தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் பாதிப்பு
மாத்தளை அம்பதன்னை பிரதேச தோட்டங்களிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கமடுவ, மாகஸ்கந்த, கரக தென்னை, நாகல, லெகல ஆகிய தோட்டங்களில் இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு அங்கிருந்த தொழிற்சாலை உபகரணங்கள் யாவும் தோட்ட நிர்வாகங்களால் எடுத்துச் செல்லப்படுவதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இந்த தொழிற்சாலைகளில் தொழில் செய்த தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளதுடன் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது இந்த தோட்டங்களில், பறிக்கப்படும் கொழுந்துகள் யாவும் அருகில் உள்ள கெலாபொக்க தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தேயிலை கொழுந்துகள் பழுதடைவதாகவும் இந்த தேயிலை தொழிற்சாலைகளையும் மூடியுள்ளதால் இது இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு எனவும் தோட்டமக்களும் அங்கு கடமை புரிந்த உத்தியோகத்தர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மாற்று தொழில்களை யாவது பெற்றுத்தருவதற்கு தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment