பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆ. முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி, மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயத்தினை அதி முக்கிய கோரிக்கையாக முன்வைத்து மலையக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தங்கை கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் எத்தகைய தயக்கத்தினை காட்டாமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசும் தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் பாகுபாட்டையும் புறக்கணிப்பையுமே மேற்கொண்டு வந்திருக்கின்றது. இந்த நாட்டின் மேம்பாடுகளை கருத்திற்கொண்டு பெருமளவிலான அந்நிய செலாவணியை தோட்டத் தொழிலாளர்களே பெற்றுக்கொடுத்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு உரிய இடத்தை இந்த நாட்டை ஆட்சி செய்த அரசுகள் வழங்கவில்லை.
அண்மைக்காலமாக ஏழு பேர்ச் விஸ்தீரணமுள்ள காணியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போதும் அவ்வீடுகளுக்கான உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்பிரச்சினை தொடர் கதையாக நீண்டு செல்கிறது.
கடந்த வருடம் ஜனாதிபதியினால் முன்ழொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மலையகப் பெருந்தோட்டங்களின் 35 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியினால் கூறப்பட்டது.
இந்த விடயமாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்கு சமர்ப்பித்த மகஜரில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குல நிலம் தானும் சொந்தமாக இல்லாதுள்ளது. ஆகையினால் பகிர்ந்தளிக்கப்படும் தரிசு நிலங்களில் தோட்டத் தொழிலாளர்களையே உள்ளடக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கின்றோம்.
கடந்த மத்திய மாமகாண சபைத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி காணி மற்றும் வீட்டுரிமை விடயத்தில் தோட்டத் தொழி;லாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென்று தனது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றி வைக்கும் வகையில் நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் தமது வாக்குகளினால் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர்.
பெருந்தோட்டங்களின் எதிர்காலம் கேள்விகுறியாக இருக்கும் இவ்வேளையில் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுரிமை கோரிக்கையானது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
ஆகையினால் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கவாதிகள் அனைவரும் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு பூரண அழுத்தங்களை கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்ட அறிக்கையில் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயம் உள்ளடக்கப்படல் வேண்டும். ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியில் பங்காளிகளாக இருக்கும் மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் மேற்படி விடயங்கள் தொடர்பாக கூடிய அக்கறை காட்ட வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும் என்றார்.