Monday, July 19, 2010

மலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்!

மலையகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் கொழும்பில் அநியாயமாக உயிரிழந்துள்ளார். தோட்டப் பிரதேசங்களிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்குச் செல்கின்ற பெண்கள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இப்பரிதாபத்தின் தொடர்ச்சியானதொரு சம்பவமாகவே கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ள மர்ம மரணமும் அமைந்துள்ளது.

கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள தொடர் மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இம் மரணத்துக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இன்னுமே உறுதி செய்யப்படவில்லை. இப்பெண்ணின் மரணம் மர்மமாகவே உள்ளது. இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது.

இம் மரணம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் வீட்டு எஜமானியும் அவரது தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னரே இப்பெண்ணின் மரணத்துக்கான காரணத்தை சரிவரக் கூற முடியுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செல்வந்த வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்ற மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் இன்று நேற்று உருவானதல்ல.... இப்பரிதாபமானது அக்காலம் தொட்டு நிலவி வருகிறது. பெரும் பாலும் சிறுவயது யுவதிகளே இத்தகைய அவலத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.

கொழும்பு நகரத்தை எடுத்துக்கொண்டால் இங்கு செல்வந்த வீடுகள் பெரும்பாலானவற்றில் மலையகத்தைச் சேர்ந்த சிறு பெண்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாத்திரமே மனிதாபி மானமுள்ள எஜமானர்கள் கிடைக்கின்றனர்.

ஏனையோர் மிகவும் துன்பப்படுகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை வாங்கப்படும் அவலத்தை பலர் எதிர் கொள்கின்றனர். விடுமுறையென்பது இவர்களுக்குக் கிடையாது. போதிய வேதனம் பலருக்கு இல்லை. இடையிடையே வீட்டுக்குச் சென்று வர விடுமுறை வழங்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருத்தியாக நின்று செய்ய வேண்டிய கொடுமைக்கு சின்னஞ்சிறு பெண்கள் உள்ளாகின்றனர்.

இந்த அநீதிகளுக்கு அப்பால் ஒரு சில பெண்களுக்கு மற்றொரு கொடுமையும் இழைக்கப்படுவதாக அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளைப் பார்க்கிறோம். பணிப்பெண்களாக வேலை செய்யும் சிறுமியர் மற்றும் யுவதிகளுக்கு உடல் ரீதியான இம்சைகள் அளிக்கப்படும் சம்பவங்கள் சில வீடுகளில் இடம்பெறுகின்றன.

கடுமையான முறையில் அடித்துத் துன்புறுத்துதல், பாலியல் ரீதியில் பலவந்தப்படுத்துதல் போன்ற கொடுமைகளை சில பெண்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றுக்கும் அப்பால் ஒருசில யுவதிகள் கொல்லப்பட்ட பரிதாப சம்பவங்களையும் நாம் அறிந்துள் ளோம். இது போன்ற மனதை உருக்கும் பரிதாபங்களுக்கு மலை யக யுவதிகள் உள்ளாவது உண்மையிலேயே வேதனை தருகிறது.

இந்தச் சமூக அநீதிக்கு அடிப்படைக் காரணம் வறுமையாகும். குடும்ப வறுமையின் நிமித்தம் சிறு வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக செல்வந்த வீடுகளுக்கு வேலைக்கு வருகின்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியை இனிமேலும் அனுமதித்துக் கொண்டிருக்கலாகாது. வறுமையைக் காரணம் காட்டி எத்தனை காலத்துக்குத்தான் இக்கொடுமையைப் பொறுத்துக் கொண்டிருப்பது!

உண்மையில் கூறப்போனால் இந்தப் பரிதாபத்துக்கான அடிப்படைச் சூத்திரதாரிகளென குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் பெற்றோர் தான். அவர்கள்தான் தங்களது பிள்ளைகளை செல்வந்த வீடுகளில் வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் வறுமை!

பணம் ஈட்ட வேண்டுமென்பதற்காக தங்களது சின்னஞ்சிறு பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதை ஈவிரக்கமற்ற செயலென பெற்றோர் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்நெஞ்சம் படைத்தோரால் மட்டுமே இது முடியும்.

குழந்தையொன்று பிறந்ததிலிருந்து அதனை வளர்த்து, கல்வி ஊட்டி ஆளாக்குவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்குரிய மேற்படி வசதி வாய்ப்புகளை வழங்கத் தவறுவது அடிப்படை உரிமை மீறலாகும். ஆனாலும் இவற்றையெல்லாம் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் பலர் கருத்தில் கொள்வதில்லை. இதற்குக் காரணம் தோட்டப் பகுதி குடும்பங்களில் நிலவும் வறுமை மட்டுமன்றி மதுபானப் பழக்கமும் தான்....

மலையகத் தோட்டங்களில் மதுவுக்கு அடிமையான பெற்றோரே பெரும்பாலும் தங்களது பிள்ளைகளை பணிப்பெண் வேலைக்கு அனுப்புகின்றனர். இது ஒருபுறமிருக்க செல்வந்த வீடுகளில் மலையக யுவதிகளை வேலைக்கென ஒழுங்கு செய்து கொடுக்கும் செயலில் தரகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. இதுவொரு சமூகப் பிரச்சினையென்பதை மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மலையக தொழிற்சங்கங்களுக்கு உண்டு. மக்கள் பிரதிநிதிகளான தொழிற்சங்கத் தலைவர் கள் மனிதாபிமானத்தின் பேரில் இந்த அவலத்துக்கு முடிவு காண முன்வர வேண்டும்.

நன்றி- தினகரன்

இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனி மாகாணம் : ஜனநாயக மக்கள் முன்னணி

இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பதுளை மாவட்டத்தையும், நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலையக தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின் போது முன் வைக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் அதனை அரசிடம் முன் வைக்கவுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. மேலும்


இவ்வாறு உருவாக்கப்படும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை போல இது மலையக தமிழ் மக்களுக்கான தனி மாகாணமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தில் தனியான மாகாண சபை, பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படுவதன் ஊடாக மலைய தமிழ் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என முன்னணின் பா.உ பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக்கும் திட்டத்தை முதன் முதலில் மலையக மக்கள் முன்னணி கடந்த 1994ம் ஆண்டு முன்வைத்தது.

கட்சியின் உபத்தலைவர் அ. லோரன்ஸின் தகவல்படி, இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்த அரசியல் திருத்த யோசனைகளின் போதும் தமது கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அனுமதி கிடைக்கப்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கு கிடைக்கின்ற சிறந்த வரப்பிரசாதமாக அது அமையும் என அ.லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியாவில் அடை மழை, மண்சரிவு அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கினிகத்தேனை, நோட்டன், மஸ்கெலியா, வட்டவளை போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தப் பிரதேசத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நகரிலுள்ள அம்பகமுவ பிரதேச சபை பணிமனைக்குச் செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியின் மண்திட்டொன்று சரிந்து அட்டன் கினிகத்தேனை பிரதான வீதியின் ஒருபகுதியில் விழுந்துள்ளது. எனவே பிரதேச மக்கள் மிக அவதானமாக இருக்கும்படி பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாகப் பெய்து வருகின்ற அடைமழையினால் காசல்ரீ, மவுசாகலை, கனியன், விமலசுரேந்திரபுர, பொல்பிட்டிய போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றதோடு நுவரெலியா மாவட்டத்திலுள்ள லக்ஷபான, டெவன், சென்கிளாயர், றம்பொடை போன்ற நீர் வீழ்ச்சிகளிலும் நீர்ப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இம் மாவட்டத்தில்
சீரற்ற காலநிலை நிலவுவதால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்களும் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதேவேளை, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இதன் வான்கதவுகளை எந்த நேரமும் திறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளிலும் ஆற்றோரங்களிலும் வாழுகின்றவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கொத்மலை நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் எல்.எம்.ஜி.விஜேசேகர அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற கால நிலையைத் தொடர்ந்து காலை வேளையிலும் மாலை வேளையிலும் மேக மூட்டம் ஏற்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாணவி தற்கொலையைத் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்கள் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். போராட்டத்தைத் தொடர்ந்து கற்பித்தல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கொட்டாஞ்சேனை வீடொன்றில் மலையகயுவதி மர்மகொலை

கொழும்பு கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள ‘கோல்டன் ரெசிடன்ற்ஸ்’ அடுக்கு மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பதுளை, நமுனுகல, கலுகல்ல தோட்டப்பிரிவைச் சேர்ந்த வெள்ளச்சாமி சீதா ஹெலன் ராணி(37) மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ள போதும் அப் பெண் தாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால் வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் கைது செய்யபட்டுள்ளனர்.

கொழும்பில் இவ்வாறு பணிப்பெண்ணாக பணிபுரிந்த பல மலையக பெண்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்