Thursday, April 29, 2010

தொழிலாளர்களின் உரிமைகளை பெற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

உலகத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து போராடி பெற்ற உரிமைகளை பெறுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகச் செயலாளர் எஸ். ஜோதிவேல் விடுத்துள்ள மேதின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்களுடன் தோட்டக் கம்பனிகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கம்பனிகள் நேர்மையாகப் பின்பற்றுவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. தொழிலாளர்களின் குமுறல் இல்லாதொழிக்கப்படுகிறது. அடுத்த ஒப்பந்தம் வரை தொழிற்சங்கங்கள் மௌனித்து போகின்றன.

இனிவரும் காலங்களில் கம்பனிகளுடன் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தம் கூட்டு ஒப்பந்தத்திற்கு மாறாக செயற்படும் கம்பனிகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூலம் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

இதற்காக தொழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்கள் பாரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும். தோட்ட உத்தியோகத்தர்களுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று வீட்டு வசதிகளுக்கான நிவாரணமும் பெற்றுக் கொடுக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைப்பதில் வலுசேர்க்க முடியாவிடில் மீண்டும் சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வழி செய்வதுடன் காலத்துக்குக் காலம் ஏற்படும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப மாற்றம் செய்யவும் நிர்ப்பந்திக்கவும் போராட்டங்களில் ஈடுபட்டு தொழிற்சங்கங்களை விழிப்புறும் நிலைக்கு தொழிலாளர் சக்தி இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.