Sunday, July 5, 2015

துன்பப்படும் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது

கடந்த 30 ஆண்டுகளாக எமது இரத்த உறவுகள் இந்த மண்ணிலே அதிக துன்பங்களோடு வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எமது இரத்தம் கூட சில நேரத்தில் அழுகிறது. இந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் எப்போதும் தயாராக உள்ளோம் என  யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் யாழ். நுண்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தர்ஷனனின்  நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக் கல்வி நூல் வெளியீட்டு விழா நுண்கலைக்கழக இசைத்துறைக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே  இலங்கைக்கு வர வேண்டும்  ஆசை இருந்தது. அந்தக் கனவு நிறைவேறிவிட்டது. இந்திய அரசாங்கம் அப்படியொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. இலங்கை வந்து கண்டியில் 3 ஆண்டுகள் துணைத்தூதுவராக கடமையாற்றினேன்.  இந்திய அரசாங்கம் என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய பிறகு எனது ஒட்டுமொத்த கனவு நிறைவேறிவிட்டது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்து தமிழ் மொழியில்தான் உயிரும் சிறந்த மொழிநடை பிரயோகமும் உள்ளதென இந்தியாவில் பொதுவாக கூறுவார்கள். 

மலையகத்திலும் தமிழ்மொழி பேசுகிறார்கள் ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் இலக்கியம் சார்ந்து மொழிநடை உள்ளது. இந்தியாவின் கலைகள் இலங்கையில் வளர்கின்றதென்றால் எங்கள் உடன்பிறப்புகள் அதை விரும்பி கற்கிறார்கள். இதை நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன்.  கலை, கலாசாரம் இங்கு நன்கு வளர்ந்து வருகிறது. இனியும் வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நூலை எழுதிய கலாநிதி ஸ்ரீ தர்சனனுக்கும் அவரது பாரியாருக்கும் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

இராமநாதன் நுண்கலைக்கழகத்துக்கு இன்று தான் நான் முதல்தடவையாக வருகின்றேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது, எவ்வளவு மாணவர்கள் கலைகள் தொடர்பான பாடங்களை விரும்பிக் கற்கிறார்கள் என்று. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தகுதியான மாணவர்களுக்கு இந்தியா புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு எப்போதுமே தயாராக இருக்கிறது என்றார்.