தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் தனித்தனியான வீடுகளாகவே அமைக்கவேண்டும் என்று ஒருசாரார் வாதிடுகின்றனர். இல்லை, அவர்களுக்கு மாடி வீடுகளே பொருத்தமானது என்கின்றனர் மறுசாரார். எனினும் தனி வீடுகளோ, மாடிவீடுகளோ எதுவாயினும் அவை சொந்தமாக்கப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்த முனைந்தபோதும் அவர்கள் வாழ்கின்ற வீடுகள் சொந்தமாக்கப்படவில்லை. எனினும் லயன் காம்பிராக்களுக்கு வெள்ளை பூசப்பட்டன. கணிசமான லயன் காம்பிராக்களில் கூரைத்தகடுகள் மாற்றப்பட்டன. மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. குடிநீர் வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. இதற்கு மேலாக தனிவீடுகளும,; மாடிவீடுகளும் கட்.டப்பட்டன. மொத்தமாக லயன்களில் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானவர்கள் லயன் காம்பிராக்களில் இருந்து விடுபட்டு தனி அல்லது மாடிவீடுகளில் வாழமுடிந்தது. இவை யாவும் கடந்த 60 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
தொழிலாளர்களின் லயன் குடியிருப்பில் உள்ள அசௌகரியங்களை நீக்கி அவர்களை கௌரவமான வீட்டில் குடியிருத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே தனிவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிவீடுகள் அமைக்கும் பணியை மனித அபிவிருத்தி நிதியமே (PHDT) ஆரம்பித்தது என்று கூறுவதற்கில்லை. குடிபெயர்ந்துவந்த இந்திய தொழிலாளர்களின் லயன் வாழ்க்கையை பொறுக்கமுடியாத இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால் 1930களில் ஒருசில தோட்டங்களில் இரட்டை வீடுகளும் அமைக்கப்பட்டன. அவற்றில் சில மாடி வீடுகளாகவும் நிர்மாணிக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகளை இப்போதும் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக ஹட்டனில் இருந்து நுவரெலியா செல்லும் வழியில் நானுஓயா நகரத்தைக் கடந்து செல்லும்போது இடப்பக்கத்தில் காணப்படும் தோட்டக் குடியிருப்புகள் மாடி வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதேபோல இரட்டை வீடுகளை ரதல்ல (Radella), ரொக்வூட் (Rockwood) போன்ற தோட்டங்களிலும் காணலாம்.
ஓப்பீட்டளவில் மாடிவீடுகளிலும் பார்க்க இரட்டைத் தனி வீடுகள் நல்லமுறையில் நிர்மாணிக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கென அமைக்கப்பட்ட இந்த இரட்டை வீடுகள் பிற்காலத்தில் கங்காணிமார்கள், சுப்பவைசர்கள், டிரைவர்களுக்கும் வழங்கப்பட்டன. சில தோட்டங்களில் இவ்வாறான வீடுகள் staff Quarters ஆகவும் பயன்படுத்தப்பட்டன. பானா தங்கம் எழுதிய கட்டுரையில் கூட இதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பி;ட்டதுபோல 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ‘தனித்தனி வீடுகள்’ அமைக்கப்படுமா? அல்லது ‘மாடிவீடுகள்’ அமைக்கப்படுமா? என்றவாறு பலதரப்பட்ட அபிப்பி;ராயங்கள் ஒருபக்கமாக இருக்கும் போது ‘மாடிவீடுகளே’ அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஏன் மாடிவீடுகள் அமைக்கப்பட்டன? அதன் பலாபலன்கள் யாவை? மாடிவீடுகளுக்குப் பதிலாகத் தனிவீடுகள் அமைத்து அவர்களுக்கு அதனை சொந்தமாக வழங்குவதிலுள்ள சிக்கல்கள் என்ன? என்பது பற்றிய சிலவிடயங்கள் இக்கட்டுரையில் மேலோட்டமாக அவதானிக்கப்படுகின்றது.
ஏன் மாடிவீடுகள் கட்டப்பட்டன?
லயன் குடியிருப்புகளுக்குப் பதிலாக தனிவீடுகள் அமைப்பதை விட்டுவிட்டு ஏன் மாடிவீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்று பலரிடம் வினவியபோது அவர்கள் வழங்கிய விளக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன.
1. லயன் வீடுகளில் காணப்பட்ட அசௌகரியமான இருட்டு அறை, அடுப்புப் புகைகூட வெளியேற முடியாத அடைப்புகள், கணவன், மனைவி, பிள்ளைகள், புதுமணத் தம்பதிகள் என்று ஒரே அறையில் அடங்கிக் கிடைப்பதைவிட வெளிச்சமுள்ளதும் தமது பிரத்தியேக நடவடிக்கைகளுக்கு ஏதுவானதுமான வாழ்க்கைமுறைக்கு பொருத்தமானது மாடிவீட்டுத் திட்டமாகும்.
2. 1990களில் திட்டமிடும்போது தனி வீடுகளாயின் சுமார் 150,000 வீடுகள் அமைக்க வேண்டும். அவ்வாறாயின் வருடத்தில் 10,000 வீடுகள் அமைத்தாலும் திட்டம் நிறைவுபெற 15 ஆண்டுகளாவது தேவைப்படும். ஆனால் மாடிவீடுகள் என்றால் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
3. தனிவீடுகள் அமைத்துக் கொடுத்தால் அதனை தொழிலாளர்கள் வெளியார்களுக்கு விற்றுவிடலாம் அல்லது வாடகைக்கு வழங்கலாம். தோட்டங்களில் அமைக்கப்பட்ட இவ்வாறான தனிவீடுகள் பல பறிபோய்விட்டன. ஆனால் இப்போது இருப்பது போல லயன் அமைப்பில் மேல்மாடியுடன் அமைத்துக் கொடுத்தால் அப்படியான குடியிருப்புக்களை வெளியார்கள் விரும்பமாட்டார்கள.; அதனை சொந்தமாகவும் பெற்றுக் கொள்ள முனையமாட்டார்கள். இவ்வாறான நிலையில் லயன்களுக்குப் பதிலாக மாடிவீடுகளை வழங்கினால் தொழிலாளர்களின் இருப்பை பாதுகாக்கலாம் என்றும் கருதப்பட்டது.
4. மாடிவீடுகளை நிர்வகிப்பதற்கு மேலதிக செலவுகள் தேவைப்படுவதில்லை. அதனால் அவர்கள் தோட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்திலேயே சமாளிக்கக் கூடியதாயிருக்கும்.
5. மாடிவீட்டில் வாழ்வதும் ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது. காலம் காலமாக லயத்தில் வாழ்ந்தவர்கள் ‘மாடிவீடுகளில் தான் வாழ்கிறோம்’ என்ற பெருமையுடன் வாழ்வதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் எடுத்துக்காட்டப்பட்டது.
6. தோட்டத்தில் இப்போது 150,000 குடும்பங்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 7 பேர்ச் வீதம் தனி வீடுகள் அமைக்கக் காணிகள் இல்லை. அவ்வாறாயின் இருக்கின்ற தேயிலைச் செடிகளைப் பறித்துவிட்டு வீடுகளை மட்டுமே கட்டலாம். அவ்வாறாயின் அவர்கள் எங்கே வேலை செய்வர்? தேயிலைத் தொழிலை எப்படி நடத்துவது? என்று கேட்கின்றனர். இவ்வாறான நிலையில் இருக்கின்ற லயன் காம்பிராக்களுக்குப் பதிலாக அதே இடத்தில் அமைக்கப்படும் மாடிவீடுகளால் தோட்டங்களில் உள்ள தேயிலைக் காணியில் எவ்வித குறைபாடும் ஏற்படப் போவதில்லை என்ற அபிப்பிராயமும் காணப்படுகிறது.
மேற்குறிப்பிட்டது போல பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் தனிவீடுகள் அமைக்க ‘முழுத்தேயிலைச் செடியையும் பறித்தெடுக்க வேண்டியேற்படும்’ என்ற வாதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.
உதாரணமாக ஒருவருக்கு 7 பேர்ச் காணித்துண்டில் வீடுகட்ட வேண்டுமாயின் எவ்வளவு காணித் துண்டுகள் தேவைப்படும் என்பதை கணிப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு ஹெக்டேயர் காணியில் சுமார் 384 பேர்ச்சஸ் காணப்படும். 384 பேர்ச்சினை 7 துண்டுகளாக பிரிப்போமாயின் (384 ÷ 7=54.8) சுமார் 55 துண்டுகளாக பிரிக்க முடியும். அவ்வாறெனின் ஒரு ஹெக்டேயர் காணியில் வீடு, நடைபாதை மற்றும் தொடர்பாடல் வசதிகளுடன் சுமார் 30-35 வீடுகளையே நிர்மாணிக்க முடியும். அவ்வாறாயின் இப்போது தோட்டங்களில் நிரந்தரமாக பதிவுப் செய்துள்ள சுமார் 150,000 தொழிலாளர் குடம்பங்களுக்குத் தேவைப்படும் காணித்துண்டின் அளவினைக் கணிப்பிடலாம்.
தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் 200,000 இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையானது தோட்டங்களில் நிரந்தரமாகப் பதிவு செய்துகொண்ட தொழிலாளர்களின் குடும்பம் மட்டுமன்றி தற்காலிமாக தோட்டங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுடன், கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட தனிவீடுகள் அல்லது மாடிவீடுகளில் வசிப்பவர்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படும். நாம் ஏற்கனவே அறிந்தது போல சுமார் 33 வீதமானவர்கள் தனியான அல்லது மாடிவீடுகளில் வாழ்கின்றார்கள். அவ்வாறெனின் 200,000 குடும்பங்களில் 33 வீதத்தைக் கழிக்க வேண்டும் அப்படியானால் லயன்களில் உள்ள தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களாக வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை (200000-66000) 134,000 ஆகக் காணப்படலாம். ஒரு குடும்பத்திற்கு 7பேர்ச் வழங்க வேண்டுமாயின் (134,000×7) 938,000 பேர்ச்சஸ் காணிகள் தேவைப்படும். 938,000 பேர்ச்சஸ் என்பதை ஹெக்டயரில் கணிப்பிடுவோமாயின் (938,000÷384 பேர்ச்சஸ் = 2442) சுமார் 2450 ஹெக்டேயர் பரப்புள்ள காணித்துண்டாகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு ஹெக்டேயரில் 30-35 வீடுகளை மட்டுமே அமைக்கலாம் என்றால் 134,000 குடும்பத்திற்கும் தேவைப்படும் காணியின் அளவு (134,000÷30=4466) சுமார் 4470 ஹெக்டயர்கள். ஒரு ஹெக்டேயரில் 35 குடும்பங்கள் எனின் (134,000÷35=3828) சுமார் 3830 ஹெக்டேயர்கள் தேவைப்படும்.
பெருந்தோட்டங்களிலிருந்து இக்காணிகளை வீடமைப்பிற்காகப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் அவதானித்தல் நல்லது. இதன்படி ஒரு ஹெக்கடேயரில் 35 வீடுகள் என்றவாறு 134,000 வீடுகள் அமைக்க சுமார் 3830 ஹெக்டயர் காணிகளே தேவைப்படுகின்றது. இவ்வாறாயின் இன்று பெருந்தோட்டக் கம்பனிகளிடம் தேயிலை, இறப்பர் செய்வதற்கெனப் பயன்படுத்தும் காணிகளின் மொத்தப் பரப்பு சுமார் 122,000 ஹெக்டேயர்களாகும் இதில் 3830 ஹெக்டேயர் என்பது (3830÷122,000×100) சுமார் 3 வீதமான காணியாகும். கம்பனிகள் பயன்படுத்தம் காணியில் 3 வீதத்தினை தொழிலாளர்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்துவதை தேயிலைத் தொழிலுக்;கு செய்யும் துரொகமாகக் கூறுவதற்கில்லை. இப்போது அவர்கள் வாழ்கின்ற இடத்திலேயே 7 பேர்ச் அளவிலான வீடுகளும் நிர்மாணிக்கப்படுமாயின் வீடுகளுக்காகப் பயன்படுத்தப்போகும் காணியின் அளவு 3830 ஹெக்டேயர்களிலும் பார்க்க குறைவாகவே காணப்படும்.
இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்ட காணிகள் என்று சுமார் 37,000 ஏக்கர் காணிகளை அரசாங்கம் மீட்டெடுத்தது. அக்காணிகளை 12,000 இளைஞர்களுக்கு மாற்றுப் பயிர் நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்படும் என்றனர். அவை முழுமையாகப் பயன்படுத்தப்படாது போனால் அக்காணியையும் தனிவீடுகள் அமைக்கப் பயன்படுத்தலாம். இதன்போது இப்போதிருக்கும் தேயிலை, இறப்பர் காணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாத அளவில் வீடமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எவ்வாறாயினும் தோட்டங்களிலிருந்து சமூக நலன்களுக்காக காணிகள் பெற்றுக்கொள்வது இலகுவான காரியமல்ல. ஏற்கனவே பாடசாலைகள் அமைக்கவும் சிறுவர் நிலையங்கள் அமைக்கவும் காணிகள் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். எனினும் இறுதியில் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. சிறுவர் நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டன. இதனூடாக இந்த இரண்டு துறைகளிலும் குறிப்பிட்டளவு வளர்ச்சி காணப்பட்டன. ஆனால் வீடு மனிதனின் அடிப்படை உரிமையாகும். மனிதனின் அடிப்படைத் தேவையில் உணவு, உடை என்பதற்கு அடுத்ததாக உறையுள் (வீடு) அமைந்துள்ளது. இந்த உரிமையை எவரும் மறுப்பதற்கில்லை. அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் உரிமை கிராமிய, நகர மக்களுக்கு இருப்பது போல இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மூன்று தலைமுறையாக உழைக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
நன்றி- வீரகேசரி