Sunday, December 25, 2011

தொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என்ன?

அண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை மீறும் பல செயற்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களே ஏற்றுக்கொள்கின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் நேரடி தலையீடு இல்லாத காரணத்தினால் பல நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு சில தோட்டங்களில் இடம்பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்கள் தோட்டக்கம்பனிகளின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை என்பதாகும். அப்படியாயின் சில தோட்டங்களுக்குள் என்ன தான் இடம்பெறுகின்றன? உண்மையைக்கூறப்போனால் ஒரு சில தோட்ட முகாமையாளர்கள் அதிகாரத்தை தமது கைக்குள் எடுத்துக்கொண்டு தொழிலாளர்களை படுத்தும்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

ஒரு சில தோட்டங்களில் இவர்கள் செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் ஆங்கிலேயர் யுகத்திற்கு தோட்டங்கள் சென்று விட்டனவோ என்று தான் கூற வேண்டியுள்ளது. தமது தனிப்பட்ட அதிகாரங்களை தொழிலாளர்கள் மீது திணித்து அதில் இன்பம் காண்பதில் அக்காலத்தில் பல ஆங்கிலேய துரைமார்கள் தான் பெயர் பெற்றிருந்தனர்.

இக்காலத்திலும் இவர்கள் இவ்வாறு செயற்படுவது தொழிலாளர்களை ஆத்திரத்தின் விளம்பிற்கே கொண்டு சென்றிருப்பதை மறுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே வேலை மற்றும் சம்பள புறுக்கணிப்பு, ஆர்ப்பாட்டங்கள், தோட்ட முகாமையாளரை அறைக்குள் வைத்து பூட்டுதல் என இன்னோரன்ன செயற்பாடுகளில் தொழிலாளர்கள் இறங்குகின்றனர்.

பிரதான பிரச்சினைகள் தான் என்ன?

தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் பிரதான பிரச்சினையாக அதிக எடை கொழுந்து எடுக்கும்படி தொழிலாளர்களை நிர்பந்திக்கும் விடயத்தை கூறலாம். எனினும் இது கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய விடயமாகையால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் இதில் நேரடியாக சம்பந்தப்படுகின்றன.

குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவு கொழுந்து குறைந்தால் (சராசரி) அதிக கிலோ கொழுந்து பறிக்கும் படி தொழிலாளர்களை நிர்வாகங்கள் கோறுவது வழமையான ஒரு விடயம்.

இது பல தோட்டங்களில் இடம்பெறும் சம்பவமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் கூட இப்படியான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. கூடுதல் கொழுந்து எடுக்கப்படும் விடயத்தை நிர்வாகம் தோட்ட கமிட்டி தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்திற்கு ஒரு தொகை பணம் வழங்கப்படுகிறது.

எனினும் கொழுந்து இல்லாத பருவத்தில் அதிக எடை கொழுந்துகள் பறிக்கும் படி தொழிலாளர்களை கோருவது நியாயமில்லாத செயல். இதன் காரணமாகவே முறுகல் நிலை எழுகின்றது. அண்மையில் அட்டன் எபோட்ஸ்லி தோட்ட மொண்டிபெயார் தோட்டத்திலும் வெளிஓயா தோட்டத்திலும் இப்பிரச்சினைகள் எழுந்தன.

மொண்டிபெயார் பிரிவு தொழிலாளர்கள் எதிப்பை காட்ட அனைவருக்கும் நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட முகாமையாளர் சம்பளம் கொடுக்க வந்ததையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். எனினும் வெளியா தோட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவே வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதற்குக் காரணம் வேலை செய்யாவிடின் இராணுவத்தினரை வரவழைப்போம் என தோட்ட நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுபவம் இல்லாத முகாமையாளர்கள்

இதே வேளை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இளம் வயது தோட்ட முகாமையாளர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதிலும் வேலை வாங்கும் அணுகு முறைகளிலும் அனுபவம் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அட்டன் பகுதியில் ஒரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் வளரும் புற்கள் விரைவாக அழிய மருந்து கலவையுடன் பெற்றோலை கலந்து அடிக்க வேண்டும் என ஒரு முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். மற்றுமொரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்தை முகாமையாளர் தெளிக்கச்சொன்னதால் பல ஹெக்டயர் தேயிலைச்செடிகள் கருகி விட்டன.

இதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கும் குறிப்பிட்ட தோட்டத்தொழிலாளர்கள் தயங்கவில்லை. மேலும் கவ்வாத்து வெட்டுதல் ,கன்றுகளை நட குழி போடுதல், அகழி அமைத்தல் போன்ற மிக முக்கியமான விடயங்களில் அடிப்படை அறிவு இல்லாத முகாமையாளர்களினாலேயே முறுகல்கள் இடம்பெறுவதாக இத்தொழிலில் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இப்போதுள்ள இளம் முகாமையாளர்கள் இத்தொழிலில் உள்ள சூட்சுமங்களை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை என பல சிரேஷ்ட ஓய்வு பெற்ற தோட்ட முகாமையாளர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சங்கங்களின் நிலை என்ன?

நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான பிரச்சிகளை தீர்த்து வைக்கும் நியாயம் கூறும் பிரதான கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு ,காரணம் அதற்காகத்தான் சந்தாப்பணம் அறவிடப்படுகிறது.

பிரதான தொழிற்சங்கங்கள் பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வைத்துள்ளன. எனினும் அண்மைக்காலமாக தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லையோ என்ற சந்தேகமும் நிலவுவதில் ஆச்சரியம் இல்லை. பல தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றும் கூறலாம்.

எனினும் பல தொழிற்சங்கங்களின் பிராண வாயுவாக இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிக அக்கறை கொண்டு பார்த்தல் அவசியம். தொழிலுறவு அதிகாரிகளும் தொழிற்சங்க காரியாலயங்களும் இப்பணியை செய்து வருகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக பேசும் அதிகாரிகளும் இல்லாமலில்லை.இதற்குக் காரணம் இவர்கள் தமது நாட்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே? பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படும் நிலை ஏற்பட்டதால் தான் பல தொழிலாளர்கள் தமது பாரம்பரிய தொழிற்சங்கங்களை விடுத்து ஏனைய தொழிற்சங்கங்களை நாடுகின்றனர்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில பேரினவாத தொழிற்சங்கங்கள் இலகுவாக தோட்டப்பகுதிகளுக்குள் ஊடுறுவுகின்றன. விளைவு ? தொழிற்சங்க அங்கத்துவம் சின்னா பின்னமாகி போகின்றது. ஏற்கனவே குறித்த தோட்டத்திற்கு திட்ட மிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பழைய தொழிற்சங்கத்தால் நிறுத்தப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதிகளும் தான்.

நட்புறவுடன் பழகும் நிர்வாகங்கள்

பெருந்தோட்டப்பகுதிகளில் எல்லா நிர்வாகங்களும் தொழிலாளர்களை தமது அதிகார அழுத்தங்களால் ஆள்கின்றன என்று கூற முடியாது.ஒரு சில கம்பனிகளுக்கு கீழ் வரும் நிர்வாகங்கள் சிறந்த நட்பை தொழிலாளர்களிடத்தே பேணி வருகின்றன.

இவ்வாறான தோட்டப்பகுதிக்குள் அதிக எடை கொழுந்து பறித்தல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இங்கு தொழிற்சங்கங்களுக்கும் அதிக வேலை இராது.கூறப்போனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை கண்டு கொள்வதேயில்லை எனலாம்.

எனினும் தற்போதைய சூழ்நிலைகளில் தேயிலை தொழிற்றுரையானது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது எனலாம். பல தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் தேயிலை அல்லாத மாற்று பயிர்ச்செய்கை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நஷ்டத்தை காரணங்காட்டி பல தோட்டங்கள் இன்று மூடப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான விளைவை தரப்போகின்றது. அதாவது பெருந்தோட்டப்பகுதி வருமானத்தில் தங்கியிருத்தல் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகப்போகின்றது.

ஒரு கட்டத்தில் இந்த தொழிலாளர்கள் வர்க்கம் எமக்கு தேவையில்லை தேயிலை தொழிலில் நாம் தங்கியிருக்கவில்லை என அரசாங்கமே கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே இந்த எதிர்கால அபாயத்தை கருத்திற்கொண்டு சரி தொழிலாளர்களும் ,தொழிற்சங்கங்களும் ,அசியல் கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருதல் காலத்தின் தேவை. நிர்வாகத்துடனான முறுகல்களை குறைக்கும் வகையில் திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் தொழிற்சங்க பிரமுகர்களின் கடமையாகும்.



18 வருடங்களில் 50 தேயிலை இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டன

கடந்த 18 வருடகாலத்தில், தனியார் மயப்படுத்தப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் இலங்கை தோட்ட சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் தம்மிக ஜயவர்தன மற்றும் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில் தோட்ட நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகஸ்தர்களின் சம்பள பாகுபாடு, தோட்டங்களில் தங்குமிட வசதியின்மை, உத்தியோகஸ்தர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, உத்தியோகஸ்தர்களின் வீடுகள் புனரமைக்கப்படாமை, தோட்டத்துறைக்கான முறையான விவசாய கொள்கைகள் வகுக்கப்படாமை போன்றன தோட்டத்துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பல தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளபோதிலும் தோட்ட உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோட்டங்களின் உரிமையாளர்கள் தவறியுள்ளதாக தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்குமுன் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும்போது முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கூறியுள்ளார்.
பெருந்தோட்டத்துறையான சீரழிவு கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இவ்விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நன்றி- வீரகேசரி

Wednesday, December 21, 2011

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி: மனோ

தற்சமயம் நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பாராளுமன்ற உறுபினர்களில் ஐவர் தமிழர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு மாற்று வழியில் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது. இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களும் மலையகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

ஆளுமையுடன் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தில் பன்னிரண்டாக இருந்த ஒட்டுமொத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர் தொகையில் ஏற்பட்ட குறைவு காரணமாக காட்டப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் மாற்று வழிகளின் மூலமாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டம் தீட்டப்படுவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. தகுதியுள்ள தமிழர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் குளறுபடிகளை ஏற்படுத்தி தமிழ் வாக்காளர் தொகை அதிகரிக்கப்படாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தை தளமாகக் கொண்டு மலையகம் முழுக்க தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பெரும்பான்மையினரை குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழர்கள் செறிவாக வாழ்வதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய புதிய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்படும்.

அரசாங்கத்திற்குள்ளே அமைச்சர்களாகவும் ஆதரவு அணியினராகவும் செயல்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலையக அரசியல் கட்சிகளுக்கும் இது தொடர்பிலே பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நமது மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் மலையகத்தில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துகளை உணர்ந்திருக்கின்றார்களா என்பது புரியவில்லை. வாயைத் திறந்து பேசினால் ஜனாதிபதி கோபித்துக் கொள்வார் என்பதற்காக நமது மலையகப் பிரதிநிதிகள் வாய்களை திறப்பதில்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமாக நமது இனம் நன்மை பெற வேண்டும். ஆனால் ஆதரவையும் வழங்கிவிட்டு நமக்கெதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளையும் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதில் அர்த்தமில்லை. அøதவிட எதிரணியில் அமர்ந்து உண்மைகளை துணிச்சலுடன் எடுத்துக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஆளுமையுடனும் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை.

Friday, December 16, 2011

தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அட்டன் வெலிஓயா தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட முகாமையளர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கொழுந்து நிறையிடுதல் குறித்து ஏற்பட்ட இழுபறி நிலையே முரண்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாகத் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தின் அளவை அதிகரித்து 20 கிலோ கிராம் பறிக்க வேண்டும் எனத் தோட்ட முகாமையாளர் விடுத்த பணிப்புரைக்குத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் துணையை நாடவேண்டி வரும் என தோட்ட முகாமையாளர் தெரிவித்ததையடுத்து அவர் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.