையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் தொடர்ந்து கற்பதற்கான உதவிகளைச் செய்து வருவதுடன் க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியளித்து அவர்களை ஊக்குவித்து வருகிறது.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி பொறுப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும் விருது வழங்கும வைபவமும் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தலைவர் ஆர். யோகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்திராணி சுகததாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறந்த முகாமைத்துவம், சிறந்த தேயிலைத் தொழிற்சாலை, தொழிலாளருக்கான சிறந்த வீடமைப்பு, சிறந்த குழந்தை நலன் அபிவிருத்தி நிலையம், சிறந்த சுகாதார பராமரிப்பு நிலையம், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் சிறந்த முறையில் பங்களிப்பைச் செய்த தோட்ட முகாமையாளர், சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
p. வீரசிங்கம்

நன்றி- தினகரன்
பெண்களின் தலைமைத்துவம் மலையகத்திற்கு வேண்டும்

எந்த ஒரு பெண்ணுக்கும் வீட்டிலேயே முதலாவது தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு சில வீடுகளில் தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கு எவரும் ஊக்குவிப்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகுதான் பெண்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதன் பின் மனைவிக்கு பெருமளவு பொறுப்பு சுமத்தப்படுகின்றது. அதாவது கணவன் இருக்கும் போதே தலைமைத்துவம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விடயங்களைக் கூட பெண்களுடன் கலந்துரையாட வேண்டும். பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, திருமணம், திருவிழா, கொண்டாட்டங்கள் பெருநாட்கள் இவையாற்றிலும் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.சகல தீர்மானங்களிலும் இவர்களின் பங்களிப்பும் விருப்பமும் இருக்க வேண்டும். உதாரணமாக உடைகள் எடுப்பதில் கூட இவர்களின் விருப்பம் அறியப்பட வேண்டும். குறிப்பாக தோட்டத்தில் நடைபெறும் திருவிழா, மரண வீடு, பெருநாட்கள் (விழாக்கள்) சிரமதானம், பெற்றோர் கூட்டம், அரசியல் கூட்டங்கள், முன்பள்ளிக்கூடங்கள், மற்றும் தோட்ட மட்டத்தில் நடைபெறும் சகல நிகழ்ச்சிகளிலும் பெண்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதனுடாக சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். ஆனால் இந்நிலைமை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
மலையகப் பகுதியில் பெண்கள் அதிகமாகப் படிக்காவிட்டாலும் அவர்களிடத்தில் அதிகமான திறமைகள் உள்ளன.உதாரணமாக இவர்களால் செய்யப்படும் திண்பண்டங்களைச் சுட்டிக்காட்டலாம் (முறுக்கு, வடை, உருண்டை, அதிர்சம், கொக்கிஸ்), ஆனால் இன்று பெரும்பாலான கற்ற பெண்களுக்கு இவ்விடயங்களைச் செய்ய முடியுமா? என்பது கேள்விக்குறியே?
இவர்களிடம் திட்டம் இடும் பண்பு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. வீட்டுத் தோட்டம் போடுதல், வீட்டின் குடும்ப நிர்வாகம், பிள்ளைப் பராமரிப்பு, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், ஏனைய குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிக்கக் கூடிய திறமையும் பொறுப்பும் இப்பெண்களுக்கு இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி ஒரு தாய் கூறுகின்றார். எனது கணவன் மதுவிற்கு அடிமையானவர். எனக்கு நான்கு பிள்ளைகள், கணவர் சிறந்த கல்வியாளர், நல்ல சமூக சேவையாளர், பொது நலவாதி, எழுத்தாளர், கலைஞர் இவ்வாறு சகல திறமைகள் இருந்தும் இவரால் எனது குடும்பத்திற்கு எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் படிப்பறிவு இல்லாத என்னால் (கைநாட்டு) என்னுடைய 4 பிள்ளைகளையும் எனது திறமையால் படிக்க வைத்து இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் பென்சன் எடுத்தும் இன்றும் வேலை செய்கின்றேன்.
4 பிள்ளைகளும் இப்படி சுறுகின்றனர். எங்கள் தந்தையினால் எங்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. (தந்தை தற்போது இல்லை) எல்லாம் படிக்காத எங்க அம்மாதான். அவரை நாங்கள் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இவ்வாறான எத்தனை தாய்மார்கள் மலையகத்தில் உள்ளனர்.
இவ்வாறான தாய்மார்களை மலையகச் சமூகம் கௌரவித்துப் பாராட்ட வேண்டும். இவர்களை உதாரண புருஷர்களாகக் கொள்ள வேண்டும். இன்று உலகத்தில் பால்நிலை சமத்துவம் பற்றி தினமும் கதைக்கப்படுகின்றது. ஆனால் எத்தனைப் பெண்களுக்கு இந்தப் பால்நிலை சமத்துவம் கிடைத்துள்ளது. ஒரு சில விடயங்களை செய்யும் போது பால் நிலைச் சமத்துவம் பற்றிக் கதைக்க வேண்டும். உதாரணம், திருமணம் செய்யும் போதே இதனைக் கதைக்க வேண்டும்.
ஆண்களும் (கணவன்) வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து செய்ய வேண்டும். தேநீர் தயாரித்தல், வீட்டு பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, பிள்ளை பராமரிப்பு, உடைகள் கழுவுதல், உணவு சமைத்தல், வீட்டு பொறுப்புகள் போன்றவற்றில் ஆண்களும் ஈடுபட வேண்டும். ஆனால் மேற்கூறிய விடயங்களை முழுமையாகச் செய்யும் ஆண்களை பெண்கள் சமூகம் மதிப்பது இல்லை. ஏன் ஆண்கள் கூட இவ்வாறானவர்களை (PONTS) என அழைப்பதும் உண்டு.
எனவே பெண்கள், சமூகத்தில் தலைமைத்துவத்தை ஏற்கும் போதே சிறந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதாவது குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, பிள்ளைகளின் போசணை, பிள்ளைகளின் கல்வி, குடும்பத்திட்டமிடல், பெண் அடிமை, பெண் விடுதலை, பெண்ணியம், பால்நிலை சமத்துவம், பெண் கல்வி, பெண் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், இன்னும் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு மலையகத்தில் இருக்கும் பெண்களின் சமூகம் கல்வி கற்க வேண்டும். கல்விதான் இதற்கான முதலீடு. என்று கல்வி கற்கத் தொடங்குகின்றோமோ அன்றே ஒரு சமூகம் விழித்துக் கொள்கின்றது.
கொட்டகலை சிவமணம்
ஆகஸ்ட் 15 கறைபடிந்த நாள்

-த.மனோகரன்-
வரலாற்றில் சில சம்பவங்களும் அவை இடம்பெற்ற தினங்களும் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையிலே 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இலங்கை வரலாற்றிலே கறைபடிந்த நிகழ்வின் ஒருபக்கமாக இடம்பெற்றுள்ளது. ஆம். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட இன வெறிப் பயங்கரவாதம் நிகழ்ந்த,ஆரம்பித்து வைக்கப்பட்ட நாளாக அமைகின்றது.
இத் தினத்திற்கு முன்பும் அதாவது 1958 ஆம் ஆண்டிலும் இம் மாவட்டத்தில் இனவெறிப் பயங்கரவாதம் நிகழ்ந்த போதிலும் 1981 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வுகள் இம் மாவட்டத் தமிழர்களது வாழ்வையே ஆட்டங்காணச் செய்து விட்டது. அதுவே மறுக்க, மறைக்க, மறக்க முடியாத உண்மை வரலாற்று நிகழ்வு.
பருவப் பெயர்ச்சிக் காற்று காலத்திற்குக் காலம் வடகிழக்குத் திசையிலிருந்தும், தென்மேற்குத் திசையிலிருந்தும் வீசுவது போல தமிழ்மக்களுக்கெதிரான வன்முறையும் வழமையான நிகழ்வாகி விட்டதால் எவரும் அது தொடர்பில் அலட்டிக் கொள்வதில்லை.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை, இறக்குவானை, நிவித்திகலை, கலவானை, பெல்மதுளை, இரத்தினபுரி, எஹலியகொட, கொலன்ன ஆகிய எட்டுத் தேர்தல் தொகுதிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் 1981 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழர்களது சொத்துகள் அழிக்கப்பட்டன, எரியூட்டப்பட்டன, கொள்ளையிடப்பட்டன, பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
ஆண்டுகள் இருபத்தெட்டைக்கடந்து இன்று இருபத்தொன்பதில் புகும் போதும் அன்றைய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனதுகளில் இன்றும் அன்றைய நிகழ்வின் வடுக்கள் மறையவில்லை. வேதனைகள் நீங்கவில்லை.
வயோதிபர்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள், நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் இவ்வாறு சகல தரத்தினரும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அகதிகளாக்கப்பட்டனர், அவலத்திற்குள்ளாக்கப்பட்டனர். புத்தபெருமான் அவதரித்த இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பதாம் ஆண்டு 1981 ஆம் ஆண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே ஆண்டு தமிழ் மக்கள் இனவெறிக் கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டனர். எனவே இரத்தினபுரி மாவட்ட இனவெறிப் பயங்கரவாதம் நிகழ்வுகளை பகவான் புத்தரின் அவதார நினைவு ஆண்டுடன் இணைக்கும் போது வரலாற்றில் புத்தரின் போதனை எந்தளவுக்கு கைக்கொள்ளப்படுகின்றது,(பட்டது) என்பது பதிலாகின்றது.
அமைதியாக இருந்த இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழருக்கெதிரான வன்முறையைத் தூண்டிவிட்டது யார் என்பதற்கு எவரும் இதுவரை திட்டவட்டமான பதில் கூறவில்லை. அன்றைய அரசாங்கம் இஸ்மாயில் ஆணைக்குழு என்று ஒன்றை அமைப்பதாகக் கூறியதுடன், விடயத்தைக் கைவிட்டு விட்டது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் “சன்டேசில்,மண்டேகில்” என்று அன்று இரத்தினபுரி மாவட்ட இனக் கலவரத்தை மட்டிட்டுச் சொன்னார். அதாவது 14 ஆம் திகதி போயா தினத்தில் புத்த பெருமானின் போதனைகளைக் கேட்க பௌத்த விகாரைகளில் கூடி தர்மோபதேசம் பெற்றவர்கள் பலர். மறுநாள் கொலை, கொள்ளை, அழிப்பு,எரிப்பு என்று பல்வேறு செயல்களில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டனர். இந்த நிலையைக் கண்ட அமரர் தொண்டமான் அன்றைய நிகழ்வுகளை மேற்கண்டவாறு மதிப்பிட்டு வெளிப்படுத்தினார்.
அன்று அதாவது 1981 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை. தமிழ் மக்கள் செல்வாக்காக இருப்பதைப் பொறுக்கமாட்டாத இனவெறிப் பயங்கரவாதிகள் திட்டமிட்டு ஒரேநாளில் தமிழர்களை அகதிகளாக்கினர் ஆட்சி இயந்திரமும் கைகட்டி, வாய்பொத்தி ஏன் வாழ்த்தியும் பார்த்திருந்த அவலம் கூட வரலாற்றுப் பதிவாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து,வாழ்ந்தவர்கள் உடைமைகளை இழந்து இருப்பிடங்களை இழந்து அகதிகளாக வெளியேறி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மட்டுமல்ல, கடல்கடந்து இந்தியாவுக்கும் சென்றனர். இதுபற்றி இன்றுவரை எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட தமிழர்கள் மனவேதனையுடன் இறந்தவர்கள் பலர். அவதி வாழ்வு வாழ்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர். தமிழர்கள் அவதிப்பட்டு இடம்பெயர அவர்களது சொத்துகளைக் கொள்ளையடிப்பதிலும் குறைந்த விலையில் வாங்குவதிலும் கவனம் செலுத்தும் பலர் அன்றும் இருந்தனர். இன்றும் அவ்வாறு எதிர்பார்த்துள்ளோரும் அநேகர் உள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்ற அடுத்தடுத்த மாதங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு உத்தரவுப் பத்திரம் இல்லாதவர்களுக்கு நடமாடும் சேவை மூலம் புதிதாக உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும். கொள்ளைக்கு வெள்ளையடிக்கப்பட்டது. புத்தபகவானின் போதனைகளில் ஒன்றான கொள்ளையடித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் மூலம் மீறப்பட்டது. புத்தரின் போதனை அவமானப்படுத்தப்பட்டது.
இலங்கையில் தமிழர்களின் உள்ளக இடப்பெயர்வுகளில் 1981 இல் ஏற்பட்ட நிகழ்வுகளும் பதியப்பட வேண்டியவை. இன்று இவை மறக்கப்பட்டு விட்டாலும் வரலாறு அதாவது நிகழ்ந்த உண்மை வரலாறு மாற்றப்பட முடியாதது.
இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப் போட்டிபோட்டுக் கூச்சலிடும் காலம் கடந்த இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த அதர்ம நிகழ்வுகளுக்கு இதுவரை எந்தவொரு சரியான பரிகாரமும் காணப்படவில்லை. இயற்கையின் தீர்ப்பு எதிர்காலத்தில் என்ன நிர்ணயம் செய்யுமோ தெரியவில்லை.
இதில் படுபாதகமான நிகழ்வு, கொடுமை என்னவெனில், இந்தியரான இந்துவான புத்த பிரானின் தர்மோபதேசம் கேட்டவர்கள் மறுநாள் இந்திய வம்சாவளி மக்களான இந்துக்களான தோட்டத் தொழிலாளர்களையும் கூட அகதியாக்கிய அவமானமாகும். இவற்றுக்கெல்லாம் காலம்தான் பதில் கூற வேண்டும்.
எவ்வாறாயினும் தமிழர்களுக்கு எதிரான இழிவான செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ் மக்களுக்குப் பல்வேறு உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியும் ஆறுதல் தந்தும் செயற்பட்ட சிங்கள மக்களது நல்லுணர்வையும் போற்ற, மதிக்க மறக்கக் கூடாது.
நன்றி- தினக்குரல்
மலையக பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயமான பௌத்தலோக மாவத்தையிலுள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலிருந்து இரு மலையக பெண்களின் சடலங்களை பொலிசார் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதி வீடொன்றில் வேலை செய்த பெண்களுடையதாக இருக்கலாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.லக்ஷபான மற்றும் மஸ்கெலிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமதி (17) மற்றும் ஜீவராணி (16) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.