Monday, October 19, 2009

மலையகத்தில் பெருகிவரும் டிஷ் அன்டனா கலாசாரம்

இன்றைய இளைஞர்கள் கையில்தான் நாளைய சமூகம் தங்கியுள்ளது. இவர்களின் கல்வி நடவடிக்கைகள், நடையுடை பாவனை, கலை கலாசார, பண்பாட்டு, விழுமியங்கள் எவ்வாறாகக் காணப்படுகின்றதோ, அதனைப் பின்பற்றியே சிறுவர் சமூகமும் வளரும். எனவே இளைஞர்கள் என்போர் சமூகத்தினதும் காலத்தினதும் கண்ணாடிகள் இளைஞர்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயமும் நடவடிக்கையும் சமூகத்திலும், நாட்டிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய பெருந்தோட்ட இளைஞர்களை எடுத்துக் கொண்டால் சிலர் தன்னுடைய சொந்த வேலையைக் கூட செய்து கொள்ள முடியாத சோம்பேறிகளாக இருக்கின்றார்கள். இதுவரையும் தாய், சகோதரிகள் அவர்களுடைய உடைகளைக் கழுவிக் கொடுப்பது தொடக்கம் அன்றாட வேலைகளை செய்வது வரை பிறரில் தங்கி வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் ஒரு வேலைக்கும் செல்லாமல் இருப்பதுதான் வேதனையான விடயம். இன்றும் கூட எல்லா விடயங்களுக்கும் தாய் தந்தையரை நம்பி வாழும் இளைஞர் கலாசாரம் தோட்டப் பகுதியில் இருக்கின்றது. இவ்விளைஞர்கள் சுயமாக எந்த வேலையையும் தேடுவது குறைவு. அல்லது சுய தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுவதும் குறைவு.
அப்படியே பிற நகரங்களுக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கு தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை செய்யாமல் வந்து விடுகின்றனர். சிலர் கையடக்க தொலைபேசிகள் வாங்கவும், உடைகள் வாங்கவும் வேலைக்குச் செல்கின்றார்கள். சப்பாத்து ஒன்று வாங்குவதற்கு கூட வேலைக்குச் சென்று அதை வாங்கியவுடன் திரும்பியவர்களும் உண்டு. இவர்களின் நோக்கம் மேற்கூறிய பொருள்களில் ஏதாவது ஒன்றை வாங்கியவுடன் அவர்களின் நோக்கம் நிறை வேறிவிட்ட ஒரு மாயையில் வீட்டுக்கு வந்து விடுகின்றார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கக் கூடாது. சம்பளமும் கைநிறையக் கிடைக்க வேண்டும். உடனேயே பதவி உயர்வு கிடைக்க வேண்டும். குறுகிய காலத்திலேயே பெரிய ஆளாக (பணக்காரனாக) வர வேண்டும் என்ற சிந்தனை இவர்களிடத்தில் மிக அதிகமாக உள்ளது. இவர்களின் சிந்தனையில் தவறு இல்லை. அதனை அடைய பல முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.
குறிப்பாக கல்வியில் பின் தங்கியவர்கள் க.பொ.த. (சா.த) க.பொ.த. (உ.த) பரீட்சையில் சித்தியடையாதவர்கள், தொண்டமான் தொழிற் பயிற்சி கல்லூரி, நுவரெலியா தொழிநுட்பக் கல்லூரி, சர்வோதயம், அரசசார்பற்ற நிறுவனங்கள், போன்றவற்றில் இணைந்து சுய தொழிலைக் கற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் இல்லை.
வயரிங் வேலை, மேசன், கணனி ஹோட்டல் முகாமைத்துவம், தையல், சமையற்கலை, மணப்பெண் அலங்காரம், வெல்டிங், பிளம்பர், அச்சுத் தொழில், தச்சுத் தொழில், புகைப்படப் பிடிப்புப் பயிற்சி போன்ற எத்தனையோ விதமான சுயதொழில் வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் தான் வாழுகின்ற தோட்டத்திலேயே மரக்கறிச் செய்கை, வீட்டுத் தோட்டம், கையடக்கத் தொலைபேசி, முச்சக்கரவண்டி திருத்தவேலை, சாரதிப் பயிற்சி, சிறு வியாபாரம் கோழி வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, மாடுவளர்ப்பு, காளான் வளர்ப்பு, பூச்செய்கை, மூலிகைத் தாவரங்களை வளர்த்தல் போன்ற பல்வேறு வேலைகளை சுயமாக செய்யலாம். ஆனால் இவர்கள் இதனை விரும்புவது மிகவும் குறைவு. காரணம் இத்தகைய சுய தொழில்கள் பற்றிய போதுமான வழி காட்டல் ஆலோசனைகள் கிடைக்காமை ஆகும்.
இன்றைய இளைஞர்கள் பொழுது போக்காக தொலைக்காட்சி பார்த்தல், வி.சி.டி பார்த்தல், கையடக்கத் தொலை பேசியை அளவுக்கு மிஞ்சிய பாவனையும் துஷ்பிரயோகமும், இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் உள்ள கேபிள் தொலைக்காட்சியும் டிஷ் அன்டனாக் களும் இவர்களைப் படாதபாடு படுத்துகின்றன. இந்த சினிமா கலாசாரத்தினால் மலையகம் இன்று சிறிது சிறிதாக சீரழிந்து கொண்டிருப்பது பலருக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் 15000 ரூபாவை செலவு செய்து டிஷ் அன்டனாவை வாங்கி போட்டுவிட்டு, வருடம் முடிவில் இருந்து மாதம் மாதம் 340 ரூபாவை செலுத்தி வருகின்றார்கள். இதனால் தோட்டத்தில் தற்போது படித்துக் கொண்டிருக்கின்ற பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். சில நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் நடந்து கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமான விடயம் ஆகும்.
இன்றைய இளைஞர்கள் அதிகமானோர் மது பாவனையில் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்க விடயம். இன்றைய இளைஞர்கள் 98வீதமானவர்கள் மலையகத்தில் மதுவினைப் பாவிக்கின்றார்கள், இதில் பாடசாலை செல்லும் மாணவர்களும் விதிவிலக்கல்ல. அத்துடன் புகைத்தல், (பீடி, சிகரட்) பான்பராக் போடுதல், ஹென்சி பாவித்தல், குலி போன்ற தடை செய்யப்பட்ட எல்லா விடயங்களையும் இவர்கள் சிறு வயது முதலே பழகிக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம் பெற்றோர்களின் கண்காணிப்புக் குறைவே ஆகும்.
எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடிய அக்கறைகாட்ட வேண்டும்.
குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளின் (மகன்,மகள்) உடைகள், முடிவெட்டு, ஊர் சுற்றுதல், தகாத செயற்பாடுகள், கெட்ட நண்பர்களின் சகவாசம், பெற்றோர்களுக்கு அடங்காமை, தான் தோன்றித்தனமாக இருத்தல் போன்ற பல்வேறு விடயங்களையும், பெற்றோர் கள், முதலில் கவனித்து அவர்களை வழிநடத்த வேண்டும்.
படிக்கின்ற காலத்திலேயே காதல் வசப்படுவதும் இன்று சர்வசாதாரணமாகி விட்டது. குறிப்பாக (க.பொ.த. சா.த) (க.பொ.த. உ.த) மாணவர்கள் சிலர் காதலில் முழுமையாக ஈடுபட்டு, படிக்கின்ற வயதில் ஊர் சுற்றித்திரிந்து இறுதியில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றார்கள். (சில மாணவர்களை பெற்றோர்கள் கண்டிக்கும் போது விசம் அருந்துவது மலையகத்தில் அதிகமாக உள்ளது) சினிமாவில் வருவது போல் இவர்கள் நடக்கப் பார்க்கின்றார்கள்.
இதனால் வாழ்க்கையில் ஏமாறுவது சினிமாக்காரர்கள் இல்லை நாங்கள் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில மாணவர்கள் பொது இடங்களில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், பூங்காக்கள், ஏன் வாடி வீடுகளில் கூட சில மாணவிகள் இருந்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. பாடசாலைச் சீருடை என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் அணிய முடியும். இச் சீருடைக்கு ஒரு புனிதத்தன்மை உள்ளது. அந்த உடையை கறைபடிந்ததாக உருவாக்க எந்த ஒரு பாடசாலை மாணவனும் முயற்சிக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை விட அந்தப் பாடசாலைக்கே அவப் பெயர் ஏற்படும் என்பதை உணர வேண்டும். சில மாணவிகள்ஃ மாணவர்கள் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்கின்றோம் என பெற்றோரிடம் கூறி விட்டு காதல் லீலைகளில் ஈடுபடுவது மலையகப் பிரதேசத்தில் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்து பிள்ளைகளைப் படிக்க வைத்தால் சில பிள்ளைகள் பெற்றோருடய நிலையை உணராமல் வாழ்க்கையை சீரழிப்பது வேதனையான விடயமாகும்.
இளைஞர்கள் இளமையிலேயே ஒரு தொழிலைத் தேட வேண்டும். சம்பாதிக்க வேண்டும். உயர் கல்வி கற்க வேண்டும். தன் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும். வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ வேண்டும். சக நண்பர்களைப் பார்த்து திருந்த வேண்டும். ஏனைய சமூகத்தில் உள்ளவர்களைப் பார்த்து பல விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை காதலுக்குக் கேளிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது.
எனவே இனிவரும் காலங்களிலாவது மலையக இளைஞர்கள் சுய தொழில் வாய்ப்புகளை நாட வேண்டும். சுயமாக ஒரு தொழிலை தனது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றாற் போல் தேட வேண்டும். 18வயதுக்கு மேல் பிறரை எதிர்பார்த்து வாழக் கூடாது. கெட்ட நண்பர்கள், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். உழைத்தால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும். இனிமேலும் பிறருக்கு சுமையாக எவரும் வாழ முயற்சிக்கக் கூடாது.
வீண் கர்வம், வரட்டு கௌரவம், பிறரை குறை சொல்லும் பழக்கம், தேவையற்ற விமர்சனங்கள், பெறாமை, வஞ்சகம், சூது போன்றவற்றை விட்டு விட்டு முடியுமானவரை வெளி உலகிற்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
கொட்டகலை இரா. சிவமணம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி