தேயிலை தின விழா
புதுடில்லியில் 2005ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக தேயிலை தினத்தின் நான்காவது ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் 15ம் திகதி நாவலப்பிட்டி தமிழ் கலாச்சார மண்டபத்தில் கொண்டாடுவதற்கு பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இத் தினத்தின் அடிப்படை தொனிப்பொருளும் குறிக்கோளும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான “வாழ்வதற்காக சம்பளம்” முதலாவது புதுடில்லி பிரகடனத்தில்
• பெருந்தோட்டப் பெண்களின் கருத்துகளுக்கு உரிய இடம் வழங்கப்படும்,
• பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
• குடும்ப அளவை தீர்மானிப்பதிலும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளிலும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இத் தின நிகழ்வில் பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் பங்காளி நிறுவனங்களின் சார்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்வர்.
பெருந்தோட்டத்துறை அடையாமல் இருக்கும் அரசின் திட்டங்கள் விடயத்தில் கவனத்தை செலுத்தி அது வந்தடைவதற்காக பிரச்சாரம் செய்தல்.
இத்தினத்தை ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்காலிக தொடர் வீடுகளில் அடிப்படை வசதியின்றி வாழும் குடும்பங்கள்
கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் பம்பேகமவில் ஏற்பட்ட இன வன்முறையாலும், பம்பேகம தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளாலும் அப் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் புசல்லாவ, கொத்மலை பகுதி தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இவ்வாறு சுமார் 40 குடும்பங்கள் எல்பொட தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிய வீடுகள் விரைவில் நிர்மாணிக்க தோட்ட நிர்வாகமும், மலையக அரசியல்வாதிகளும் வாக்குறுதி வழங்கிய போதிலும் தற்காலிக குடியிருப்பில் தங்கியுள்ள இவர்களுக்கு புதிய வீடுகளை அமைக்கும் பணி மிக மந்தமாகவே இடம்பெற்று வருகிறது. இதனால் தொழிலாளர்கள் தங்களுக்கு மலசலகூடம், குடிநீர் உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இத் தொழிலாளர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் அரசியல்கட்சி தலைவர்களும், தோட்ட நிர்வாகமும் புதிய வீடுகளை கையளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மாகாணசபைத் தேர்தலில் இ.தொ.கா- ஐ.ம.சு.மு இணைந்து போட்டி
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே தெரிவித்தார்.
தேயிலை விலை வீழ்ச்சியால் 1,50,000 மேற்பட்டோர் பாதிப்பு
தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 1,50,000 இற்கும் மேற்பட்ட சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களை பாதுகாக்கும் இரத்தினபுரி மாவட்ட கிளையினர் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் தேயிலையின் விலை தொடர்ந்து குறைவடைந்து வருகின்ற போதிலும் இலங்கையில் தேயிலை உர வகைகளின் விலை குறைக்கப்படவில்லை . இதனால் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் அவர்களை நம்பி வாழும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஒரு இலையும் திரியுமான அரும்பு கொழுந்துகளை மாத்திரமே தேயிலை தொழிற்சாலை கொள்வனவு செய்கின்றன. இவ்வாறான கொழுந்து உற்பத்தி செய்யப்பட வேண்டுமெனின் உரிய காலத்தில் உரிய பசளை இடவேண்டும். அதற்கு பசளை விலை குறைக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் 60 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கிலோ கொழுந்துகள் தற்போது 30 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
நேரடி தபால் விநியோகம்; மேற்கொள்ள 355 பேர் நியமனம்
மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு நேரடி தபால் விநியோகத்தை மேற்கொள்வதற்காக தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த 355 பேருக்கு, தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எம். எஸ்.செல்லச்சாமி தெரிவித்துள்ளார். அண்மையில் தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தலைமையில் தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த 500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவிருந்தது. எனினும் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 355 பேருக்கு மாத்திரமே நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஏனைய 155 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலையக தமிழ் இளைஞர்களை பார்வையிட அனுமதியில்லை – சிவஞானம்
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்படும் வட, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் இளைஞர்கள் வௌ;வேறு வகையில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் விசாரணைக்காக தடுத்துவைத்துள்ள இவ் இளைஞர்களை அவரது பெற்றோர்களாலும் உறவினர்களாலும் நண்பர்களாலும் நேரில் சென்று பார்வையிடவும் அவர்களிடம் உரையாடவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால், மலையக இளைஞர்களை பார்வையிடச் செல்வோருக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை. இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல அடிப்படை மனித உரிமை மீறலுமாகும் என மாத்தளை மாநகரசபை உறுப்பினர் எம். சிவஞானம் நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்
அவ்வாறு பார்வையிடவோ, பேசவோ அவரது பெற்றோருக்கு மட்டுமல்லாது எந்தவொரு நபருக்குமே இலகுவில் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் முன்னிலையில் சிங்கள மொழியில் மட்டுமே இருவரும் பேசிக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாத பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் பேசக்கூட சந்தர்ப்பம் கிடைக்காது உள்ளனர். பொலிசாரது இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோர் உடல், உள ரீதியாக பாதிக்கப்படுவதுடன் சமூகத்தில் பயங்கரவாதிகளென இனங்காட்டப்பட்டு வருகின்றனர். விசாரணையின் பின் இவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டாலும் இவர்களை சமூகம் சந்தேகத்துடனே நோக்குகின்றது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை தடுத்துநிறுத்த ஜனாதிபதியும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
25 குடியிருப்புகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம்
ஏல்கடுவ பிலான்டேசன் நிறுவனத்தினால் நிர்வகிகப்பட்டுவரும் பிட்டகந்த, தம்பளகல ஆகிய தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 25 குடியிருப்புகளை உள்ளடக்கிய இருவேறு வீடமைப்புத் திட்டங்கள் அமைப்பதற்கு காணிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டதையடுத்தே வீடமைப்புத் திட்டம் அமைக்கப்படவுள்ளன. லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கம் மேற்கொண்ட கடும் முயற்சியின் பயனாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை மேற்படி வீடமைப்புத் திட்டங்களை அமைத்துக்கொடுக்க இணக்கம் தெரிவித்தன. பேச்சுவார்த்தையில் லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எஸ்.ராமநாதன் நிதிச் செயலாளர் ஆர்.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.