Wednesday, June 24, 2015

20 பேர்சஸ் காணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் தேசிய சமாதான பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக சமூகத்தினருக்கு 20 பேர்சஸ் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி நோர்வூட்டில் ஞாயிற்றுக்கிழமை (21); ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு 20 பேர்சஸ்; காணியும் காணி உரித்துடன் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். இந்த ஆரப்பாட்ட பேரணி நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கபட்டு நோர்வூட் நகரம் வரை சென்று; நோர்வூட் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடி பல்கலைகழக மாணவர்களின் இடை விலகலுக்கு காரணம்

மலையத்திலிருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவேண்டும் என்பதே எம்முடைய முயற்சியாக காணப்பட்டாலும் மாணவர்களுடைய பொருளாதார நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் இடைநடுவே வெளியேறும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். 'வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் மலையத்திலிருந்து வரும் மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன'. 'பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி செல்லும் மாணவர்கள், அவர்களது குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக இடைவிலகி வேறு தொழில்களுக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலைமையை உடனடியாக மாற்றவேண்டும்'. எனவே, மலையகத்திலிருந்து யாழ். பல்கழைக்கழகத்துக்கு தெரிவாகும்  மாணவர்களுக்காக தங்குமிட விடுதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. மிக விரைவில் கிழக்கு பல்கழைக்கழகத்தில் கல்வி பயிலும் எமது மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

பெருந்தோட்ட இளைஞர்கள் இடைநிறுத்தம்- பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந் தோட்டயாக்க நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களை இடைநிறுத்தி விட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள பணியில் ஈடுப்படுத்துவதை தான் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அருள்சாமி தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களில் தற்போது பரவலாக நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டபோது அருள்சாமி, இதனை கூறினார். 'கடந்த 50, 60 வருடங்களாக பெருந்தோட்டங்களில் கடமையாற்றிய தோட்ட சேவையாளர்களை அதிரடியாக இடைநிறுத்திவிட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கமர்த்துவது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

இது பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் சேவையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'. பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்த தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், ஜூன் மாதம் 15ஆம் திகதியுடன் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று, கண்டி மாவட்டத்திலுள்ள தோட்டங்களின் தலைவர்களால் கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது' என்றும் அருள்சாமி கூறினார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சரால் கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத்துக்கு, வெளிமாவட்டங்களிலுள்ள தோட்ட சேவையாளர்கள் கடமைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களானது, பெருந்தோட்டங்களில் வெளிக்கள உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றும் இளைஞர், யுவதிகளுக்கு ஆப்பு வைக்கும் விடயமாக காணப்படுகின்றது என்றும் அருள்சாமி குறிப்பிட்டார்.