மலையக மக்கள் சுய சிந்தனையுடன் செயற்பட வேண்டும்
மலையக மக்கள் ஏனைய இதர கட்சிகளுக்கு ஏணியாக இருக்காது சுய சிந்தனையுடன் சுதந்திரமாகச் செயற்பட்டு உள்ளூராட்சித் தேர்தலில் தமது பிரதேச சபைகளுக்கு தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்து கொள்ள முன்வர வேண்டுமென இ.தொ.கா. வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.டி.இராஜன் இரத்தினபுரி இ.தொ.கா.பணிமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்; கடந்த உள்ளுராட்சி சபை இ.தொ.கா. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பல பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டு அவர்களினூடாக பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டமையை யாரும் மறந்துவிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் எமது மக்கள் தமக்கென பிரதிநிதிகளை இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு பெற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
ஏனைய கட்சிகளின் ஆசை வார்த்தைகளையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் நாம் விலைபோனால் எதிர்வரும் காலங்களில் நாம் யாருமே இல்லாத அநாதையாக மாறி விடுவோம். இரத்தினபுரி மாவட்டத்தில் அவ்வப்போது இன வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றால் அதனை தடுக்க கொழும்பிலிருந்து நடவடிக்கை எடுக்க முடியாது.தோட்டங்களில் எமக்கென உறுப்பினர் ஒருவர் இருந்தால் அவர் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கை மேற்கொள்வார்.இதனை கவனத்திற் கொண்டும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் எமது பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment