Wednesday, April 29, 2009

இறக்குவானை முத்துமாரியம்மன் வருடாந்த உற்சவம் இனவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து இடைநிறுத்தம்

இனவாதிகளின் அச்சுறுத்தலால் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறித்து இறக்குவானை வாழ் இந்துக்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலய பரிபாலன சபையினர் வழமைபோல் இம்முறையும் வருடாந்த உற்சவத்தை நேற்று 28-04-2009-ம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்..இந்நிலையில், இப்பகுதி இனவாதிகள் இது சிங்கள நாடு, நாம் சொல்வதையே அனைத்து இன மக்களும் செய்ய வேண்டுமெனக்கூறியதுடன் இம்மாதம் வெசாக் மாதம் குறிப்பாக 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படுவதால் இக்காலப்பகுதியில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு விழாக்களையோ, தேர் திருவிழாக்களையோ நடாத்தக்கூடாதென்றும் அதையும் மீறி நடாத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமெனவும் எச்சரித்தனர்.
அத்துடன், கோயிலின் பரிபாலன சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கும் தொழிற் கூடங்களுக்கும் சென்று அச்சுறுத்தலும் விடுத்தனர். இது குறித்து இறக்குவானை பொலிஸில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கலந்துரையாடலொன்றுக்கு இரு தரப்பினரையும் (தலா 7 பேருக்கு மட்டும்) வருமாறு அழைப்பு விடுத்தார். கோயில் பரிபாலன சபையினர் 7 பேர் பிரசன்னமாகியிருக்க எதிர்;த்தரப்பில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர். இதனால், அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் இனவாதிகளுக்கு சாதகமாகவே அமைந்ததால் கோயில் நிர்வாக சபை இம்முறை திருவிழாவை இடைநிறுத்துவதென முடிவெடுத்தது.
இது குறித்து கோயில் நிர்வாகம் குழுவினருக்கும் அறிவித்தனர். இதனால், இவ்வருட கோயில் திருவிழா இடைநிறுத்தப்பட்டது. சுமார் 200 வருட வரலாறு கொண்ட இக்கோயிலில் இம்முறை மட்டுமே இனவாதிகளின் எதிர்ப்பினால் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பகுதியிலுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி போயா தினத்தில் மட்டும் தேரினை வெளியில் கொண்டுவரக்கூடாது அதுவும் பௌர்;ணமி தினத்தில் எவ்வித விழாக்களையும் நடாத்தக்கூடாதெனவும் ஏனைய நாட்களில் வழமைபோல் விழாவினை நடாத்தலாமெனவும் கூறியுள்ளார். எனினும், இனவாதிகள் இதற்கும் அனுமதிக்கவில்லையென இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தர் பிறந்து ஞானம் பெற்று பரிபூரணநிலை அடைந்த தினம்தான் வெசாக் போயாதினம். அன்றைய தினம் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இவ்வேளையில், இந்த ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவினை நடாத்த அனுமதிக்காதது பெரும் கவலையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி- தினக்குரல்
தோட்டப்பகுதிகளில் எல்லைப்புற காணிகளை வெளியார் ஆக்கிரமிப்பு

களுத்துறை மாவட்டத்தின் சில தோட்டங்களில் எல்லைப்புறங்களில் உள்ள காணிகளை பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் படிப்படியாக ஆக்கிரமிப்புச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யும் காணிகளில் தேயிலை, தென்னை, வாழை மற்றும் ஏனைய பயிச்செய்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலர் இக்காணிகளுக்கான உறுதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயம் பற்றி தெரிந்திருந்தபோதிலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேவேளை காலம் காலமாக தோட்டங்களின் அபிவிருத்திக்காக பாடுபட்டுவரும் தொழிலாளர்கள் தாம் வசித்து வரும் லயன் குடியிருப்புக்களில் மேலதிக வசதிகளை செய்து கொள்ளும் போதும், தற்காலிக குடிசைகள் அமைத்துக் கொள்ளும் போதும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக கெடுபிடிகளை மேற்கொள்வதுடன் வேலையிலிருந்து இடைநிறுத்தி நீதிமன்றம் வரை கொண்டு சென்று தொழிலாளர்களுக்கு பெரும் இக்கட்டான நிலைமையை தோட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
நிவாரணப் பொருட்கள் சேகரிக்க நுவரெலியா பிரதேச சபையில் தீர்மானம்

வன்னி மோதல் நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பதற்கு நுவரெலியா பிரதேச சபை தீhர்மானித்துள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார். நேற்று(28-04-2009) திங்கட்கிழமை இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபை அமர்வின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து சேகரிக்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
தொழிலாளர்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க மே தினத்தில் உறுதி கொள்வோம் - ஆறுமுகன் தொண்டமான்

மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அச் செய்தியில் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே தினத்தை இம்முறை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். மே தினம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், வேலை, நேர நிர்ணயம் இன்னும் பல உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுத்த வெற்றித் தினமாகும். மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் நம்பிக்கையுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் ஜீவாதார உரிமைகள் ஆகியவை தொடர்பாக பல திட்டங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். பொருளாதார நெருக்கடிகளால் நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளை இன்று மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள் இச்சமயத்தில் தொழிலாளர்களுடைய வாழ்க்கை சுமுகமாகவும் சீராகவும் அமைய வேண்டும் என்ற நோக்கில் புதிய பல திட்டங்களை வகுத்துள்ளோம். அதேவேளை. அரசுடனும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனும் இணைந்து எமது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றோம். இ.தொ.கா. ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. அதேபோல அவ்வப்போது அரசுகள் மூலமாக மலையக மக்களுக்கான கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்றி வந்துள்ளது.
இ.தொ.கா. காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற அதேவேளையில் தொடர்ந்து சமகால தேவைகளுக்கேற்பவும் சேவையாற்றி வந்துள்ளது. இன்று அரசுடன் இணைந்து எம்மக்களுக்கான பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றோம். மலையக சமூகம் பல்வேறு துறைகளில் துரிதமாக முன்னேறி வருகின்றது.
காலமாற்றத்திற்கேற்ப எமது தேவைகள் பெருகிவிட்டன. அதேவேளை, புதுப்புது கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்மாற்றங்களுக்கு எமது சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல இத் தொழிலாளர் தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது மே தினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழிலார்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடுவதன் மூலமே எமது தொழிற்சங்க உரிமைகளை பெற முடியும்.

மலையக தொழிற்சங்கங்கள் அரசியல் மயமாக்கப்படுவதால் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இதனால் தான் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு இன்றுவரை பெற்றுக் கொடுக்க முடியாத நிலை தொழிற் சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சருமான எஸ்.அருள்சாமி அக்கரப்பத்தனையில் தோட்ட தமிழ் தலைவர்களை சந்தித்து உரையாற்றும் போது தெரிவித்தார். தொழிற்சங்கவாதிகள் தங்களை அரசியலில் வளர்த்துக் கொள்வதாலும் தொழிற்சங்க போட்டிகளுக்கும், பணத்திற்காக விலைபோகும் படலமும் தொடர்வதாலே தொழிற்சங்க உரிமைகளை பெற முடியாமல் இருக்கின்றது என்றார். தொழிலார்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடுவதன் மூலமே எமது தொழிற்சங்க உரிமைகளை பெற முடியும். மாறாக அரசியல் மாயைகளுக்காக தொழிற்சங்கங்களை கூறு போடுவதால், தொழிற்சங்க போட்டிகள் வளருமே தவிர தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட மாட்டாது.