பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் சேமநலன்கள் தொடர் பாக தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மிடையே இரண்டு
வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்படு ம் கூட்டு ஒப்பந்தம் வரலாற்றில் முதல்
தடவையாக ஒன்பது மாதங்கள் கடந்தும் கைச்சாத்திட முடியாத நிலை இன்னும் தொடர்கிறது.
ஏனைய தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடாமல் புள்ளிவிபரச் சான்றுகளை ஆராயாமல்
தன்னிச்சையாக இ.தொ.கா. எடுத்த முடிவின் விளைவுதான் இந்தக் காலதாமதத்திற்கு
அடிப்படைக் காரணமாக அமைகின்றது. அன்று கம்பெனிகளுக்கு பெருந்தோட்டங்களை தாரை
வார்க்கும்போது இ.தொ.கா. வும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும்,
கூட்டுத்தொழிற்சங்கமும் வாழ்க்கைச் செலவுப் புள்ளியை நிறுத்த துணை போகாமல்
இருந்திருந்தால் இன்று தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம்
கிடைத்திருக்கும்.
2013 ம் ஆண்டு ஒரு அ.மெ டொலர் 90 ரூபாவிலிருந்து 140 ஆக கூடியுள்ளது.இதன் மூலம்
பணவீக்கமும், பணப்பெறுமதி குறைப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இன்று மக்களுடைய
வாழ்க்கைச்சுமை கூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
கூட்டு ஒப்பந்தம் பலவிதமான சம்பள முறையை உருவாக்கியுள்ளது.
தோட்டங்கள் தனியார் மயமாக்களின் பின்னர் வாழ்க்கைச் செலவுப் புள்ளியினை நிறுத்தி
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இச் சம்பள முறை
பின்பற்றப்பட்டு வருகின்றது.
1) அடிப்படைச் சம்பளம்
2) பெயரளவிலான சம்பளம்
3) கேள்விக்குட்படுத்தப்பட்ட சம்பளம்
அடிப்படைச் சம்பளம்
2001 தொடக்கம் 2009 வரையும் அடிப்படைச் சம்பளம் 33 வீதமாக கூட்டப்பட்டது. ஆனால்
2011 தொடக்கம் 2013 வரை இது 18 வீதமானது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது
இந்த 18 வீதமும் உண்மையான சம்பள உயர்வு அல்ல. இன்று அடிப்படைச் சம்பளமாக அரச
துறையில் 20086 +10000 வழங்கப்படுகின்றது. அதேபோல தனியார் துறையில் 9660 + 2500
ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆனாலும் தனியார் துறையினருக்கு இவ் அடிப்படைச் சம்பளம்
போதாது எனவும் 15000 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும் போராடுகின்றனர். ஆனால் தோட்ட
தொழிலாளர்கள் 20 நாட்கள் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளமும், 25 நாட்கள் வேலை
செய்தால் கிடைக்கும் சம்பளமும் பின்வருமாறு.
450 x 20 = 9000.00
450 x 25 = 11250.00
இதிலிருந்து தெரிவது என்னவெனில் ஏனைய தொழிலாளர்களை விட தோட்டத் தொழிலாளர்களுக்கு 66
வீதம் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. அடிப்படைச் சம்பளத்திற்கு மட்டும்தான் ஈ.பி.எப்,
ஈ.ரி.எப். வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் பின்போடப்பட்டு வருவது கம்பெனிகளுக்கே
ஆதாயமாகின்றது. புதிய ஒப்பந்தத்தில் கூட்டப்பட்ட தொகைக்கு ஊழியர் சேமலாப நிதியும்,
ஊழியர் நம்பிக்கை நிதியும் கிடைக்க வாய்ப்பில்லை. அதே சமயம் கூட்டப்பட்ட தொகை நிலுவை
மொத்தமாக கிடைக்கப்போவதில்லை. நிலுவைக்கான வட்டியும் சேர்க்கப்படப் போவதில்லை. இவை
கம்பெனிகளுக்கே இலாபத்தைக் கொடுக்கும்.
நிறை அதிகரிப்பு
1970ல் 14 இறாத்தல் கொழுந்து பறிக்கவேண்டும் என்றிருந்த நிலை படிப்படியாக 14
கிலோவாக மாறி இன்று ஒரு நாட்சம்பளத்திற்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. அதே சமயம் 3 முறை கொழுந்து நிறுக்கும்போது ஒவ்வொரு முறைக்கும் 2 கிலோ
வீதம் கழிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் 5 கிலோ கழிக்கப்படுகிறது. ஆகவே ஒருநாட்
சம்பளத்திற்கு தொழிலாளி ஒருவர் 24 கிலோ கொழுந்தெடுக்க வேண்டியுள்ளது.
24 கிலோ பச்சை கொழுந்து தேயிலையில் 6 கிலோ கறுப்புத் தேயிலை உற்பத்தி
செய்யப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ தேயிலை “டஸ்ட் நம்பர் 1” 600 ரூபாவாக
விற்கப்படுகிறது. அதனடிப்படையில் தொழிலாளியொருவர் நாளொன்றுக்கு ரூபா 3600
கம்பெனிகளுக்கு உழைத்துகொடுக்கிறார். சந்தையில் 50 கிராம் தேயிலைப் பொதி ஒன்றின்
விலை 55 ரூபாவாகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ தேயிலையின் விலை ரூபா 1100. பதனிடப்பட்ட
பச்சைத் தேயிலை ஒரு கிலோ 1000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. பெறுமதி சேர்க்கப்பட்ட
தேயிலை 1.8 கிராம் வீதம் பைகளுக்குள் அடைக்கப்படும்போது அதன் எடை 2 கிராமாக
மாறுகின்றது.-
20 பைகளை கொண்ட பெட்டியொன்றின் எடை 40 கிராமாக உள்ளது. இதன் சந்தை விலை ரூபா 150
ஆகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ (25 பெட்டிகள்) ரூபா 3750இற்கு விற்கப்படுகின்றது.
தேயிலை சிறிய பக்கெட் ஒன்று 10 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதன்மூலம் ஒரு கிலோ
தேயிலை ரூபா 5000இற்கு விற்கப்படுகின்றது. ஏலத்திலோ இடைத்தரகர்களோ இன்றி நேரிடையாக
தொழிற்சாலைகளிலும் தேயிலை இதே விலைகளின் அடிப்படையில் விற்கப்படுகின்றது.
இதனால் கம்பெனிகள் நோகாமலே இலாபம் பெறுகின்றனர் என்பதே உண்மையாகும். வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதியாகும்போது இதன் விலை 8 மடங்காக அதிகரிக்கின்றது. உற்பத்தியில் மட்டுமல்லாது
சந்தைப்படுத்தல், மதிப்புக்கூட்டல் என்ற தலங்களிலும் இதே கம்பெனிகள்தான் பின்னணியில்
இயங்குகின்றன. ஆகவே கம்பெனிகளுக்கு நட்டம் என்ற நிலை ஏற்பட வாய்ப்பேயில்லை.
தொழிலாளருக்கோ நுகர்வோருக்கோ எவ்வித இலாபமுமில்லை.
உள்நாட்டில் ஒரு தனிநபர் சராசரி வருடமொன்றிற்கு 1.33 கிலோ தேயிலையை நுகர்கின்றார்.
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியன் என எடுத்துக்கொண்டால் 279,300,000 (28 மில்லியன்)
கிலோ தேயிலை வருடமொன்றிற்கு விற்பனையாகின்றது. இதன்படி ஒரு கிலோ ரூபா 600 வீதம்
எதுவித வரியுமின்றி விற்கப்படுவதன் மூலம் வருடத்திற்கு 16.800 மில்லியன் ரூபா
வருவாயாக பெறப்படுகின்றது. மொத்த தேயிலை உற்பத்தியில் இது 10 வீதமும் இல்லை. மிகுதி
90 வீதமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
ஏற்றுமதி வருமானம்
2014ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.
இதில் தேயிலை மூலமாக 1.7 பில்லியன் அமெரிக்க டொலரும், 35 வீதம் இறப்பர் மூலம் 460
மில்லியன் அமெரிக்க டொலரும், 65வீதம் உள்நாட்டு தெங்கு பொருட்கள் மூலம் 538
மில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இதைத் தவிர குத்தகைக்கு
காணி வழங்கல், இரத்தினக்கல் அகழ்வதற்கு குத்தகைக்கு விடுதல், மரங்களை விற்பனை
செய்தல், போன்ற பல்வேறு வழிகளிலும் வருமானத்தை தேடுகின்றனர்.
அதுமட்டுமல்ல சாலை
ஓரங்களில் தேயிலை நிலையங்களை அமைத்து தேநீர், தேயிலை என வியாபார நடவடிக்கைகளிலும்
ஈடுபட்டுள்ளனர். இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்திலேயே தொழிலாளருக்கு சம்பளம்
வழங்கப்பட்டதாக ஒரு முகாமையாளர் கூறினார். ஆகவே நஷ்டத்தில் இயங்குகின்றோம் என்று
அங்கலாய்ப்பதில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
விடுமுறை நாட்கள்
இலங்கையில் கூடிய நாட்கள் வேலை செய்து குறைந்த சம்பளம் பெறும் ஒரு சமூகமொன்று
உள்ளதென்றால் அது மலையகத் தொழிலாளர்களேயாவர். வருடத்திற்கு 4 நாட்கள்தான்
சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படுகின்றது. இதைத் தவிர ஆகக்கூடிய வேலை
நாட்களுக்கு 17 நாட்கள் சம்பளத்துடன்கூடிய போனஸ் விடுமுறை வழங்கப்படுகின்றது. பொதுத்
துறையினருக்கு 171 நாட்கள் விடுமுறையும், தனியார் துறையினருக்கு 119 நாட்கள்
விடுமுறையும் மாதச் சம்பளத்துடன் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத்
தொழிலாளருக்கு ஆகக்கூடியது 21 நாட்கள்தான் சம்பளத்துடன்கூடிய விடுமுறை
உரித்தாகின்றது. 347 நாட்கள் வேலைக்கு செல்லும் கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. கடின
உழைப்பை பொறுத்தவரை ஒரு மனிதனால் 300 நாட்களுக்குகூட முழுமையாக ஈடுபட முடியாது.
ஒன்றரை நாட்சம்பளம்
ஒரு சில மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் போயா, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வேலை
வழங்கப்படுகின்றது. ஏனைய நாட்களில் 18 கிலோ பறிக்க வேண்டியவர்கள் இத்தினங்களில் 25
கிலோ கொழுந்தெடுக்கவேண்டும். எடை போடும்போது 6 கிலோ கழிக்கப்பட்டால் மொத்தம் 31 கிலோ
கொழுந்தெடுக்கவேண்டும். அடிப்படைச் சம்பளம் 450 உம் அதனுடன் அந்தச் சம்பளத்தின்
பாதியும் சேர்த்து ரூபா 675 கொடுக்கப்படுகின்றது. வேறு கொடுப்பனவுகள் இதனுடன்
சேர்க்கப்படுவதில்லை.
இந்த நாட்களில் இவர்கள் 7.75 கிலோ கறுப்புத் தேயிலையை
பெற்றுக்கொடுக்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்திற்கு ஒருவர் 4650 ரூபாவை
ஈட்டிக்கொடுக்கின்றார். மேதின போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட 8 மணித்தியால வேலை,
ஞாயிறு ஓய்வு போன்ற நன்மைகளை இழப்பது பற்றி தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். மே
தினத்தன்றும் வேலைக்குப் போவது அவர்களின் உரிமையை கேளிக்குள்ளாக்குகின்றது என்பது
பற்றியும் அவர்கள் சிந்திக்கவேண்டும்.
மேலதிக கொழுந்து
வருமானத்தை கூட்டுகின்றது என்ற எண்ணத்தில் மேலதிகமாக கொழுந்தெடுக்கும்
தொழிலாளருக்கு ஒன்று புரிய வேண்டும். வழக்கமாக பெயருக்கு எடுக்கும் கொழுந்துக்கு
(18 கி) ரூபா 620 கிடைக்கின்றது. அதன்படி ஒரு கிலோவிற்கு 34.4 ரூபா கிடைக்கின்றது.
மேலதிக கிலோவிற்கு ரூபா 20 கிடைக்கின்றது. இதனால் ஆதாயம் பெறுவது கம்பெனிகள்தான்.
உழைப்பு சூறையாடப்படுவதேயன்றி ஊதியம் அதிகரிப்பதில்லை. புதிய சம்பள ஒப்பந்தத்தில்
மேலதிக கிலோவிற்கு 40 ரூபா வழங்கப்படவேண்டும்.
ஒப்பந்தங்கள் தேவையா?
சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்வாங்கப்பட்டுள்ளது. 80
வீதமான தொழிலாளர்களால் இதைப் பெற முடிவதில்லை. இதனால் கம்பெனிகளுக்கே ஆதாயமாகும்.
அத்துடன் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படுவதில்லை.
இதனால் தொழிற்சங்க பிளவுகளும் அவற்றிற்கு இடையே முரண்பாடுகளும் ஏற்படும்.
தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துப்போகின்ற நிலைமைக்கும் இது
வித்திடுகிறது. ஆகவே இந்த தேவையற்ற அநீதியான முறைமையை தொடர்வது தொழிலாளர்களின்
உரிமையை பறிப்பதாகவேயிருக்கும்.
தொழிலாளர்கள் இன்று தங்களுக்கு 800 ரூபா அடிப்படைச் சம்பளமும் வாழ்க்கைச் செலவு
புள்ளியை மீண்டும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
இம்மாதத்திற்குள் இந்த கோரிக்கை உள்வாங்கப்பட்டு தீர்வுகாணப்படாவிட்டால்
போராட்டங்களில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இக்
கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் சம்பள ஒப்பந்தங்களுக்கு தேவையிருக்காது. விலைவாசி
உயரும்போது சம்பளமும் தானாக கூடும்.
அரசாங்கம்
நல்லாட்சி, வெளிப்படையான செயற்பாடுகள், கணக்கு காட்டுதல் எனக்கூறிவரும் அரசாங்கம்
பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினையில் தலையிட வேண்டும். ஆரம்பத்தில் 19
வீதமான தங்கள் பங்குகளை அரசாங்கம் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது 100
வீதமான பங்குகளை அநேகமான கம்பெனிகள் தம்மகத்தே வைத்துக்கொண்டுள்ளன என்பதுதான்
உண்மை. ஆகவே பெருந்தோட்ட சட்டபூர்வமான அதிகாரச் சபை ஒன்றை நிறுவி கம்கெனிகள் கூறும்
நட்டம் உண்மையானதா என்று ஆராய வேண்டும்.
இந்தக் கம்பெனிகள் தங்கள் அங்கத்துவ
கம்பெனிகளுக்கு கொடுக்கும் நிருவாக முகவர் கட்டணம் எவ்வளவு? உயர் மட்ட
அதிகாரிகளுக்கு கொடுக்கும் சலுகைகளும் (வாகனம், பங்களா,வெளிநாட்டுப்பயனங்கள்)
சம்பளமும் எவ்வளவு என்பது தொழிலாளருக்கத் தெரியாது. இவை உற்பத்திச் செலவில்
காட்டபபடுகின்றது. அதனால் உற்பத்திச் செலவு அதிகரித்தும் இலாபம் குறைக்கப்பட்டும்
காட்டப்படுகின்றது என்பதும் அவர்கள் அறியாத ஒன்று. குறுந்தோட்டத் தொழிலாளருக்கு
இந்தச் செலவுகள் எதுவுமில்லை.
அணுகுமுறையில் மாற்றம்
பெருந்தோட்டத்துறையை தக்கவைப்பதானால் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது
அவசியம். ஒரு குடும்பத்திற்கு 1ஹெக்டயர் வீதம் 35 வருட குத்தகை அடிப்படையில்
தேயிலைக் காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளை
உருவாக்கி அவற்றின் மூலமாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலமாக தற்போது ஒரு
ஹெக்டயருக்கு 1300 கிலோ உற்பத்தியை 3000ம் கிலோவாக அதிகரிக்க முடியும். வேற்றுக்
காணிகளில மாற்றுப் பயிர்களை பயிர் செய்ய முடியும்.
தனிப் பணப்பயிர் நாட்டில் கால
நிலை மாற்றத்துக்கு ஏதுவாகின்றது. அதுமட்டுமல்ல மேல் மண் அரிப்புக்கும்
வித்திடுகிறது. இதனால் பாரிய மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் தோன்றுகிறது. பாரிய
அளவில் பயன்படுத்தும் கிருமிநாசினிகள், இரசாயன கலவைகள் மண் வளத்தைக் குறைப்பதுடன்
நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றது. ஆகவே சிறு தோட்டங்களின் நிருவாக அமைப்பு
முறையை அமுல்படுத்தி சம்பளம் முதல் அனைத்து இயற்கை அனர்த்தங்களில் இருந்தும் விடுபட
முடியும்.
இது தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளருக்கு வழங்குவதும் கூட்டுறவு அமைப்பு
முறையில் பயிற்சி அளிப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது. நடைபெறவிருக்கும்
உள்ளுராட்சி தேர்தல் வரை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுத்தடிக்கப்படுேமா என்ற
கேள்வி எழுகிறது. அப்படி நடக்குமானால் தொழிலாளர் வெளியிடங்களுக்கு வேலைக்காக
செல்லும் நிலையில் அதிகரிப்பு ஏற்படும்.
ஒரு கால கட்டத்தில் வேலைக்கு ஆளே இல்லாத
நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் இதில் உடனடியாக
தலையிட்டு எதிர்வரும் மாத்திற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். முன்பிருந்தது
போல் முக்கூட்டு ஒப்பந்தமாக, தொழிலாளரின் அருமையையும் காணியின் பெருமையையும்
உணர்ந்த ஒப்பந்தமாக வெளிவர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
-அருட் தந்தை ச. கீத பொன்கலன்-
நன்றி- தினகரன் வாரமஞ்சரி