Friday, October 30, 2015

எங்களுக்கும் பொது மன்னிப்பு கிடைக்குமா?

இலங்கை சிறைகளிலிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து முதன்முறையாக ஆரோக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என்றும் கூறப்பட்டது. இவர்கள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் இப்போது தீவிரம் பெற்றுள்ளன.இதை முன்வைத்து கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மலையகப்பகுதிகளில் பல்வேறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகி நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் இளைஞர்களின் நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி இடம்பெற்ற பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் சம்பவமும்,அதன் பின்னர் மலையகப்பகுதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலைகள், கலவரங்களால் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கதை எவருக்கும் தெரியாது மறக்கடிக்கப்பட்டுள்ளது.
 
பிந்துனுவெவ சம்பவம்

பண்டாரவளையிலிருந்து பதுளை செல்லும் மார்க்கத்தில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சுமார் 41 பேர் இருந்தனர். புனர்வாழ்வு பெற்று வந்தாலும் இவர்களுக்கு இங்கு சுதந்திரம் இருந்தது. பண்டாரவளை நகருக்கு சென்று வருவதற்குக்கூட இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அருகில் இருக்கும் கிராமத்தவர்களுடன் இணைந்து சமூக பணிகள் ,சிரமதானப்பணிகள் போன்றவற்றை செய்து வந்த இவர்களின் மீது அந்த பிரதேச பெரும்பான்மை இன மக்கள் நல்லபிமானம் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஒக்டோபர் 24 ஆம் திகதி காலை இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் முகாமில் இருந்த 41 தமிழ் கைதிகளில் 27 பேர் வெட்டிச் சிதைக்கப்பட்டனர்.அல்லது இறக்கும்வரை தாக்கப்பட்டுள்ளனர், மற்றும் எஞ்சிய 14 பேர் காயமுற்றதோடு சிலர் படுகாயமடைந்தனர். படுகொலைகள் இடம்பெற்ற காலை நேரம், 2,000 முதல் 3,000 வரையிலான குண்டர்களால் முகாம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்டளவிலான பொலிஸ் படை தன்னியக்க ஆயுதங்களுடன் நின்றிருந்த போதிலும், பொல்லுகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதபாணிகளாகியிருந்த குண்டர்கள் முகாமுக்குள் நுழைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை தாக்கும்போது எதையும் செய்யவில்லை. இது ஒரு திட்டமிட்ட படுகொலைச்சம்பவம் என பலராலும் கூறப்பட்டது. மலையகமெங்கும் இச்செய்தி காட்டுத்தீ போன்று பரவியது. அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று 5 நாட்களுக்குப்பிறகு வட்டகொடை நகரில் கலவரம் இடம்பெற்றது.

வட்டகொடை கலவரம்
 
ஒக்டோபர் 29 ஆம் திகதி காலை 10 மணியளவில் வட்டகொடை புகையிரத நிலையத்தில் திரண்ட பிரதேசவாசிகள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் உடரட்ட மெனிக்கே புகையிரதம் மற்றும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்செல்லும் பொடிமெனிக்கே புகையிரதங்களை சற்று தாமதித்துச்செல்லும்படியும் இது பிந்துனுவெவ சம்பவத்திற்கு தாம் காட்டும் எதிர்ப்பு என்றும் தெரிவித்தனர். பதுளை செல்லும் இரயில் வண்டி ஒருவாறு சென்று விட்டது. எனினும் கொழும்பு செல்ல வட்டகொடை இரயில் நிலையத்தின் இரண்டாவது தண்டவாளத்தில் (Second Flatform) தரித்து நின்ற உடரட்ட மெனிக்கே இரயிலை தாமதித்துச்செல்ல பிரதேசவாசிகள் எடுத்த முயற்சி கலவரத்தில் முடிந்தது. இரயில் நிலைய பொறுப்பதிகாரி தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் வந்து அமைதியாக இருந்த பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். இதில் துரைராஜ் முத்துகுமார் என்ற இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டது. எல்லோரும் கலைந்து ஓட நின்று கொண்டிருந்த இரயிலின் காட்சிகாண் கூடம் (கடைசி பயணிகள் பெட்டி) பகுதியிலிருந்து தீ கிளம்பியது. இதையடுத்து ஒன்று சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு,கீழ்ப்பிரிவு மற்றும் மடக்கும்பரை தோட்ட நகர்ப்புற இளைஞர்கள் இரயிலுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். பயணிகளையும் பத்திரமாக இறக்கி மிகுதி பயணிகள் பெட்டிகளை இரயில் எஞ்சின் ஓட்டுனர் மூலம் தனியாக்கினர். எனினும் இரண்டு பயணிகள் பெட்டிகள் தீக்கிரையாகின. வட்டகொடை இரயில் நிலையம் கல்வீச்சுக்குள்ளானது. இரயில் நிலைய பொறுப்பதிகாரியே பொலிஸாருக்கு தவறான தகவல் கொடுத்தார் என பிரதேச வாசிகளால் கூறப்பட்டது. பயணிகள் அனைவரும் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரின் வீட்டிலும்,ஏனைய இடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பான்மை இனத்தவர்களான அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்த வட்டகொடை இளைஞர்கள் பொலிஸாருடன் இணைந்து அவர்களுக்கு காவல் இருந்தனர். உணவு சமைத்து விநியோகித்தனர். 
 
12 இளைஞர்கள் கைது
 
இந்த சம்பவம் இடம்பெற்று அமைதியான சூழல் திரும்பிக்கொண்டிருந்த வேளை நவம்பர் 8 ஆம் திகதி கலவரத்தை தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் வட்டகொடை பிரதேச இளைஞர்கள் 12 பேர் தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 12 பேரின் விபரங்கள் வருமாறு.

1)சிதம்பரம்பிள்ளை வசீகரன்
2)வடிவேல் சிவஞானம்
3)வடிவேல் சிவலிங்கம்
4)பொன்னையா வடிவேல்
5)கருப்பையா தியாகராஜ்
6) வெள்ளைச்சாமி ராமமூர்த்தி
7) பழனியாண்டி யோகேஸ்வரன்
8) ஆறுமுகன் ராஜேந்திரன்
9)சுப்ரமணியம் ரவி
10) துரைராஜ் முத்துகுமார் (காலில் துப்பாக்கிச்சூடு பட்டவர்)
11) சுப்பிரமணியம் ஜெயரட்ணம் (இறந்து விட்டார்)
12) ராஜி பாலச்சந்திரன் (இறந்து விட்டார்)

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரின் மீதும் கலவரத்தை தூண்டி விட்டார்கள் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டு பதுளை சிறைச்சாலையில் 3 மாதகாலம் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் பிணையின் மூலம் வெளியில் வந்த இவர்கள் மீது தற்போது வரை வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த 12 பேரில் சுப்பிரமணியம்ஜெயரட்ணம் மற்றும் ராஜி பாலச்சந்திரன்ஆகியோர்

காலமாகி விட்டனர். மிகுதி 10
 
பேரும் யாருடைய தயவும் துணையும் இன்றி கடந்த 15 வருடங்களாக நீதிமன்றுக்கு அலைந்து திரிந்து சட்டத்தரணிகளுக்கு தமது பணத்தை செலவளித்து, நிம்மதியிழந்து தவித்து வருகின்றனர். இவர்கள் மீதுள்ள வழக்கு 2005ஆம் ஆண்டு கண்டி நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் 2009 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் உயர்நீதிமன்ற பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து இது வரை நுவரெலியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டப்படவில்லை. ஆரம்பத்தில் இவர்கள் பிணையில் வௌியே வர அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் சந்திரசேகரன் உறுதுணை புரிந்தார். அவர் இறந்த பிறகு எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும் இந்த அப்பாவி இளைஞர்களை கண்டு கொள்ளவில்லை.

இவர்கள் அங்கம் வகித்த தொழிற்சங்கம் இது வரை இவர்களை ஏறெடுத்தே பார்க்கவில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை
 
பிந்துனுவெவ சம்பவத்திற்கு காரணமாவர்கள் என கைது செய்யப்பட்ட 41 பேரில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளடங்கலாக 19 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர். விசாரணைகளின் பின்னர் 2003 ஜுலை ௧ ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பெரும்பான்மையின நபர்கள் உட்பட நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். . இதை எதிர்த்து இவர்கள் மேன்முறையீடு செய்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் பின் 2005 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

எமக்கு எப்போது விடுதலை?
 
வட்டகொடை கலவர சம்பவத்தில் கைதாகி பிணையிலிருக்கும் இந்த 10 பேரும் தமக்கு விடுதலையா அல்லது தண்டனையா அது எப்போது , தீர்ப்பு எப்படியாக அமையும் என காத்திருக்கின்றனர். குறித்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் நாம் கலவரத்தில் ஈடுபட்டோம் என எவரும் சாட்சி கூறாத நிலையில் சந்தேகத்தின் பேரில் எவரோ எமது பெயர்களை கொடுத்துள்ளனர் எனத்தெரிவிக்கும் இவர்கள் அனைவரும் குறித்த சம்பவத்தின் விளைவாக கைது செய்யப்பட்டமை சிறையிலிருந்தமை தற்போது வழக்குக்கு அலைந்து திரிந்து கொண்டிருப்பதால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில இளைஞர்கள் தலைநகரில் தொழில் பார்த்தாலும் வழக்கு தினமன்று கட்டாயம் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருப்பதால் விடுமுறை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் எனத்தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை காரணமாக பலரும் தம்மை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதாகவும் நிரந்தரமான தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிறையிலிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளின் நிலை குறித்து இப்போது அனைவரும் பேசுகின்றனர். இதில் அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் அக்கறையுள்ளவர்கள். அவர் தலைவராக உள்ள தமிழ் முற்போக்குக்கூட்டணி சார்பில் எமது மண்ணிலிருந்து தெரிவாகி தற்போது அமைச்சராக இருக்கும் பி.திகாம்பரம் அவர்களும் மனோ கணேசன் அவர்களும் இது குறித்து பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்ரி ஆகியோரிடம் பேசி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்து அல்லது பொது மன்னிப்பை பெற்றுத்தர ஆவண செய்வார்களா என கோரிக்கை விடுத்துள்ளனர். செய்வார்களா நல்லாட்சியின் தலைவர்கள்? காத்திருக்கிறார்கள் வாக்களித்த மைந்தர்கள்.


நன்றி - சிவலிங்கம் சிவகுமார்

மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கொத்மலை - இரம்பொடை, வெதமுல்ல கயிறுகட்டி தோட்ட மக்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் 7 உயிர்களைக் காவுகொண்ட மண்சரிவு நிகழ்ந்து ஒரு மாதமும் 10 நாட்களும் நிறைவடைந்துள்ளதுடன், மீரியாபெத்தயில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.

இவற்றையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் முகமாகவும் மழைக் காலங்களில் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழும் தமக்கு, அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் அமைத்துத் தருமாறும் கோரியே இக்கவனயீர்ப்பு போரட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர். 

குறித்த வீட்டுத்திட்டத்தில் இத்தோட்டத்தில் வசிக்கும் 120 குடும்பங்களில் 19 குடும்பங்களுக்கு மாத்திமே வீடமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.