தேர்தல் சீர்த்திருத்தங்களின் பாதிப்பிலிருந்து தமிழ்ப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு மலையக தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடுமா?
உத்தேச தேர்தல் முறையிலிருந்து தமிழ் அரசியல் பிரதேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முனைப்புகளில் மலையகத் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஒன்றுபட்டு இது தொடர்பில் இணக்கப்பாடு ஒன்று காணப்பட வேண்டும் என்ற நோக்கில் மலையகத் தமிழ்க் கட்சிகள் செயற்பட முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமை அடிப்படையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒருமித்த வலியுறுத்தல் தற்போது கட்சிகளுக்கிடையில் மேலோங்கியுள்ளது.
அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் மேலதிகமாக 5 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் எனப் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மலையக மக்கள் முன்னணியால் இந்தக் கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருவதாகக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளரும் ஊவா மாகாணசபை உறுப்பினருமான ஏ.அரவிந்குமார் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்படுகின்ற பிரதேச செயலகப் பிரிவுகள்,தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் கோரிக்கையின்படி பதுளை மாவட்டத்தில் உள்ள பசறை பிரதேசத்தில் மடுல்சீமை மற்றும் லுணுகலையை உள்ளடக்கியதாக ஒரு பிரதேச செயலகப் பிரிவும் நமுனுகலையில் உள்ள தமிழ்த் தோட்டப்பகுதிகளை ஒன்றிணைப்பதன் ஊடாகவும் ஹாலிஎல பிரதேச செயலகப்பிரிவை இரண்டாகப் பிரிப்பதன் ஊடாக இரண்டு பிரதேசசபைகளும் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், பண்டாரவளைக்கு அருகில் உள்ள பூனாகலை, கொஸ்லாந்தை போன்ற பகுதிகள் தனிப்பிரதேச செயலகப் பிரிவுகளாக மாற்றப்பட வேண்டும். அவற்றுடன் அப்புத்தளைப் பிரதேச செயலகப் பிரிவையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வாறு அமைகின்றன என அவரிடம் வினவப்பட்டபோது, பாரிய நிலப்பரப்பில் அதிகளவிலான மக்கள் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற நிலையில், புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படுவதில் சிக்கல் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் க.வேலாயுதம்,மடுல்சீமை,
லுணுகலையை உள்ளடக்கிய தனிப் பிரதேச செயலகப் பிரிவொன்று உருவாக்கப்பட
விருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், பண்டாரவளை மற்றும் அப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளிலும் புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுவதுடன், ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவு இரண்டாகப் பிரிக்கும் அளவுக்கு விசாலத் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் நமுனுகலை குறித்து எதுவும் கூற முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அரசாங்கம் புதிய தேர்தல் முறைமை ஒன்றை அமுல்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பதுளை மாத்திரமின்றி மலையகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராமசேவையாளர் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அத்தியாவசியமான விடயம் என வேலாயுதம் சுட்டிக் காட்டியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகப் பாரியளவில் பாதிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, புதிய நிர்வாக எல்லைகள் உருவாக்கப்பட வேண்டியதே தற்போதைய முக்கியமான தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்த ஊவா மாகாணசபை உறுப்பினர் ஏ.அரவிந்குமார், தற்போது அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறைமை மாற்றம் என்பன குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டு வருகின்றன. எனினும் அடிப்படையில் பொதுமக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அவர்களுக்கான நிர்வாக எல்லைகளை அதிகரிப்பது குறித்து உயர்மட்டங்கள் சிந்திக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை விடுத்து மேல் மட்டங்களில் கலந்துரையாடப்பட்டு ஒரு அரசியல் யாப்பினையோ அல்லது புதிய தேர்தல் முறைமையினையோ திடீரென அமுல்படுத்தும் பட்சத்தில் அது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது பொதுமக்கள் தயாராகாத நிலையில் அல்லது ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தாது புதிய தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவதனால் பல்வேறு சிக்கல்கள் தோன்றக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. புதிய முறை ஒன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும்போது அதனால் எந்தத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலான சூழ்நிலையை முன்னதாக உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உத்தேச தேர்தல் முறைமை அடிப்படையில் பாதக விளைவுகள் ஏற்படாத வகையில் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை அல்லது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைக்கு மலையக அரசியல் கட்சிகள் வந்துள்ளன. இதன்பொருட்டு நாளை 22 ஆம் திகதி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், முன்னதாக மலையக எல்லை நிர்வாகக் கட்டமைப்பில் புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்தும் பொருட்டு சிரேஷ்ட அரசியல்வாதி பி.பி.தேவராஜ் தலைமையில் குழுவொன்று செயல்பட்டு வந்தது.
இந்தக் குழு தற்போது தமது முழுமையான அறிக்கையைத் தயார் செய்துள்ளதாக பி.பி.தேவராஜ் தெரிவித்துள்ளார். எனவே, இந்த அறிக்கை மலையகக் கட்சிகள் சந்திக்கும்போது முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பி.பி.தேவராஜின் தலைமையிலான இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வு மற்றும் மீள் எல்லை நிர்ணயிப்பு யோசனைகளில் முக்கிய சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற 5 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மேலதிகமாக மேலும் 12 பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அங்கு புதிய நிர்வாக எல்லைகள் உருவாக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் தேர்தல் முறைமையினால் பாதிப்பு எவையும் ஏற்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஊவா மாகாணசபை உறுப்பினர் அரவிந்குமார் முன்வைத்த பதுளை மாவட்டத்தில் 5 மேலதிக பிரதேசசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்த பி.பி.தேவராஜ், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கூறினார். எனினும், இதற்கான சான்றுகள் மற்றும் சாத்தியப்பாடுகளுடன் எதிர்வரும் மலையகக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போது யோசனை முன்வைக்கப்படும்போது அது தொடர்பில் மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரமுகரும் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்,இந்தச் சந்திப்பின் பின்னர் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்திருப்பதாகத் தெரிவித்தார். பதுளை மாவட்டத்தையும் நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து புதிய தமிழ் மாகாணமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாக அமைந்துள்ளது. இது தொடர்பில் நாளை 22 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சிகளின் சந்திப்பின்போது எடுத்துரைத்து கலந்தாலோசிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஆலோசனை செய்யப்பட்டு இந்த விடயங்களும் உள்ளடக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இந்த யோசனையை மலையக மக்கள் முன்னணி முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு முன்வைத்ததாக மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் அ. லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த காலங்களில் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் அரசியல் திருத்த யோசனைகள் கோரப்பட்டபோது மலையக மக்கள் முன்னணி இந்தக் கோரிக்கையையும் முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு புதிய மாகாணமாக மாற்றப்படும் பட்சத்தில் அது இந்திய வம்சாவளி மக்களுக்கான தனி மாகாணமாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது உள்ள மாகாண, பிரதேச மற்றும் கிராமசேவகப் பிரிவு கட்டமைப்பின் அடிப்படையில் மலையக மக்கள் தமது அவசர தேவைகளுக்கும் தங்களுக்குரிய பிரதேச செயலாளரைச் சந்திப்பதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியதாக இருப்பதாக ஏ.லோரன்ஸ் தெரிவித்தார். அவர் வழங்கிய தகவல்படி இலங்கையிலுள்ள சுமார் 300 இற்கும் அதிகமான பிரதேச செயலகப் பிரிவுகளில் 40 சதவீதமானவை 50 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டவைகளாகவே காணப்படுகின்றன.
எனினும் நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தற்போதுள்ள ஒரு பிரதேச செயலகப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கு சராசரியாக இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச செயலகப்பிரிவு காணப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்தின் வாகரை பிரதேச செயலகப்பிரிவைப் பொறுத்தவரையில் அங்கு 8,000 மக்களே காணப்படுகின்றனர் என ஊவா மாகாணசபை உறுப்பினர் ஏ.அரவிந்குமார் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், வாகரைப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கிடையில் பகிரப்படுகின்ற வளங்களுக்கும் மலையகத்திலுள்ள பிரதேசசபை ஒன்றின் ஊடாகப் பகிரப்படுகின்ற வளத்துக்குமிடையில் பாரிய அளவு ரீதியான வேறுபாடுகள் அவதானிக்கப்படுகின்றன. இந்த நிலையில், கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளின் அபிவிருத்திகளை மலையகத்தில் எந்த அளவில் எதிர்பார்க்கலாம் என்பது கேள்விக்குறியாகிறது. இவ்வாறானதொரு நிலையில் மலையகத்தின் நிர்வாக எல்லைகள் புதிதாக வரையறுக்கப்படுவதும் புதிய எல்லைகள் உருவாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.
எவ்வாறாயினும் இதற்கான சாத்தியப்பாடுகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய மிக முக்கிய தேவையொன்று காணப்படுகிறது. இது தொடர்பில் கருத்துரைத்த மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அ.லோரன்ஸ்,கடந்த காலங்களில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு எண்ணிக்கையிலா பிரதேச செயலகப் பிரிவு அதிகரிப்புகளைக் கோரி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அது அரசாங்கத்தினால் பெரிதாகப் பரிசீலிக்கப்படவில்லை. குறிப்பாக மலையக மக்கள் முன்னணியினால் கடந்த காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 14 பிரதேசசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டுமெனக் கோருகின்ற அதேவேளை, எவ்வாறாயினும் இதற்கான சாத்தியப்பாடுகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய மிக முக்கிய தேவையொன்று காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலிய மாவட்டச் செயலாளர் டீ.பி.ஜே.குமாரசிறி அங்கு 10 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையீனம் அல்லது ஒரே பொது இணக்கப்பாடின்றி இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டபோது அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என லோரன்ஸ் தெரிவித்துள்ளார். எனினும். தற்போது அனைத்து மலையகக் கட்சிகளும் ஒன்றுகூடி இது தொடர்பில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் இந்தக் கோரிக்கை சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டே பி.பி.தேவராஜ் தலைமையிலான குழு புதிய நிர்வாக எல்லை வரையறைகளை மேற்கொண்டது. இவற்றுடன் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் லோரன்ஸ் வழங்கிய மற்றுமொரு தகவல் மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களை இணைத்து அல்லது பிரித்து மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மலையகத்தில் காணப்படுகின்ற பல தோட்டப்பகுதிகளில் உள்ளூராட்சி நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படுவதில்லை. இதன் காரணமாக தோட்டப்பகுதிகள் தனியான பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்படுவதன் ஊடாக அவர்களையும் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வாறு செய்தால் மாத்திரமே சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தைத் தேசிய அரசியல் நிர்வாக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்துசிவலிங்கம், இது தொடர்பில் உறுதியாக இல்லாதபட்சத்தில் மலையகத்தின் அரசியல் பிரவேசம் முற்றாக அழியும் அபாயமிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து வலியுறுத்தி வருவதாகவும் தற்போது அதனைச் சாத்தியப்படுத்த வேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில் அது நிலத்தொடர்பில்லாத இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பாக புவியியல் சாத்தியமற்ற மாகாண அல்லது மாவட்டக் கொள்கைகளை முன்வைக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தமது முன்னணி அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள இருமொழிக்கொள்கை என்ற அடிப்படையில் மொழி ரீதியான மற்றும் உப பிரதேச செயலகங்களை உருவாக்குவதைத் தாம் முன்மொழிவாகச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அவரிடம் கேட்டபோது; சோல்பரி யாப்பிற்கமைய 50 ஆயிரம் பேர் கொண்ட சிறுபான்மை மக்கள் குழுவொன்றுக்குப் பிரதேச செயலகப் பிரிவொன்றை உருவாக்கும் அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். இதனடிப்படையிலேயே பி.பி.தேவராஜின் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் வெறும் கோரிக்கைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் சாத்தியப்பாடுகளுடன் கூடிய உசிதமான நடவடிக்கையை எடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் எதிர்வரும் கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணி,ஜனநாயக மக்கள் முன்னணி,இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற கட்சிகள் கலந்து பேசவுள்ளன. இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அருள்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இவ்வாறு மலையகத்தில் தமிழ்ப் பிரதேசங்களை வேறுபடுத்தி புதிய மாகாணங்கள் அல்லது மாவட்டங்களை ஏற்படுத்துவது என்பது இன ரீதியான பிரிவினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் பலர் மத்தியில் நிலவுகிறது. அல்லது அவ்வாறு உருவாக்கப்படுகின்ற தமிழ்ப் பிரதேசங்கள் எதிர்காலத்தில் மேலும் புறக்கணிக்கப்பட்டுவிடுமோ என்ற கருத்தும் மேலோங்குகிறது. எனினும் இந்த நடவடிக்கைகள் அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்டமைவதால் புறக்கணிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால், அங்கு இனப்பிரிவினை ஏற்படலாம் என்ற கருத்து எஞ்சி நிற்கிறது. இது தொடர்பில் முன்னதாக கருத்துத் தெரிவித்திருந்த பி.பி.தேவராஜ், அதற்கான சூழ்நிலைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது தனியான தமிழ்த் தோட்டப்பகுதிகளை மாத்திரம் இதணத்து ஒரு கிராமசேவகப் பிரிவாகவோ அல்லது பிரதேச செயலகமாகவோ மாற்றாமல் அனைத்து இனங்களையும் கலந்து ஆனால், தமிழ்ப் பெரும்பான்மை,சிங்களப் பெரும்பான்மை ஆகிய உள்ளடக்கங்களுடன் கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்படும்போது இந்தச் சிக்கல் கலையப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது மாவட்ட மற்றும் மாகாண அலகுகளில் எவ்வாறு சாத்தியப்படும் என்பது குறித்து தெளிவற்று இருக்கிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான ஒருவர், நடைமுறைச்சாத்திய ரீதியாக அல்லது யதார்த்த ரீதியாகச் சிந்திக்கும் போது இது சாத்தியப்படுவதற்கான வாய்ப்பில்லையெனக் கூறியிருந்தார். மாவட்டங்கள் அல்லது மாகாணங்கள் தனித்தமிழர்களுக்காக உருவாக்க முற்படும்போது அதற்கு அரசாங்கம் எந்தளவில் ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டார். அத்துடன், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை இணைக்கும்போது சிங்கள மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்களை எங்கு சேர்ப்பது அல்லது எவ்வாறு ஒதுக்குவது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், எவ்வாறான ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல சிங்களவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கின்ற வகையிலான எந்த யோசனையையும் அரசாங்கம் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு தனியான மாகாணங்கள் அல்லது மாவட்டங்கள் பிரிக்கப்படும் பட்சத்தில் அது சிங்கள அரசியல் பிரவேசத்துக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்ற கோணத்திலேயே பார்க்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, யோசனை சமர்ப்பின்போது தமிழர்களுக்கு நன்மையான அதேவேளை, பெரும்பான்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தாத வகையில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு கட்டாயம் காணப்படுகிறது.
நன்றி- தினக்குரல்