Saturday, October 31, 2009

மவுசாகலை லெமன்மோரா தோட்ட அவல நிலை: சாதக முடிவு கிடைக்காவிட்டால் நிர்வாகத்தை தொழிலாளர்களே ஏற்பார்களாம்!

மஸ்கெலியா, மவுசாகலை லெமன்மோரா தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேலை எதுவுமின்றி பெரிதும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான இத்தோட்டத்தில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக தொழிலாளர்கள் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மவுசாகலை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட லெமன்மோரா தோட்டம் 188 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. அமலசூரியகே என்பவருக்குச் சொந்தமான இத்தோட்டத்தில் 30 பெண் தொழிலாளர்களும் 21 ஆண் தொழிலாளர்களுமாக வேலை செய்து வருகின்றனர்.
சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் தேயிலை செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலப்பரப்புக்குள் இருக்கும் தேயிலைச் செடிகளுக்கு மேல் புற்களும், செடி கொடிகளும் வளர்ந்து காணப்படுகிறது.
28 குடும்பங்களைச் சேர்ந்த 150 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இத்தோட்டத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. தோட்ட நிர்வாகம் சீர்குழைந்துள்ள நிலையில் அந்த மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளையும் செய்து கொடுப்பதில்லை என தொழிலாளர்கள் கூறினர்.
தொண்டு நிறுவனங்கள் அத்தோட்டத் தொழிலாளர்களின் குடிநீர், சுகாதார, மற்றும் சில அடிப்படைத் தேவைகளுக்கு உதவி வருகின்றன. லயன் குடியிருப்புகளின் கூரைத் தகடுகள் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்தன. தொண்டு நிறுவனங்கள் அவ்றறுக்குப் புதிய கூரைத்தகடுகளை மாற்றிக் கொடுத்துள்ளன.
இத் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது அடிப்படைச் சம்பளமாக 185 ரூபா வழங்கப்படுகிறது. இதில் ஊழியர் சேமலாப நிதி, தொழிற்சங்க சந்தா மற்றும் ஏனைய கழிவுகள் போக மிகுதி பணத்திலேயே அவர்களின் அன்றாட வாழக்கையை சமாளிக்கின்றனர்.
மாதமொன்றுக்கு 10 தொடக்கம் 15 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. தேயிலை கொழுந்து இல்லாத நாட்களில் வேலையில்லாமல் இருக்கும் இத்தொழிலாளர்கள் காடாகியிருக்கும் தரிசு நிலப்பகுதியை தோட்ட நிர்வாகம் வீட்டுத் தோட்டங்களை செய்வதற்கு வழங்க சம்மதித்தால் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கம் என்கின்றனர். ஒருவருக்கு மாதத்தில் ஆகக்கூடிய சம்பளமாக ஆயிரம் ரூபா தொடக்கம் 1500 ரூபா பெறும் தொழிலாளர்கள் இன்றைய பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க முடியாதுள்ளனர்.
சுமார் 51 தொழிலாளர்கள் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க உறுப்பினர்களாக இருப்பதாக தோட்டத் தலைவர் எம். சுப்பிரமணியம் தெரிவித்தார். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அங்கத்தவர்களாக இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள், பெருந்தோட்டத் துறை அமைச்சர் உட்பட பலரிடம் பேசியும் பலனில்லை.
இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. கடிதப்பரிமாறல்கள் இடம்பெற்றதே தவிர வேறு தீர்க்கமான முடிவு எதுவும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 10, 15 நாட்களாக வேலை வாய்ப்பின்றி பட்டினியில் கிடக்கின்றனர். இவ்விடயம் குறித்து அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கும்வரை வேலைக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளனர். இந்நிலைமை தொடருமானால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும் என அஞ்சுகின்றனர். அதேவேளை போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லாமை இத்தோட்டத்தின் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து தோட்ட நிர்வாகமும் தொழிற் சங்கங்களும் இதற்கு தீர்க்கமான முடிவினைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தாங்கள் தோட்ட நிர்வாகத்தினை தாமே நடாத்த தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.
க. விக்னேஸ்வரன்
மஸ்கெலியா.
தினகரன் வாரமஞ்சரி

Friday, October 30, 2009

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் ஆட்சி அதிகாரம் இ.தொ.கா. வசம்

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் உதயகுமார் உட்பட அவருடன் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வசமாகியுள்ளது.
தலவாக்கலை – லிந்துலை நகரசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மீன் சின்னத்தில் போட்டியிட்டு இந்த நகரசபையின் தலைவராக உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த நகர சபை கடந்த மூன்று வருடகாலமாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் இவ்வருட ஆரம்பத்தில் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். இவ்வாறானதொரு நிலையில் தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் உட்பட அவரின் உறுப்பினர்கள் தற்போது இலங்கைத்தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த இணைவு தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடக செய்தியில் தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய வகையில் வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்படாததால் இந்த நகர சபைக்குட்பட்ட குடியிருப்பாளர் மற்றும் ஏனையோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நகர சபையை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
இதை உணர்ந்து கொண்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபைத் தலைவர் உட்பட அவருடன் சேர்ந்த நகர சபையின் உறுப்பினர்கள் நேற்று 26 ஆம் திகதி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டனர்.
இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட இ.தொ.கா. முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் உடனடி அபிவிருத்தித் திட்டங்களுக்காக இ.தொ.கா. பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் நிதியிலிருந்து 3 கோடி ரூபாவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இ.தொகாவிலிருந்து முன்னர் வெளியேறிய சிலரும் பிற அரசியல் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சிலரும் வெகுவிரைவில் இ.தொ.காவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்

Monday, October 26, 2009

நியமனம் பெற்ற மலையகப் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க கோரிக்கை

கடந்த 2007 ஆம் ஆண்டு மலையகப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்ற 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சியின்றி தற்பொழுது பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர். நியமனம் பெற்ற 3179 ஆசிரியர்களுள் ஒரு சிறு தொகுதியினர் மட்டும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சியின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு வார இறுதி நாட்களில் பயிற்சி வழங்க கல்வி அமைச்சு விண்ணப்பம் கோரிய போதும் சுமார் மூன்று மாதங்கள் கடந்தும் இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை குறித்து ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதேவேளை பயிற்சியற்ற ஆசிரியர்கள் மூலம் முறையான கற்றல் கற்பித்தல் செயலொழுங்கினை மேற்கொள்ள முடியாதிருப்பதாக அதிபர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாசிரியர்களுக்கு துரிதமாக பயிற்சி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிபர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Sunday, October 25, 2009

படிக்கும் வயதில் பங்களாக்களில் வேலையா?
பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதலும் அதனால் ஏற்படும் சிறுவர்களுக்கு எதிரான வன் முறைகளும்,கொலை தற்கொலைகளும் இவ்வாண்டிலும் குறைவடைந்ததாகத் தெரியவில்லை.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டு, அதற்கான தனிப் பொலிஸ் பிரிவு ஊக்கமுடன் செயற்பட ஆரம்பித்த பின்னரும் இன்னமும் மேற்கூறிய அவலங்கள் தொடர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்தோல்விக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது நடைமுறையில் உள்ள செயற்பாடுகள் ஆணிவேரை விடுத்து பக்க வேரை சாய்க்கும நடவடிக்கையாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களையும் அதற்கு துணை போகும் சில காவல் துறையினரையும் சிறுவர்களை வேலைக்கு அழைத்து வரும் இடைத் தரகர்களையும் நாம் இன்னமும் குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் தமது பிள்ளைகளை பலி ஆடுகள் போல வேலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களை மறந்து விடுகிறோம்.
தொடருகின்ற அவலங்கள் அனைத்திற்கும் எமது சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒருபுறமிருக்க மலையக பெற்றோரின் செயற்பாடே முக்கிய காரணமாகின்றது.பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதிருந்தால் இவ்வாறான அவலங்கள் ஏற்பட வாய்ப்பில்லையே! பிள்ளைகளை பறிகொடுத்தபின்னர் அழுது குளறுவதில் என்ன பயன்? முன்னைய படிப்பினைகளை இவர்கள் ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை?
குடும்ப வருமானம் பற்றாக்குறை என்பதற்காக சிறுபிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் இவர்களின் பாசம், அன்பு என்பன கேள்விக்குறியாகின்றன. கல்வி அறிவு இல்லாத நிலையும், மதுவுக்கு அடிமையாகியுள்ள பழக்கமும்,தரகர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்குகின்றமையுமே இதற்குக் காரணம்.
இன்று பூதாகரமாகியுள்ள இப்பிரச்சினையை வேரோடு சாய்த்திட வேண்டுமானால், பெற்றோருக்கான அறிவூட்டலே முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும். சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் செயற்பாடானது சிறுவர் துஷ்பிரயோகம் என்பதையும், தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் பெற்றோருக்கு எடுத்துரைக்க வேண்டியதும் இன்றைய மலையக படித்த வாலிபர்களினதும் மலையக பாடசாலை ஆசிரியர்களினதும் தலையாய கடமையாகும். மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றி ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருப்பதுடன் அது தொடர்பான அறிவூட்டலை மாணவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.
பெற்றோர்கள் பொறுப்பானவர்களாக இருக்கும் பட்சத்தில் சிறுவர்களுக்கு இவ்வாறான அவலங்கள் ஏற்பட வழியில்லை. பிள்ளைப்பராயம் என்பது கல்விக்குரிய பராயமே அன்றி வேலை பார்க்கும் பருவமல்ல என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும். கல்வியின் மூலமே மலையகம் மேன்மை அடையும், விழிப்புறும், கல்லாதார் கண்ணில்லாதவர்கள், எவராலும் ஏமாற்றப்படக் கூடியவர்கள் என்பதை உணர்த்த வேண்டும். கல்வியின் மூலம் எதிர்கால வேலைவாய்ப்பும்,சுபிட்சமும் கிட்டுவதுடன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான் என்பதையும் உணர்த்த வேண்டும்.
மலையக மக்களை கல்வியறிவற்றவர்களாக இருந்தால்தான் அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என முதலாளி வர்க்கம் நினைக்கிறது. மலையக சிறுவர்கள் அதிகமாகப் படிப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இன்றுள்ள அரசியல் விழிப்புணர்வானது இதை உடைத்தெறிந்து வருகிறது.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் அங்கு அனுபவிக்கும் கஷ்டங்கள், அவர்களுக்கு எதிராக புரியப்படும் வன்முறைகள் என்பவற்றையும், பாலியல் ரீதியாக ஏற்படக் கூடிய இன்னல்களையும் பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகளை கற்கும் வயதில் வேலைக்கு அனுப்புவதன் மூலம், நிகழ்காலத்தை மட்டுமன்றி எதிர்காலத்தையும் இழந்து விடுகிறோம்.
சந்திரகாந்தா முருகானந்தன்...-
தினகரன் வார மஞ்சரி

Saturday, October 24, 2009

சுய தொழிலில் ஈடுபட மலையக இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு

மலையகத்தில் தொழிலற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்ட நடவடிக்கையினால் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 78 பேருக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவி வழங்கும் வைபவம் ஒன்று நேற்று 23 ஆம் திகதி ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
சௌயமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் நவசக்தி திட்டத்தின் மூலம் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படும் இந்தக் கடனுதவி வழங்கும் வைபவத்தில் பிரஜா சக்தி நிலையங்களின் ஊடாக இனங்கண்ட 78 பேருக்கு மாடு, கோழி வளர்ப்பு, விவசாயம், வியாபாரம், வேல்டிங், தையல் போன்ற சுய தொழில்களை மேற்கொள்ளவே இந்தக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன் இவ்வருடம் ஜனவரி மாதம் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 78 இளைஞர்களுக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவிகளை வழங்கினோம். அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 69 பேருக்கு இவ்வாறான கடனுதவிகளை வழங்கினோம்.
தற்போது மூன்றாம் கட்டமாக 36 லட்சம் ரூபாவை நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழிலுக்கான கடனுதவி வழங்கியுள்ளோம்.
எனது அமைச்சுக்கும் மக்கள் வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு ஒன்றின் மூலமாகவே இந்தக் கடன் வழங்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் சுய தொழிற்துறை வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனை நன்கு புரிந்து கொண்டு சுய தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கூட்டாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது இந்தத் தொழிற்துறையை மேலும் முன்னேற்ற முடியும்.
சுய தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இந்தத் தொழிலில் உரிய கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மலையக இளைஞர் யுவதிகளுக்குத் தொடர்ந்து எனது அமைச்சின் ஊடாக சுய தொழில் வாய்ப்புக்கள் மேலும் பெற்றுக் கொடுக்கப்படும்" என்றார்
மலையகப் பாடசாலைகளில் 'சுகாதாரமும் போஷாக்கும்” வேலைத்திட்டம்

பெருந்தோட்டப் பகுதிப் பாடசாலைகளில் சுகாதாரமும் போஷாக்கும் என்ற தலைப்பில் வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த கல்வி அமைச்சு முன்வந்துள்ளது. அண்மையில் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் நாட்டிலுள்ள அனேக மாணவர்கள் குறிப்பாக மலையகப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் போஷாக்கின்மை காரணமாகவே கல்வித்துறையில் பின்னடைந்து காணப்படுவது தெரிவந்துள்ளது. அதே நேரம் நகரச்சூழல்களில் உள்ள பலர் அதிபோஷாக்கு காரணமாக உடல் உள நிலை பாதிக்கப்பட்டு துன்பப்படுவதாகவும் இனம் காணப்பட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள 101 ஆசிரிய மத்திய நிலையங்களுக்கூடாக ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் சுகாதாரக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் மூலமாக பல்வேறு சுகாதார செயற்திட்டங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள தமிழ்மொழிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வலய ஆசிரியர் மத்திய நிலையத்தில் செயலமர்வுகள் இடம்பெற்றன. இதில் தத்தமது பிரதேசத்திற்கு ஏற்றவாறு போஷாக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது, மாணவர்களுக்கான போஷாக்கு மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பன போன்ற செய்முறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

Monday, October 19, 2009

மலையகத்தில் பெருகிவரும் டிஷ் அன்டனா கலாசாரம்

இன்றைய இளைஞர்கள் கையில்தான் நாளைய சமூகம் தங்கியுள்ளது. இவர்களின் கல்வி நடவடிக்கைகள், நடையுடை பாவனை, கலை கலாசார, பண்பாட்டு, விழுமியங்கள் எவ்வாறாகக் காணப்படுகின்றதோ, அதனைப் பின்பற்றியே சிறுவர் சமூகமும் வளரும். எனவே இளைஞர்கள் என்போர் சமூகத்தினதும் காலத்தினதும் கண்ணாடிகள் இளைஞர்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயமும் நடவடிக்கையும் சமூகத்திலும், நாட்டிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய பெருந்தோட்ட இளைஞர்களை எடுத்துக் கொண்டால் சிலர் தன்னுடைய சொந்த வேலையைக் கூட செய்து கொள்ள முடியாத சோம்பேறிகளாக இருக்கின்றார்கள். இதுவரையும் தாய், சகோதரிகள் அவர்களுடைய உடைகளைக் கழுவிக் கொடுப்பது தொடக்கம் அன்றாட வேலைகளை செய்வது வரை பிறரில் தங்கி வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் ஒரு வேலைக்கும் செல்லாமல் இருப்பதுதான் வேதனையான விடயம். இன்றும் கூட எல்லா விடயங்களுக்கும் தாய் தந்தையரை நம்பி வாழும் இளைஞர் கலாசாரம் தோட்டப் பகுதியில் இருக்கின்றது. இவ்விளைஞர்கள் சுயமாக எந்த வேலையையும் தேடுவது குறைவு. அல்லது சுய தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுவதும் குறைவு.
அப்படியே பிற நகரங்களுக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கு தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை செய்யாமல் வந்து விடுகின்றனர். சிலர் கையடக்க தொலைபேசிகள் வாங்கவும், உடைகள் வாங்கவும் வேலைக்குச் செல்கின்றார்கள். சப்பாத்து ஒன்று வாங்குவதற்கு கூட வேலைக்குச் சென்று அதை வாங்கியவுடன் திரும்பியவர்களும் உண்டு. இவர்களின் நோக்கம் மேற்கூறிய பொருள்களில் ஏதாவது ஒன்றை வாங்கியவுடன் அவர்களின் நோக்கம் நிறை வேறிவிட்ட ஒரு மாயையில் வீட்டுக்கு வந்து விடுகின்றார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கக் கூடாது. சம்பளமும் கைநிறையக் கிடைக்க வேண்டும். உடனேயே பதவி உயர்வு கிடைக்க வேண்டும். குறுகிய காலத்திலேயே பெரிய ஆளாக (பணக்காரனாக) வர வேண்டும் என்ற சிந்தனை இவர்களிடத்தில் மிக அதிகமாக உள்ளது. இவர்களின் சிந்தனையில் தவறு இல்லை. அதனை அடைய பல முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.
குறிப்பாக கல்வியில் பின் தங்கியவர்கள் க.பொ.த. (சா.த) க.பொ.த. (உ.த) பரீட்சையில் சித்தியடையாதவர்கள், தொண்டமான் தொழிற் பயிற்சி கல்லூரி, நுவரெலியா தொழிநுட்பக் கல்லூரி, சர்வோதயம், அரசசார்பற்ற நிறுவனங்கள், போன்றவற்றில் இணைந்து சுய தொழிலைக் கற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் இல்லை.
வயரிங் வேலை, மேசன், கணனி ஹோட்டல் முகாமைத்துவம், தையல், சமையற்கலை, மணப்பெண் அலங்காரம், வெல்டிங், பிளம்பர், அச்சுத் தொழில், தச்சுத் தொழில், புகைப்படப் பிடிப்புப் பயிற்சி போன்ற எத்தனையோ விதமான சுயதொழில் வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் தான் வாழுகின்ற தோட்டத்திலேயே மரக்கறிச் செய்கை, வீட்டுத் தோட்டம், கையடக்கத் தொலைபேசி, முச்சக்கரவண்டி திருத்தவேலை, சாரதிப் பயிற்சி, சிறு வியாபாரம் கோழி வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, மாடுவளர்ப்பு, காளான் வளர்ப்பு, பூச்செய்கை, மூலிகைத் தாவரங்களை வளர்த்தல் போன்ற பல்வேறு வேலைகளை சுயமாக செய்யலாம். ஆனால் இவர்கள் இதனை விரும்புவது மிகவும் குறைவு. காரணம் இத்தகைய சுய தொழில்கள் பற்றிய போதுமான வழி காட்டல் ஆலோசனைகள் கிடைக்காமை ஆகும்.
இன்றைய இளைஞர்கள் பொழுது போக்காக தொலைக்காட்சி பார்த்தல், வி.சி.டி பார்த்தல், கையடக்கத் தொலை பேசியை அளவுக்கு மிஞ்சிய பாவனையும் துஷ்பிரயோகமும், இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் உள்ள கேபிள் தொலைக்காட்சியும் டிஷ் அன்டனாக் களும் இவர்களைப் படாதபாடு படுத்துகின்றன. இந்த சினிமா கலாசாரத்தினால் மலையகம் இன்று சிறிது சிறிதாக சீரழிந்து கொண்டிருப்பது பலருக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் 15000 ரூபாவை செலவு செய்து டிஷ் அன்டனாவை வாங்கி போட்டுவிட்டு, வருடம் முடிவில் இருந்து மாதம் மாதம் 340 ரூபாவை செலுத்தி வருகின்றார்கள். இதனால் தோட்டத்தில் தற்போது படித்துக் கொண்டிருக்கின்ற பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். சில நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் நடந்து கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமான விடயம் ஆகும்.
இன்றைய இளைஞர்கள் அதிகமானோர் மது பாவனையில் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்க விடயம். இன்றைய இளைஞர்கள் 98வீதமானவர்கள் மலையகத்தில் மதுவினைப் பாவிக்கின்றார்கள், இதில் பாடசாலை செல்லும் மாணவர்களும் விதிவிலக்கல்ல. அத்துடன் புகைத்தல், (பீடி, சிகரட்) பான்பராக் போடுதல், ஹென்சி பாவித்தல், குலி போன்ற தடை செய்யப்பட்ட எல்லா விடயங்களையும் இவர்கள் சிறு வயது முதலே பழகிக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம் பெற்றோர்களின் கண்காணிப்புக் குறைவே ஆகும்.
எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடிய அக்கறைகாட்ட வேண்டும்.
குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளின் (மகன்,மகள்) உடைகள், முடிவெட்டு, ஊர் சுற்றுதல், தகாத செயற்பாடுகள், கெட்ட நண்பர்களின் சகவாசம், பெற்றோர்களுக்கு அடங்காமை, தான் தோன்றித்தனமாக இருத்தல் போன்ற பல்வேறு விடயங்களையும், பெற்றோர் கள், முதலில் கவனித்து அவர்களை வழிநடத்த வேண்டும்.
படிக்கின்ற காலத்திலேயே காதல் வசப்படுவதும் இன்று சர்வசாதாரணமாகி விட்டது. குறிப்பாக (க.பொ.த. சா.த) (க.பொ.த. உ.த) மாணவர்கள் சிலர் காதலில் முழுமையாக ஈடுபட்டு, படிக்கின்ற வயதில் ஊர் சுற்றித்திரிந்து இறுதியில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றார்கள். (சில மாணவர்களை பெற்றோர்கள் கண்டிக்கும் போது விசம் அருந்துவது மலையகத்தில் அதிகமாக உள்ளது) சினிமாவில் வருவது போல் இவர்கள் நடக்கப் பார்க்கின்றார்கள்.
இதனால் வாழ்க்கையில் ஏமாறுவது சினிமாக்காரர்கள் இல்லை நாங்கள் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில மாணவர்கள் பொது இடங்களில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், பூங்காக்கள், ஏன் வாடி வீடுகளில் கூட சில மாணவிகள் இருந்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. பாடசாலைச் சீருடை என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் அணிய முடியும். இச் சீருடைக்கு ஒரு புனிதத்தன்மை உள்ளது. அந்த உடையை கறைபடிந்ததாக உருவாக்க எந்த ஒரு பாடசாலை மாணவனும் முயற்சிக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை விட அந்தப் பாடசாலைக்கே அவப் பெயர் ஏற்படும் என்பதை உணர வேண்டும். சில மாணவிகள்ஃ மாணவர்கள் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்கின்றோம் என பெற்றோரிடம் கூறி விட்டு காதல் லீலைகளில் ஈடுபடுவது மலையகப் பிரதேசத்தில் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்து பிள்ளைகளைப் படிக்க வைத்தால் சில பிள்ளைகள் பெற்றோருடய நிலையை உணராமல் வாழ்க்கையை சீரழிப்பது வேதனையான விடயமாகும்.
இளைஞர்கள் இளமையிலேயே ஒரு தொழிலைத் தேட வேண்டும். சம்பாதிக்க வேண்டும். உயர் கல்வி கற்க வேண்டும். தன் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும். வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ வேண்டும். சக நண்பர்களைப் பார்த்து திருந்த வேண்டும். ஏனைய சமூகத்தில் உள்ளவர்களைப் பார்த்து பல விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை காதலுக்குக் கேளிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது.
எனவே இனிவரும் காலங்களிலாவது மலையக இளைஞர்கள் சுய தொழில் வாய்ப்புகளை நாட வேண்டும். சுயமாக ஒரு தொழிலை தனது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றாற் போல் தேட வேண்டும். 18வயதுக்கு மேல் பிறரை எதிர்பார்த்து வாழக் கூடாது. கெட்ட நண்பர்கள், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். உழைத்தால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும். இனிமேலும் பிறருக்கு சுமையாக எவரும் வாழ முயற்சிக்கக் கூடாது.
வீண் கர்வம், வரட்டு கௌரவம், பிறரை குறை சொல்லும் பழக்கம், தேவையற்ற விமர்சனங்கள், பெறாமை, வஞ்சகம், சூது போன்றவற்றை விட்டு விட்டு முடியுமானவரை வெளி உலகிற்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
கொட்டகலை இரா. சிவமணம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Wednesday, October 14, 2009

சம்பள உயர்வுக்குப் பின்னரும் 390 ரூபா சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு 405 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும் பதுளை மாவட்டங்களில் பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் 390 ரூபாவையே சம்பளமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் 75 வீதம் வேலைக்கு சென்றிருந்த போதிலும் நாளாந்த படியாக 30 ரூபா வழங்கப்படவில்லை.
மேலும் அநேகமான தோட்டங்களில் ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்றபோது வேலை செய்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் வேலை செய்தால் ஒரு நாள் சம்பளம் என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக கொழுந்து பறிப்புக்கு 30 ரூபா வழங்கப்படும் என கூட்டொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும் அவ்வாறு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
பதுளை மாவட்டத்தில் வரட்சியினால் தோட்ட நிர்வாகம் கோரும் 18 கிலோ கொழுந்து பறிக்க முடியாதுள்ளது. அத் தொழிலாளர்கள் எட்டு மணிநேரம் வேலை செய்த போதும் அரை நாள் சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலி, மாத்தறையில் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை

தென் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை தோட்டப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வாக்களிக்க வாக்களார் அட்டைகள் இருந்தும் அவர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய தேசிய அடையாள அட்டையோ, வேறு ஆவணங்களோ சமர்ப்பிக்காததால் வாக்களிக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் சம்பள உயர்வு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் மீண்டும் முன்னெடுப்பதற்கு மலையக தொழிற்சங்கங்கள் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தேசிய தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிக்கவுள்ளதாக இ.தொ.ஐ.மு தொழிற்சங்க தலைவர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்படட கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிறது என்றார். ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழிய நம்பிக்கை நிதி ஆகியவற்றை வழங்குமாறு தொழில்கொள்வோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட 405 ரூபா சம்பளமே வழங்கப்படுவதில்லை எனத்; தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயங்கள் குறித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணியும் இந்தப் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்

Tuesday, October 13, 2009

மலையக மக்களின் உயர்வு பற்றி தந்தையிடம் பேசுவேன் -கனிமொழி

மலையகப் பெருந்தோட்ட வாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த மத்திய மாநில அரசுகளின் உதவிகளைப் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய நாடாளுமன்ற குழுத்தலைவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் ரி. ஆர். பாலு உறுதியளித்துள்ளார்.
மலையகப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு தெரிவித்தார். மேற்படி மலையகம் வாழ் தமிழ் மக்களின் நிலைமைகளைத் தமது தந்தையார் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், அம் மக்களின் நிலைமைகளை எடுத்துக்கூறி அவர்களின் உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் முதல்வரின் புதல்வியும் எம்.பி யுமான கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக்குடியிருப்பு வாழ்க்கை முறையை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறினர்.
அதேநேரம் மலையகத்தில் உயர் கல்விக் கலாசாலைகளை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் கல்வித்துறையை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அட்டனில் முக்கிய இடங்களுக்கு இந்திய எம்.பிக்கள் விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை நோர்வூட் நகரில் அமைந்துள்ள தொண்டமான் விளையாட்டரங்கைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இ. தொ. கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சரும், இந்திய நாடாளுமன்ற குழுவுக்குத் தலைமை தாங்கியவருமான டி. ஆர். பாலு தலைமையில், கனிமொழி எம்.பி, தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோரும் ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்குக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து வாகனப் பேரணியில் அட்டன் மாநகர் மணிக்கூண்டுச் சந்தி வழியாக சௌமியமூர்த்தி தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
கைத்தொழில் பயிற்சி அரங்குகளை அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், பிரதி அமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் இ. தொ. கா. பிரதித் தலைவர்களும், கலந்துகொண்டனர்.
10 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் கொட்டகாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தொழிலாளர் பேட்டையைப் பார்வையிட்டு பின்னர் நுவரெலியா நகர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இக் குழுவினரைச் சந்திப்பதற்கு நகர வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் பெருந்திரளாக அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்தனர். நுவரெலியா, அட்டன், பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். பலத்த பாதுகாப்புடன் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீபாவளி முற்பணமாக 7500 ரூபா- சங்கங்கள் முன் வருமா?

தோட்டத் தொழிலாளர்கள் 290 ரூபா நாட் சம்பளம் பெறும்போது தீபாவளி முற்பணமாக 4500 ரூபாவை தோட்ட நிருவாகம் வழங்கி வந்தது. புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதை பின் நாட்சம்பளம் 405 ரூபா உயர்த்தப்பட்டதையிட்டு தொழிற்சங்கங்களை பாராட்டுவதோடு இம்முறை தீபாவளி முற்பணத்தை குறைந்தது 7500 ரூபா பெற்றுத் தர தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் தீபாவளிப் பண்டிகையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய போதியளவு வருமானமில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டங்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பெரும்பாலான தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை முற்பணத்தை நம்பித்தான் திட்டம் வகுக்கின்றனர். இவை ஒன்று மட்டும்தான் தொழிலாளர்களுக்கு வட்டி இல்லாமல் 10 மாத தவணை முறையில் கழித்துக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படுகிறது. எனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 4500 ரூபா முற்பணத்தை அதிகரித்து 7500 ரூபா வழங்கதோட்ட நிருவாகம் முன்வர வேண்டும்.
தோட்டங்களில் மழை, வெயில் என்று பாராமல் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு அதிக லாபத்தைப்பெற்றுக் கொடுக்கின்றனர். இதனை உணர்ந்து தோட்ட நிருவாகம் அவர்களின் முற்பணத்தை அதிகரிக்க முன்வர வேண்டும். புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாட் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 115 ரூபா சம்பளம் உயர்ந்துள்ளது. இதற்கு அமைய நிலுவை சம்பளம் ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த நிலுவையில் 50 வீதத்தை எதிர்வரும் தீபாவளி பணிடிக்கைக்கு முன் கொடுக்க வேண்டும். 25 வீதத்தை நத்தார் பண்டிக்கைக்கு முன்னமும், எஞ்சியுள்ள 25 வீதத்தை அடுத்தாண்டு ஜனவரியில் அதாவது பொங்கல் தினத்துக்கு முன்னர் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளி ஒருவர் 25 நாட்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் ஒரு நாளைக்கு 115 ரூபா அடிப்படையில் 25x115 =2875 ரூபா ஆகும். (ஒரு மாதம்) (நாட்கள்) - சம்பளம். ஐந்த மாதம் 5X2875= ரூபா 14375 ரூபா நிலுவை சம்பளம் கிடைக்கும், இதில் உதாரணமாக மொத்தம் ஐம்பது வீதம் 7187.50 ஆகும். தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். மேற்கூறிய தீபாவளி முற்பணமும், அதிகரித்த புதிய சம்பளத்தின் நிலுவை சம்பளமும் இரண்டும் ஒழுங்காகக் கிடைத்தால், (2009) இம்முறை தோட்டங்களில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை காண முடியும். இல்லாது போனால் தீபாவளி களை காட்டாமல் அமைதியாகிவிடும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டி. வசந்தகுமார்

Saturday, October 3, 2009

தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகங்களின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்

தோட்டக் கம்பனிகளுடன் தொழிற் சங்கங்கள் செய்து கொண்டுள்ள கூட்டுத் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின்படி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வினை பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் சூழ்ச்சி வேலைகளில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபடலாம். இதனை தொழிலாளர்களும், தொழிற்சங்களும் கூட்டாக இணைந்து முறியடிக்க வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவருமான எஸ். இராமநாதன் அளவத்து கொடையச் சேர்ந்த விலான தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு 405 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை சகல தோட்ட நிர்வாகங்களும் வழங்குவதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சர் எடுத்து வருகிறார்.
சம்பள உயர்வை வழங்கத் தீர்மானிக்கப்பட்ட பிறகு தோட்டத் தொழிலாளர்கள் செய்யும் வேலையின் அளவை அதிகரிப்பதற்கு சில நிர்வாகங்கள் முயன்று வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இப்படி அவர்களால் தன்னிச்சையாக செயற்பட முடியாது.
வழமையான வேலையில் எந்தவித மாற்றம் செய்வதானாலும் தோட்டத் தலைவர்களுடன் பேசி அதன் பிறகே ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும். இந்த விடயம் கூட்டு ஒப்பந்தத்தில் தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
கொழுந்து பறிக்கும் அளவும், இறப்பர் பால் சேகரிக்கும் அளவும் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டு வந்த அளவாகவே இருக்க வேண்டுமேயொழிய நிர்வாகங்களின் தன்னிச்சையான முடிவின்படி இதில் எவ்வித மாற்றமும் செய்வதற்கு தொழிலாளர்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்றார்.
அரசின் அபிவிருத்தித் திட்டங்களில் தோட்டப் பகுதிகள் உள்ளடக்கப்படுவதில்லையா?

அரசு நாட்டில் உள்ள 2-5 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு ஒரு கிளாஸ் பசும்பால் திட்டம் கொண்டு வந்துள்ளது. இது எத்தனை தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது? மகிந்த சிந்தனையின் கீழ் தாய்மாருக்கான போஷாக்கு பொதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எத்தனை தோட்டப்புற தாய்மார்களுக்கு கிடைக்கின்றது. அது தவிர அரசாங்கத்தால் இலவசமாக பெற்றுத்தரப்படும் சமூக அபிவிருத்தி தொழில் விருத்தி சிறுவர் அபிவிருத்தி மற்றும் கலாச்சார நோக்கங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களும் அதற்கான அரச நிதிகளும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் கிடைத்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் தோட்ட மக்களுக்கு கிடைக்கின்றனவா?
அப்படியானால் அரசாங்கம் தோட்ட மக்களை புறக்கணித்து செயற்படுகி;றதா? இல்லவே இல்லை என்கிறார் அம்பகமுவ பிரதேச செயலாளர் நாயகம் கே.பி. கருணாதிலக்க. அரசாங்கம் நாட்டு மக்களின் சேமநலனை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அதற்கான நிதியுதவிகளையும் அளித்து வருகின்றது. தோட்ட மக்களும் இந்நாட்டின் மக்களே என்ற அடிப்படையில் அவர்களுக்கும் இவ் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கு கொண்டு பலன் பெற சகல உரிமையும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தோட்டப் பகுதிக்கான சேவைகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கான சேவைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. ஆயினும் இத் திட்டங்கள் தொடர்பாக இம் மக்கள் அறிந்திராமையும் இதனை உரிய வகையில் இம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்குரிய முகவர்கள் தெளிவு பெற்றிருப்பதில்லை என்பதாலும் அரசின் இத்தகைய திட்டங்கள் இம் மக்களை சென்றடைவதில்லை. இவ் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அரசின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வருகின்ற அரச ஊழியர்கள் கூட இத் திட்டங்கள் தொடர்பான பூரண அறிவை கொண்டிருப்பதில்லை. இவ்வாறான காரணங்களாலேயே அரசின் பல அபிவிருத்தித் திட்டங்கள் தோட்ட மக்களை சென்றடையவில்லை. இது ஒரு பாதகமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அரசின் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறு பங்கு கொண்டு பலன் பெற முடியும் என்ற தெளிவினையும், அறிவினையும் தோட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமொன்றை கெயர் சர்வதேசத்தினூடாக நாம் தற்போது முன்னெடுத்து வரும் திட்டத்திற்கிணங்க பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் இருந்து மற்றவர்களுக்கு தெளிவுப் படுத்தக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்ற ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் படித்த இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு அரசின் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற அறிவினையும் பயிற்சியையும் வழங்கி வருவதாக இச் செயற்திட்டத்தின் இணைப்பாளர் விமன்சசொய்சா தெரிவித்துள்ளார்.
குறிஞ்சி குணா
நன்றி - சூரியகாந்தி

Friday, October 2, 2009

மலையகப் பகுதிகளில் கடும் மழை மண்சரிவு அபாயம்

நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு ள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளியால் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. பிரமாண்டமான மாறா மரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து வீழ்ந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.
கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன.
இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடை ந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் மின்வெட்டும் இடம் பெற்றுள்ளது.