Saturday, September 17, 2016

சம்பள உயர்வு விடயத்தில் ஆறுமுகன் மாத்திரமல்ல ஏனைய மலையக அரசியல்வாதிகளுக்கும் பொறுப்புண்டு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆறுமுகன் தொண்டமானை மட்டும் முன்னிறுத்திவ்ட்டு ஏனைய மலையக அரசியல்வாதிகள் கைகழுவி விடமுடியாது இப்பொறுப்பு மலையக அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் சம்பள உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். இந்த ஏமாற்றம் என்பது தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்கின்றவொரு விடயமாகும். சும்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமில்லாத நிலையிலும் பல தடவைகள் பேசப்பட்டு வந்துள்ளன.  எனினும் இவையணைத்தும் இணக்கப்பாடின்றி தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. கம்பனிகள் தனது இலாபத்தை மாத்திரம் கருதி செயற்படுகின்றமையே தோல்விக்கான காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை அவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. இலாபமே நோக்கமாக காணப்படுகின்றது. தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையால் மூன்று இலட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தோட்ட முதாலாளிமார் சம்மேளனம் தொடர்பில் ஒரு தீர்க்கமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியவொரு கட்டம் இப்போதுள்ளது. 
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் தெரிவி;க்கின்றன. ஆனால் ஏன்? ஏவ்வாறு தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பது யாருக்கும் தெரியாது. ஏந்தெந்த துறைகளில் எந்தெந்த ஆண்டுகளில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்ற விளக்கங்களும் இல்லை. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும். தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் அளவு சந்தைவிலை என்பன பகிரங்கப்படுத்தப்படுதல் வேண்டும். இந்த விடயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. கம்பனிகள் தங்களுக்கு சாதகமான வகையில் அறிக்கைகளை தயார் செய்யும் நிலைமையே காணப்படுகின்றது. எனவே தொழிலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டிய காலம் மேலெழுந்துள்ளது. முதலாளிமார்கள் தொழிலார்களை வஞ்சித்து வருகின்ற நிலையில் மலையக அரசியல் வாதிகள் தொழிலார்கள் தொடர்பில் பாராமுகத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர். 

மலையக மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்தப் போவதாக புதிதாக அரசியல் களம் புகுந்தவர்களால் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியவில்லை. மலையக அரசியல்வாதிகள் சம்பள உயர்வு விடயத்திலோ அல்லது வேறு விடயங்களிலோ ஆறுமுகன் தொண்டமானை மாத்திரம் முன்னிறுத்தி குற்றம் சுமத்தி கைகழுவிக்கொள்ள முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுத் தருவதாக கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய மலையக அரசியல்வாதிகள் பலரும் தெரிவித்திருந்தனர். எனினும் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது மீறப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்ன? தொடர்;ச்சியாக அறிக்கை விடுவது மட்டுந்தானா? தோட்டத் தொழிற்துறையை நம்பி இருக்கின்ற பலரும் மக்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு இவர்கள் என்ன பதிலை சொலலப் போகின்றார்கள். ஐ.தே.க வை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கமும் சம்பள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றது. எனினும் இன்னும் சாதகமான முடிவுகள் எதுவுமில்லை.

தொழிலாளர்கள் யாரை நம்பியும் எந்தப் பயனும் உருப்படியாக கிடைத்துவிட வில்லை. இந்நிலையில் தொழிலாளர்கள் போராடுவதனைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. போராட்டமின்றி எந்தவொரு உரிமையும் உழைக்கும் வர்க்கததினருக்கு கிடைத்ததாக சரித்திரம் இல்லை.

தொழிலாளர்களின் குரலாக தொழிலாளர் வர்க்கத்துக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் முனைப்புடன் மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் செயலாற்றி வருகின்றது. எனவே இச்சங்கத்தின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். இதன் மூலம் பல்வேறு சாதகமான விளைவுகளையும் நாம் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்போம். தொழிலாளர் சக்தி மிகவும் பலமானது என்பனை சகலருக்கும் புரிந்து செயற்படுதல் வேண்டும் என்றார்.