Wednesday, February 23, 2011

மலையக மக்கள் வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே உரிமைகளை பெற முடியும்- ஆறுமுகன் தொண்டமான்


மலையக மக்கள் அரசியல் கட்சி பேதங்களையும் தனி மனித பேதங்களையும் ஒதுக்கிவிட்டு வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாத்திரமே அந்த பலத்தை முன்வைத்து மேலும் பல உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் . எனவே நாம் ஒரு பேரம் பேசும் சக்தியாக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என இ.தொ.கா பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியாதுள்ளது. தோட்டத் தொழிலாளர்களிடம் காணப்படும் ஒற்றுமையின்மையே இதற்கு பிரதான காரணம். தொழிலாளர்கள் பல தொழிற்சங்கங்களில் அங்கம் வகிப்பதால் தோட்ட நிர்வாகங்கள் பிரச்சினைகளை தட்டிக் கழிக்கின்றன. எனவே தொழிலாளர்கள் எம்முடன் இணைந்து ஒரே கொடியின் கீழ் செயற்படுபவர்களாயின் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்


தெரேசியாத் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையை திடீரென மூடிவிடுவதற்கு தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கெதிராக தேயிலைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேயிலைத் தூளினை இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம் பரிசோதனை செய்தபோது அந்தத் தூளில் அதிகமான இரசாயன கலவை இருந்தமையாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தெரேசியா தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையைத் தொடர்ந்து மூடி விடுவதற்கும் இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் அரைக்கப்பட வேண்டிய கொழுந்துகள் இனிமேல் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திலுள்ள தேயிலைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இணக்கப்பாடு ஒன்று நேற்று புதன்கிழமை தோட்ட நிர்வாகத்தின் பிரதிநிதிகளுக்கும் தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு மிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் 14 நாட்களுக்குள் மீண்டும் இந்தத் தேயிலைத் தொழிற்சாலையை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.