Tuesday, August 19, 2014

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு அருகாமையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தாதிகள் பற்றாக்குறை

கண்டி மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் சுகாதார சேவையில் வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையில் ஈடுபடும் தாதிகள் அடங்களாக 485பேருக்கு பற்றாக்குறை காணப்படுவதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம தெரிவித்துள்ளார்.
 
அவர் இது குறித்து மேலும் கூறுகையில் இம்மாவட்ட வைத்தியசாலைகளில் விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் 28, வைத்தியர்கள் 163, வைத்திய சேவையாளர்கள் 294, சத்திர சிகிச்சை வைத்தியர்கள் 5, பொது சுகாதார சேவைகள் அதிகாரிகள் 56, குடும்ப சுகாதார சேவைக்கான தாதிகள் 150 என்ற வகையில் பற்றாக்குறை காணப்படுகின்றது
 
மத்திய மாகாண சபையினால் மத்திய நாட்டு சுகதேகிகள் என்ற கொள்கை திட்டம் மேற்கொள்ளப்பட்ட போதும் இவ்வாறான வைத்திய பற்றாக்குறையினால் அது செயலிழந்து காணப்படுகின்றது என்றார்.

வேன் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

ஹப்புத்தளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹப்புத்தளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று தியத்தலாவ காகொல்ல பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குறித்த விபத்து நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
விபத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் படுங்காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விபத்து தொடர்பில்   பண்டாரவளை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை விஜயபாகுகந்த மாவெலிகம பகுதியில் சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்ட மின் வேலியில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இன்று (19-08-2014) காலை 6.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.


 64 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தை ஓருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.