அன்று காலை 7.35 மணியிருக்கும். ஹல்தமுல்ல பிரதேச
செயலகத்துக்குட்பட்ட மீரியபெத்த தோட்டம் காலை நேரத்துக்கே உரிய
பரபரப்பில் இருந்தது. பிள்ளைகள் பாடசாலை சென்று இருந்தனர்.
பெரியவர்கள் பணிக்கு செல்ல ஆயத்தமாக இருந்தனர். அந்தோ பரிதாபம்.
பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டு மீரியபெத்த என்ற
கிராமத்தையே அழித்தது. பிள்ளைகள் கதறி அழுதுகொண்டு ஓடினர். எங்குமே
மரண ஓலங்கள் கேட்டன. பலர் மண்ணில் புதையுண்டனர். சிலர் கழுத்துவரை
மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்டனர். ஆம் 37 உயிர்களை இந்த
மண்சரிவு காவு கொண்டதுடன் 75 வீடுகளும் கால்நடைகளும் மண்ணோடு
புதைந்து போயின. முழு உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த
சம்பவம் மீரியபெத்த மண்சரிவு என்று பதிவாகியது. 2014 ஆம் ஆண்டு
ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்றது இந்த அனர்த்தம்.
அரசியல் பிரமுகர்கள், ஏனைய தலைவர்கள் என பலர் சொகுசு வாகனங்களில்
தொடரணியாக அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பரிதாபப்
பட்டனர். நலன் விசாரித்தனர். ஆறுதல் கூறினர். ஆணித்தரமாக
வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். ஏட்டிக்குப் போட்டியாக அடிக்கல்
நாட்டினார்கள். ஆனால் அவ்விடத்தில் இருந்து சென்றவர்கள் தான்...
இதுவரை அங்கு மீண்டும் செல்லவும் இல்லை. கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றவும் இல்லை. ஒன்றுமே நடந்தேறவும் இல்லை. அன்றைய சோகம்
இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அனர்த்தம் இடம்பெற்று ஒரு வருடமாவதற்கு இன்னும் ஐந்து நாட்களே
உள்ளன. முழு உலகையுமே திரும்பிப்பார்க்க வைத்த அந்த இயற்கையின்
பேரனர்த்தம் பல விடயங்களை வெளியில் கொண்டு வந்தது. பதுளை
மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத்
தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த முழுக் கிராமமே மண்ணுக்குள்
புதையுண்டு போனது.
மீரியபெத்தை என்ற பெயர் மாத்திரமே எஞ்சியிருக்க அந்த இடமே
இருந்ததற்கான அறிகுறியும் மண்சரிவு ஏற்பட்டதற்கான தன்மையும்
இல்லாமல் போயுள்ளது.
ஆனால் மண்சரிவில் தனது உடன்பிறப்புகள், உடமைகள், சொந்தங்களை இழந்த
அந்த உறவுகளின் சோக வாழ்க்கை, 'முகாம்' என்ற பெயரில் உள்ள 200 வருட
பழைமையான நான்கு மாடிகளைக் கொண்ட காற்று உட்புகாத பல ஓட்டைகளைக்
கொண்ட தேயிலை தொழிற்சாலையில், எட்டு தர பத்தடி ( 8 X10) அறைக்குள்
ஏமாற்றம், துன்பங்கள், துயரங்கள் நிறைந்த சோகம் நிறைந்ததாக
தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னர்,
இலங்கையில் பல உயிர்களைக் காவுகொண்டு பாரிய அழிவுகளை
ஏற்படுத்தியது இந்த இயற்கை அனர்த்தம். இரத்தத்தை வியர்வையாக சிந்தி
அவர்கள் நேசித்த மண்ணே 37 பேரை உயிருடன் விழுங்கிக்கொண்டது.
சிலர் சடலங்களாகவும் சிலர் சிதைந்த மனித உறுப்புக்களாகவும்
மீட்கப்பட்டனர். மரண ஓலம் மாத்திரமே மிஞ்சியது. மீரியபெத்த
மக்களின் வாழ்வில் விடியல் ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தைகள்,
இளைஞர்கள், யுவதிகள் தாய் தந்தையர்கள் என பலரின் ஆத்மாக்கள் இன்னமும்
மண்ணுக்குள் புலம்பிகொண்டிருக்கின்ற போதிலும் இன்னமும்
அவர்களின் விடிவு கேள்விக்குறியாகவே உள்ளது.
காலம் மாறிவிட்டது. ஆனால் அன்று மீரியபெத்த மக்களுக்கு ஏற்பட்ட
துன்ப துயரத்துக்கு இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த உலகம்
விசித்திரமானது. உலகில் அடிக்கடி இடம்பெறும் நிகழ்வுகளும்
விசித்திரமானதாகவே அமைந்து விடுகின்றன. இதுதான் நியதிபோல்
தெரிகின்றது. அதுபோலவே ஒரு வருடமாகியும் இந்த மக்களின் அடிப்படை
தேவை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மீரியபெத்த
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட சுமார் 75 குடும்பங்களுக்கும் இதுவரை
வீடுகள் நிர்மாணித்து கொடுக்கவில்லை என்பதே இங்கு மிக முக்கியமான
விடயமாக காணப்படுகின்றது. யாரையும் குறை கூறுவதற்கு நாம்
விழையவில்லை. ஆனால் அந்த மக்களுக்கு ஒரு வருடகாலத்தில் 75 வீடுகளை
நிர்மாணித்து கொடுக்கவில்லையா என்ற கேள்வியை மட்டும்
எழுப்புகின்றோம். (முகாமில் 93 குடும்பங்கள் இருப்பதாக
அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்)
வீடுகளை இழந்த சுமார் 93 குடும்பங்கள் 3 மாதகால பாடசாலை முகாம்
வாழ்க்கைக்கு பின்னர் மாகந்த தேயிலை தொழிற்சாலையில் 53 அறைகளில் தங்க
வைக்கப்பட்டனர்... இன்னும் அங்கேயே உள்ளனர். இந்நிலையில் அவர்கள்
எதிர்கொள்கின்ற துயரங்கள் குறித்து ஆராய்வதற்கு நாம் நேரடியாகவே
அந்த தொழிற்சாலைக்கு சென்றோம்.
தொழிற்சாலைக்கு உட்பிரவேசிக்கும்போதே எமக்கு அதிர்ச்சிதரும் பல
நிகழ்வுகளை எதிர்கொண்டோம். தொழிற்சாலையின் கீழ் தளத்தில் 53 அறைகள்
உருவாக்கப்பட்டுள்ளன. 10X8 அடி பரப்பளவு கொண்ட ஒரு அறையில் எட்டு
பேர், ஏழு பேர், ஐந்து பேர் என சொல்லொணா துயரங்களுடன் வாழ்ந்து
வருகின்றனர். ஒரு அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களும்
வாழ்கின்றன. முகாமுக்குள் பிரவேசித்ததும் மின்சார
வெளிச்சத்திலும் முகாம் இருளாக காட்சியளித்ததை உணர்ந்தோம்.
ஒருவேளை அங்கு தங்கியுள்ள மக்களின் மன வேதனையால் அந்த மக்களின்
முகங்களில் காணப்பட்ட சோக உணர்வு எமக்கு இந்த இருள் மயமான தோற்றத்தை
காட்டியிருக்கலாம். (10X8) அறையில் எட்டு பேர் சமைத்து சாப்பிட்டு
படுத்துறங்குவது என்பது சாத்தியமா?
இளைஞர் யுவதிகளுடன் பிள்ளைகளுடன் புதிதாக திருமணம் முடித்த
தம்பதிகளையும் வைத்துகொண்டு ஒருசில குடும்பங்கள் எதிர்கொள்ளும்
அசௌகரியங்கள் மிகவும் பரிதாபமாக இருந்தன. எங்களுடைய வேதனையும்
பிரச்சினையும் எவருக்கும் புரியவில்லையே என்ற அந்த மக்கள்
ஏக்கத்துடன் எம்மை பார்க்கின்றனர்.
நீங்களாவது நாம் படும் வேதனையை எடுத்து கூறி எமக்கு வீடு கிடைக்க
ஆவன செய்வீர்களா என அந்த மக்கள் ஒருவித எதிர்பார்ப்பு கலந்த
ஏக்கத்துடன் எம்முடன் கருத்து பகிருகின்றனர்.
ஒரு இளம் பெண் எட்டு குடும்ப உறுப்பினர்களுடன் (10X8) அடி பரப்பளவை
கொண்ட அறையில் வாழும் போது எவ்வாறு அசௌகரியங்களை எதிர்கொள்வார்
என்பது நாம் இந்த கட்டுரையில் எழுதி புரியவைக்க வேண்டிய அவசியம்
இல்லை. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
பெற்றோரை இழந்த கஜினி
மீரியபெத்த அனர்த்தத்தில் தனது தந்தையும் தாயையும் இழந்த கஜினி தனது உணர்வுகளை பகிர்கையில்,
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். மீரியபெத்த மண்சரிவுல அம்மா
அப்பா ரெண்டு பேரும் இறந்து போய்ட்டாங்க. இப்ப நான் தாத்தா பாட்டி கூட
தான் இருக்கிறேன். தம்பியும் என்னோட இருக்கிறான். மாகந்த
தெழிற்சாலையில தான் இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் வீடு கட்டி
கொடுக்கல. வீட்டுல கஷ்டம். அதுனால ஒழுங்கா படிக்க முடியல. தாத்தா
பாட்டிக்கு அடிக்கடி வருத்தம் வரும். நான் தான் சமைக்கனும். காலையில
நாலரை மணிக்கு எழும்பி சமைச்சிட்டு தான் பாடசாலைக்கு போவேன். புது
உடுப்புகள் வாங்கவும் வழி இல்ல. ஆரம்பத்தில நிறைய பேர் உதவி
செய்தாங்க. ஆனால் இப்ப நாங்க ரொம்ப கஷ்டப் படுறோம். எங்கள வந்து
பாக்குறவங்க புத்தகங்கள வாங்கி தருவாங்க. அரசாங்கம் கொடுக்கிற
கூப்பன்ல தான் நாங்க வீட்டுக்கு தேவையான பொருட்கள வாங்குறோம்.
சாப்பாட்டுக்கும் கஷ்டப்படுறோம். மாதம் ஐயாயிரத்து இருநூறு
ரூபாவுக்கு தான் பொருட்கள் கிடைக்கும். அதுல நாங்க நாலு பேரும்
சாப்புடனும். நான் என்னா கேக்குறனா எங்களுக்கு முதல்ல வீடு கட்டி
தாங்க. படிக்குறதுக்கு உதவி செய்யுங்க. சாப்பாட்டுக்கு உதவி
செய்யுங்க என்கிறார் ஏக்கங்களுடன்..
அத்துடன் மீரியபெத்த அனர்த்தம் ஏற்பட்டதை விபரித்த கஜினி
மண்சரிவு நடந்த அன்னைக்கு நான் வீட்டுல இருந்தேன். அம்மா அப்பாவும்
வேலைக்கு போக தயாரானாங்க. தம்பியும் நானும் அன்னைக்கு பாடசாலை போகல.
அப்ப மண்சரிவு வருதுனு சத்தம் கேட்டுச்சு. நான் வெளியில போய் என்னானு
பாத்தேன். அப்பறம் வெளியில் இருந்த அம்மாவ பார்த்து, அம்மா சிலிப்பு
வருது வேலைக்கு போகாதிங்கனு சொன்னேன். அப்ப நான் வெளியில் இருந்த அம்மாவ
கூப்புட்டேன். . எங்கட பிறப்பு சான்றிதழை அம்மா எடுத்துகிட்டு
இருந்த நேரத்துல அம்மாவும் அப்பாவும் மண்ணுக்குள்ள போயிட்டாங்க.
நாங்க ரோட்டுல இருந்து கத்துனோம். உடனே மண்ண தோண்டியிருந்தா அப்பா
மீட்டு இருக்கலாம். அப்பறம் ஏழு நாளைக்கு பிறகு இறந்து போன அப்பாட
முகத்த பார்த்தோம். அப்புறம் அம்மாட உடம்ப எடுக்க வேணாம்னு சொல்லிட்டோம்
என்றார் கண்ணீர் மல்க..
கஜினியின் சகோதரன்
கஜினியிள் சகோதரன் சுரேஸ் குமார் எம்முடன் பேசுகையில் எங்களுக்கு
எந்த உதவியும் இல்ல. உதவி செய்யுறம்ணு சொன்னாங்க. ஆனால் செய்யல.
கஷ்டப்படுறோம் என்று உருக்கமாக கூறினார்.
காமதேவன் என்பவர் குறிப்பிடுகையில்
இந்த முகாம்ல 93 குடும்பங்கள் உள்ளன . ஆனால் 53 அறைகளே உள்ளன.
அவற்றை பிரித்துக்கொடுத்துள்ளனர். அனர்த்தம் ஏற்பட்ட பின்னர்
ஆரம்பத்துல இராணுவம் சாப்பாடு சமைச்சு கொடுத்தார்கள். இப்ப கூப்பன்
கிடைக்கிது. கூட்டுறவு நிலையத்துக்கு சென்று பொருட்கள
வாங்கிறோம். நானும் என்னோட மனைவியும் அம்மாவும்; வீட்டுல
இருக்கிறோம். மலையகத்தில் எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்காங்க.
கொழும்பிலிருந்து ஊவா வரை அரசியல்வாதிகள் இருக்காங்க.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனர்த்தங்களில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்யலாம். ஆனால் எங்களை
பொறுத்தவரை மீரியபெத்த கிராமமே அழிந்துபோனது. எங்கள அநாதரவா
விட்டுவிட்டார்கள். எங்கள மறந்துடாங்க. அரசியல்வாதிகளுக்கு
எங்கள் மீது கரிசனை ஏற்படவில்லை. இதுவே சகோதர இனத்துக்கு
ஏற்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? 37 உயிர்களை
காவுகொடுத்து இந்த முகாமில் தங்கியிருக்கின்றோம். வல்லரசு
நாடுகளினால் வழங்கப்பட்ட நிதியில் எங்களுக்கு வீடுகளை
கட்டிக்கொடுத்திருக்கலாம். ஆனால் எங்களின் பிரதிநிதிகளின்
கண்டுகொள்ளாத தன்மையினால் எங்களுக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை.
உடமை உயிர்களை இழந்த குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு 125 அளவில்
வீடுகள் தேவையாகும். இப்ப மகல்தெனியவில் வீடு கட்டுராங்க. ஆனால்
ஒரு வருடமாகியும் வீடு கிடைக்கல. கேட்டா பொருட்கள் வரலனு
சொல்ராங்க. அண்மையில் தோட்டங்களில் சில புதிய வீடுகள்
நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டதை கண்டோம். பாராளுமன்றத்
தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வந்து பார்த்தாங்க.
தேர்தலுக்கு பின்னர் எவரும் வரவில்லை. வழங்கப்பட்ட
வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மலையக அரசியல்வாதிகள்
தமிழினத்துக்காக சேவையாற்றவேண்டும். பனை மரத்திலிருந்து
விழுந்தவனை மாடு முட்டியதைப்போன்று அனர்த்தத்துக்கு உட்பட்ட எம்மை
எல்லா அரசியல்வாதிகளும் கைவிட்டுட்டாங்க என்றார்.
வயோதிபர் வயோதிபர் ஒருவர் எம்மிடம் கருத்துப் பகிர்கையில்
எங்கட உறவினர்கள் எட்டுப் பேர் மீரியபெத்த மண்சரிவில்
இறந்துபொயிட்டாங்க. இப்ப நாங்க கஷ்டப்படுறோம். அரசாங்கம்
எங்கள மறந்திருச்சு. வீடு கிடைக்காததுக்கு காரணம்
அரசாங்கம்தான். 900 ரூபாவுக்கு கூப்பன் தரப்படுகின்றது. 900
ரூபாவுல என்ன வாங்கலாம். இங்க வயசுபோனவர்களுக்கு ரொம்ப கஷ்டமா
இருக்கு. மீன் இறைச்சி சாப்பிட வழி இல்ல என்றார்.
சரோஜினி என்ற பெண் கருத்து வெளியிடுகையில்
மண்சரிவுல பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக இங்க இருக்கிறோம். ஒரு
அறையில் ஆறு பேர் இருக்கின்றோம். கணவர் இல்லை. இங்க ரொம்ப கஷ்டமா
இருக்கு. மழை பெய்யும்போது தண்ணி வரும். பூனாகல பாடசாலையில் 3
மாதங்கள் இருந்தோம். வீடு கட்டி தாறெனு சொன்னாங்க. ஆனால் இன்னும்
தரவில்லை. இப்ப ஒரு வருடமாகப்போகுது. இன்னும் முடிவு கிடைக்கல.
40 வீடு 50 வீடுனு பலவாறா சொல்ராங்க. எங்களை போட்டு
வதைக்கிறாங்க. நாங்க எங்கப்போய் நிக்கிறது? 55 அறைகளில் 93
குடும்பங்கள் இருக்காங்க. ஆனால் இப்ப ஏதொ 75 வீடு கட்டுறாங்களாம்.
சிறிய அறையில் பலர் இருக்கோம். 20 வயது மகன் உள்ளார். மருமகள்
இருக்காங்க. இங்கேயே சமைத்து சாப்பிட்டு இங்கேயே தூங்கிறோம். இந்த
மழையில சமைக்க முடியுமா? (எம்மை பார்த்து கேள்வியெழுப்புகிறார்)
இன்னும் வீடு இல்லை. வாரவுங்க எல்லாம் எங்கள கொழப்பிவிடுறாங்க.
பைத்தியம் பிடிச்சி நோயும் வருது. யோசிச்சு நோய் வருது. அரசாங்கம்
உடனே வீடு கட்டி தரனும். எல்லா அரசாங்கமும் இத சொன்னாங்க. ஆனால் வீடு
கிடைக்கல. தயவுசெய்து வீட்ட தாங்க என்றார்.
வயோதிப தாய் ஒருவர் கருத்து பகிருகையில்
இங்க இந்த முகாம்ல ஒரு அறையில எட்டு பேர் தங்கியிருக்குறோம். ஒரு
சின்ன ரூம்ல எட்டு பேர் சமைச்சி சாப்புட்டு வாழ முடியுமா. நீங்களே
யோசித்து பாருங்க. எங்க அம்மாவுக்கு கண்ணு தெரியாது. எங்களுக்கு உள்ள
பிரதான பிரச்சின வீடுதான். அத முதல்ல நிறைவேற்றி தாங்க. வீட்ட கட்டி
கொடுத்தா நாங்க மரக்கறி உண்டாக்கியாவது பொழச்சிக்குவோம்.
எங்ககிட்ட ஆடு மாடு எல்லாம் அதிகமாக இருந்துச்சு. எல்லாத்தையும்
இழந்துட்டோம். எங்களுக்கு பொருள் காசு என ஒன்றும் வேணாம். வீட்ட மட்டும்
கட்டி தாங்க. இப்ப நாங்க எட்டு பேர் ஒரு ரூம்ல வாழ்றோம். எட்டு
பேருக்கும் கிழமைக்கு 1500 ரூபா கூப்பன் கிடைக்குது. 1500 ரூபாவுல வாழ
முடியுமா. சரியான மாதிரி கஷ்டம் படுறோம். தம்பி ஒரு ஆள் மட்டும் தான்
வேலைக்கு போறாரு. என்னா பண்ணுறதுனு எங்களுக்கு புரியல்ல. வீட கட்டி
கொடுத்துதிட்டிங்கனா நாங்க எங்கயாவது போயிட்டு புழச்சிக்குவோம்
என்கிறார் சற்று கோபத்துடன்...
மாரியாத்தா மாரியாத்தா என்ற பெண் தனது உள்ள குமுறலை வெளிப்படுத்துகையில்,
நாங்க எட்டு பேர் ஒரு ரூம்ல இருக்குறோம். நான் என்ட மகன் பேர பிள்ளைக
எல்லாம் ஒன்னா தான் இருக்கிறோம். 1500 ரூபா கூப்பன் கிடைக்குது. அது
எங்களுக்கு போதாது. சாப்பாட்டுக்கு கஸ்டம் படுறோம்.என்னோட கணவர்
மண்சரிவுல இறந்துட்டாரு. நாங்க எல்லாரும் கஷ்டம் படுறோம்.
எப்படியாவது எங்களுக்கு வீட்ட தரனும் என்றார்.
கோகிலா கோகிலா என்ற பெண் கருத்து வெளியிடுகையில்,
மண்சரிவு வந்தப்பபோ நாங்க எல்லாம் மண்ணுள்ள இறுகிட்டோம். கழுத்து
வரைக்கும் மண்ணுக்குள்ள போயிட்டோம். அப்புறம் எங்கள மீட்டு எடுத்து
வைத்தியசாலையில் சேத்தாங்க. நான் உயிரோட இருந்தது அன்டைக்கு
பின்னேரம் தான் எல்லாத்துக்கும் தெரியும். இப்ப நாங்க வீடு இல்லாம இந்த
முகாம்ல இருக்கோம். நாங்க ஒரு அறையில ஐந்து பேர் இருக்கிறோம்.
சமைக்குறது சாப்புடுறது தூங்குறது எல்லாமே ஒரு ரூம்ல தான் என்றார்.
விஜயகுமாரி விஜயகுமாரி என்ற பெண் குறிப்பிடுகையில்,
நாங்க ஏழு பேர் இந்த ரூம்ல இருக்கிறோம். ஒரு ரூம்ல இருந்து சொல்லொணா
துன்பங்கள அனுபவிக்கின்றோம். மழை பெய்தா உள்ளுக்கு தண்ணி வந்துரும்.
இரவைக்கு தூங்கவும் முடியாது. ரோட்டுல போற தண்ணி எங்க ரூம்குள்ள
வந்துரும். என்னோட கணவர் வேலை செய்யுறாரு. நாங்க கூப்பன்
நிவாரணத்துல தான் வாழுறோம். மண்சரிவு வந்து ஒரு வருசமாச்சி. இன்னும்
வீடு கிடைக்கல. என்னோட கோரிக்கை என்னவென்றால் வீடு இல்லாம நாங்க படுற
கஷ்ட்டத்த புரிஞ்சுகிங்க. எங்களுக்கு சீக்கிரம் வீட்ட கட்டி தாங்க.
மூன்று புள்ளைக படிக்கிறாங்க. அவர்கள் சுதந்திரமாக படிப்பதற்கு
வீடு ரொம்ப முக்கியம். இந்த முகாம் 55 அறைகள் தான் இருக்குது. ஆனால் 93
குடும்பங்கள் உள்ளன என்றார் பாரிய எதிர்பார்ப்புடன்...
சாந்தி சாந்தி என்ற யுவதி கருத்து வெளியிடுகையில்,
இங்க ஒரு அறையில் நானும் என்னோட அம்மாவும் இருக்கிறோம்;. எங்க தாத்தா
பாட்டி அப்பாவின் சகோதரி மண்சரிவுல இறந்து போயிட்டாங்க. இந்த ஒரு
வருசமா இப்படி நாதியற்ற வாழ்க்கை வாழ்கின்றோம். மூன்று மாதத்தில் வீடு
கட்டி தாரம் என்று சொன்னாங்க. ஆனால் இன்னும் கட்டி தரல. உரிய பதிலும்
கிடைக்காம இருக்குது. இந்த முகாம்ல அதிக நாளா இருக்கிறோம். ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றோம். இப்படி
பல்வேறு துன்பத் துயரங்களை எதிர்கொள்கின்ற போது அந்த மண்சரிவுல
சிக்கி செத்து போயிருக்கலாமுனு தோனுது. நாங்க அந்த மண்சரிவுல
இருந்து மீண்டு வந்தத நினைச்சு சந்தோசம் பட முடியாம இருக்கு. மண்ணோட
மண்ணா போயிருக்கலாம்னு தோனுது. காரணம் அந்தளவுக்கு நாங்க இங்க
பிரச்சினைகள எதிர்கொள்கின்றோம். எனவே தயவு செய்து பாதுகாப்பான
இடத்தில் வீடுகளை கட்டி தாங்க.
சுபாஷினி சுபாஷினி என்ற பெண் கருத்து வெளியிடுகையில்.
நாங்க இங்க ஒரு ரூம்ல என்னோட மாப்புள கொழுந்தனார் நாத்தனார் மாமியார்
என 7 பேர் இருக்கின்றோம். அதுக்குள்ளயே சமைச்சி சாப்புட்டு
தூங்குறோம். ஒரு அறைக்குள் இருக்கும் போது சரியான அசெளகரியமாக
இருக்குது. தூங்குறதுக்கு கூட இடம் இல்லை. சில நேரங்களில் வேறு
குடும்பங்களின் அறைகளில் போய் தூங்குவோம். அரசியல்வாதிகள்
வந்தாங்க போனாங்க ஆனால் ஒன்றுமே நடக்கல. கூரையில் ஓட்டை. மழை பெய்யும்
போது தண்ணி வருது. தயவு செய்து இங்க நாங்க படுற கஷ்டத்த அதிகாரிகள்
நேர்ல வந்து பாருங்க. அரசாங்கத்துல கிடைக்கிற கூப்பன் மகனுக்கு பால்மா
வாங்குறதுக்கே போதாது. அரசாங்கத்துகிட்ட வீட்ட தான் கேக்குறோம்.
மாப்பிளை வீட்டுக்கு வந்தா எனக்கு அவருக்கு பக்கத்துல போய் கதைக்க
கூச்சமாக இருக்கின்றது. அந்தளவுக்கு ஒரு ரூம்குள்ள நாங்க கஷ்டம்
படுறோம்.
இதனையடுத்து நாங்கள் மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
புதிதாக வீடுகள் நிர்மாணிக்கப்படும் மக்கள்தெனிய என்ற இடத்திற்கு
சென்றோம். அந்த இடத்தில் 57 வீடுகள் கட்டுவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நான்கு வீடுகள் மாத்திரம் கிட்டதட்ட
முழுமையாக நிர்மாணிக்கப்பட்டிருந்தன. மேலும் நான்கு வீடுகள்
பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. எப்போது தான் வீடுகளை
கட்டி இந்த மக்களுக்கு வழங்கப்போகின்றார்கள் என்ற சிந்தனையுடன்
நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்த போது, வீட்டு திட்டத்தை
நிர்மாணிக்கும் இராணுவத்தினருக்கு பொறுப்பான அதிகாரி கெப்டன்
குமார எம்மிடம் வந்தார்.
அவரிடம் பேச்சு கொடுத்தோம். கெப்டன் குமார பேசுகின்றார்.
இங்கு 57 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். வீடுகளை
கட்டுவதற்கு மூலப் பொருட்கள் வந்துசேறும் அடிப்படையிலேயே
நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கின்றோம். நிர்மாணப் பணியில் 100க்கும்
அதிகமான இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். எமக்கு மூலப்பொருட்கள்
கிடைப்பதில் தான் தாமதம் ஏற்பட்டது. சில மாதங்களில் 57 வீடுகளையும்
நிர்மாணித்து முடிக்கவே முயற்சிக்கிறோம். தற்போது பொருட்கள் வேகமாக
வந்து கொண்டிருக்கின்றன. எனவே விரைவாக வீடுகளை கட்டிகொடுக்க
முயற்சி செய்கின்றோம். தற்போது மூலப்பொருட்கள் வருவதில் தடை இல்லை.
தொடர்ச்சியாக மழை பெய்கிறது. அடுத்த மாதத்தில் இதைவிட மழை பெய்ய
கூடும் என்பதாலும் வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்படலாம். ஆனால்
வீடுகளை விரைவாக நிர்மாணித்து கொடுப்பதே எமது நோக்கமாகும் என்றார்.
ரெங்கராஜ் மோகன் பூனாகலை பாடசாலை அதிபர் ரெங்கராஜ் மோகன் எம்மிடம் தகவல் வெளியிடுகையில்,
மீரியபெத்தயில் பாதிக்கப்பட்ட சுமார் 350 பேர் மாகந்த தேயிலை
தொழிற்சாலையில் கடந்த ஒரு வருட காலமாக தங்கியுள்ளனர். அவர்களில் 53
மாணவர்கள் எமது பூனாகலை பாடசாலையில் கல்வி கற்கின்றனர். குறிப்பாக
மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் தாய் தந்தை என இருவரையும் இழந்த
மூன்று பிள்ளைகள் எமது பாடசாலையில் கல்வி கற்கின்றனர். கஜனி, சுரேஸ்
குமார், சந்திரன் ஆகியோரே பெற்றோரை இழந்த நிலையில் தற்போது மாகந்த
தொழிற்சாலையில் தனது தாத்தா பாட்டியுடன் வாழ்கின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட 26 மாணவர்கள் கொஸ்லந்த கணேசா தமிழ் மகா
வித்தியாலயத்திலும் அம்பிட்டி கந்த வித்தியாலயத்திலும் கல்வி
பயில்கின்றனர். இந்த மாணவர்களுக்கு காலை உணவும் மதிய உணவும் பாடசாலை
நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது.
இந்த அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அரச
சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன்
கிடைக்கின்ற நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெற்றோரை
இழந்த பிள்ளைகளின் வங்கி கணக்குகளில் கணிசமான அளவு பணம் வைப்பு
செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும கிழக்கில் இருந்து வந்த அரச
சார்பற்ற நிறுவனங்கள் மீரியபெத்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்
பிள்ளைகளின் வங்கி கணக்குகளில் பணத்தை வைப்பிலிட்டிருந்தன.
அன்று மீரியபெத்த அனர்த்தம் ஏற்பட்ட போது அனைத்து மக்களும் எமது
பூனாகலை பாடசாலைக்கு தான் ஓடி வந்தனர். உண்மையில் பூனாகலை மக்கள்
அன்று பாரிய உதவியை மீரியபெத்த மக்களுக்கு வழங்கினர். நான்கு
மாதங்கள் நாங்கள் அந்த மக்களை எமது பாடசாலையில் வைத்து காத்தோம்
என்றார்.
பிரதேச செயலாளரின் விளக்கம்
மக்களிள் உள்ள குமுறல்களை துன்ப துயரங்களை ஆதங்கங்களையும்
செவிமெடுத்த நாம் இறுதியில் மீரியபெத்த கிராம உள் வருகின்ற
ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் சிரோமி ஜீவமாலாவை சந்தித்தோம். மிகவும்
சுமூகமான முறையில் அலுவலகத்திற்கு வரவேற்று எம்முடன் மீரியபெத்த
வீட்டு திட்டம் தொடர்பான தற்போதைய நிலைமையை விபரித்தார் சிரோமி
ஜீவமாலா.
" மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் 63 லயன் அறைகள் 6 தனி வீடுகள், 5
அலுவலக வீடுகள் மற்றும் 5 வர்த்தக நிலையங்கள் என 75 வீடுகள் அழிந்து
போயின. இந்த மக்களுக்கு முதலில் வேறு ஒரு இடத்தில் வீடுகள் நிர்மாணிக்க
தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு அந்த இடத்தில்
விருப்பம் இருக்கவில்லை.. தற்போது மகள்தெனிய என்ற இடத்தில் வீடுகள்
கட்டப்படுகின்றன. இராணுவத்தினர் நிர்மாணப் பணிகளை
மேற்கொள்கின்றனர். விரைவில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கலாம் என
நம்புகின்றோம். இந்த விடயத்தில் எங்களது பணிகளை உரிய முறையில்
செய்தோம். பொதுவாக இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்படும் போது அனைத்து
தரப்பினரும் எம்மை குறை கூறுகின்றனர். ஆனால் மீரியபெத்த கிராமத்தை
பொறுத்தவரையில் எனக்கு முன்னர் இருந்த பிரதேச செயலாளர் பல
அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். அதாவது அந்த மக்களை அந்த
இடங்களில் இருந்து வெளியேறுமாறும் மாற்று இடங்களை வழங்கி வீடுகளை
நிர்மாணித்துகொள்ள கடன் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால்
துரதிர்ஷ்ட வசமாக இந்த சம்பவம் நடந்து விட்டது.
கேள்வி: இத்தனை மாதங்கள் கடந்தும் 75 வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லையே? "
பதில்: அதனை ஏற்றுக்கொள்கின்றோம் என்றார்.
தென்னிந்தியாவில் இருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட இந்த அப்பாவி
மக்கள் ஒரு பக்கம் இயற்கையின் கோரப்பிடிக்குள்ளும் மறுபக்கம்
அதிகரித்த வாழ்க்கை சுமை, குறைந்த வருமானம், வறுமை, நோய்நொடிகள்,
பாதுகாப்பாற்ற குடியிருப்பு, சொந்த முகவரியற்ற வாழ்க்கை என பேராட்டத்தையே
வாழ்க்கையாக கொண்டுள்ளனர்.
அடிமைகளாக அழைத்து வரப்பட்ட இம் மக்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையின்
ஏற்றுமதி அபிவிருத்திக்காகவும் இவர்களை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளுக்கு
வாக்களிப்பதற்காகவும் மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றார்கள்.
இங்கு பல கேள்வி எழுகின்றன?
மிதக்கும் நகரம், அதிவேக பாதை, விமான நிலையம் என இலங்கையை அலங்கரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கம் ஓடாய் தேய்ந்து உரமாக்கி
தன்னையே அர்ப்பணிக்கும் இம் மக்கள் மீது இன்னமும் கரிசனை கொள்ளாதது ஏன்?
ஒவ்வொரு முறையும் கரிசனை கொள்வதாக கூறிவிட்டு பின்னர் மறந்துவிடுவது
ஏன்?
தொழிற்சாலைக்குள் முகாம் என்ற பெயரில் பத்தடி அறைக்குள் இம் மக்கள்
அனுபவிக்கும் குறைகள் ஏன் இவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் இராஜபோக
வாழ்க்கை வாழும் அரசியல் வாதிகளுக்கு தென்படவில்லை?.
அரசாங்கம் வழங்கும் கூப்பன்களில் சதொச நிறுவனங்களில் விற்கப்படும்
பொருட்கள் ஏனைய கடைகளில் விற்கப்படும் பொருட்களின் சாதாரண விலைகளை அதிக
விலையில் விற்கப்படுவது ஏன்?
இவர்கள் வாங்கும் அரிசியில் புழுக்கள் காணப்படுகின்றன. பொருட்கள் தரம்
குறைவாக இருக்கின்றன. ஏன்? மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் முடிவடைய உள்ள
நிலையில் நான்கு வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளன. இது அரசியல்
தலைமைகளுக்கு தெரியுமா? தாமதம் ஏன்?
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என கூறப்பட்டது.
அமைக்கப்படவில்லை ஏன்? பாதுகாப்பான இடங்களை வழங்காமல், மண்சரிவு அபாய
பகுதியில் இருந்து மக்களை எவ்வாறு வெளியேற்ற முடியும்? அவர்கள் எங்கு போய்
தங்குவார்கள்?மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் தேயிலைத் தோட்டங்களில் வேலை
செய்யாதவர்களுக்கு புதிதாக நிர்மாணிக்கும் வீடுகள் வழங்க மாட்டார்களாம்.
ஏன்? இவற்றை நாம் கேள்வி களாக கேட்டாலும் இவையனைத்தும் எமது கேள்விகள்
அல்ல. பாதிக்கப்பட்ட அம் மக்க ளின் கேள்விகளே. இதற்கு யார் பதில் சொல்வார்கள்.
ஒருவேளை இவர்கள் வந்தேறிய குடிகள். பூர்வீக நாடற்றவர்கள். மலையகக்
கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். என்பதாலோ ஒரு
வருடமாகியும் யாருக்கும் இவர்கள் மீது பரிதாபம் ஏற்படவில்லை என எண்ணத்
தோன்றுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் விரைவில் இந்த மக்களுக்கு வீடுகளை
அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்களும் சம்மந்தப்பட்ட
தரப்பினரை கோருகின்றோம். விரைவில் மாற்றத்தைக்கொண்டுவாருங்கள்...
கொண்டுவருவீர்களா? பார்த்துக்கொண்டிருக்கின்றோம்....
இந்த முகாமில அதிக நாளா இருக் கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான
பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றோம்.இப்படி பல்வேறு துன்ப துயரங்களை
எதிர் கொள்கின்ற போது அந்த மண்சரிவுலசிக்கி செத்து போயிருக்கலாமுனு தோனுது.
பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வந்து
பார்த்தாங்க. தேர்தலுக்கு பின்னர் எவரும் வரவில்லை.
வழங்கப்பட்டவாக்குறுதிகளும் நிறை வேற்றப்படவில்லை. மலையக
அரசியல்வாதிகள் தமிழினத்துக்காக சேவை யாற்றவேண்டும். பனை
மரத்திலிருந்து விழுந்தவனை மாடுமுட்டியதைப் போன்று
அனர்த்தத்துக்கு உட்பட்ட எம்மை எல்லா அரசியல் வாதிகளும்
கைவிட்டுட்டாங்க
நன்றி- வீரகேசரி