Saturday, September 13, 2008

மலையக மக்களைப் பாதிக்கும் தேசிய அடையாள அட்டைப் பிரச்சினை

மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்தும்; அவர்களில் கணிசமானோர் அந்த உரிமையைத் தேர்தல்களில் பயன்படுத்த இயலாதவர்களாக உள்ளனர். தேசிய அடையாள அட்டை இல்லாமையே இதற்குப் பிரதான காரணம். நடந்து முடிந்த வட மத்திய, சப்ரகமுக மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டையைக் கட்டாயமாக்கும் நிபந்தனையை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது இதற்குப் பரிகாரமாகாது. வருடத்திற்கொருமுறை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதை பெருந்தோட்ட மக்களோ அல்லது அம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத்துவங்களோ இதில் அக்கறை காட்டவேண்டும். இதற்காக குறைந்தது வருடத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கினாலே போதும் இம் மக்களில் பெரும்;பாலானோர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக ஆக்கப்படுவார்கள். பிரசாவுரிமை வாக்குரிமை இருந்தால் மட்டும் போதாது. அவற்றின் பலனை அனுபவிக்கவும் அதனை சரிவர பயன்படுத்தவும் அந்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அம் மக்களினதும் சமூகப் பிரதிநிதிகளை சார்ந்த விடயமாகும்.

இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

இறப்பர் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மழை காலங்களில் தங்கள் இறப்பர் பால் வெட்டும் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளனர். கடந்த சில வாரங்களாக இரத்தினபுரி போன்ற பகுதிகளில் கடுமையான மழை காரணமாக அப்பகுதி தொழிலாளர்களுக்கு தோட்டக் கம்பனிகள் வேலை வழங்காததால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின்படி மாதத்தில் 25 நாட்கள் வேலைக்கு சென்றால் மாத்திரமே அவர்களுக்கான முழுமையான நாட்சம்பளம் கிடைக்கும் இவர்களுக்கு வேலை வழங்கப்படாவிட்டால் அடிப்படையில் சம்பளம் குறைக்கப்படுகின்றது. எனவே தோட்டக் கம்பனிகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.