Wednesday, November 26, 2008மண் சரிவால் மூன்று வீடுகள் முற்றாக சேதம்

மலையகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து கொட்டகலை அமைதிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேற்படி வீடுகளில் வசித்து வந்தோர் தற்போது உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் உள்ளடங்குவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இம் மண்சரிவினால் சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

தோட்ட வைத்தியசாலை அரசாங்கத்தின் பொறுப்பில்

பதுளை மாவட்டம் உடுவர பெருந்தோட்டப் பகுதியைச் சார்ந்த மிகவும் பின்தங்கிய தோட்ட வைத்தியசாலை கடந்த 23-11-2008 முதல் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சீரற்ற போக்குவரத்துக் காரணமாகவும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாகவும் இப் பிரதேசத்திலுள்ள பொது மக்கள் மிகவும் சிரமங்களை உள்நோக்கி வந்ததையடுத்து அதனை உடனடியாக தீர்க்கும் வகையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடுவர தோட்ட வைத்தியசாலையின் சகல வேலைத் திட்டங்களையும் பதுளையிலுள்ள பிரதான வைத்தியசாலையிலிருந்து மருத்துவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அவ்வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நோயாளிகளை பரிசோதித்து அவர்களுக்கான சகல மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பூசா தடுப்பு முகாமுக்கு சென்ற விசாரணை மேற்பார்வை குழு

காணாமல் போதல், கடத்தல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழு பூசா முகாமிற்கு 27-11-2008 விஜயம் செய்யவுள்ளனர். அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 361 ஆண், பெண் தமிழ் முஸ்லிம் கைதிகளை சந்தித்து அவர்களுக்கான விசாரணைகளை துரிதப்படுத்தி நடவடிக்கை விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் வடக்கு, கிழக்கு இளைஞர்களும் 108 மலையக இளைஞர், யுவதிகளும் உள்ளதாகவும் இவர்களில் நிரபராதிகளாகக் காணப்படுபவர்களை விடுவிப்பதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாகவும் குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மேற்படி கண்காணிப்பு குழுவின் அங்கத்தவர்களில் அமைச்சர் ராஜித சேனாரட்ண, ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார, பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ், குழுவின் செயலாளர்களான ஆர். திவ்வியராஜன், லால் வெடிக்கார, பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இயக்குனர் சி.என். வாக்கிஸ்டர் உட்பட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளும் பூசா முகாமிற்கு செல்லவுள்ளனர்.

வத்தேகம நகர பகுதியில் 19 பேர் கைது

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் வத்தேகம நகரப் பகுதியில் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போது 6 பெண்கள் உட்பட 19 தமிழ் பொதுமக்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கை கடந்த 25-11-2008 ம் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கூடுதலானோர் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழில் புரிபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்வோர்கள், போன்றோரே கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர் எனவும் ஒரு சிலரே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்மாற்றி வெடிப்புக்குள்ளானதில் குடியிருப்பாளர்கள் மின்சாரமின்றி அவதி

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் அமைந்துள்ள 400 கி.வோ மின்சாரத்தை விநியோகம் செய்கின்ற மின் பரிமாற்றியொன்று வெடித்து தகர்க்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபைக்கு 20 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை மின்சார விநியோக அதிகாரி எஸ்.எம்.என் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரசேத்தில் அமைந்துள்ள 400 குடியிருப்புகளுக்கான மின்சார விநியோகம் பாதிப்படைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Thursday, November 20, 2008


தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசு உத்தரவாதம் வழங்காத பட்சத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாத நிலையை தோற்றுவிக்கும்

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1970களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மையாகும். இது ஊடகங்களின் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது எமக்கு மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வரவுசெலவுத் திட்டத்தின் மீதூன இறுதி வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்காத பட்சத்தில் எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நாம் செய்யும் துரோகமாகவே விமர்சிக்கப்படும்.
எனவே, வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர் அரசாங்கத் தரப்பிலிருந்து தொழிலாளர்களின் வருமானம் தொடர்பாக அரசாங்கம் அக்கறையை வெளிப்படுத்தாவிட்டால் எமது கட்சி எடுக்கின்ற அரசியல் நிலைப்பாட்டுக்கு கட்டுப்பட்டு நாம் வாக்களிக்க வேண்டிய கட்டயாத்தை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனம் நமுனுகலை பெருந்தோட்ட கம்பனியிடம் ஒப்படைக்க தீர்மானம்

பதுளை மாவட்டம் பசளை பகுதி டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்கள் அக் கம்பனி நிர்வாகத்தின் வழங்கப்பட்டிருந்த குத்தகை ரத்து செய்யப்பட்டு மீண்டும் நமுனுகலை பெருந்தோட்டத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்த ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கப்பட வேண்டும் என்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், யோகராஜன் ஆகியோரும் கம்பனி சார்பாக போல் ரத்நாயக்க, ரவிகுமார ரட்ண, பிரவீர் சமரதிலக ஆகியோரும் 183 தோட்டக் கமிட்டித் தலைவர்களும் கலந்து கொண்டனர். மேற்படி தொழிலாளர்களுக்கான அக்டோபர் மாதத்துக்கான சம்பளமும், ஏனைய சட்டபூர்வ கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வழங்கப்படுவதாகவும் இங்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து பேச அழைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் 2006ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இ.தொ.கா வின் வற்புறுத்தலினால் 2007ம் ஆண்டு மாற்றியடைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் 2008ம் ஆண்டுவரை செல்லுபடியாகும் நிலையில் இருந்தாலும் இது ஒரு வருடத்தில் மீண்டும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் அனைத்து தரப்பிலும் வலியுறுததப்படுகின்றது. இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் அங்கம் வகிப்பதால் இதனை மாற்றியமைக்கக் கூடிய தகுதியும் பலமம் பொறுப்பும் இச் சங்கத்திற்கு இருக்கிறது. எனவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு சரியான தீர்மானமொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆறு தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்க உத்தரவு


பதுளை மாவட்டத்தில் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என கொழும்பிலுள்ள தொழில் திணைக்கள தலைமையகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தொழில் ஆணையாளர் நாயகத்தின் தலைமையின் கீழ் திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பட்டகொட, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர், நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ அதிகாரிகளான போல் ரட்ணநாயக்க, பிரவீன் டி சமரசிங்க மற்றும் டஸ்கர் பொட்லிங் கம்பெனியின் சார்பில் முகாமைத்துவ அதிகாரி மனோஜ் பத்திராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்களின் சார்பில் வடிவேல் சுரேஷ், கே. வேலாயுதம், ஆர்.எம்.கிருஷ்ணசாமி, நாந் அமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். 2006 ஆம் ஆண்டு ஜுன் 14 ஆம் திகதி நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ நிர்வாகத்திற்குட்பட்ட மேற்படி தோட்டங்கள் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. எனினும் பல்வேறுபட்ட நிர்வாக பிரச்சினைகளும் கொடுப்பனவு தொடர்பான இழுபறிகளும் தொடர்ந்த நிலையில் மேற்படி தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். அன்றேல் நமுனுகுல தோட்ட நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் தொடர்ந்தன.
2008 அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படாமையால் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் 450 சேவையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளலாயினர். அத்துடன் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம் மற்றும் இதர கொடுப்பனவுகளும் வழங்கப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

மரங்கள் தறிக்கப்படுவதால் தேயிலை அழிவுக்கு வழிவகுக்கும்


மாத்தளை மாவட்டம் உக்குவளை, ரத்வத்தை, பன்சலதன்ன மற்றும் எல்கடுவ தோட்டங்களில் பெருமளவு மரங்கள் தறிக்கப்படுவதால் பாரியளவு தேயிலை பயிர் அழிவுக்குட்பட்டு வருவதாக இப் பகுதிவாழ் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனைத் எதிர்த்து அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதையடுத்து தொழிலாளர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் தலையிட்டு மரங்கள் தறிக்கப்படுவது நிறுத்தப்பட்டடிருந்தன. எனினும் மீண்டும் மரம் தறிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையை மூடிவிட திரைமறைவு சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியை காரணம் காட்டி மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு திரைமறைவில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ம.ம.மு வலப்பனை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். மேற்படி பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள கபரகலை, பிரேம்லீ, மத்துரட்ட, ஆல்கரனோயா, கிளன்டன், மெரி கோல்ட் ஆகிய தோட்டங்களின் தொழிற்சாலைகளின் பெறுமதிமிக்க உதிரிப் பாகங்கள் இரவோடு இரவாக தோட்ட நிர்வாகத்தினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனை தடுப்பதற்கு சமூக முரண்பாடுகளை ஒதுக்கி ஒன்று பட்டு தொழிலாளர் சமூகத்துக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது தொழிற்சங்களினதும் தோட்ட நிர்வாகங்களினதும் கடமையாகும்.

Sunday, November 16, 2008

தேயிலை விலை உலகச் சந்தையில் வீழ்ச்சியடையவில்லை- பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு

இலங்கையின் பிரதான பெருந்தோட்ட பயிரான தேயிலையின் விலை அண்மைக்காலமாக உலக சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தோட்டக் கம்பனிகள் நட்டம் அடைந்துள்ளதென கூறப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இவ்வாறான தவறான பிரச்சாரங்களினால் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாந்து விடக்கூடாது என பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஓ.ஏ. இராமையா தெரிவித்துள்ளார் அமெரிக்க டொலருக்கு ஏற்பட்ட சிறிய வீழ்ச்சி தேயிலை, இறப்பர் ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் பெருந்தோட்டங்களில் வேலை நாட்களை குறைத்து பெறப்படும் தேயிலையின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது பொய் பிரச்சாரமாகும்.
உலக சந்தையில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு தோட்டக் கம்பனிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. அவர்களின் இலாபத்தில் சிறு விகிதம் குறைந்திருக்கலாம். இதற்கு எந்த விதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் அல்லர். இதனால் தொழிலாளர்களின் வேதனைத்தையோ அல்லது வேலை நாட்களையோ குறைக்க முடியாது.

வரலாறு காணாத வகையில் கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இவ்வாறு அபரிமிதமான வருமானத்தை ஈட்டுகின்ற போது கம்பனிகள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இலாபம் குறைந்தால் மட்டும் தொழிலாளர்களின் வேதனத்தைக் குறைக்கவும் வேலை நாட்களில் மாற்றம் கொண்டுவர தீர்மானிப்பதும் எவ்விதத்திலும் நியாயமான செயல் அல்ல. தொழிலாளர் வேதனம் இலாப நட்ட அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. மாறாக உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தினை பெற்றுக் கொள்வதே அவர்களது உரிமை.

ஏரி பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் செயற்பை இறப்பர் உற்பத்திக்கான இலாபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன் இயற்கை இறப்பருக்கு எப்போதும் போன்று கிராக்கி இருந்து கொண்டுதான் உள்ளது. ஒட்டு மொத்தத்தில் கூறுவதானால் பெருந்தோட்டத் தொழில் துறையின் எதிர்கால பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. இதனை காரணமாக காட்டித் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடுவதில் நியாயம் இல்லை.

எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அதற்கான காரணங்களை கூறி பல்வேறு துறைகளில் விலை அதிகரிப்பை செய்யும் அரசாங்கம் உலக சந்தையில் அதன் விலை குறையும் போது விலை குறைப்பை செய்வதில்லை. இதேபோல் கடந்த காலங்களில் எதிர்பாராத அளவுக்கு தேயிலைத்துறை இலாபத்தை சம்பாதித்துக் கொடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்பனிகள் அந்த இலாபத்தில் ஒரு சத வீதத்தையேனும் சரி தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளதா?

இப்போது இலாபத்தில் வீழ்ச்சி என்றவுடன் தொழிலாளர்களை சுரண்டுவதா? இது தொடர்பாக இலங்கை தேயிலை சபையும் அரசும் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என இராமையா கேட்டுக் கொண்டார்.

Friday, November 14, 2008

சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் - மாகாண கல்வி அமைச்சர்

மலையக மாணவர்களுக்கு தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து புலமை பரிசில் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு கடந்த 12-11-2008 அன்று ஹட்டன சீடா கல்வி நிலையத்தில் இடம் பெற்றது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும், மத்திய மாகாணசபை கல்வி அமைச்சருமான எஸ் அருள்சாமி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் அருள்சாமி தெரிவிக்கையில் தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கி அவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்குவதே தமது நோக்கம் என்றார். இம் முன்மாதிரியை பின்பற்றி ஏனைய தொழிற்சங்கங்களும் இவ்வாறு வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றார். வெளிநாடுகளிலுள்ள தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களுக்கு சுற்றுலா செல்வதற்கு நிதி உதவி செய்கின்றது. பெரும் நிதியை சந்தவாக பெற்றுக் கொள்ளும் எமது தொழிற்சங்கங்ளும் இதை கடைபிடிப்பதில்லை. வெறுமனே தொழிற்சங்க போராட்டங்களில் விரயமாக்காமல் கல்வி துறையில் தமது தொழிற்சங்கம் அக்கறை செலுத்துவது குறித்து குறிப்பிட்டார். 5ம் ஆண்டு புலமைப்பரிகா ரூ 500 ஆகவும், உயர்தர வகுப்பில் தேறியவர்களுக்கு 750 ரூபாயும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவோம் எனக் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளாக தொழிற்சங்கங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் யாராவது மாணவர்களின் கல்விக்காக புலமைப் பரிசுகளை ஏற்படுத்தினோமா? புலமைப் பரிசை பல்கலைக்கழகம் வரை செய்ய வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். அதை நாம் தொடர்ந்து செய்வோமென்றார்.
இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தில் மலையக மக்களின் அபிலாஷைகள் பற்றிய மலையக மக்கள் முன்னணியின் புதிய முன் மொழிவுகள்

இனப்பிரச்சினை தீர்வுக்காக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை கடந்த 10-11-2008 சந்தித்த மலையக மக்கள் முன்னணியினர் மலையக மக்கள் அரசியல் அபிலாசைகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஏற்கனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் தாங்கள் முன்வைத்த முன் மொழிவுகளுடன் மேலும் சில புதிய முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர். அந்த விடயங்கள் வருமாறு

இலங்கையில் வாழும் சகல தேசிய இனங்களினதும் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் உண்மையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். (Genuine Power Sharing) மத்திய, ஊவா, சப்பரகமுவ ஆகிய மாகாணங்களில், மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து ஓர் அதிகாரப் பகிர்வு அலகு (POWER SHARING UNIT)உருவாக்கப்பட வேண்டும்.

தேவை ஏற்படின் மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை தனியாக மீள் வரையறை செய்து இந்தியாவின் பாண்டிச்சேரி முறை போன்று அல்லது உலக நாடுகளில் உள்ள நிலத் தொடர்பற்ற முறைகளை அடிப்படையாக கொண்டு இவ் அதிகாரப் பகிர்வு அலகு உருவாக்கப்படலாம். உதாரணமாக (பெல்ஜியம் முறை)

நாம் முன் மொழிந்திருக்கும் மேற்படி அதிகார பகிர்வலகில் உள்ளடங்காத மலையக தமிழ் மக்கள் பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து காணப்படுவதால் அவர்களது அரசியல் அபிலாஷைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஓர் அபிவிருத்தி சபை (DEVELOPMENT COUNCIL) அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெல்ஜியத்தில் காணப்படும் முறையைப் பயன்படுத்தலாம்.

நாம் முன் மொழிந்த அலகு பின்வரும் விடயங்களை கொண்டிருக்க வேண்டும்: சட்டவாக்க அதிகாரம் முழு அதிகாரத்துடன் கூடிய முதல் அமைச்சரும்அமைச்சர்கள் சபையும், ஆளுநர், காணி அதிகாரத்தோடும், பொலிஸ் அதிகாரத்தோடும் ஏனைய அதிகார அலகுகளுக்கு வழங்கப்படும் அனைத்து அதிகாரங்களும் நாம் முன் மொழிந்துள்ள அதிகார பகிர்வலகுக்கு வழங்கப்பட வேண்டும்.

அபிவிருத்தித் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

மலையக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்திற்கேற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய எல்லை நிர்ணயக்குழு அமைக்கப்பட வேண்டும்.

மலையக தலைமைகள் வரவுசெலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், நாட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, ஏற்கனவே பொருளாதார சுமைக்குள் சிக்கியிருக்கும், மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தோட்டப்புற மக்களின் அத்தியாவசியப் உணவுப் பொருளான கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தோட்டத் தொழிலாளர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மலையக தலைமைகள் அம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது உண்மையானால் எதிர் வரும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஐ.தே.க மாத்தளை மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களில் வேலை வழங்கி தொழிலாளர்களை தோட்டக் கம்பனிகள் ஏமாற்றுகின்றனர்.

தோட்டக் கம்பனிகள் விடுமுறை நாட்களில் வேலை வழங்கி, ஆண், பெண் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதுடன் அவர்களது உழைப்பை சுரண்டுவதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை இதற்கு தோட்டக் கமிட்டித் தலைவர்கள் துணைபோவது கண்டிக்கத்தக்க விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுமானால் சாதாரண நாட்களைப் போல 16 கிலோவிற்கான சம்பளப் பணமே வழங்கப்பட வேண்டும். இதுவே தொழிற்சங்கத்தின் சட்டமும் நீதியுமாகும். ஆனால் தோட்டக் கம்பனிகள் ஒன்றரை நாள் சம்பளத்திற்கு 24 கிலோ கொழுந்து பறிக்கும்படி தோட்ட நிர்வாகங்கள் நயவஞ்சகமாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர்.

உலகச் சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி- தொழிலாளர்களுக்குரிய கொடுப்னவுகளை வழங்க நிர்வாகம் மறுப்பு

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத் தொழிலாளர்களுக்குரிய வேலைவாய்ப்பினையோ அல்லது உரிய சம்பளத்தையோ வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மாதமொன்றுக்கு 24 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 12 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் 12 நாட்களுக்கு அரை நாள் சம்பளப் பணமே வழங்கப்படுகின்றன. மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாதத்தில் 20 க்கும் மேற்பட்ட நாட்கள் வேலை செய்தால் மாத்திரமே 75 சதவீத வரவு கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவுகள் உட்பட நாளொன்றுக்கு தலா 290 ரூபா சம்பளமாக தொழிலாளியொருவருக்கு கிடைக்கப்பெறும். இல்லையெனில் நாளொன்றுக்கு தலா 200 ரூபா வழங்கப்படுகின்றன. தற்போது இந்த 200 ரூபாவிலும் 1/2 பேர் என்ற பெயரில் நாளொன்றுக்கு தலா 100 ரூபா சம்பளமாக வழங்கப்படுகின்றன. இரத்தினபுரி கலபட (கீழ்ப்பிரிவு) தோட்டம்நிவித்திக்கலை, தொலஸ்வலை தோட்டம், கரவிட்ட பகுதி தோட்டங்களில் நாளொன்றுக்கு 1/2 நாள் சம்பளமே (100ரூபா) வழங்கப்படுகின்றன. நாள் முழுதும் வெயிலும், மழையிலும் கஷ்டப்பட்டும் தமக்கு தலா 100 ரூபா சம்பளம் வழங்கப்படுவது என்பது மிகவும் கொடுமையான விடயமென சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று கோரி, தத்தமது தொழிற்சங்களில் முறையீட்டுள்ளனர். இதேவேளை கலபட தோட்டத்தில் அக்டோபர் மாதம் 20 நாட்கள் வேலை செய்த போதிலும் நாளொன்றுக்கு (100 ரூபா) 1/2 பேர் என்றடிப்படையில் 10 நாட்களுக்கான சம்பளமே வழங்கப்பட்டுள்ளன இதனால் இத்தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் மாதச் சம்பளத்தை வாங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க பெல்மதுளை ரில்ஹேன தோட்டத்தில் சுழற்சி முறையிலான வேலை வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, November 10, 2008

மலையக அலகு தொடர்பாக ஆராய முடிவு

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் “மலையக அலகு” தொடர்பில் இம் முறை ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி பிரதிநிதிகளின் 87வது கூட்டம் இக் குழுவின் தலைவரான திஸ்ஸ விதாரண தலைமையில் கூடவுள்ள இக் கூட்டத்தில் இ.தொ.கா முன்வைத்துள்ள மலையக அலகு தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பாக மலையக மக்கள் முன்னணி இந்த யோசனைக்கு தமது தரப்பில் யோசனைகளை முன் வைப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளது. இதே வேளை மேலக மக்கள் முன்னணி தமது தரப்பு யோசனைகளை முன் வைப்பதற்கு கால அவகாசம் கோரியிருந்தது.

பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டுள்ள நிலையில் இ.தொ.கா முன் வைக்கப்பட்ட யோசனைகள் மேலும் இழுபறியை ஏற்படுத்தும் என்பதனால் மலையகத்துக்கு வெளியே வாழ்கின்றவர்களை உள்ளடக்கி கொள்ளும் வகையிலான தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு சர்வ கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில அங்கம் வகிக்கின்ற கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களான விஸ்வ வர்ணபாலா, திஸ்ஸ விதாரண மற்றும் பி. துயாரத்ன ஆகியோர் மலையக அலகு யோசனைக்கு கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Sunday, November 9, 2008

அமைச்சரவை அங்கீகாரத்தை எதிர்பார்த்துள்ள தோட்டச் சேவையாளர்கள்

இலங்கையின் பெருந் தோட்டங்களில் பணியாற்றிவரும் தோட்ட சேவையாளர்கள் தங்களின் பல வருட சேவையின் பின் அவர்களுக்கென்று காணி இல்லை. ஓய்வு பெற்றபின் வீடின்றி உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் இருக்கும் நிலை தொடர்பா இவர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவிக்கையில் 485 பேருந்தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட சேவையாளர்கள் சுமார் 15,000 இற்கு மேற்பட்டவர்களாவர். இவர்களில் 95 வீதமானவர்கள் இத் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என நிர்வகித்து வந்த இத் தோட்டங்கள் நிர்வாக சீர்கேடு, நட்டம் என்பவற்றால் 1992ம் ஆண்டு தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசு தோட்டங்களை நிர்வகிக்கும் போது 1965ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், சம்பள ஒப்பந்தம் உட்பட மாற்றங்களை செய்தது போலவே 1993ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கோரிக்கைளை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள முடிந்தது என்றார்.

தற்போது 20 தனியார் கம்பனிகள் 425 தோட்டங்களையும், அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் குருநாகல் பிளான்டேசன், ஆகியன 60 தோட்டங்களையும் நிர்வகிக்கின்றன. மொத்தமாக-485 தோட்டங்கள்.
இவர்களுக்கான காணிப்பிரச்சினை பல வருடகாலமாக இழுபறியில் உள்ளது. அமைச்சரவையின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். என்றார்
இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் -எஸ்.ஆறுமுகன் தொண்டமான்

மலையக இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அவர்களின் நலன் கருதி அவர்களுக்குரிய தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு என்பனவற்றோடு இணைந்து இளைஞர் வலுவூட்டல் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சு ஆரம்பித்துள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வை அட்டனில் ஆரம்பித்து வைத்துப்பேசியபோது தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம் எஸ்.ஜெகதீஸ்வரன் உட்பட பெருந்தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த வளவாளர்கள் வழங்கினர்.
சோல்பரி திட்டத்தின் அநீதி பற்றி முதற்படி

இலங்கையில் எல்லா இந்திய அபிப்பிராயங்களையும் தழுவி ஓர் உருவாய் திகழும் காங்கிரஸ் மகாசபை சோல்பரி சிபாரிசுகளை நவம்பர் மாதம் 14ம் திகதி 1945-ல் காரிய கமிட்டியில் பரிசீலனை செய்ததில் கண்ட முடிவு டொனமூர் திட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகள்.
மன்னர் பிரான் 1943-ம் வருட உள்நாட்டு ஆட்சிப் பிரகடணம். இவைகளெல்லாம் சோல்பரி திட்டத்தில் அலட்சியம் செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கையின் சுதந்திரமே நமது இலட்சியம். ஆட்சி அதிகாரம் நாட்டு மக்கள் கைக்கு மாற்ற வேண்டுமென்பதே நம் நோக்கம். எனினும் சம அந்தஸ்தும் நியாயமாய் எமக்கு அரசியலில் கிடைக்க வேண்டிய ஸ்தானமும் தேசிய பிளவை ஏற்படுத்துவதோடு இந்தியரை பயங்கரமான அடிமைத்தனத்தில் ஆழ்த்துகின்றது.
சிறுபான்மையோருக்கு நியாயம் வழங்குவதே கமிஷனர்களின் முதன்மையான நோக்கமாயிருந்தும் மந்திரிமார் நகல் திட்டத்தை தழுவித் தயாரித்தபடியால் சோல்பரி கமிஷன் சிறுபான்மையாயோர் உரிமைகளை பலிகொடுத்திருக்கின்றன. திட்டவட்டமான இந்தியர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த நாடெங்கும் 1945ம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 28ம் திகதி வரையிலும் சோல்பரி திட்ட அநீதிக்கு எதிரான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சிபாரிசுகளை வன்மையாக கண்டித்து சர்க்காருக்கு தந்திகள் அனுப்பப்பட்டன. சர்க்கார் மனமாற்றம் செய்து கொள்ளத் துணியவில்லை. பாட்டாளிகள் உள்ளத்தில் ஒரு கலவரம் பீதி பற்றிக் கொண்டது. அஸீஸ் முதல்வராக திரு. வைத்திலிங்கம் தூது கோஷ்டி தாய்நாடு சென்றது. இந்திய தேசிய தலைவர்களிடம் அஸீஸ் கூறியதாவது.

கடல் கடந்த இந்தியர்கள் பாரத தேசத்தின் பிரஜைகளாக இருக்க முடியாது. இலங்கையில் வாழும் இந்தியர்கள் இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இலங்கைத் தீவின் வளர்ச்சிக்காக தொழிலாளர் சமூகம் இரத்தம் சிந்தியது அல்லாமல் அவர்கள் எலும்புகள் கடந்த நூற்றாண்டுகளாய் தேசத்திற்கு உரமாயிருக்கின்றன.

கைத் தொழில்கள், பாலங்கள், வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் கட்டிடங்கள் இவைகளுக்கெல்லாம் இந்தியர் உழைப்பே காரணமாகும் என்றார்.
அதேநேரம் தொழில் ஆணையாளருக்கு கீழ்வரும் தந்தி செய்தி அனுப்பப்பட்டது. சோல்பரி சிபாரிசுகள் இந்தய தொழிலாளர்களுக்கு இழைத்திருக்கும் அநீதியை எதிர்க்க டிக்கோயா, டிம்புல பகுதியிலுள்ள 400 தோட்டங்களில் வதியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமே தக்க ஆயுதமாகக் கருதுகிறோம்.

ஐந்து வருடங்கள் இலங்கையில் வசித்தவர்களுக்கு பிரஜாவுரிமை ஓட்டுரிமை வேண்டும். இதனால் 400 தோட்டங்களிலுள்ள தலைவர்களும் அட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா காங்கிரஸ் நிர்வாகஸ்தர்களைக் கொண்ட தூது கோஷ்டி 28-10-1945-ல் துவங்க நோட்டீஸ் கொடுக்க உத்தேசித்திருக்கிறது. கவர்ணருக்குத் தெரியப்படுத்தவும் . ஆதாரம் முதற்படி 1950.

குறிப்பு:- இந்தியர், பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் வரும் முன்பே சோல்பரி திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப்பட்டனர் என இந்தத் தகவல் தருகிறது.
நன்றி- சத்தியம்

Saturday, November 8, 2008

தேயிலை செடிக்கு அக்கறைகாட்டும் அரசாங்கத்தால் தொழிலாளர் புறக்கணிப்பு – டி.அய்யாத்துரை

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2009ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றுப்பட்டுள்ளதாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் அரச ஊழியர்கள், விவசாயிகள், உட்பட ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிவாரணமளித்த அரசாங்கம் இந் நாட்டுக்கு இலங்கையின் தேசிய வருமானத்தில் 65 சத வீதத்தை வருமானமாக பெற்றுக் கொடுக்கும் ஆறு லட்சம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு பன்மடங்காக அதிகரித்துள்ள வேளையில் தோட்டக் கம்பனிகள் கூட்டொப்பந்தம் மூலமாக வகுத்துள்ள சம்பளத் திட்டம் தொழிலாளர்களை வறுமையில் வீழ்த்தியிருப்பது நாடறிந்த விடயம். இதைப் பற்றி அரசாங்கத்திற்கு பல முறை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் தேயிலை செடிக்கு காட்டுகின்ற அக்கறை கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு காட்டுவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் சிறுபான்மை மக்களையும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்

இந்நாடு அனைவருக்குமே சொந்தமானது –பூஜித ஜயசுந்தர

சிங்களவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் இந்நாடு சொந்தமானதாகும். அவர்க ளும் இந்நாட்டின் பிரஜைகளே. நாம் அவர்களை மொழியாலோ, சாதி, சமய இன, நிற ரீதியாகவோ ஒதுக்க்கீடு செய்யமுடியாது. நாட்டின் சுதந்திரம் பெறுவதற்கு சிங்கள, தமிழ் முஸ்லீம் தலைவர்கள் ஒன்றிணைந்து பாடுபட்டார்கள். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனை இன்றைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். என மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அட்டன் பிரின்சஸ் மண்டபத்தில் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

Friday, November 7, 2008


தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புக்கள் சொந்தமா?

அரசியல் தொழிற்சங்கத் தலைவர்களால் உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்படும் வார்த்தைகளை நம்பி தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் தங்களுக்கு வழங்கப்படும் ஏழு பேர்ச்சர்ஸ் நிலத்தில் நிர்மாணித்து வழங்கப்பட்ட வீடுகளை விருப்பப்படி விற்கவோ, வேறு பாணியில் கட்டிடத்தை மாற்றி அமைக்கவோ நினைத்து அப்படிச் செய்யும் போது நிர்வாகத்தினால் அதைக் கட்டுப்படுத்துவதோடு தவறும் பட்சத்தில் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அநேக தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்றனர். தொழில் நீதிமன்றங்களிலும் நீதவான் நீதிமன்றங்களிலும் இதை சென்று பார்வையிடலாம்.
வீட்டை இன்னொருவருக்கு விற்றதாகவோ மாற்றியதாகவோ நிர்வாகம் கருதி அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்தால் விபரமறியாத தொழிலாளர்கள் தொழில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து வருடக் கணக்கில் வழக்காடப்பட்டு இறுதியில் காணியும் வீடும் தனக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கத்தவறி, வழக்கில் தோல்வி அடைந்து தொழிலை இழப்பதோடு வீட்டையும் நிலத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நீதிமன்ற கட்டளையை மீறும் பட்சத்தில் எதுவித அறிவித்தலுமின்றி இரக்கமற்ற முறையில் வீட்டில் உள்ளவர்களை வெளியில் அனுப்புவதுடன் உடைமைகளுடன் வீசப்பட்டு நிர்வாகத்திடம் வீடு கையளிக்கப்படுகிறது. வீடும் அதைச் சுற்றியிருக்கும் நிலமும் தொழிலாளருக்கு சொந்தம் என்பவர்கள் அதற்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

பொகவந்தலாவை, டிக்கோயா, வட்டகொட, மடக்கொம்பரை போன்ற தோட்டப் பகுதிகளில் வேலை செய்யாதவர்கள் வீடுகளில் இருக்க முடியாது என்று நிர்வாகத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை யாவரும் அறிவோம். மடக்கொம்பரையில் முன்னாள் (பா.உ) சி.வீ வேலுப்பிள்ளையின் வீடு கூட பிஸ்கால் மூலம் கைப்பற்றப்பட்டது. டிக்கோயா பகுதியில் ஒரு தொழிற்சங்க பிரதிநிதிக்கும் இதுவே நடந்தது. மடக்கொம்பரை மேல் பிரிவுக்கு சொந்தமான சிறு நிலத்தை வாங்கி வீடு கட்டிய தொழிலாளிக்கு எதிராக பொலிஸ் மூலம் நிர்வாகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பல தோட்டங்களில் நிர்வாகங்கள் லயன்களையும், சேவையாளர்களின் வீடுகளையும் வங்களில் அடைவு வைத்து பணம் பெற்றுள்ளதை வருடாந்த அறிக்கைகளில் கம்பனிகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. தொழிலாளர்களால் லட்சக்கணக்கில் சேகரித்துக் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் கூட நிர்வாகத்துக்கே சொந்தமானதாகும். இந்த நிலையில்தான் தொழிலாளர்கள் பல்லாண்டு காலம் உழைத்து இறுதி காலத்தில் பெறப்படும் ஊழியர் சேமலாப நிதியை கொண்டு தாங்கள் இருக்கும் வீடுகளை நல்ல முறையில் திருத்தியமைக்கின்றனர். ஆனால் எந்தவொரு தொழிலாளியும் இந்த வீடுகளை சொந்தம் கொண்டாடவோ சட்டப்படி அடைவு வைக்கவோ முடியாது. காரணம் காணி, வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் தேவை.

இதேபோல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தொழிலாளர்கள் கடன் பெற்று 10 ஆண்டுகளுக்கும் 15 ஆண்டுகளுக்குமான பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி பெற்ற கடனை வட்டியுடன் உடனடியாக திருப்பிக் கிடைக்காது என்றும் உறுதிப் பத்திரத்தை வாங்கிக் கொடுக்க அமைச்சராக அப்போதிருந்த பெ. சந்திரசேகரன் அவர்களிடம் சவால் விடுத்திருந்தார் ஓ.ஏ. இராமையா என்பது நினைவு கூரத்தக்கது. 1996ம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்த இவ்வாறான முறை பணத்தை கடனுடன் திருப்பிய செலுத்திய தொழிலாளர்கள் எவருக்கும் உறுதிப்பத்திரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இன்னும் வீட்டுக்கு வாடகையைப் போல் ஒக்ஸ்போர்ட் போன்ற தோட்டங்களில் மாதாந்தம் 390 ரூபாய் அறவிடப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு அறவிடப்படும் என்பது தெரியவில்லை.

தேசிய வீடமைப்பு அதிகார சபை உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு அருகாமையில் விஸ்தரித்துக் கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும். அப்படி அனுமதி பெறாவிடில் நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.
ஆகவே இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தல்கள் வரப் போகின்றன. தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்காக எவ்வளவு பணம் நிர்வாகங்களால் அறவிடப்பட்டு அதிகார சபைக்கு செலுத்தப்பட்டன. என்ற விபரங்களை கூட பல தோட்டங்களில் அறிவிப்பதில்லை. எனவே இந்த முக்கிய விடயத்திலாவது தொழிற்சங்கங்கள் செய்யப் போவதை தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்

சிதம்பரம் ஜோதி-
நிர்வாகச் செயலாளர்

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்

தொடரும்…..
விலை வீழச்சியை காரணங்காட்டி தொழிலாளர்களின் சம்பளவுயர்வை மழுங்கடிக்க சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்தி குறைக்கப்படவேண்டும் என காரணம் கூறப்படுவது தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மழுங்கடிக்கும் சதியெனவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், போராட்ட நடவடிக்கைகளையும் பலமிழக்க செய்யும் நடவடிக்கையென மலையக தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே வாழ்க்கை செலவுப்புள்ளிக்கேற்ப சம்பள உயர்வு தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்

தேயிலையின் விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு

தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதனைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளோ விலை வீழ்ச்சியால் உற்பத்திகள் அனைத்தும் தேங்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்போ, மேலதிக வேலையோ வழங்க முடியாதுள்ளதாக காரணம் தெரிவிக்கின்றனர்.

இரு இலைகள் கொண்ட இளந் தளிர் கொழுந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படுகின்றன. இவ்வாறான கொழுந்து வழங்கப்பட்டாலும் அதனையும் முழுமையாக கொள்வனவு செய்ய தேயிலை தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 கம்பனிகளும் 100க்கு மேற்பட்ட சிறு தேயிலை மற்றும் தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் 25,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கடமை புரிகின்றனர். இத் தோட்டங்களை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Monday, November 3, 2008

தொழிலாளிக்கு கொலை அச்சுறுத்தல்

இரத்தினபுரி காவத்தை ஹவுப்பே, யாயின்ன தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதனால் அவர்கள் அத்தோட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 23-10-2008 ம் திகதி, இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை பெரும்பான்மையினர் சிலர் தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த தொழிலாளி அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்துள்ளார். அன்று மாலை இவரைத் தேடி வந்த பெரும்பான்மையினத்தவர்கள் சிலர் இவருடன் கைகலப்பிலீடுபட்ட போது தொழிலாளி அவர்களைத் தாக்கியதில் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதால் தமிழ்த் தொழிலாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையான இத்தொழிலாளியையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பெரும்பான்மையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் தோட்டத் தொழிலாளியின் இரு பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். வீட்டில் தனியாக உள்ள அவர்களது தாயைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

Sunday, November 2, 2008

உலக நிதி நெருக்கடி தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை

உலக நிதி நெருக்கடியினால் தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உற்பத்தி தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக சிறுதோட்டத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே பாதிப்புக்குள்ளாவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொண்டு மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தத் தகவல் பேரிடியைத் தந்துள்ளதோடு தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் சம்பள உயர்வு கோரிக்கை எதிர்நோக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது. இலங்கையில் கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் பெரிய கம்பனித் தோட்டங்களில் தொழிலாளர்கள் அனுபவிக்கும் சலுகைகளை இவர்கள் அனுபவிப்பதில்லை. தற்போதுள்ள நிலைமையில் கொழுந்து பறிப்பதை குறைத்து எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலையை மட்டுமே செய்யும் வகையில் ஆலோசனைகள் தெரிவிக்கப்படும் போது புதிய கன்றுகளை நாட்டுதல், உரமிடுதல், போன்ற வேலைகள் ஒரு சில நாட்களில் மாத்திரமே செய்ய வேண்டியுள்ளது. வேலையில்லாது கஷ்டப்படும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரச தரப்பினர் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.