1931ம் ஆண்டு இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்
இலங்கையை தாயகமாகக் கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் வாழ்ந்து கல்வி, சொத்து, வருமானத் தகைமை கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து, மேலும் நிலையாக வசிக்கும் நோக்கமுடையோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழ் கொண்டோர் என்போருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இச் சட்டத்தால் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளரில் ஒரு பகுதியினர் வாக்களிக்கும் உரிமை பெற்றனர்.
1931இல் இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் தோட்டப்பகுதிகளில் கணிசமான அளவு அரசியல் பிரச்சாரம் நடைபெற்றது. எஸ்.பி. வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), பெரிசுந்தரம் (ஹட்டன்), ஆகிய இரு இந்திய வம்சாவழியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரி சுந்தரம் புதிய அரச கவுன்சிலில் (ஸ்டேட் கவுன்சில்) தொழில், கைத்தொழில் வர்த்தக மந்திரியானார். 1936 இல் இந்திய வாக்காளர்களின் தொகை 1,45,000 ஆக உயர்ந்தபோது தோட்டப்பகுதியில் அரசியல் குழப்பம் புதுப்பிக்கப்பட்டது. 1936ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரு இந்தியர்களான எஸ்.பி வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), கே. நடேச ஐயர் (ஹட்டன்) ஆகிய இரு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐந்து வருடத்துக்கொரு முறை பொதுத் தேர்தல் நடப்பதால் 1941ஆம் ஆண்டு தேர்தலுக்காக மிகுந்த தயாரிப்புகள் இடம் பெற்றன. (ஆனால் இரண்டாம் உலகப் போரினால் இது பின் போடப்பட்டது) இவ்வாண்டில் இந்திய வாக்காளர் தொகை 2,25,000 ஆக உயர்ந்தது. தோட்டத்துறையில் தேர்தல் உற்சாகம் பரவியதும், 1939க்குப் பின்னர் பரவிய தொழிற்சங்க ஆதரவும் அரசியல் விழிப்புக்கு வழிகோலியது.
-இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்- குமாரி ஜெயவர்த்தனா-
தோட்டப்புற வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை, மருந்துகளுக்கு தட்டுப்பாடு
மலையக தோட்டப்புற வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. பயிற்சி பெற்ற வைத்தியர்களோ, அல்லது தாதியர்களோ இங்கு இருப்பதில்லை. ஒரு சில வைத்தியசாலைகள் தங்குமிட வசதியுடன் காணப்படுகின்ற போதிலும் ஏனையவை உரிய சுகாதார வசதிகளுமற்ற, படுக்கையறை வசதிகள், மலசலகூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன இல்லா நிரையே காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மருந்துக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏல்லா நோய்களுக்கும் ஒரே விதமான மருந்துகளே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியினால் தனியார் மருந்துசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை. தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க உள்ளதாக கடந்த தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் முறையாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை
மாத்தளை ரத்வத்தை- பன்சல தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவதால் தொழிலாளர்கள் வெலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இ.தொ.கா பிரதிநிதி தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் தற்போது மீண்டும் வாரத்தில் மூன்று நாட்களே வேலை வழங்குவதால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்க போவதாக தெரிவிக்கின்றனர்.