பெருந்தோட்டக் கம்பனிகள், பெருந்தோட்ட தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்ற நாடோடிகளாக்குவதற்கான திட்டங்களை முன்வைத்து செயற்படுகின்ற போது அந்த ஆபத்திலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் திட்டங்களை பற்றி சிந்திக்காது தொழிலாளர்களின் ஐக்கியத்தை கூறுபோடும் இ.தொ.கா.வும் அதற்கு எதிரான தமிழ் முற்போக்கு அணியினரும் ஏட்டிக்கு போட்டியாக சத்தியாகிரக போராட்டங்கள் என முன்னெடுக்கும் கோமாளித்தனத்தை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் வழமையை விட இம்முறை கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முரண்பட்டும் பிளவுபட்டு கொண்டும் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இ.தொ.கா. அதன் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைக்க தள்ளப்பட்டது. எனினும் அச்சம்பள கோரிக்கை நியாயமானது.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அக்கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே ஐ.தே.க. சார்பு தொழிற்சங்கங்களும் மற்றும் ஜே.வி.பி. தொழிற்சங்கமும் முன்னெடுத்து வந்தன. பேரப்பேச்சில் பங்கெடுக்கும் இ.தொ.கா, இ.தே.தொ.ச மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பற்றுடன் கலந்துரையாடாமல் 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்ததும் அக்கோரிக்கைக்கு பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்காததையடுத்து இந்த இரு தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்துரையாடாமல் பேச்சுவார்த்தையில் இருந்து தான்தோன்றித்தனமாக வெளியேறியதும்; தவறானது.
1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களின் வாக்குகளை பெற செயற்படுவதும் திட்டமிடப்படாத போராட்ட வழிமுறைகளை மக்கள் மீது திணிப்பதும் சம்பள உயர்வை பெற்று கொள்வதற்கான நேர்மையான அணுகுமுறையாகாது. இருப்பினும் இ.தே.தொ.ச., பெ.கூ.தொ.நிலையமும் ஏனைய ஐ.தோ.க. சார்பு தொழிற்சங்கங்களும் 1000 கோரிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றமையை அங்கீகரிக்க முடியாது.
தோட்டக் கம்பனிகள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கம்பனிகள் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றனதென முன்வைத்த வாதத்தை எமது தொழிற்சங்கம் பாரம்பரிய தொழிற்சங்க நடைமுறையை கடந்து விஞ்ஞானபூர்மாக முறியடித்துள்ளது. ரூபா 1000 நாட் சம்பள கோரிக்கை நியாயமானது என்பதையும் நிரூபித்துள்ளது.
இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு 03 நாட்களுக்கு மட்டுமே நாட் சம்பளத்தை வழங்க முடியும், ஏனைய நாட்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துக்கும், வெட்டப்படும் இறப்பர் பாலுக்கும் ஏற்ப கூலி வழங்கப்பட முடியும் என்று முன்மொழிவுகள் தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்றவர்களாக்கி நாடோடிகளாக நடுத்தெருவில் விடுவதற்கான சதியாகும்.
இவ்வாறான சதிகளில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை பாதுகாத்து அவர்களுக்குரிய தொழிலையும் நியாயமான சம்பளத்தையும் உறுதி செய்ய வேண்டியது பொறுப்புமிக்க தொழிற்சங்கங்களினதும் அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும். இப் பாரிய பொறுப்புகளில் இருந்து விலகி தொழிலாளர்களின் வாக்குகளை மட்டும் பெறுவதை மட்டும் நோக்காக கொண்டு தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் நோக்கிலும் பாராளுமன்ற தேர்தலை மையமாக கொண்டு ஏட்டிக் போட்டியாக இ.தொ.க. மற்றும் அதற்கு எதிரான ஐ.தோ.க. சார்பு தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரக போராட்டங்களை நடத்துவது கபடத்தனமானதும் கோமாளித்தமானதுமாகும்.
சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதற்காக தொழிலார்களின் ஒரு சாரார் இன்னொடு சாராருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது என்பது தொழிலாளர்களை தவறாக வழிநடத்துவதாகும். இ.தொ.கா. நடத்தும் போராட்டத்திற்கு எதிராக ஏனைய அமைப்புகள் போராட்டம் நடத்துவதும் ஏனைய அமைப்புகளுக்கு எதிராக இ.தொ.கா. போராட்டம் நடத்துவதும் தொழிலாளர் விரோத நிலைப்பாடாகும்.
எனவே தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவும் பெருந்தோட்ட கம்பனிகளின் சதிகளில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கவும் தொழிலாளர்களை உள்ளடக்கிய பரந்துப்பட்ட கலந்துரையாடலை செய்து பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்படுவதே சரியான வழிமுறையாகும்.