மலையகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு மலையக தமிழ் மக்களின் குறிப்பாக,
மலையக தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு, காணிப்பிரச்சினை மிக முனைப்பாக
பேசப்படுகின்ற கால கட்டமிது. வீட்டுரிமையும், காணியுரிமையும், மலையகத்
தலைவர்களினதும், மலையக அமைப்புக்களினதும் மலையக தமிழ் மக்களினதும் ஏகோபித்த
கோரிக்கையாக மாறியுள்ள இன்றைய கால கட்டத்தில், மலையக மக்கள் முன்னணியின்
ஸ்தாபகத் தலைவரும், மலையக தலைவர்களின் தனித்துவமானவருமான பெ.சந்திரசேகரனின்
6ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுவது சாலப் பொருத்தமானதாகும்.
மலையக வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பாக மலையக மக்களினதும், சந்திரசேகரன்
உட்பட மலையக தலைவர்களினதும் கவனம் கடந்த இரு தசாப்தங்களாக முக்கியத்துவம்
பெற்றிருந்தாலும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான
பிரச்சினைக்கு உந்து சக்தியாக அதனை தேசிய, சர்வதேச மயமாக்குவதற்கு
மீறியாபெத்தை மண்சரிவு அவலம் மிக முக்கிய உந்துசக்தியாக விளங்கியது. இந்த
நிகழ்வே மலையக மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை தொடர்பாக இன்னொரு பாய்ச்சலை
ஏற்படுத்தியது.
முதன் முதல் மலையக தமிழ் மக்களுக்கு மலையக வரலாற்றில், இலவசமாக
காணியுரிமையும் வீட்டுரிமையும் வழங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்
அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்பட்டது. மீறியபெத்தை
அனர்த்தம் மலையக வீடமைப்பில், லயன்முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற
நிர்ப்பந்தத்தை தோட்ட நிருவாகங்களுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தினாலும்,
இந்தத் தோட்டப்புற வீடமைப்பு அல்லது மலையக வீடமைப்பு, காணியுரிமை என்ற
விடயத்தில் மலையக மக்கள் முன்னணியினதும், அதன் தலைவர் பெ.சந்திரசேகரன் தனி
நபர் பாத்திரமும், ம.ம.முயின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடமுடியாதது.
ஆனால் படிப்படியாக இந்த காணியுரிமை, வீட்டுரிமை விடயங்களில் தலைவர்
சந்திரசேகரனினதும், மலையக மக்கள் முன்னணியினதும் பங்களிப்பு
மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருது புலப்படுகின்றது.
அண்மையில் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான ஒரு ஆய்வு கலந்துரையாடல்
நடைபெற்றபோது மலையகத்தின் காணியுரிமை வீட்டுரிமை தொடர்பாக விரிவாக
ஆராயப்பட்டது. அதிலுள்ள தடைகள், பிரச்சினைகள் மற்றும் கட்டப்பட்ட வீடுகள்
தொடர்பாக ஆய்வாளரொருவர் ஆவணத்தையும் சமர்ப்பித்தார். அப்போது மலையகத்தில்
மூத்த தலைவர் ஒருவரின் பெயர் சிலாகித்து பேசப்பட்டு, மறைந்த தலைவர்
சந்திரசேகரனின் பெயர் குறிப்பிடப்படாத போது, கட்டுரையாசிரியர் அதனை
சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட ஆய்வு கலந்துரையாடலை ஒழுங்கு
படுத்தியவருக்கு சந்திரசேகரனின் பாத்திரத்தை மறக்க வேண்டிய, மறுக்க வேண்டிய
தேவை இல்லாத போதும், ஒரு விடயம் தெளிவாக தெரிகின்றது.
மலையக வீட்டுரிமை, காணியுரிமை விடயங்களில் ம.ம.மு தலைவர் பெ.
சந்திரசேகரனின் பெயர் படிப்படியாக மறைந்தும், மறைக்கப்பட்டும் வருகின்றது.
மலையக வீடமைப்பில் காணியுரிமையைப் பொறுத்தவரையில், மறைந்த தலைவர்
சந்திரசேகரனின் பெயர் மறக்கமுடியாது. அது மலையக வரலாற்றில் பதிவு
செய்யப்பட்டுவிட்ட ஒன்றாகும். மலையக வீடமைப்பு பற்றி ஆய்வு செய்யும் போது,
எந்த ஆய்விலும் மறைந்த தலைவர் சந்திரசேகரனின் வீடமைப்பு திட்டத்திற்கு
நிச்சயமாக ஆய்வில் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்படும். சந்திரசேகரனின்
பாத்திரத்தை புறந்தள்ளிவிட்டு மலையக காணியுரிமை, வீட்டுரிமை வரலாற்றை
பார்க்க முடியாது.
ஆகவே அவரது 6வது சிரார்த்த தினம் எதிர்வரும் 2016 ஜனவரி முதலாம் திகதி
அனுஷ்டிக்கப்படும்போது, காணி வீட்டுரிமையில் அவரது பங்களிப்பு நிச்சயம்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மூத்த தொழிற்சங்க,
அரசியல்வாதி 1977ம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை அப்போது ஆட்சியிலிருந்த
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் 17 வருடங்கள் ஆட்சியில்
ஒட்டிக்கொண்டிருந்தபோதும், கொட்டக்கலையில் சௌமியபுரத்தில் 20 வீடுகளையும்,
ரொசால்லை மாணிக்கவத்தையில் 20 வீடுகளுமாக 17 வருடங்களில் 40 வீடுகளையே
வீடமைப்பில் இலங்கையில் சாதனை நிகழ்த்தியதாக கூறப்படும் பிரேமதாச ஆட்சிக்
காலத்தில் நிர்மானித்திருந்தார். அது மாத்திரமன்றி தோட்டப்புற வீடமைப்பு
பற்றி அவருக்கு ஒரு தொலைநோக்கு இருக்கவில்லை.
லயன்முறை ஒழிக்கப்படவேண்டுமென்று பலராலும் வலியுறுத்தப்பட்டபோது அவர்
லயன் வீடுகளையும், அதனை சூழவுள்ள காணிகளையும், தோட்டத் தொழிலாளருக்கு
உரிமையாக்க வேண்டுமென்று கோரியிருந்தார். ஆனால் 1994ம் ஆண்டிலிருந்து
1998ம் ஆண்டுவரை சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தில் வீடமைப்பு
நிர்மானத்துறை பொது வசதிகள் அமைச்சின், தோட்டப்புற வீடமைப்பு
பிரதியமைச்சராக இருந்த மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் கிட்டத்தட்ட 20,000
வீடுகளுக்கான காணிகளை பெற்று தனித்தனி வீடுகள் காணியுரிமை, வீட்டுரிமையுடன்
அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.
எந்த புள்ளிவிபரமுமின்றி எழுந்தமானமாக அவர் இந்த நான்கு வருடங்களில்
(94- முதல் 98 வரை) ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிமுடித்தார்
என்று துணிந்து கூறலாம். அவர் கட்டிய வீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட
வேண்டியது அவசியமாகும்.
இவ்வீடுகள் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அமைக்கப்படவில்லை. காலி,
மாத்தறை, மொனராகலை, பதுளை, கண்டி, மாத்தளை குருநாகல், களுத்துறை,
இரத்தினபுரி, போன்ற பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலர் கூறுவது போல மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் என்று
அர்த்தப்படுத்துவது போல் அல்லாமல் பல மலையக மாவட்டங்களில், கொழும்பு
மாவட்டத்தில் கூட தோட்டப்பகுதிகளில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. தனது
குறுகிய கால வாழ்க்கையில் மூத்த மலையகத் தலைவர்களால் சாதிக்க முடியாதவற்றை
சாதித்தவர் மறைந்த தலைவர் சந்திரசேகரனாவார்.
அமரர் பெ.சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையான பிரச்சினைககளான
காணி, வீட்டுரிமை மட்டுமன்றி, 1948ம் ஆண்டிலிருந்து இழுபறியாக 2003ம்
ஆண்டுவரை இழுத்தடிக்கப்பட்ட பிரஜா உரிமை பிரச்சினை தொடர்பாகவும், இந்திய
கடவுச்சீட்டு பெற்று இந்தியா செல்ல விரும்பாத ஸ்ரீமா சாஸ்திரி
ஒப்பந்தத்தில் கடவுச்சீட்டு பெற்றவர்களின் பிரச்சினையிலும் துணிகரமாக
குரல்கொடுத்து வந்தார்.
1991ம் ஆண்டு தலவாக்கலையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களின்
கடவுச்சீட்டை சேகரித்து எரித்து, அதன் காரணமாக 02 வாரங்கள் சிறைவாசம்
அனுபவிக்க வேண்டிவந்தது.
இதன் பிறகு நாடற்றோர் பிரச்சினையை தீர்ப்பதிலும் பிரஜா உரிமை
பிரச்சினையை முற்று முழுதாகத் தீர்ப்பதிலும் இலங்கை அரசாங்கம் முனைப்பு
காட்டியது, தலைவர் சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையிலான
பிரச்சினைகளில் துணிவாகவும் தீர்க்க தரிசனத்துடனும் செயல்பட்டவர்.
மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தனி நபர் என்ற அடிப்படையில், மலைய
மக்களின் பிரச்சினையில் கூடுதலான அக்கறை கொண்டவராகவும் மலையக மக்கள்
முன்னணி என்ற அடிப்படையில், மலையக மக்கள் பிரச்சினைகளில் தலைமைப் பாத்திரம்
ஏற்றவராகவும்செயல்பட்டார்.
இதில் மலையக மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினையும் பிரஜா உரிமை
பிரச்சினையும், மிக முக்கியமானது. இதில் வீட்டுரிமை காணியுரிமை பிரச்சினையை
பொறுத்தவரையில் மலையகத்தில் ஏனைய தலைவர்களைவிட, முன்னோடியாக செயல்பட்டவர்
என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. இவ்வகையில் அமரர் சந்திரசேகரனின்
பங்களிப்பு காத்திரமானது.