Saturday, October 31, 2015

அரசியல்வாதிகளின் அறிக்கைகள் கம்பனிகளுக்கு சாதகமாகிவிட்டன

கம்பனிகள் நட்டத்தில் இயங்கும் போது தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை எவ்வாறு வழங்க முடியும் என தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும் விடுத்த அறிக்கைகள், கருத்துக்கள் கம்பனிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாக பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளருமான எஸ் இராமநாதமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
 
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தொழிற்சங்கவாதிகளினதும், அரசியல்வாதிகளினதும் கருத்துக்கள், அறிக்கைகளை முன்னிலைப்படுத்திவரும் கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு பிடிவாதமான முறையிலும், நியாயமற்ற முறையிலும் நடந்து கொள்கின்றன என்றார்.
 
தேயிலை உற்பத்தியில் இலாபம் நட்டம் என்பது சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வாகும். இதனையே காரணமாக வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதென பெருந்தோட்டக் கம்பனிகள் பிடிவாதமாக இருந்து வருவது நியாயமற்ற செயலென கம்பனிகளிடமும், முதலாளிமார் சம்மேளத்திடமும், அரசாங்கத்திடமும் தொடர்ச்சியாக வலியுறுததி வந்த காரணம் நியாயமானது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
 
இலங்கையின் தேயிலை உற்பத்தி மற்றும் விற்பனை விலையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பாகவும் அதன் எதிர்காலம் குறித்தும் இலங்கை தேயிலை சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை தேயிலையின் விலை அதிகரிப்பு காணப்படுகிறது. இலங்கை தேயிலைக்கு எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் சிறந்த சந்தை வாய்ப்பும் நல்ல விலையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவொரு நல்ல செய்தியாகும். இதன் மூலம் நாம் கோரியுள்ள சம்பள அதிகரிப்பு நியாயமானது என கம்பனிகள் உணர்ந்து எமது கோரிக்கைக்கு இணங்கி வரவேண்டும். அதேசமயம் இச்சம்பள உயர்வினை வழங்கும்படி கம்பனிகளுக்கு அரசாங்கம் முறையான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றார்.
 
கம்பனிகள் நட்டம் என்ற காரணத்தையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கான பிரதான காரணம் மலையகத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தொழிற்சங்கத் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்பதும் அரசியல் ரீதியில் பிரிந்து நிற்கின்றனர் என்பதையும் கம்பனிகள் நன்கு உணர்ந்துள்ளன.
 
இன்று சில தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பல விடயங்களில் தொழிற்சங்கங்களை உதாசீனப்படுத்தி தன்னிச்சையான போக்கினைக் கடைப்பிடித்து தொழிலாளர்கள் மத்தியில் குழப்பங்களை விளை வித்து வருகின்றன. இது பெருந்தோட்ட தொழிற்றுறையில் தொழிலாளர் நிர்வாக மட்டத்தில் நிலவிவரும் உறவினை சீர்குலைக்கும் செயலாகும் குறிப்பிட்டுள்ளார் இராமநாதன்

பதுளை மாவட்டத்தில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியாக பிரதிநிதிகளை செய்யும் போது பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் சார்பாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகை குறைவடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக தெரிவதாக முன்னாள் பிரதியமைச்சரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உப தலைவருமான எம்.சச்சிதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சச்சிதானந்தன் மேலும் இதுகுறித்துத் தெரிவிக்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமூலம் அதிகளவான மலையக மக்களின் பிரதிநிதித்துவம் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தெரிவாகக்கூடிய நிலைமை காணப்பட்டது. எனினும் புதிதாக எல்லை மீள்நிர்ணம் செய்யப்பட்டு புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அநேகமான தொகுதிகளில் மலையக தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.
 
எதிர்காலத்தில் இந்த நிலைமையானது மலையக சுமூகத்தின் இருப்புக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக மலையக மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தொகுதி நிர்ணயத்தின் போது மலையக மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் வகையில் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.