Tuesday, April 22, 2014

வேலைக்காரி என்பதற்குப் பதிலாக “வீட்டு வேலை தொழிலாளர்”

இலங்கையின் சட்ட ஆவணங்களிலிருந்து “வேலைக்காரி” என்ற சொல்லை அகற்றி “வீட்டு வேலை தொழிலாளர் “ என்ற சொல் பதத்தினை உட்புகுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேனகா கந்தசாமி கண்டி ஈ.எல் சேனநாயக்கா சிறுவர் நூலகத்தில் இடம்பெற்ற வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் மூன்றாவது வருட கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
 
மேனகா கந்தசாமி அங்கு மேலும் தெரிவிக்கையில் அணி திரட்ட முடியாத தொழிலாளர்களாக ஒரு காலத்தில் இருந்த  வீட்டு வேலை தொழிலாளர்கள், இலங்கை செங்கொடிச் சங்கம், செங்கொடி சங்க மாதர்ப்பிரிவு, மற்றும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக அது ஒரு தொழிற் சங்கமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

எமது சங்கம் பதிவு செய்யப்பட்டது மட்டும் போதாது. அதன் மூலம் உரிமைகளை பெறுவதற்கு முன் எமக்குரிய கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். நேரத்திற்கு வேலைக்கு செல்லுதல், நாணயம் நம்பிக்கைகளை பேணுதல் போன்ற நற்பன்புகளையும் எமது சேவை நிபந்தனைகளையும் சரியான முறையில் நிறைவேற்றிய பின் எமது உரிமைகளுக்காக போராடினால் மட்டுமே இச்சங்கம் நிலைத்து நிற்க முடியும். இல்லா விட்டால் மீண்டும் அணி திரட்ட முடியாத ஒரு அமைப்பாகவே இது மாறிவிடும்.

அடுத்த கூட்டம் நடைபெறும் போது, சட்ட ஆவனங்களில் 'வேலைக்காரி' என்ற சொல்லுக்கு பதில் 'வீட்டு வேலை தொழிலாளி' என்ற பதத்தை உட்படுத்தியவர்களாக இக்கூட்டம் நடை பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். என்றார்
 
வீட்டு வேலை தொழிலாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் தொழிலாளத் என்ற அடிப்படையில் எமக்கும் உரிமைகள் உண்டு.

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அறிவு திறமை, சட்ட ஒழுங்குகள் என்பன முக்கியமாகத் தேவை. அந்த அடிப்படையில் எமது சங்கம் அறிவு, திறன் என்பவற்றை வளர்க்க உதவுவதுடன் சட்டம் தொடர்பான விடயங்களை கையாளவும் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்
 
இவ் வைபவத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னால் பிரதி தொழில் ஆணையாளருமான எஸ்.ஜீ.சூரியாரச்சி தொழிலாளர் நலன் காக்க சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் சட்ட ஏற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் சட்டத்தால் பெற முடியாத உரிமைகளை கூட தத்தமது எஜமானர்களின் மனதை கவர்வதன் மூலம் சலுகைகளாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாளர் பிரச்சினைகளை கையாள்வதற்கு மாவட்ட தொழிலாளர் காரியாலயங்களுக்கு மேலதிகமாக உப காரியாலயங்களும் உள்ளன. இவற்றில் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
 
இலங்கை குற்றவியல் சட்ட கோவையின்படி பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்;வைப்பெற சிறுவர் மற்றம் மகளிர் பிரிவுகள் பொலிஸ் நிலையங்கள் தோரும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமும் தேவையான உதவிகளை பெறலாம் என்றார்.

பெருந்தோட்டத்துறையின் சவால்கள்

தேயிலை என்பது சர்வதேச நுகர்வு பொருளாக அமைந்துள்ளது. இலங்கையின் மாபெரும் விவசாயத்துறையாக தேயிலை பெருந்தோட்டத்துறை அமைந்துள்ளதுடன், நாட்டின் மொத்த சனத்தொகையின் 10 வீதமான 2 மில்லியன் பேருக்கு தொழில் வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் துறையாக அமைந்துள்ளது. இந்த துறை மலையகத்தின் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யவும், குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும் உயர்ந்த பங்களிப்பை வழங்கி வருகிறது.

2012 இல் இலங்கை தேயிலை ஏற்றுமதியின் மூலம் 160 பில்லியன ரூபா ஏற்றுமதி வருமானமாக பெறப்பட்டிருந்தது. 2013 இல் இந்த பெறுமதி 197 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஆயினும், தொடர்ச்சியாக வெளியாகி வரும் எதிர்மறையான அறிக்கைகள் துறையை சவால் நிலையில் தள்ளியள்ளது. 'சர்வதேச போட்டி, மோசமான காலநிலை மற்றும் செலவீனம் ஆகியவற்றின் காரணமாக இந்த துறை பெருமளவு சவால் நிலையை எதிர்நோக்கியுள்ளது. விவசாய பொருளாதாரத்தில் எந்தவொரு துறையும் வெளிக் காரணிகளில் தங்கியுள்ளது. எனவே இது எப்போதும் சவாலானது, ஆனாலும் நெருக்கடியான நிலை அல்ல' என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் பெறப்பட்ட உயர்ந்த சாதனை மிக்க பெறுமதிகளின் வசைபாடிக் கொண்டிருப்பது என்பது, எதிர்காலத்தின் சவால்களுக்கு திர்வை பெற்றுக் கொடுக்காது, மீள் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது, உற்பத்தி செலவீனம் அதிகரித்துச் செல்வது, ஊழியர் பற்றாக்குறை, காலநிலை மாற்றங்கள், சிறுதோட்ட செயகையாளர்களின் பங்களிப்பு மற்றும் வெளிகள செய்கை முறை, பன்முக தன்மை, துறைசார்ந்தவர்களின் ஒன்றிணைந்த ஈடுபாடு, பயிற்சி மற்றும் ஆய்வுகள் போன்றன பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது மட்டும் போதுமானதாக அமையாது, ஆனாலும் இந்த செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு, பங்களிப்பு அதிகரிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என ரொஷான் ராஜதுரை மேலும் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

மீள் பயிர்ச்செய்கை மற்றும் நிரப்பு பொருள்
 
'குறைந்தளவான விளைச்சலை பெறுவதற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக அமைந்திருப்பது தேயிலைச் செடிகளின் முதிர்ச்சியடைந்த நிலையாகும். இவற்றில் சில சுமார் நூற்றாண்டு காலம் பழமையானதாகும். 'மீள் பயிர்ச்செய்கை என்பது தொழிலாளர் ரீதியிலும், நிதி ரீதியிலும் மிகவும் செலவீனம் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது. – ஒரு ஹெக்டெயார் பகுதியை மீள் பயிரிடுவதற்கு 3.9 மில்லியன் ரூபா வரையில் தேவைப்படுகிறது. மேலும் ஆரம்ப முதலீட்டை மீள பெற்றுக் கொள்ள சுமார் 20 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது'

போதியளவு தொழிலாளர்கள் இன்மை மற்றும் நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக, 2013 வரவுசெலவுத் திட்டத்தில் தேயிலை மீள் பயிர்ச்செய்கைக்காக ஹெக்டெயார் ஒன்றுக்கு 350,000 ரூபா வரை மானியமாக வழங்கவும், புதிய செய்கைகளை மேற்கொள்வதற்காக ஹெக்டெயார் ஒன்றுக்கு 250,000 ரூபா வீதம் வழங்க அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தது. 'மீள் பயிர்ச் செய்கை என்பது தேசிய மட்டத்தில் காணப்படும் பிரச்சனையாகும். அரசாங்கம் இந்த பிரச்சனை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நீண்ட கால அடிப்படையில் நிதி உதவிகளை வழங்குவதற்கு தனது உறுதிமொழியை வழங்கியுள்ளது'.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் சிறுதோட்ட செய்கையாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் மீள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். பெருந்தோட்ட கம்பனிகள் பெரும்பாலும் மூன்றில் ஒரு பங்கான பகுதியை மீள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் 457 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தேயிலை மீள பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புதிய செய்கை 261 ஹெக்டெயர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்
 
தேயிலைச் செய்கை என்பது பெருமளவு தொழிலாளர்களில் தங்கியுள்ள ஒரு தொழிற்துறையாகும். உறுதியான தொழிற்சங்களின் அழுத்தங்கள் காரணமாக உயர்ந்தளவு கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு கம்பனிகள் தள்ளப்படுகின்றன. மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக, எதிர்கால சந்ததியினரை இந்த தொழிற்துறையில் தக்க வைத்துக் கொள்வது என்பது பெரிதும் சவாலான விடயமாக அமைந்துள்ளது.

'பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை என்பது ஒரு பாரிய சிக்கலாக மாறி வருகிறது. எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் என்பது சிறுதொழில்களில் ஈடுபடுவதில் ஊக்கம் செலுத்துவதாக இல்லை. இலவச கல்வி முறை, மேம்படுத்தப்பட்ட வீதி மற்றும் தொலைத்தொடர்பாடல் வசதிகள் போன்றன இளைஞர்கள் மத்தியில் விவசாயத்துறைக்கு அப்பாற்பட்ட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளன'.

தேயிலைச் செய்கையை பொறுத்தமட்டில் 65 வீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி செலவு என்பது தொழிலாளர்களுக்கான கொடுப்பனவில் தங்கியுள்ளது.

மேலும், பெருந்தோட்ட கம்பனிகள் இதர சமூக மற்றும் நலன்புரி அனுகூலங்களையும் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. ஏனைய நாடுகளில் இந்த பொறுப்பு அரசாங்கத்தினதும், இதர தொழிற்துறைகளினதும் பொறுப்பாக அமைந்துள்ளது.

எமது தொழிலாளர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். அவர்களின் பிரத்தியேக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சாதனங்களை நாம் வழங்கியுள்ளோம். அவற்றை உபயோகப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வையும் நாம் ஏற்படுத்தி வருகிறோம். ஆளுமைகள், தொழில்முயற்சி கட்டமைப்புகள் ஆகியவற்றை அவர்கள் மத்தியில் ஊக்குவித்து வருகிறோம்'.

'எமக்கு காணப்படும் மிகப்பெரிய சாதகமான நிலை என்பது, தனியார் மயமாக்கப்பட்டதன் பின்னர், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில் வழங்குநர் எனும் வகையில், நாம் ஏனையவர்களையும் பாதுகாக்க வேண்டும். இது சவாலான விடயமாக அமைந்துள்ளது' என்றார்.

இயந்திரமயமாக்கம்
 
சகல விதமான விவசாய செயற்பாடுகளிலும், தேயிலை பயிர்ச்செய்கை என்பது செலவீனம் நிறைந்ததாக அமைந்துள்ளது. தாவரத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. 'பெருந்தோட்டத்துறை ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. இது உற்பத்தி திறனில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உற்பத்தி செய்யப்படும் தயாரிப்பின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதற்காக தேயிலை உற்பத்தி செயற்பாடுகளையும், விளைச்சலை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டையும் இயந்திரமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது'.

வெளிக்கள செய்கை முறை
 
உற்பத்தித்திறன் என்பது இந்த துறையில் தற்போது பல ஆண்டுகளாக அடிபடும் ஒரு பொதுவான சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாக வெளிக்கள செய்கை முறை பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பினருக்கும் ஏற்புடைய மாற்று முறையாகவும் இது அமைந்துள்ளது. இந்த முறைக்கமைவாக, தொழிலாளர்களுக்கு குறிக்கப்பட்ட காணித் துண்டொன்றில் விளைச்சலின் உரிமையை வழங்குவதுடன், அவற்றை பராமரிப்பதற்கு அவசியமான உரம் மற்றும் இதர தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்றன கம்பனியின் மூலம் வழங்கப்படும். பறிக்கப்படும் தேயிலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கம்பனிகள் தமது வழமையான மேற்பார்வை நடவடிக்கைகளை இந்த பகுதிகளில் முன்னெடுக்கும். குறித்த தேயிலை மரங்களை பாதுகாக்கும் பொறுப்பை தொழிலாளர்கள் கொண்டிருப்பதுடன், இதற்காக வெளிப்படையான, நியமமான முறையில் கொடுப்பனவுகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

'வெளிகள வளர்ப்பு முறை என்பது, நிலம் என்பது கம்பனிக்கு உரித்தானதாக இருக்கும், ஆனாலும் தாவரம் மற்றும் விளைச்சல் என்பது தொழிலாளர்களின் பொறுப்பில் இருக்கும். இந்த முறை மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. தற்போது காணப்படும் சம்பள கொடுப்பனவு முறையை தாங்கிக் கொள்ள முடியாத தன்மையின் காரணமாக, இந்த வெளிகள வளர்ப்பு முறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்த முறையின் மூலம் இரு தரப்பினருக்கும் சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

துறைசார்ந்தவர்களின் பங்களிப்பு
 
துறைசார்ந்தவர்கள் அனைவரினதும் பங்குபற்றல் என்பது தேயிலைத் துறையின் செயற்பாட்டை நீண்ட காலத்துக் முன்னெடுத்தச் செல்வதற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. 'இலங்கையின் பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், இந்த துறையின் நிலையாண்மையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். 1.2 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் என்பது இந்த துறையில் தங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாவிடின், அதன் விளைவு அவர்களையும் பாதிக்கும். 'இந்த துறை பாரிய பின்னடைவை எதிர்கொள்ளுமாயின், தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்' என ராஜதுரை எதிர்வுகூறினார்.

அரசாங்கம், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். 'தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் சிறிய தோட்ட செய்கையாளர்கள் ஆகியோர், இந்த தொழிற்துறையில் எத்தனை பேர் தங்கியுள்ளனர் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். எனவே இந்த துறையில் ஏதேனும் பாரிய தாக்கங்கள் ஏற்படின் அது குறித்த சமூகத்தினர் மத்தியில் எந்தவிதமான சுற்றாடல் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்' என ராஜதுரை குறிப்பிட்டார்.

பன்முகத்தன்மை
 
பயிர்ச்செய்கை பன்முகத்தன்மை என்பது பயிரிடப்படும் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும், அந்த நிலத்தின் வளத்தை நிலையான வகையில் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ள ஒரு வழிமுறையாக அமைந்துள்ளது. ஒயில் பாம் மற்றும் கருவா போன்ற ஏனைய மாற்று பயிhச்செய்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் கம்பனிகளின் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலையான வளர்ச்சிக்கு பாம் ஒயில் செய்கை என்பது சிறந்த தெரிவாக அமைந்துள்ளது.

பெருமளவான கம்பனிகள் தேயிலை சுற்றுலா மற்றும் வலு போன்ற துறைகளுக்கு தமது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளன.

நீண்ட கால கொள்கை அடிப்படையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலத்தின் வளம் குன்றாத வகையில் மாற்றுச் செய்கைகளையும் மேற்கொண்டு, தொடர்ந்து இந்த துறையின் நிலையாண்மையை கடைப்பிடிக்க வேண்டிய தேவை என்பது இந்த துறையை சேர்ந்தவர்களின் பொறுப்பாக அமைந்துள்ளது.

ஆய்வுகளும் பயிற்சிகளும்
 
பயிற்சிகளும், ஆய்வுகளும் என்பது அபிவிருத்திக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதிகளவான தொழிலாளர்கள் உள்ளமையை கருத்தில் கொள்ளும் போது, நாம் பயிற்சிகளை மத்தியளவில் முன்னெடுக்கிறோம்' என ராஜதுரை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கான பயிற்சிகள், அவர்களின் தொழில்நுட்ப ஆளுமைகளை விருத்தி செய்வது போன்றன தற்போதைய மாற்றமடைந்து வரும் சூழலில் கட்டாயம் பின்பற்றப்படவேண்டிய விடயங்களாக அமைந்துள்ளது' என ராஜதுரை குறிப்பிட்டார்.

நன்றி- தமிழ் மிரர்

Friday, April 4, 2014

இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.

மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாட்டின் போது  பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி இ. தம்பையா அச்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பேசும் போது தெரிவித்தார். 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் இரண்டவாது மாநாட்டில் ஆர். இராஜேந்திரன் சங்கத்தின் தலைவராகவும் எம். தியாகராஜா பொருளாளராகவும் மற்றும் ஏனைய புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டில் பலமான தொழிற்சங்கம் ஒன்றை கட்டுவதன் அவசியம், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் வென்றெடுக்கப்பட வேண்டிய தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அம்மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி இ.தம்பையா மேலும் தெரிவித்ததாவது;

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களின் அடிப்படை வர்க்க, இன,  உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது இணக்கப்பாட்டுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவது காலத்தின் தேவையாகும். இதனை நிராகரிக்கும் தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதுடன், அவர்களின் இருப்பு நீண்டதாக இராது.

எனவே, மலையகத்தின் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான, பொது இணக்கப்பாட்டையும் பொது வேலைத்திட்டங்களையும் வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் தொழிற்சங்கங்களுக்கிடையே ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் எதிர்பார்க்கின்றது. அங்கத்துவ போட்டி மனப்பான்மையும் தேர்தல்களில் வெற்றிபெற தொழிலாளர்களின் வாக்குகளை திரட்டிக் கொள்ளும் போட்டி மனப்பான்மையும் நீக்கப்பட வேண்டும். மாறாக  தொழிற்சங்கங்களிடையே பரஸ்பர தொடர்புகளும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதனூடாகவே தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முடியும். தொழிற்சங்கங்கள் பிரிந்து நின்று எதிரிகளாக செயற்படும் போது தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் முடியாது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடியாது.

தொழிலாளர்களை வலுப்படுத்த வேண்டுமெனின் தொழிற்சங்க இயக்கம் வலுவடைய வேண்டும். அவ்வாறு வலுவடைவதற்கு தொழிலாளர்களிடையேயும் தொழிற்சங்கங்களுக்கிடையேயும் ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

தொழிற்சங்கம் என்பது முதலீடு இல்லாத சுய தொழிலாகவும் பெரும் வியாபார கம்பனிகளாகவும் இருக்கும் நிலை மாற வேண்டும். அத்துடன் கம்பனிகளுக்கு எவ்வித இடையூறுமில்லாத வகையில் தொழிலாளர்களின் உழைப்பை வழங்குவதனையும், இருக்கும் உரிமைகளையும் கையுதிக்கும் சம்மதத்துடன் தொழிலாளர்களின் உழைப்பை வழங்கும் நிலையை உறுதி செய்யும் வகையில் தொழிற்சங்கங்கள் இயங்குவதை அனுமதிக்க முடியாது. தொழில் உறவை பேணல் என்பது தொழிலாளர்களின் உரிமை மறுப்பிலும் தொழிலாளர்களின் அவலத்திலும் உற்பத்தி நடைபெற்று அதிக இலாபத்தை கம்பனிகளுக்கு சென்றடைவதை அடிப்படையாக கொண்டு இருத்தலாகாது; மாறாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி என்பவற்றில் தங்கி இருக்கிறது.

இவற்றை எல்லாம் மறுக்கும் உலகமயமாதல் சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் புதிய விதத்தில் செயற்பட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எமது மக்கள் தொழிலாளர் சங்கம் இயங்கும். அதற்கான ஒத்துழைப்பை தொழிலாளர்களிடம் நாம் வேண்டிநிற்கின்றோம்.  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.



1. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

அ. தேயிலை, றப்பர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பருவத்திற்கு பருவம் வேறுபாடுடையதாகவன்றி மாதாந்த சம்பளத்தின் அடிப்படையில் நிரந்தரமான சூத்திரமொன்றினூடாக நியாயமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆ. வாழ்கை செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப வருடாந்த சம்பள உயர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. கூட்டு ஒப்பந்தம்

அ. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகின்ற தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களினதும் பங்களிப்பும் அந்தஸ்த்தும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆ. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான நியாயமான, நிரந்தரமான திட்டமும் வருடாந்த சம்பள உயர்வுக்கான சூத்திரமும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இ. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட தொழிலாளர்களின் ஓய்வூதி திட்டமும் முன்னேற்றகரமானவையாக பேணப்பட வேண்டும்.

ஈ. சம்பளம், சம்பள உயர்வு, தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகள் போன்றன குறைந்தபட்சம் இலங்கையில் தொழிற்சட்டங்கள் தராதரங்கள், சர்வதேச சட்டங்கள், தராதரங்களுக்கேற்ப கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் சேர்க்கப்பட வேண்டும்.

உ. தொழிலாளர்களின் நாளாந்த தொழில் உறவு பிரச்சினைகள் பற்றி பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் கலந்துரையாடல், இணக்கத்தீர்வு, நடுத்தீர்வு போன்ற வழிமுறைகளினூடாக தீர்க்கப்பட வேண்டும்.

ஊ. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பூரணமாக நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வுரிமைகள் நேரடியாக சட்டவாக்கங்களினூடாகவோ மறைமுகமான நடவடிக்கைகளினூடாகவோ பறிக்கப்படகூடாது.

3. பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் உரிமை, வாழ்வு கட்டியெழுப்புவதன் அடிப்படையில் பேணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

4. தேயிலை, றப்பர் தென்னை பெருந்தோட்ட தொழிற்துறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்துறையும் ஏனைய மாற்று தொழிற்துறையும் பெருந்தோட்டத் துறைக்கு சமாந்திராக கட்டி வளர்க்க வேண்டும்.

5. தோட்டத் தொழில் துறையும் அதனோடு தொடர்புடைய மற்றும் மாற்று தொழிற்துறையினூடாக தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது வழித் தோன்றல்களுக்கும் அத்தொழில்வாய்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

6. பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கென குடியிருப்புக்கு தேவையான காணி வசதிகளுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வீதி போக்குவரத்து கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பாடசாலைகள், வைத்தியசாலைகள், நிர்வாக பரவலாக்கல் மையங்கள் போன்றன நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக கிராம அல்லது நகர குடியிருப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும்.

8. நீண்ட கால இலக்காக பெருந்தோட்டங்களும் அதனோடிணைந்த வளங்களும் பல்தேசிய கம்பனிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு தோட்டங்களில் உற்பத்திக்கென பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகள், இயற்கை வளங்கள் போன்றன தொழிலாளர்களுக்கும் அவர்களினது வழித்தோன்றல்களுக்கும் உரித்தாக்கப்பட்டு  தொழிலாளர்களின் பங்களிப்புடனான கூட்டுப் பண்ணை அடிப்படையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. மலையக மக்;கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் தேசிய அபிலாசைகள் உறுதி செய்யும் அடிப்படையில் சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்பன அடிப்படையில் அவர்களின் அரசியல் தன்னதிகாரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

10. தமிழ் தொழிலாளர்களுக்கு இன ரீதியான மத ரீதியான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்; மொழி உரிமைகள் பேணப்பட வேண்டும்.

11. தமிழ் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலும் வெளியிலும் இருக்கின்ற ஏனைய உழைக்கும் மக்களுடன் விவசாயிகளுடனும் ஐக்கியப்பட்டு மேற்கொள்ளகூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

12. பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள், சிறுவர்கள் போன்றோரின் இலகுவாக ஊறுபடக்கூடிய நிலை மாற்றப்பட்டு அவர்களின் சமத்துவ உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.