Tuesday, October 27, 2015

பல்கலைகழகங்களுக்கு மலையக மாணவர்களின் எண்ணிக்கை 200 மட்டுமே. 6000 பேராவது இருக்க வேண்டும்

வருடத்திற்கு 20,000 மாணவர்களை உள்வாங்குகின்ற இலங்கை பல்கலைகழகத்தில் மலையக மாணவர்கள் 200 பேரளவிலேயே இணைகின்றனர் எனவும் குறைந்தது 6000 பேராவது இருக்க வேண்டும். இணைகின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சத வீதத்திலும் குறைவானதாகும் என மாலம்பே கல்வி பீடத்தின் பீடாதிபதியுமான கலாநிதி தை. னராஜ் கண்டி திருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
 
அவர் அங்கு உரையாற்றுகையில் ஒரு காலத்தில் பாடசாலையென்பது முழு உலகமாகத் தெரிந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி முழு உலகமும் ஒரு சிறிய பாடசாலையாக மாறிவிட்டது. இந்த நிலை அறிவு பிரளயத்தில் இருந்து தப்பி எப்படி மலையக சமூகத்தால் தனித்து வாழ முடியும் என்றார்.
 
ஒரு காலத்தில் 50 வருடங்களுக்கொருமுறை கல்வி இரண்டு மடங்காக வளர்ந்து சென்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியான காலத்தில் 50 வருடத்திற்கொருமுறை கல்வித்திட்டத்தை மாற்றி அமைத்தால் அது நவீன கல்வியாகக் கொள்ள முடிந்தது. ஆனால் 50 வருடங்களுக்கு முன் அதாவது 1950 களில் 20 வருடத்திற்கு ஒரு முறை கல்வி வளர்ச்சியானது இரட்டிப்பானதாக ஆய்வுகள் கூறின. 1970 களில் ஒவ்வொரு 10 வருடத்திலும் கல்வி வளர்ச்சி இரட்டிப்பாவதாக கூறப்பட்டது. அதன் பின் 2000ம் ஆண்டளவில் ஐந்து வருடத்தில் கல்வி இரண்டு மடங்காகியது. எனவே ஆகக் குறைந்தது ஐந்து வருடத்திற்கொருமுறையாவது கல்வி மீளாய்வுக்குட்படுத்தும் காலகட்டமாக தற்போதுள்ளது.
 
ஆனல் புதிய ஆய்வொன்றின்படி இன்னும் சில வருடங்களில் ஒவ்வொரு 72 மணித்தியாலங்களிலும் அறிவு மட்டம் இரட்டிப்பாக மாறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே 2020 பின் வரும் சகாப்தம் மிக வேகமானது. மூன்று நாளைக்கு ஒரு தரம் கல்வி இரட்டிப்பாவதென்றால் அந்த மாற்றத்திற்கு கணனி யுகம் முக்கிய காரணமாகிநது. எல்லாவற்றையும் வீட்டிலிருந்தே மாணவர்கள் தானாக தேடிப்பிடித்து தமது அறிவை பன் மடங்காக்கும் ஒரு காலமே இதுவாகும். எனவே அறிவுப் பிரவாகம் தலைக்குமேல் ஏறிக்கொண்டு போகும்போது நாம் அதற்கு ஈடுகொடுக்க என்ன செய்துள்ளோம்.

மனித வாழ்வு முற்றாக மாற்றமடைந்துள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்நோம். ஒரு நாளைக்கு முழு உலகிலும் 7 பில்லியன் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) பரிமாற்றப்படுகின்றன. அதாவது அறிவுப்பரிமாற்றப்படுகிறது. கூகுல் போன்ற தளங்களில் ஒரு நாளைக்கு 7.2 பில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன. அதாவது அறிவு பசிக்காக இவ்வளவு முயற்சி நடக்கிறது. 18 மாதத்திற்கொருதரம் கணனி வகைகள் ஒதுக்கப்பட்டு புதி ரகங்கள் அறிமுகமாகின்றன.
 
ஒரு நாளைக்கு முழு உலகத்திலும் இருந்து புதிய 3000 வகையான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. பல்லூடகப் பாவனை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இன்றைய மனிதர்கள் நெட் தலைமுறையூடாக அதாவது இணையப் பரம்பரையாக வாழ்கின்றனர். ஒரு மாணவன் சாதாரணமாக ஒரு நாளைக்கு சராசரி 8 மணித்தியாலங்கள் கணனிகளில் அறிவைத் தேடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இப்படியாக இன்று முழு உலகமுமே பாடசாலையாக மாறிக் கொண்டிருக்கும போது எம்மவர்கள் நிலை எப்படி உள்ளது என்று பார்ப்போம். 1965 இல் ஆசிரியர் போட்டிப்பரீட்சை ஒன்று நடந்தது. அதில் 15 ஆசிரியர்களே மலையகத்தில் இருந்து இணைந்து கொண்டனர். அதன் வளர்ச்சி இன்று மலையகத்தில் 10,000 ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது. அந்த அடிப்படையில் மலையக ஆசிரியர்களின் பணி வரவேற்கத்தக்கது. இதற்கு 1960ம் ஆண்டில் வித்திட்டவர்கள் மலையக நல்வாழ்வு மன்றம் போன்றவையாகும். குறிப்பாக சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றவர்களை மலையக சமூக நினைவுகூர வேண்டும். அத்துடன் இன்று முப்பதுக்கும் மேற்பட்ட மலையக கல்வி பணிப்பாளர்கள் உள்ளனர். இது ஓரளவு சாதகமானாலும் மறுபக்கத்தில் மலையக உயர் கல்வியில் பின்னடைவு காணப்படுகிறது.
 
பல்கலை கழகங்களில் சுமார் 200 மலையக மாணவர்கள் இன்று உள்ளனர். இது ஒரு வருடத்திற்கு 20,000 மாணவர்களை கொண்ட இலங்கை பல்கலைகழகத்தில் வெறும் ஒரு சத வீதத்திலும் குறைவானதாகும். அதாவது குறைந்தது மூன்று வருடங்கள் மாணவர்கள் பல்கலையில் இருப்பதாகக் கொண்டால் மூன்று வருடத்திற்கும் 60,000 பேர் இருப்பர் ஆனால் மலையக மாணவர்கள் வெறும் 200 பேர்தான். குறைந்தது 6000 பேராவருது இருக்க வேண்டும் என்றார்.
முலையகத்தைப் பொறுத்தவரை இரண்டு கைவிரல்களால் எண்ணும் அளவுகூட மலையக பேராசிரியர்கள் இல்லை. முதலாவதாக பேராசிரியர் சின்னத்தம்பி, தொடர்ந்து பேராசிரியர்களான சந்திரசேகரன், மூக்கையாக, சிவகணேசன், தனராஜ் என்று விரல் விட்டு எண்ணக்கூட முடியாத தொகையில் உள்ளோம். இவர்கள் அனைவரும் தற்போது ஓய்வு நிலையில் உள்ளனர்.
 
பேராதனை பல்கலைகழகத்தில் 12 மலையக விரிவுரையாளர்களும் ஏனைய பல்கலைகழகங்களில் ஆறு பேருமாக மொத்தம் 18 பேர் மட்டுமே மலையகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். குறிப்பிட்ட சில அரச முகாமைத்துவத்துறை பதவிகளில் 5000 பேராவது இருக்க வேண்டிய நிலையில் 20 பேர் மட்டுமே உள்ளனர். இலங்கை நிர்வாக சேவையில் இதுவரை காலம் மாரிமுத்து மற்று முருகேசு ஆகிய இருவர் மாத்திரமே தெரிவாகினர்.
 
கல்வி இராஜாங்க அமைச்சரே நீங்கள் எத்தனையோ தேசிய மட்ட மற்றும் சர்வதேச மட்ட மகா நாடுகளை நடத்­துகிறீர்கள். ஆனால் ஒருதரம் மலையக தேசிய கல்வி மகாநாடு ஒன்றை நடத்தி எம் பிரச்சினைகளைப் பட்டியல் போட்டால் நல்லதல்லவா?
 
இன்று எமக்குக் கிடைத்திருப்பது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதனை கூட்டுவலு கோட்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த முடியும். அதாவது கூட்டு வலு என்பது உதாரணத்திற்கு இரு நபர்களால் தனித்த­னியே 100 கிலோ சுமையை தூக்க முடியும் என்றால் அவர்கள் இருவரும் இணையும் போது 200 கிலோவல்ல அதனிலும் கூடிய அளவை சுமக்க முடியும். இதே விதம் பலர் இணையும்போது அதன் விளையுள் வினைத்திறன் கூட்டு வினைத்திறனை விட அதிகமாகிறது. எனவே சகல பேதங்களையும் மறந்து நாம் எமது பலத்தைப் பிரயோகித்து கூட்டுவலுக் கோட்பாட்டின் அடிப்படையில் மலையக சமூக மேம்பாட்டிற்குப் பாடுபடவேண்டும்.
 
பொதுவாக உலக வாழ்வில் இரண்டு விடயங்களைக் காணமுடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு விஷன் இருக்கும். அதாவது ஒரு தரிசன நோக்கு இருக்கும். அதேநேரம் அதற்கான எக்ஷன் என்ற செயற்பாடும் இருக்க வேண்டும். செயற்பாட்டுடன் கூடிய தரிசன நோக்கு இல்லா விட்டால் அதன் மூலம் எந்தப் பயனும் இல்லை. ஆனால் செயற்பாட்டுடன் கூடிய தரிசன நோக்கு இருக்குமாயின் உலகையே வெல்லாம் என்றார்.
 
நன்றி- வீரகேசரி