Wednesday, October 22, 2008

தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் கூடிய வருமானம்

சர்வதேச சந்தையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மற்றும் இயற்கை இறப்பர் ஆகியவற்றுக்கு பெருமளவு கிராக்கி நிலவிவருவதால் விவசாய உற்பத்திப் பொருட்கள் எற்றுமதி 32 வீதம் அதிகரித்துள்ளதாக விவசாய ஏற்றுமதி தொடர்பான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ தேயிலையின் ஆகக்கூடுதலான விலை 4.26 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு கிலோ இயற்கை இறப்பரின் விலை 3.02 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்த 29 வீதத்திலிருந்து 31 வீதமாக அதிகரித்துள்ளது.

குறைவான வேலை நாட்களால் தொழிலாளர்கள் துன்பம் - நட்டஈடு வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தளவு வேலைநாட்கள் வழங்கப்படுவதால் அம் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர். கம்பனி தோட்டங்கள் வாரத்தில் இரு நாட்களே தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகின்றன. சில தனியார் தோட்ட உரிமையாளர்கள் தமது உற்பத்தியை முற்றாக கைவிட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் வேலைக்கு அழைக்கப்படுவதில்லை. கொள்முதல் செய்யப்படுகின்ற பச்சை கொழுந்து ஒரு கிலோ 59 ரூபாவிலிருந்து 25 ரூபாவிற்கு குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஒரு கிலோ 300 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறப்பர் சீட்டுக்கள் தற்போது 100 ரூபாவிற்கு குறைவாக கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒட்டுப்பால் முன்னர் 180 ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது தற்போது 30 ரூபா – 40 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. இவ் விலை குறைப்பு நடவடிக்கையால் தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்கப்படவில்லை. எனவே நிலைமையை கருத்திற் கொண்டு தேயிலை, இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.