வடபகுதி தேசிய வாதத்தின் வளர்ச்சியானது மலையகத்திலும் கணிசமானளவு தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையக தேசிய வாதத்திற்கு இந்நிலைமை வித்திட்டிருக்கின்றது. இதனை எவரும் மறுத்துவிட முடியாது என்று பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தெரிவித்தார்.
மலையக தேசியவாதத்தின் மேலெழும்புகை தொடர்பில் கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மலையக தேசியவாதம் குறித்த கருத்துக்கள் தற்போது அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. புத்திஜீவிகள் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் மலையக தேசியவாதம் தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக தேசிய வாதம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்திவருவதனையும் அறியக்கூடியதாக உள்ளது. கடந்த காலத்தில் கூட அமரர் பெ.சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஏற்படுத்தி தேசிய வாதத்தின் அடிப்படையில் இம்மக்களை ஒன்றுபடுத்துவதனை பெரு நோக்காகக் கொண்டு செயற்பட்டார் என்பதே உண்மையாகும். மலையகத்தில் தேசியவாதத்தை தீவிரமாக அறிமுகம் செய்தவர் என்ற ரீதியில் அமரர் சந்திரசேகரனை குறிப்பிட்டுக் கூறமுடியும்.
வடபகுதி தேசிய வாதத்தின் வளர்ச்சியானது மலையகத்திலும் கூட ஒரு காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதனை எவரும் மறுத்துவிடமுடியாது. மலையகம் வடபகுதியில் இருந்து தொலைவில் இருந்தாலும் வடபகுதியில் இடம்பெற்ற சத்தியாக்கிரகங்கள் போராட்டங்கள், அரசியல் முன்னெடுப்புகள் என்பவற்றில் மலையகத்தவர்களுக்கும் பங்கிருக்கின்றது. மலையக இளைஞர்கள் இப்போராட்டங்களில் பங்குகொண்டு இறந்தும் போயுள்ளனர். 1956,1958,1981,1983 என்று பல்வேறு காலகட்டங்களில் மலையக மக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள், கலவரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு மலையக மக்கள் காரணமல்ல. வடபகுதி நிலைமைகளின் எதிரொலியாக தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே இத்தகைய தாக்குதல்களும் கலவரங்களும் ஏவிவிடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே வடபகுதியின் நிலைமைகள் மலையகத்தில் எதுவிதமான தாக்கமும் செலுத்தவில்லை என்று கூறிவிடமுடியாது.
மலையகத்தை பொறுத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுத்தல் தொழில் பிணக்குகளை தீர்த்து வைத்தல் என்று இ.தொ.கா. பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
தொழிலாளர்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு அமரர் தொண்டமான் உந்துசக்தியாகத் திகழ்ந்தார். எனினும் தேசியவாத தலைவராக தொண்டமான் பரிணமிக்கவில்லை. எனினும் பின்வந்த தலைவர்கள் தேசிய வாதத்தின் ஊடாக மலையக மக்களை ஒன்றுபடுத்த முனைந்ததையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செல்வாக்கும் மலையகத்தில் பிரதிபலித்திருந்தது. அதனைக்காட்டிலும் வடபகுதி நிலைமைகள் அதிகளவில் மலையகத்தில் பிரதிபலித்தன என்பதே உண்மையாகும். இதேவேளை வடபகுதி போராட்டமானது தமிழகத்தில் தமிழ் எழுச்சியை உண்டு பண்ணுவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது என்பதனை சகலரும் ஏற்றுக்கொள்வர். இலங்கையில் பல அமைப்புகள் ஏற்படவும் இப்போராட்டமே வழிவகுத்தது. இந்த நிலையில் மலையக தேசியவாதம், கிழக்கு தேசிய வாதம் ,முஸ்லிம் தேசிய வாதம் என்று எல்லாவற்றுக்கும் வடபகுதி தேசியவாதமே முக்கிய காரணமாக அமைந்தது என்றார்.