பெருந்தோட்ட துறையிலுள்ள 70 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கம் 58 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதற்கமைய ஹற்றன். காலி, கண்டி, இரத்தினபுரி. பதுளை, கேகாலை ஆகிய பிராந்தியங்களில் புதிதாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ள அதேநேரம், இதே பிராந்தியங் களில் மேலும் பத்து நிலையங்கள் புனரமைப்பு செய்வதற்கென இனங்காணப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தில் ஆர்.எ.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் சர்வோடெக் (பிவிடி) லிமிட்டட் சார்பில் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டனர்.
கட்டடங்களின் கட்டுமானம் மற்றும் புனர்நிர்மாணத்திற்கு மேலதிகமாக சிறுவர்களின் பாதுகாப்பான வளர்ச்சி, சுகதாரம், கற்கும் சூழலை பெற்றுக் கொடுக்கும் வகையிலான தளபாடங்களையும் இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது.
தமது குழந்தைகள் மேற்படி நிலையங்களில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்ற நம்பிக்கையில் தாய்மார் பெருந்தோட்டத்துறைக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமென்பதுடன் மலையத்தில் வாழும் பெண்கள் பெருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டுமென்பதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.