Saturday, September 20, 2008

தொடர்ச்சி

பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்

- ஷோபனாதேவி இராஜேந்திரன் -

முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் பற்றி குறிப்பு சிறுவர்களின் தொழில் நிலை. இங்கு தொழில் நிலை என்கின்ற போது அது சிறுவர்களின் சமூக அந்தஸ்தினையும் சிறுவர் பராய நடவடிக்கைகளையும் குறிப்பிடுகின்றது. பிள்ளைகளின் சிறந்த உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான பங்குபற்றலும் எந்தவொரு சமூகத்தினையும் உத்தம அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும். சிறுவர்களின் தொழில் நிலை பற்றிய தகவல்களை அட்டவணை 02 இல் காணலாம்.

பெருந்தோட்டத்துறையில் 06 - 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண்பிள்ளைகளும் 14.6 வீதமான பெண் பிள்ளைகளும் முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல்களின் படி பெருந்தோட்டத் துறையில் 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். மேலும், 3.8 வீதமான சிறுவர்கள் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டத்தில் சுற்றித்திரிகின்றனர்.

முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் தொழில் வகைகள்

வேலையின் வகைக்கேற்ப தொழிலானது வகைப்படுத்தப்பட்டுள்ளது. முழுநேரத் தொழில் புரியும் சிறுவர்களின் தொழில் வகையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுள் 50.5 வீதமான சிறுவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகத் தொழில் புரிகின்றனர். அதிலும் 85.5 வீதமான சிறுவர்கள் பெண்களாவர். இத்தொழிலானது தோட்டங்களுக்கு வெளியே நகர்ப்புற வீடுகளிலேயே காணப்படுகின்றது. இச்சிறுவர்கள் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் ஏலவே வீடுகளில் தொழில்புரிந்து பல இன்னல்களை அனுபவித்து தற்போது வீடு திரும்பி மீளவும் தொழிலை நாடி நிற்கும் சிறுவர்களிடமிருந்தே பெறப்பட்டது.
இச்சிறுவர்கள் காலை 5.00 மணி - இரவு 9.00 மணி வரை தொடர்ந்தும் வேலைசெய்ய வேண்டும். இவர்களுக்கு மதிய உணவிற்காக குறைந்த நேரமே (30 40 நிமிடங்கள்) வீட்டு எஜமான்களால் அனுமதிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி, வீட்டு பணியாட்களாக தொழிலுக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இங்கு தொழில்புரியும் சிறுவர்களின் உரிமைகள் முழுமையாகவே மீறப்படுகின்றன. அவர்களது சுயமான சிந்தனை, செயற்பாடுகளுக்கு எவ்வித இடமும் வழங்கப்படுவதில்லை.
பெற்றோரின் அன்பினையும் பாதுகாப்பினையும் வேண்டி நிற்கும் சிறுவர்களுக்கு வெறுமனே அவர்களது எஜமானின் துன்புறுத்தல்களும் ஆதிக்கங்களும் பாரபட்சங்களுமே கிடைக்கின்றன. மேலும், இச்சிறார்கள் பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


வீட்டுப் பணியாட்களாக தொழில்புரிந்த சிறுவர்களிடம் கலந்துரையாடியபோது அவர்களது கசப்பான உண்மை சம்பவங்கள் கண்ணீர்த் துளிகளாலும் விரக்தி வார்த்தைகளாலும் பொங்கி எழுந்தன. உதாரணமாக 14 வயதுடைய ஒரு பெண் சிறுமியின் ஆதங்கம் பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டது;

“நான் கொழும்பில் மிகப் பெரிய பணக்கார வீட்டில் மூன்று வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த எஜமானின் பிள்ளைகள் விளையாடும்போது எட்டிப்பார்த்து உதைவாங்குவேன். பசியில் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டு பல தடவைகள் அடி வாங்கினேன். எஜமான் மட்டுமல்ல, அவர்களது இரு பிள்ளைகளும் என்னை அடிப்பார்கள், உதைப்பார்கள் எனக்கு வேலை செய்ய கஷ்டமாக இருக்கு வீடு போக வேண்டும் என அழுதபோது என்னை மிரட்டி சூடு வைத்தார்கள். (இதோ அந்த அடையாளம் என்று காட்டினாள்). அந்த வீட்டு நாயின் சொகுசு கூட எனக்குக் கிடைக்கல. அநியாயம் நாயா பிறந்தா நல்லா இருக்கலாம் என நினைத்துள்ளேன். எனக்கு காய்ச்சல் வருத்தம் வந்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைச்சாங்க. ஆனால், அப்பா என்னை வேற வீட்டுக்கு அனுப்பப் போறாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
இத்தனை துயரங்களை தாங்கி வந்த சிறுமிக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. மீண்டும் அவளின் பெற்றோர் புதிய இடத்தில் வேலை தேடுகின்றனர். இதேபோல், பல சிறுவர்கள் சிறுமியர்களிடம் கலந்துரையாடிய போது பல உடல், உள ரீதியான இம்சைகளிலிருந்து தம்மை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.


மேலும், வீட்டுப் பணியாட்களாகப் பணிபுரியும் சிறார்கள் உடல்சார் துன்புறுத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களது பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அல்லது அவர்களது பெற்றோர், உறவினர்கள் இது தொடர்பாக நியாயம் கேட்க முடியாத ஒரு துர்ப்பாக்கியசாலிகளாக காணப்படுகின்றனர். மாறாக, அப்பிள்ளைகள் வீட்டுப் பணியாட்களாக பணிபுரிவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி அறிந்த பின்பும் கூட மீண்டும் மீண்டும் அச்சிறார்கள் அந்த நச்சு வட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிப்பதை இவ்வாய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. வேலைப்பளுவினை மட்டும் இச்சிறார்கள் சுமக்கவில்லை. கூடவே துன்பங்களையும் துயரங்களையும் சேர்த்தே சுமக்கின்றார்கள். இதனை விடவும் 24.8 வீதமான சிறுவர்கள் சிறிய கடைகள், உணவு விடுதிகள், வீதியோர வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய தொழில்களில் பெரும்பாலும் ஆண் சிறுவர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். (அட்டவணை 3) இவர்களும் வீட்டுப் பணியாட்களாக பணிபுரியும் சிறுவர்களைப் போலவே பல்வேறு இம்சைகளுக்கும் ஆளாகின்றனர். அச்சிறுவர்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும் பழுதடைந்த உணவு கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் செய்தனர். இதனை விடவும் எவ்வித பொழுதுபோக்கோ, ஓய்வோ அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் மிக நீண்டநேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் அச்சிறுவர்கள் குறிப்பிட்டார்கள்.

சிறுவர்கள் 14 வயது வரை கட்டாயக் கல்வி கற்க வேண்டும் என இலங்கைச் சட்டம் காணப்பட்ட போதும் அந்த கட்டாயக் கல்வியைக் கூட பெறமுடியாத துர்ப்பாக்கியசாலிகளாக இந்த சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு மனிதனின் அபிவிருத்தி செய்முறையில் பங்குபற்றவும் அவனது திறனை வளர்க்கவும் ஆகக் குறைந்தது அடிப்படைக் கல்வியையாவது பெற்றிருக்க வேண்டும்.

தொடரும்…..