Friday, September 12, 2008

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்க வேண்டும்

பெருந் தோட்டங்களில் ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழும் தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களில் விவசாயம் , கால்நடை, கோழி வளர்ப்புக்கும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவை சந்தித்து தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில், கல்வி, சமூக பொருளாதார விடயங்கள் குறித்து பேசுகையிலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை தொழிற்பயிற்சி நிலையங்களாக மாற்றியமைக்கவும், அதனூடாக படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கிராமப்புற, நகர்புற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் இதர வசதிகள் கிடைப்பது போன்று தோட்டப்பகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றார்.


மின்மாற்றி குண்டு வைத்து தகர்ப்பு

நுவரெலியா மாவட்டம் தலவாக்கொல்லை நகருக்கு அண்மையில் தெவசிறிபுர என்ற இடத்தில் மின்மாற்றி குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் 11-09-2008 இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை இப் பிரதேசங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மலையக இளைஞர்கள் பலர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத்துறை மக்களின் பொருளாதார நெருக்கடி

தற்போது அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்களில் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கொள்வனவு செய்யும் கோதுமை மா, மண்ணெண்ணெய் , இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் மிகுந்த நெருக்கடிகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகியுள்ளனர். பிரதான காரணம் இவர்கள் அன்றாட வேதனத்தை நம்பியே வாழ்கின்றனர். சாதாரணமாக அன்றாட கூலித் தொழில் செய்பவர் 600-1000 ரூபாவரை ஒரு நாள் சம்பளமாக பெறுகிறார். தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 290 ரூபாவையே பெறுகின்றனர். தற்போதைய பொருள் விலையேற்றங்களுக்கு ஏற்ப நிவாரணம், சம்பள உயர்வு எதுவும் கிடைப்பதில்லை. வருடா வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டங்களில் இம் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் எதிர்பார்க்கும் மக்களுக்கு ஏமாற்றமே. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் போது வாழ்க்கை செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் சேர்த்துக்கொள்ளுமாறு தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.