Thursday, September 11, 2008

வீடில்லாப் பிரச்சினைக்குதீர்வு காணும் திட்டம்

மக்கனின் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் பாரியதொரு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதிலும் 2009ம் ஆண்டில் 21,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வீடில்லாப் பிரச்சினையினால் நீண்ட காலமாக அல்லலுறுகின்ற பல்லாயிரம் குடும்பங்கனின் துயரைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் இத்திட்டம் பெரிதும் உதவுமென எதிர்பார்க்கலாம்.

நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள 21,000; வீடுகளில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகனில் 3,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2009ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின்போது மேற்படி வீடமைப்புக்கென நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வீடமைப்பானது மலையக மக்களைப் பொறுத்தவரை பெரும் வரப்பிரசாதமென்றே கூற வேண்டும். பரம்பரை பரம்பரையாக ‘லயன்கள்’ என அழைக்கப்படும் வரிசை வீடுகனில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மக்கள் பலர் இவ்வீடமைப்புத் திட்டத்தினால் பெரும் நன்மையடையப் போகின்றனரென்பது உண்மை. வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மானிகையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதுளையில் 13 பேர் கைது

பதுளையில் கடந்த 08-09-2008 மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தலைமறைவாக இருந்த பாதுகாப்பு படையினர் ஒருவரும் அடங்குகிறார். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தமிழர்கள் எனினும் அவர்களிடம் தம்மை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்கள் இருக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையில் வாழ்க்கை செலவு புள்ளி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது அவர்களின் சம்பள உயர்வுடன் வாழ்க்கை செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் சேர்த்துக் கொள்ளுமாறு தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் வலியுறுத்த இருப்பதாக லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச்செயலாளரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தோட்டத் தொழிலாளரை வெகுவாக பாதித்துள்ளது. அவற்றை சமாளிக்க தொழிலாளர்களின் சம்பள முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டியதோடு வாழ்க்கைச் செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் இதில் உள்ளடக்க வேண்டும் என்றார்.

கூட்டு ஒப்பந்தத்தினால் தொழிலாளர்களுக்கு அநீதி – ரி. சென்னன்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் ரி. சென்னன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உழைக்கும் மக்களும் சிவில் சமூக அமைப்புக்களும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டும் இன்னும் இடம்பெயர்ந்தவர்களுக்கு பூரண நிவாரணம் கிடைக்கவில்லை. இந் நிலையில் வன்னியில் இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். யுத்தத்தின் மூலம் எந்த தரப்பு வெற்றி பெற்றாலும் பிரச்சினைக்கு முற்று முழுதாகத் தீர்வு காண முடியாது. தற்போது நடைபெறும் யுத்தம் வெளிநாடுகளுக்கிடையில் இடம்பெறுவதல்ல. மாறாக சகோதர்களுக்கிடையில் இடம் பெறும் மோதலை தவிர்க்கவும் சரியான தீர்வை காணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.