மாற்றுத் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிப்பு
பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 30 வேட்பாளர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்தப்பட்டபோதும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டபோதும் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 14 வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இ.தொ.கா.வுக்கு ஊவா மாகாண சபையில் அமைச்சர் ஒருவரும் மத்திய அரசாங்கத்திலும் பிரதி மற்றும் அமைச்சர் பதவிகளுடன் அதிகாரங்களும் இருந்த பொழுதும் பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பசறை, பதுளை, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளிலும் ப்புத்தளை, பண்டாரவளை ஆகிய நகரசபைகளிலும் இ.தொ.கா.வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
எனினும் பசறை ஹாலிஎல , பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வுக்கு கணிசமான அங்கத்தினர்கள் இருக்கின்றபோதும் இவர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
விசேடமாக பசறை, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வினர் பெரும்பாலும் ஐ.தே.க.பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இதற்குச் சான்றாக பசறை,பதுளை, ஹாலி எல, பண்டாரவளை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட்ட ஐ.தே.க. தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பசறை பிரதேச சபையில் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் மூவரும் தோல்வியடைந்துள்ள போதும் அதே பட்டியலில் முன்னாள் பிரதியமைச்சரும் பசறை பொ.ஐ.மு. அமைப்பாளருமான வடிவேல் சுரேஸினால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் எஸ்.தயாபரன் 1955 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஏன் இவ்வளவு சேவையினை மேற்கொண்டும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணித்தனர் என்பதை இ.தொ.கா.வின் தலைமைப்பீடம் இப்போதே ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் இனிவரும் தேர்தல்கள் இதைவிட இன்னும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை ஏற்படும் என்று இ.தொ.கா.ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.
2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தற்போதைய நிலையை விட மிகவும் பாதிக்கப்படலாம்.கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட வடிவேல் சுரேஸ் 27 ஆயிரம் வாக்குகளையும், அதே பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் இருவரும் 7 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர்.
ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட கே.வேலாயுதம் 25 ஆயிரம், எம்.சச்சிதானந்தன் 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதிலும் இ.தொ.கா.படுதோல்வியை தழுவியபோதும் இது குறித்து கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ளாததன் பிரதிபலிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.
பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதுடன் ஜனநாயக முறையிலான அரசியலையே விரும்புகின்றனர் என்பது பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரும் மத்திய அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரும் மாத்திரம் இருக்கின்றபோதும் உள்ளூராட்சித் தேர்தலில் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் எ.அரவிந்குமாரின் தனிப்பட்ட வெற்றியென்றே கூறவேண்டும்.
No comments:
Post a Comment